\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மில் சிட்டி நூதனசாலை Mill City Museum

மினசோட்டா மாநிலத்திற்கு வருகை தரும் விருந்தினர் எவரேனும், எவ்வாறு டிவின் சிட்டீஸ் பொருளாதார ரீதியில் இந்நாட்டில் பிரபல்யம் அடைந்தது என்று வினவினால், தயக்கமின்றி மில் சிட்டி தொழிற்சாலையை நோக்கி நம் கையை நீட்டலாம். மினசோட்டாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, அப்படி ஒரு மறுக்கவியலாத காரணியாக, இந்த மில் சிட்டி மாவு மில் ஒரு காலத்தில் இருந்தது.

மினசோட்டாவில் ஓடும் மிஸ்ஸிசிப்பி ஆற்றின் இடையே, மினியாபொலிஸ் டவுண்டவுன் அருகே செயின்ட் அந்தோணி நீர் வீழ்ச்சி இருக்கிறது. அந்நாட்களில் ஓடும் நீரின் விசை சக்தியின் மூலம் இயங்கும் மில்கள், ஆற்றின் ஓரத்தில் அமைந்திருக்கும். அதில் ஒன்றாக, பெரியதாக வாஷ்பர்ன் ஏ மில் (Washburn A Mill) இருந்தது. 1874இல் அது கட்டி முடிந்த போது, அது தான் உலகின் மிகப் பெரிய கோதுமை மில்லாக இருந்தது. பக்கத்திலேயே இருக்கும் தண்டவாளத்தில் ரயிலில் கோதுமை மூட்டைகள் வந்திறங்க, இந்த மில்லும் இதர மில்களும் சேர்த்து உற்பத்தி செய்தக் கோதுமை மாவு, அமெரிக்காவெங்கும் இங்கிருந்து ரயிலில் மூட்டைகளில் பயணித்தது. இந்தத் தொழிற்சாலைக்குத் தேவையான தொழிலாளர்கள், அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து மினியாபொலிஸிற்குக் குடியேறினார்கள். இதனால் மினியாபொலிஸின் பொருளாதாரம் வளர்ந்தது. மினியாபொலிஸ் மில் சிட்டி என்ற பெயரும் பெற்றது.

இத்தகைய பொருளாதார வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தொழிற்சாலை, இன்று மினியாப்பொலிஸ் நகருக்கு வருகை தரும் யாவரையும் வரவேற்கும் நூதனசாலையாக, மில் சிட்டி மியூசியம் (Mill City Museum) என்று இயங்குகிறது. இந்த நூதனசாலை சிறுவர்,சிறுமியர்களுக்கும் பெரியவர்களுக்கும் பல வரலாற்றுத் தகவல்களைத் தரும் விசாலமான கட்டிடம் ஆகும்.

மாவு மில் வரலாறு

1874 ஆம் ஆண்டு இயங்கத் தொடங்கிய இந்த மில், 1878இல் ஒரு பெரும் விபத்தைச் சந்தித்தது. மாவரைக்கும் செயல்முறையில் சேரும் தூசியால் தீப்பொறி உருவாகி, அது பிறகு பெரும் தீ விபத்தை ஏற்படுத்தியது. அச்சமயம் இந்தக் கட்டிடமே வெடித்துச் சிதறி, உள்ளே பணிபுரிந்த 14 தொழிலாளர்களும், வெளியே இருந்த பொதுமக்களில் 4 பேரும் இறந்தனர். இந்த விபத்து அப்போது பரபரப்பாக நாடு முழுக்கப் பேசப்பட்டது. இதன் பிறகு, நாட்டில் மில்களுக்கான விதிமுறையில் சீர்திருத்தங்களும், பாதுகாப்பு அம்சங்களில் மேம்பாடுகளும் வந்தன. 1880 இல் மீண்டும் இது கட்டப்பட்டு, அதிகரிப்பட்ட பாதுகாப்புடன் மீண்டும் இயங்க தொடங்கியது.

இந்த வாஷ்பர்ன் ஏ மில், பிறகு ஜான் க்ராஸ்பியுடன் (John Crosby) இணைந்து, வாஷ்பர்ன் க்ராஸ்பி (Washburn Crosby) என்ற பெயரில் செயல்பட்டது. பிறகு, இது இப்போது பிரபலமாக இருக்கும் ஜெனரல் மில்ஸ் (General Mills) ஆக மாற்றமடைந்தது. 1880 இல் இந்த நிறுவனம் தரத்திற்கான தங்க, வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைத் தனது பல்வேறு தயாரிப்புகளுக்காக, சின்சின்னாட்டி மில்லர்ஸ் இண்டர்நேஷனல் கண்காட்சியில் (Cincinnati Millers’ International Exhibition) பெற்றது. இதுவே, இவர்கள் கோல்ட் மெடல் ப்ளோர் (Gold Medal Flour) என்ற பெயரில் ஒரு மாவு தயாரிப்பை உற்பத்தி செய்யக் காரணமாக இருந்தது. அச்சமயம் இவர்கள் விளம்பரத்திற்காக அமைத்த கோல்ட் மெடல் ப்ளோர் என்ற ஒளிவிளக்கு விளம்பரப் பலகை மினசோட்டாவில் பிரசித்தமாக இருந்தது. மினியாபொலிஸ் டவுண்டவுனிற்கு ஒரு அடையாளமாகவும் அது திகழ்ந்தது. இன்றும் அந்த விளம்பர பலகை இந்த நிறுவனத்தின் வரலாற்று பெருமையைக் கூறிக்கொண்டு அதே இடத்தில் நின்று ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.

