பனிக் காலம்
பனி காலம் பற்றி ஆராய்வோம் வாருங்கள்!
உடம்பு நடுங்குகிறது. வெளியில் குளிர், வெய்யிலின் வெளிச்சம் குறைந்தவாறே போகிறது, இருட்டு அதிகரித்தவாறே போகிறது.
சூரியனைப் பார்த்தால் சுடுவதும் இல்லை. அதுவும் ஒளிமயமான பகலிலும் ஒப்புடைய வெப்பமும் கிடையாது.
அது சரி பூக்கள், பூச்சிகள், புற்திடர்கள் எங்கே போயின?
பொதுவாக வட அமெரிக்காவில் எமது மாநிலம் ஆகிய மினசோட்டாவிலும், எமது மாகாணம் ஆகிய ஒன்டாரியோவிலும் மற்றைய வடக்குப் பிரதேசங்களிலும் பனிமழை கொட்டோ கொட்டும்.
ஆனால் ஏன் எமக்குப் பனி வருகிறது? அதுவும் ஏன் வருடா வருடம் அதே மாத காலங்களில் வருகிறது.
இதைப் பற்றிச் சற்று ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்.
சில புதிய சொற்களும் அவற்றின் விளக்கமும்
பனிக் காலம்: இது இலையுதிர் காலத்திற்கும், இலைத் துளிர் காலத்திற்கும் இடையே வரும் பருவம்.
வானிலை அறிவியலாளர் (meteorologist): இவர் ஒரு வானிலை விஞ்ஞானி. காலநிலை மாற்றங்கள் எவ்வாறு உருவாகின்றன என்று புள்ளி விவரவியல் வைத்து அவை எவ்வாறு எதிர் வரும் நாட்களில் மழை, அல்லது பனி பெய்யும் என்றோ, வெய்யில் அடிக்குமென்றோ கணித்துச் சொல்வார்.
பூகோளப் பருவ மாற்றுப் பிரதேச ஆய்வாளர் (climatologist): இவர் ஒரு பூகோளப் பருவ கால மாற்றங்கள், அவற்றின் வரலாற்றுச் சான்றுகள் போன்றவற்றை வைத்து பூகோளத்தில் குறிப்பிட்ட பாரிய பிரதேசங்களில் நீண்ட கால விளைவுகளைப் பற்றி ஆராயும் விஞ்ஞானி,
பனி காலம் வருவது ஏன்?
வெளிச்சமான நாட்கள் எங்கே போய் விட்டன?
எவ்வாறு அழகிய பொன்னிற இலைகள் கூடிய பின்னர் காற்றில் நிலத்தில் உதிரும் இலையுதிர் காலத்தில் இருந்து பனிக் காலமாக மாறுகிறது என்று அவதானித்து இருப்பீர்கள்.
எமது மாநிலங்கள், மாகாணங்களில் சிறிது சிறிதாக கால நிலை வெட்ப தட்ப மாற்றங்கள் உண்டாகும். மெது மெதுவாகக் குளிர் காற்று அதிகரித்து, தொடர்ந்து குளங்களும் ஏரிகளும் மேற்பகுதி உறைந்து விடும். மேலும் வெண்பனி நிலத்திலும், நீர் நிலைகளிலும் தூவிப் பரவி, வெண் கம்பளமாக மூடிவிடும்.
எமது பூமி சூரியனைச் சுற்றி வரும் அதன் அச்சுப் பகுதியில் சற்றுச் சாய்ந்து இருப்பதால் வருடத்தில் சில பகுதிகளில் தொடர்ந்து நேரடிச் சூரிய ஒளி கிடைப்பது இல்லை. இதனால் தான் சூரியனானது அடி வானில் சற்றுக் கீழ்ப்புறம் உதித்து, எமது தலை உச்சிக்கு மேல் வராது அதே சமயம் அடி வானில் சில மணித்தியாலங்களிலேயே போய் மறைந்து விடும்.
குறைந்த சூரிய வெப்பம் ஆயின் கூடிய குளிர் காற்று அடிக்கும். குளிர் காற்று வானில் பொழியும் மழைத்துளிகளை உறைத்து பனித்துளிகளாகப் பெய்ய வைக்கும்.
குளிர் காற்று, தரையிலுள்ள தாவரங்களை மடிய வைக்கும். புற்கள், பூக்கள் இல்லாமல் பூச்சிகளுக்கும், புழுக்களுக்கும், பறவைகளுக்கும், பல விலங்குகளுக்கும் உணவு கிடைக்காது.
பறக்க முடிந்த பூச்சி புழுக்கள் தின்னும் பறவைகள் உறைபனி காலத்தில் பூகோள வெப்ப வலைய தெற்கை நோக்கிப் பறக்கும்.
அதே சமயம் ஊர்வன, நீந்துவன போன்ற சில வெப்பமான குருதியற்ற தவளை, பாம்பு மற்றும் ஆமை போன்ற உயிரினங்கள் வெப்பத்தை நோக்கிப் போக முடியாதன . மான்களும், கரடிகளும், நரிகளும், உணவுக்குப் போராடும்.. எனவே பொதுவாகப் பல குளிர்ப் பிரதேச உயிரினங்கள் பனிக் கால நீண்ட உறக்கத்தை நாடுபவன ஆகும்.
குளிரைச் சமாளிப்பது எப்படி?
சரிந்து சுற்றும் பூமியானது எமக்குக் குறுகிய வெளிச்சமுள்ள நாட்களையும், நீண்ட கும்மிருட்டு இரவுகளையும் வட துருவத்திலும் துருவத்துக்கு அருகாமைப் பிரதேசங்களாகிய எமது மாநிலங்களுக்கும், மாகாணங்களுக்கும் தருகிறது. இத்துடன் கடும் குளிரையும் சேர்த்துத் தருகிறது.
வெளியில் குளிரானால் நாம் என்ன செய்ய முனைவோம்? வீட்டின் உள்ளே வெப்பத்தை அதிகரிக்கப் பார்ப்போம். வீட்டின் உள்ளே வெப்பமானி – உயர்த்துவது மூலம் வெப்பம் தரும் சூலையை (Heating system) எரிய விடுவோம், இல்லை நெருப்பு அடுக்களையை (fireplace) எரவ விட்டு குளிர் களைந்து வெப்பம் பெறுவோம்.
மேலும் எமது உடல் வெப்பத்தைப் பேணஅதிக உடைகளைக் காலில் இருந்து தலைவரை உடுத்திக் கொள்வோம். ஆயினும் வெளி உயிரினங்களும் அடர்த்தியான உரோமங்களைப் பனிக் காலத்தில் வளர்த்துக் கொள்ளும் . மற்றையவை நீண்ட காலப் பகித் துயிலை நிலங்கீழ் துளைகள், பாறை அடி, இலைக் குவியல்கள் ஆகியவற்றின் உள்ளே பெற்றுக் கொள்ளும்.
குளிர்ப் பிரதேசங்களில் பல தாவரங்களும் பனியுறக்கத்தைக் கொள்ளும். அதிக வெப்பத்தை வெளியே விடாது தம் இலைகளை உதிர்த்து, பட்டைகளையும் பருமனாக்கித் தாவரங்களும் தமது உள்ளகத் தரையில் இருத்து நீர் உறிஞ்சுதல், போசாக்குப் பரிமாற்றங்கள் போன்றவற்றை வெகுவாகக் குறைத்துத் தூங்கும். வெளியே பனி படிந்திருக்கும் மரங்களைப் பார்த்தால் அவை பட்டு இறந்து விட்டன போன்றிருக்கும் ஆனால் இலை துளிர் கால வெப்பமான சூரியக் கதிரில் துயில் எழுந்து புதிய குத்துத் தளிர் இலைகளை மீண்டும் விரிக்கும்.
எமது பிரதேசங்களில் இருவகை மரங்கள் உண்டு
பரந்த இலையுள்ள இலையுதிர்க்கும் தாவரங்கள்
என்றும் பச்சை பசேல் என்று இருக்கும் பைன், கோனி ஃபரஸ் மரங்கள்.
பனி காலச் சூழலுடன் பழகலாம்
நாம் தமிழர் நமது மூதாதைகள் வெப்ப வலைய Tropical மக்கள் . எனவே பனிக் கால வாழ்க்கை இவ்விடத்தில் வாழும் எம்மில் சிலருக்கும் பழக்கமானது, மற்றையவர்க்குப் புதிய அனுபவம்.
இவ்விடத்தில் உள்ள உயிரினங்களோ பனிக் காலத்தில் பயனுற பல இயல்பான வாழ்க்கை முறைகளைக் கொண்டுள்ளன. உயிரினங்கள் யாவற்றிற்கும் பனிக் காலத்தில் உண்ண உணவும், உயிர் வாழ பாதுகாப்பான வதி விடமும் தேவைப்படும்.
