\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அபூர்வமான தேங்காய்

உங்களுக்குத் தேங்காயானது எவ்வளவு மகிமை வாய்ந்தது என்று தெரியுமா? தமிழர் பாரம்பரியத்தில் தேங்காயானது பல்விதமாகப் பாவிக்கப்படும் பயனுள்ள ஒரு காய். தேங்காயானது வட அமெரிக்காவில் கடைகளில் சிறிய, உருண்டை மண்ணிறம், இளம் பழுப்பு மஞ்சள் போன்ற நிறங்களில் காணப்படும்.

மேலும் தின்பண்டங்காக, தேங்காய் பர்ஃபி, மக்கரூன் (macaroons), பிளாஸ்திக் பைகளில் உதிரித் தேங்காய்த் துருவல்கள் (shredded coconut), மற்றும் தேங்காய்ப் பால் தகர டப்பா, உலர்த்திய தேங்காய்ப் பால் மா போன்றவைகளாகவும் கடைகளில், சந்தைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

தேங்காய் ஆனது தென்னை மரத்தில் காய்க்கும் ஒருவகைக் கனியாகும். கடைகளில் காணப்படும் சிறிய கோளங்கள் ஆகிய தேங்காய்கள் இயற்கையில் அவற்றைச் சுற்றிய ஃபைபர், , அழகிய பச்சை, இளம் பச்சை, மண்ணிறம், மஞ்சள், செம்மஞ்சள் போன்ற தோலுடன் அமைந்திருக்கும். தோல் உரித்த தேங்காய்க்கு அதன் ஒரு புறத்தில் இரண்டு முளை வரும் ஓட்டைகள் அதன் இரட்டையில் காணப்படும்.

தேங்காய் உண்மையில் ஒரு விதையாகும். தேங்காய் விதையின் வெளிப்பகுதி கடினமான சிரட்டை ஓடுதனைக் கொண்டு அமைந்திருக்கும். இது தேங்காயின்  உள்ளே காணப்படும் வெண் தேங்காய்ச் சொட்டிற்கும்,  இளநீருக்கும் பாதுகாப்பைத் தரும். நீர் போன்று இருக்கும் இளநீர் ஆனது படிப்படியாகக் காய்ந்து வெண் சதையாக – தேங்காய்ச் சொட்டாக மாறி இறுதியில் அடுத்த வாரசான தென்னங்கன்று முளையாக மாறும். இதனைத் தென்னம் பூரான் என்றும் தமிழில் அழைப்பர்.

தேங்காயைச் சூழவிருந்த தும்பு ஆனது பல வகையிலும் உபயோகிக்கப்படும். இந்தத் தும்பு இயற்கையில் உருவாகும் பலமான நார்களில் ஒன்று என்பது எமது முதியோர் பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முன்னிருந்தே அறிவர். தென்னந் தும்பானது பலமான கயிறு திரித்து எடுத்துக் கொள்ள இன்றும் பயன்படுத்தப்படும், மேலும் தென்னந்தும்பு சாக்குப்பை, கால் துடைக்கும் பின்னிய கம்பளம், வளர்ப்பு மீன் தொட்டி, மாசு அகற்றும் வடி தட்டி, பூச்சாடிகள், சத்தம் தவிர்ப்பிகள் (soundproofing), மற்றும் மெத்தைகள் ஆகியவைகளாகவும் பாவிக்கப்படும்.

உடலுக்கும், தலைமயிருக்கும் ஆரோக்கியம் தரும் தேங்காய் எண்ணெய் ஆனது வெய்யிலில், வெப்பத்தில் உலர்ந்த தேங்காய்ச் சொட்டாகிய  கொப்பறையில் இருந்து பெறப்படும். தேங்காய்  எண்ணெய் ஆனது வட அமெரிக்காவில் பாவிக்கப்படும் ஆலிவ், கனோலா எண்ணெய்கள் போன்ற சமையல் எண்ணெய் ஆகும். நாம் உண்ணும் சிற்றுண்டிகள் பலவற்றிலும்  தேங்காய் எண்ணெயும் பாவிக்கப்படுகிறது. இதைவிடச் சூரியக் கதிர் பாதகம் தவிர்த்துக் கொள்ளப் பூசப்படும் இதமான பூக்சுக்கள் (Sun Tan Lotion)  மற்றும் வாசனைத் திரவியங்களிலும் தேங்காய் எண்ணெய் உபயோகிக்கப்படும்.

பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் அப்பம், பிட்டு போன்றவற்றில் இனிப்புடன் சேர்த்துக் கொள்ள விரும்புவது தேங்காய்ப் பாலாகும். மேலும் தேங்காய்ப் பால் காரக்கறிகளிலும், பால் கறிகளிலும் உபயோகிக்கப்படும்.

தேங்காயானது இன்னும் ஒரு இனிப்பான பாகைத் தரும் திரவியம். சுவையான இளநீர் தான் அது. இளநீர் ஆனது எமது மூதாதையினர் தினமும் உட்கொண்டு நீண்ட ஆயுளையும், குளு குளுப்பான அடர்த்தியான தலைமயிரையும் கொண்டனர் என்று கருதப்படுகிறது . இளநீர் இன்னும் அபூர்வமான பல உயிர் காக்கும் சத்துக்கள் (vitamins) கொண்டது.