முதல் உலகப்போருக்கு பிறகு, விசை சக்திக்கு ஓடும் நீர் அவசியம் இல்லை என்ற நிலை வந்த போது, மினசோட்டாவில் மாவரைக்கும் தொழிலில் தேக்கம் ஏற்பட்டது. பஃப்பலோ, நியூயார்க் மாகாணங்களில் இத்தொழில்துறை வளர்ச்சியடைந்தது. ஜெனரல் மில்ஸ் நிறுவனமே, சில மில்களை அப்பகுதிகளில் தொடங்கியது. மேலும், அது தனது கவனத்தை அதிகம் லாபம் தரும் பிற உணவு பொருள் உற்பத்தியில் செலுத்தியது. 1965 இல் மினசோட்டாவில் இந்த மில்லையும், இதனுடன் எட்டு இதர மில்களையும் ஜெனரல் மில்ஸ் நிறுவனம் மூடியது. தொண்ணூறுகளின் இறுதியில் மூடிக் கிடந்த இந்தக் கட்டிடத்தில் ஒரு தீ விபத்து ஏற்பட, மினசோட்டா வரலாற்று அமைப்பு (Minnesota Historical Society), இந்தக் கட்டிடத்தைச் சரி செய்து, இங்கு மில் சிட்டி மியூசியத்தை உருவாக்கியது.

இந்த நூதனசாலையில், இலவசமாகப் பார்வையிடுவதற்கு, விசாலமான மூன்று காட்சிச்சாலைகளுடன், சிறுதொகை சீட்டு வாங்கிப் பார்க்ககூடிய மேலும் சில பகுதிகளும் உண்டு. மில் கென்ஸ், ரயில் கொரிடோர் மற்றும் ரயில் ஷெட் ஆகிய இடங்களைப் பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம்.

மில் காமென்ஸ் – இது அந்நாட்களில் கோதுமை மாவைப் பைகளில் நிரப்புமிடம். தற்போது இங்கே நூதனசாலைக் கடை மற்றும் சிற்றுண்டி உணவகம், சுற்றும் கண்காட்சிகள் மற்றும் பார்வையாளர் தகவல் உதவி மையம் போன்றவைகளைப் பார்க்கலாம்.

ரயில் கொரிடோர் – இவ்விடத்தில் தற்சமயம் செயின்பால் மற்றும் பசுபிக் ரயில் வண்டியின் ஒரு பாகத்தைக் காணுவதற்குத் தண்டவாளத்தில் நிரந்தரமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு காலத்தில், இங்குத் தான் தானியப் பைகளை இறக்குதல் மற்றும் அரைத்தமாவுப் பைகளை ஏற்றுதல் போன்ற வேலைகள் நடைபெற்றன.

ரயில் ஷெட் – இது தொழில்நுட்பக் கருவிகளும், எவ்வாறு தொழிலாளர் அனைவரும் ரயில்களுடன் வேலை செய்தனர் என்பதைக் காட்டுமிடம். இங்கிருந்து மேல் நோக்கிப் பார்த்தால் மினியாப்பொலிஸின் அடையாளமாக ஒருகாலத்தில் திகழ்ந்த, தங்கத் தர மாவு விளம்பரப் பலகையையும் (Gold Medal flour) பார்க்கலாம்.

இப்போதிருக்கும் நூதனசாலையில், கோதுமை மாவு கோபுரம், அருங்காட்சிச்சாலை, சமையல் ஆராய்ச்சிக்கூடம், சிறிய ஒளிப்பட அரங்கு மற்றும் நீரினால் இயக்கப்படும் கருவிகளின் ஆய்வுக்கூடம் என்று இத்தலைமுறையினர் காண வேண்டிய பல பகுதிகள் உள்ளன. மேலும், முன்பு சேதமுற்ற கட்டட பகுதியையும் பார்வையிடலாம்.

இதன் இதர சில சிறப்புகள்,

  • கட்டடக் கலையில் அமெரிக்க தேசிய வரலாற்றுச் சான்று பெற்றது
  • எட்டு மாடிகள் கொண்டு, தொழில்நுட்பத்தில் உலகிலேயே முன்னணியில் நின்ற கோதுமை மாவுக் கோபுரம் (Flour Tower)
  • அதன் கதையைச் சொல்லும் கட்டட – ஏற்றி இறக்கி வாகன கண்காட்சி – Story Elevator show
  • மாவரைப்பினால் உருவாகும் தூசியினால் எவ்வாறு வெடி விபத்து ஏற்படும் என்பதை விளக்கும் செயல்முறை காட்சி
  • சிறியவரும், பெரியவரும் மாவுப் பண்டங்களைத் தமது கையினாலேயே தயாரித்துப் பார்க்க சமையல் அறையுடன் கூடிய ஆராய்ச்சிக் கூடம்
  • மினியாப்பொலிஸ் பற்றிய குறும்படம்
  • நூதனசாலைக்கூரையில், அழகிய கண்களைக் கவரும் பரந்த மிஸிஸிப்பிப் பெரு நதியும், செயின்ட் அந்தோணி நீர் வீழ்ச்சி மற்றும் கற்தூண்கள் பாலம் (Stone Arch Bridge) ஆகியவற்றின் காட்சி அமைப்பு
  • நூதனசாலை கடை மற்றும் புதிய உணவு தயாரிக்கும் கருவிகள் வாங்குமிடம்

இன்றைய ஜெனரல் மில்ஸ் நிறுவனம்

தற்சமயம் அமெரிக்க நியூயார்க் பொதுப் பங்குச் சந்தையில் GIS (NYSE) என்று பட்டியலிடப்பட்டு, S & P 500 இல் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. உலகளாவிய உணவு உற்பத்தி நிறுவனமாக இருக்கும் ஜெனரல் மில்ஸ், 2016 இல் வருடாந்திர வருமானமாகச் சுமார் 16 பில்லியன் டாலர்களை ஈட்டியிருக்கிறது. இதன் தலைமையகம், மினியாபொலிஸின் பக்கத்தில் கோல்டன் வேலி (Golden Valley) என்னும் பகுதியில் உள்ளது.

இன்று வட அமெரிக்காவில் மாத்திரம் அல்லாமல், உலகளாவிய அளவில் அகல் அடுப்புச் சமையல் ரொட்டி, கேக் போன்ற பண்டங்கள், காலை உணவாகிய சீரியல் (cereals) தானிய உணவுகள் பலவற்றைவும் ஜெனரல் மில்ஸ் நிறுவனம் பல்வேறு ப்ராண்ட் பெயர்களில் தயாரிக்கிறது. இன்று நமது சமையல் அறையில் தவறாமல் இடம்பிடித்திருக்கும் காலை உணவு வகைகளான, Cinnamon Toast Crunch, Cheerios, Lucky Charms, Total, Trix, Wheaties, Golden Grahams, Oatmeal crisp போன்ற பெரும்பாலானவை இவர்களின் தயாரிப்பே.

வாஷ்பர்ன் மில் சிட்டி நூதனசாலை வரலாற்றுக் குறிப்புகள்

1866

முதலாவது வாஷ்பர்ன் மாவரைக்கும் மில் தொழிற்சாலை சி.சி. வாஷ்பேர்ண் அவர்களால் கட்டுமானம் தொடக்கம்

1874

முதலாவது மாவரைப்புச் சாலை திறப்பு

1878

மாவரைப்புச் சாலை வெடி விபத்து

1880

இரண்டாவது மாவரைப்புச் சாலை கட்டி முடித்தல்

1908

முதலாவது பாரிய சீமந்து தானியச் சேகரிப்புக் கட்டிடம் கட்டி முடித்தல்

1910

தரமான கோதுமை என்பதை விளம்பரப்படுத்தும் தங்கப் பதக்க – ஒளிவிளக்குப் பலகை (Gold Medal Flour Sign) ஏற்றுதல்

1928

வாஷ்பர்ன் – கிராஸ்பி நிறுவனம் – ஜெனரல் மில்ஸ் என்று பெயர் மாறுதல்

1928

தீ விபத்து மீண்டும் தெற்குப் பகுதி தொழிற்சாலையை அழித்தது

1965

வாஷ்பர்ன் மாவரைப்புச் சாலை மூடியது

1991

தீ எஞ்சிய கட்டிடப் பகுதிகளையும் ஆட்கொண்டது

2003

மில் சிட்டி நூதனசாலை கதவு திறந்தது

மில் சிட்டி நூதனசாலை முகவரி :

704 S 2nd St. Downtown Minneapolis, Minnesota, USA

இது மினியாப்பொலிஸ் – Metrodome இல் இருந்து வடக்கில் 3 சந்திகள் ( 3 blocks N) தள்ளி, கத்திரி அரங்கு Guthrie Theater அருகாமையில் உள்ளது.

மினசோட்டாவின் வரலாற்றில் ஆர்வமுடையவர்கள் தவறவிடக்கூடாத இடம் இது.

தொகுப்பு – சரவணக்குமாரன்,யோகி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad