கிறிஸ்மஸ் கிஃப்ட்
வழக்கம்போல காலை ஐந்தரை மணிக்கு அலாரம் தலையில் சம்மட்டி போல் அடிக்க, போர்வையை விலக்கி விட்டு எழுந்தான் கணேஷ். திரை நீக்கித் திறந்திருந்த ஜன்னலின் வெளியே பார்க்க, இன்னும் கும்மிருட்டு நிரம்பியிருந்தது. ”யப்பா, இன்னிக்கு ஒரு நாள் ஆஃபிஸ் போனாப் போதும், கிறிஸ்மஸ் நியூ இயரோட சொந்த லீவையும் சேத்து பத்து நாள் எங்கயும் போக வேண்டாம்”.. சிறு குழந்தை போல விடுமுறையை நினைத்துக் கொண்டே குளியலறை நோக்கிச் சென்றான்.
பல் தேய்க்கலாம் என்று குழாயைத் திறந்தால் குழாயின் மேலிருந்த துண்டுச் சீட்டு கவனத்தை ஈர்த்தது. எடுத்துப் படித்தால் “ஐ வாண்ட் கிண்டல் ஃபயர் ஃபார் கிறிஸ்மஸ் – யுவர் டாட்டர்”. பத்து வயதான மகள் பாரதி தன் கைப்பட எழுதிய துண்டுச் சீட்டு. பார்த்ததும் தனக்குத் தானே நகைத்துக் கொண்டான் கணேஷ். நினைத்த மட்டும் நெஞ்சை வருடும் இதமான ஓர் உறவு. அவளின் குழந்தை முகப் பளீர் சிரிப்பு உலகின் அனைத்து இன்பங்களையும் தூசுக்குச் சமானமாகக் கருதச் செய்யும். நினைத்த மாத்திரத்தில் அவள் கண்களில் கோர்த்துக் கொள்ளும் கண்ணீர் நரகத்தையும் மிஞ்சிய வேதனையைத் தரும் அவனுக்கு. தன் அன்னையே மறு உருவாய் உதித்ததாய் அவ்வப்போது நினைத்துக் கொள்வான். அவள் எதையும் பக்குவமாகவே அணுகுபவள். துண்டுச் சீட்டில் அவளின் கையெழுத்துப் பார்த்துப் பெருமைப்பட்டுக் கொண்டதோடு, தன்னிடம் இப்படி நளினமாகத் தெரியப்படுத்துவதையும் எண்ணி மகிழ்ந்து கொண்டான்.
பல் தேய்த்து முடித்து ஷவருக்கு அடியில் நிற்கையில், எதிர்ப்புறம் இருக்கும் மேடையில் இன்னொரு துண்டுச் சீட்டு, அதே வாசகத்துடன். எப்படி ”அச்சடித்தது போல் எழுதுகிறாள்” மனதிற்குள் மீண்டுமதே பெருமை. குளித்து முடித்து க்ளாஸட்டில் உடையெடுக்கச் செல்கையில், ஷெல்ஃபின் மேல் அதே துண்டுச் சீட்டு. அயர்ன் செய்ய வைத்திருந்த பேடில், வாட்ச் வைத்திருக்கும் நைட் ஸ்டேண்டில், வாலட் வைத்திருக்கும் ட்ராயரில், காஃபிப் பொடி வைத்திருக்கும் கப்-போர்டில் என காலையிலெழுந்து எந்தெந்த இடங்களிலெல்லாம் அப்பாவின் பார்வை விழுமோ அங்கேயெல்லாம் துண்டுச் சீட்டு வைத்திருந்தாள் பாரதி. அந்தப் பிஞ்சு உள்ளத்தில் கிண்டல் ஃபயருக்கான ஏக்கம் எவ்வளவெனப் புரிந்தது கணேஷுக்கு.
அலுவலகம் செல்லும் பாதையெல்லாம் மகளைப் பற்றிய நினைவே. இந்தச் சிறு வயதில், பல விஷயங்களில் பக்குவமாய் நடந்து கொள்பவள் என்று உணர்ந்திருக்கிறான். வீட்டு வேலைகளில் உதவுவது, அம்மா, அப்பா சொல்வதைக் கேட்பது, தங்கையுடன் பெரும்பாலான நேரங்களில் ஒத்துப் போவது என வயதுக்குரிய சேட்டைகள் குறைந்து பொறுப்புகள் சற்று அதிகமான பெண்பிள்ளை அவள். அவள் கேட்டால் உலகையே உள்ளங்கையில் கொண்டு வந்து கொடுக்க வேண்டுமென்ற ஆசையுள்ள கணேஷ் கிண்டல் ஃபயர் வாங்கமாலா இருப்பான். வாங்கி வந்து, அவளுக்குத் தெரியாமல் கிஃப்ட் ராப் செய்து, அவள் படுக்கைக்குப் போனதும் கிறிஸ்மஸ் ட்ரீக்கு அடியில் மறைத்து வைத்து விட்டுத் தூங்கச் சென்று விட்டான் கணேஷ். மறுநாள் காலையில் முதற்செயலாக ராப்பரைத் திறந்து பார்த்தவுடன் அவள் முகத்தில் பளிச்சிடும் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமென நினைத்துக் கொண்டே உறங்கிப் போனான்.
மறுநாள் காலைப் பொழுது. வீட்டின் மெய்ன் ஹாலில், சோஃபாவில் அமர்ந்து நாளிதழைப் படித்துக் கொண்டிருந்தான் கணேஷ். படுக்கையறையிலிருந்து எழுந்து, தூக்கக் கலக்கத்தில் கீழிறங்கி வரும் பாரதியைப் பார்த்து “குட் மார்னிங்க்” என்று வரவேற்க, அருகே வந்து “மெர்ரி கிறிஸ்மஸ் அப்பா” என்று குளிர்வாய்க் கூறி, அரவணைப்பாய் ஹக் செய்தாள் மகள். அம்மா, தங்கை என அனைவரும் அங்கு வந்தபின்னர், “டைம் டு ஓபன் ப்ரெஸண்ட்ஸ்” என்று கணேஷ் அறிவிப்புச் செய்ய, “யேஏஏஏஏஏ” என்று மரத்தடிக்கு ஓடிச்சென்ற தங்கையைத் தொடர்ந்து நடந்து சென்றாள் பாரதி. தங்கையின் குதூகல ராப்பர் பிரிப்புகளுக்குப் பிறகு, தன் பெயர் எழுதிய பேக்’ஐக் கையிலெடுத்து தந்தையைப் பார்க்கிறாள். ஏதும் சொல்லாமல், பொறுமையாய் கிஃப் ராப்பரைப் பிரித்த பாரதி, அதிலிருப்பது தான் ஆசைப்பட்ட கிண்டல் ஃபயர் தான் என்று தெரிந்தும் பெரிதாகச் சந்தோஷமடைந்ததாகத் தெரியவில்லை.
அதிர்ச்சியுற்ற கணேஷ், ”வாட் ஹேப்பண்ட் மா, டிட் யூ சேஞ்ச் யுவர் மைண்ட்?” எனக் கேட்க, “நோ பா…. தேங்க்ஸ் ஃபார் கெட்டிங்க் வாட் ஐ வாண்டட், பட் ஐ டோண்ட் வாண்ட் திஸ் பா” என்றாள் நிதானமாக. கணேஷிற்குக் காரணம் புரியவில்லை. “ஏம்மா, என்ன ஆச்சு?” என்று கேட்க… “அப்பா, யூ நோ… ஐ வெண்ட் டு எஃப்.எம்.எஸ்.ஸி யெஸ்டர்டே, ரிமம்பர்?” என இழுத்தாள். அவளது தோழி ஒருத்தியின் பிறந்த தினக் கொண்டாட்டமாக நண்பிகள் அனைவரும் “ஃபீட் மை ஸ்டார்விங் சில்ட்ரன்” என்ற வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கும் பொது நல நிறுவனத்திற்குச் சென்று சில மணி நேரச் சேவை செய்தது நினைவுக்கு வந்தது கணேஷுக்கு.
“ஸோ… அதுக்கென்னம்மா” என்று தொடர்ந்த கணேஷுக்கு, “தெர் ஆர் ஸோ மெனி அன்ஃபார்ச்சுனேட் கிட்ஸ் அவுட் தேர் அப்பா.. தெ ஷோட் இன் த வீடியோ… ஐ டோண்ட் வாண்ட் திஸ் கிஃப்ட்.. ஐ வுட் ராதர் செண்ட் இட் டு தெம்…..” என்ற மகளின் பதில் கேட்டு, ஆச்சரியத்தில் ஸ்தம்பித்து நின்றான் கணேஷ்.
தந்தைக்கு மகள் கொடுத்த கிறிஸ்மஸ் கிஃப்ட் அது என்பது அந்தத் தந்தைக்குத் தெளிவாக, மகிழ்ச்சிப் பிரவாகத்தில் கண்களிலிருந்து ஒரு துளி நீர் சிந்தத் தொடங்கியிருந்தது.
வெ. மதுசூதனன்
very nice Madhu