தென்னை மரமானது அமெரிக்கக் கண்டத்தில் ஃபுளோரிடா, ஹவாயி போன்ற மாநிலங்களில் வளரும். தமிழராகிய நாம் எமது மூதாதைகள் பிறந்த வெப்ப வலயப் பிரதேசங்கள் ஆகிய தென் இந்தியா, இலங்கை, மலேசியா, ரியூனியன், சீசெல்ஸ், மொரிசியஸ், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற இடங்களில் காணப்படும்.

நாம் மேலே அறிந்து கொண்டவற்றை ஞாபகப் படுத்த கீழே சில பயிற்சிகள்

அ. மேலே உள்ள கட்டுரையை வாசித்துக் கீழே உள்ள சொற்களை இணைக்க முயலவும்

கயிறு
தேங்காய்ப் பால்
இளநீர்
தேங்காய்ப்  நார் பர்ஃபி
தேங்காய்ச் சொட்டு சமையல் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் சூரியக் கதிர் தவிர்ப்பி (suntan lotion)
குளிப்பு, மற்றும் வாசனைத் திரவியம்
பூச்சாடி
கம்பளம்

ஆ.தேங்காய்ப் பால் செய்து பார்த்தல்

தேவையானவை

  1. தேங்காய் (அல்லது தேங்காய்ப் பால் மா)
  2. வெந்நீர்

உங்கள் செய்முறையைக் கீழே தரவும், மேலும் பனிப்பூக்கள் சஞ்சிகைக்கும் சமர்ப்பிக்கலாம்

1. ___________________________________________________
2. ___________________________________________________
3. ___________________________________________________

குட்டித் தமிழ் இலக்கணம் படிப்போம்

எழுவாய்ச்சொற்கள் (Nouns)

தமிழில் பொதுவாக வசனத்தை ஆரம்பிக்கும் குறிப்பீட்டுச் சொல் எழுவாய் எனப்படும்,

உதாரணம்

தென்னை காற்றில் அசைந்தது

தேங்காய் மரத்தில் இருந்து விழுந்தது

இளநீர் ஒரு நல்லுணவு ஆகும்

பயனிலைச் சொற்கள் (Predicates)

தமிழில் பொதுவாக வசனத்தை நிறை செய்யும் சொல் பயனிலை எனப்படும்,

பயனிலைச் சொற்கள் வினைச் சொற்களாகவும் (Verbs) அமைந்து கொள்ளலாம்.

உதாரணம்

தென்னை மரத்து ஓலை காற்றில் அசைந்தது

உதிர்ந்த தேங்காய் மரத்தில் இருந்து விழுந்தது.

இளநீர் ஒரு நல்லுணவு ஆகும்

பெயரடைச் சொற்கள் (Adjectives)

தமிழில் நாம் ஒரு எழுவாய்ச் சொல்லை விவரிக்கும் சொற்களைப் பெயரடைச் சொற்கள் என்போம்.

உதாரணம்:

உயர்ந்த மரம்

சிறிய தேங்காய்

இனிப்பான இளநீர்

வெள்ளை தேங்காய்ப்பால்

தமிழில் பெயரடைச்சொற்கள் உரிச் சொற்கள் என்றும் கூறப்படும்.

இ. கீழே உள்ள வசனங்களில் பெயரடைச்சொற்கள் எவை என்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்,

  1. தேங்காய் ஒரு அபூர்வமான விதை.
  2. பச்சைத் தேங்காய் சுவையான வழுக்கலைக் கொண்டது.
  3. தென்னந் தும்பில் இருந்து வலுவான கயிறு உருவாக்கலாம்
  4. அது வெள்ளைச் சொட்டினை பலமான சிரட்டையின் உள்ளே கொண்டது
  5. தென்னந் தும்பில் இருந்து மண்ணிறப் பூச்சாடிகள் செய்யலாம் .
  6. தேங்காய்கள் உயர்ந்த தென்னையில் காணப்படும்,
  7. உலர்ந்த தேங்காய்த் துருவலில் இருந்து சுவையான பர்ஃபி செய்யலாம் .

ஈ. கீழே உள்ள சொற்களை வைத்து இடைவெளிகளை நிரப்பவும்

வலுவான, வெள்ளை, சுவையான, இளம் பச்சை, மிருதுவான , உயரமான

  1. பழுத்த தேங்காய் _____தென்னை மரத்தில் இருந்து விழுந்தது.
  2. தென்னம்  நாரில் இருந்து ___ கயிறு தயாரிக்கலாம்.
  3. சட்னி  __ சொட்டில் இருந்து அரைத்து எடுக்கப்படும்
  4. __ இளநீர் __ தேங்காயில்  இருந்து பெற்றுக் கொள்ளலாம்
  5. __ தேங்காய்ச் சொட்டு வழுக்கல் என அழைக்கப்படும்
  • யோகி அருமைநாயகம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad