மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம் !!
வைகறைப் பொழுதினிலே வான்திறக்கும் முன்னமேயே
வைத்திருந்த நீரதிலே வாசலையும் தெளித்தெடுத்தே
வைப்பதற்குப் பூசணியும் வரைந்தெடுத்த மாக்கோலமே
வையமனைத்திற்கும் மார்கழி வந்ததனைச் சொல்லிடுதே !!
மாலைப் பொழுதினிலே மயங்கும் வேளையிலே
மாவிலைத் தோரணமும் மலர்களின் வாசனையாய்
மானுடப் பிறவிகட்கு மண்மீது சொர்க்கமுமாய்
மாதத்தின் சிறப்பாக மலர்ந்ததந்த திருப்பாவை !!
முந்தித் தந்திட்ட முப்பது பாசுரங்கள்
முனைந்து படித்தே முழுவதும் உணர்ந்திட
முக்திப் பொருளினை முன்னர் கொணர்ந்திடும்
முக்கிய அருள்மொழி முத்தான பொன்மொழி !!
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி சுலபமாய்ப்
பாடி முடித்த சுவையான இலக்கியத்தைத்
தேடி எடுத்துப் படித்திட, சிறப்பினால்
நாடி மனமும் நாராயணன் வசமாகுதே !!
பாசுரம் இயற்றிய பாவையின் இலக்கினைப்
பாமரன் வரைக்கும் பாட்டால் எடுத்தியம்பி
பார்வையின் தீர்க்கத்தைப் பாருக்கு உரைத்திடப்
பாங்காய் அமைந்திட்ட பாற்சுவை மார்கழி !!
எம்பாவாய் என்றே எழிலரசி அழைத்தது
எட்டுத்திக்கும் வாழும் ஏழை மனிதர்களை !
எங்கும் நிறைந்திருக்கும் எம்பெருமான் ஆணாவார்
என்றும் அவனடிசேர எண்ணியிருப்பவர் பெண்டிராமே !!
மங்கையவள் நூல்முகமாய் மனமுருகப் பாடியது
மண்மீது சடுதியிலே மறைந்திடும் உறவையன்று !
மலர்மிசை ஏகியவன் மனமிசை ஒன்றிணைந்து
மற்றீண்டு வந்திடா மகத்தானநெறி என்றுணர்வீர் !
வெ. மதுசூதனன்.