பனிக் காலத்தில் இவ்விடம் வாழும் உயிரினங்கள் அதற்கேற்ப இயற்கைப் பேறுகளைப் பெற்றுள்ளன. மான்கள் அவற்றின் பெரு உடலுடன், சிறிய நீண்ட கால்களையும் குழம்புகளையும் கொண்டுள்ளன. இது உறை பனியில் நடப்பதற்குப் புதைந்து புதைத்து செல்ல வேண்டி வரும். எனவே அவை அடர்ந்த பனிப் பருவகால உரோமத்தைத் தோலில் பெற்றுக் கொள்ளும் ,
அதே சமயம் முயல்கள், பனிச் சிறுத்தைகள், நரிகள் தமது தோலில் அடர்த்தியாக உரோமங்கள் மாத்திரம் அல்ல பரந்த பஞ்சு போன்ற பாதங்களையும் பெற்றுக் கொள்ளும். இது பனியில் இலகுவாகப் புதையாது நடக்க உதவும்.
பாடும் குருவிகள் , வான்கோழிகள், காட்டுக் கோழிகள், மற்றும் பருந்துகள் ஆகியவை பனிக் கால பஞ்சு போன்ற அடர்த்தியான சிறகுகளையும், விரித்த முக்கோணம் போன்ற பரந்த கால் விரல்களையும் கொண்டு பனிமேல் தத்தித் தத்திப் போக உதவும்.
இதை விட இரையாகக் கூடிய முயல் போன்ற உயிரினங்கள் பனியில் தமது கோடைக் கால உரோமங்களை இழந்து, பனி போன்ற வெள்ளை, அல்லது உதிர்ந்த இலைச் சருகுச் சாம்பல் அல்லது கறுப்பு போன்ற நிறங்களைப் பெற்றுக் கொள்ளும். இது, இரை தேடி அலையும் விலங்குகள் மற்றும் பறவைகளிடமிருந்து தம்மைப் பேண, பதுங்கியிருக்க உதவும்.
கனடா துருவம், அலாஸ்கா மாநிலங்களில் வாழும் பூர்வீக மக்கள் இனுவிற் Inuit எனப்படுவர். இந்த மக்கள் பனிக் கால சம்பிரதாய வதிவிடம் இக்ளூ Igloo எனப்படும் பனிக்கட்டியால் அமைந்த ஒரு அரைக் கோளமான வீடாகும். தடிப்பாக உறைந்த நீர் நிலை மேற்பகுதிப் பனிக்கட்டிகளைச் சதுரம் சதுரமாகப் பெயர்த்து எடுத்து இக்ளூ வீடு கட்டப்படும். குளிர் காற்று நேரடியாக உள்வீட்டில் சென்று வராது இருக்க, தேர்ச்சியான இனுவிற் மக்கள் பனி வீட்டு நுழைவாயிலை நிலப்பரப்பிலும் சற்றுக் கீழே புகுந்து உள்ளிடும் தாழ்வுற்ற சிறுகுகைக் கால்வாய் போன்றும் அமைத்துக் கொள்வர்.
சில சமயம் பனியில் வேட்டையாடச் செல்பவர் தற்காலிகப் பனிக் கூடாரங்களையும் அமைத்துக் கொள்வர், இதன் பெயர் குவின்சி Quincy.
நீர் அதுக்கு அடுத்து பனி ஆகா புதுமை
பனித்துளிகள் பொழிய தம்பி, தங்கைகளே அதை நீங்கள் நாக்கில் பிடித்து சுவைக்க முனைந்திருப்பீர்கள் அல்லவா? பனிக்கட்டியானது நாக்கில் பட்டதும் எமதுவாயினுள் எமது உடல் வெப்பத்தினால் உருகி நீர் ஆக மாறிவிடும்.
உலகின் பல பகல்களிலும் குளிர் பருவ காலம் பனியைக் கொண்டது. பனிக்கட்டி நீர் ஆகும். அதே போல் உதிரிப்பூ போன்று பெய்யும் பனித்துளியும் நீரே ஆகும். மழை, உறை மழை (sleet), பனிக்கட்டி மழை (hail), நீர் ஆவிப் புகார் (mist), பனிப் புகார் (fog) யாவுமே நீரின் வெவ்வேறு உருவங்கள் |
இவையாவும் எமது பூமியின் நீர்ச் சக்கரத்தில் (water cycle) பங்கு பெறும் மூலகங்கள் ஆவன . நீர்ச்சக்கரம் என்பது நிலத்தில், நீர்நிலைகளில் இருந்து நீரானது வானிற்கும் வாயு மண்டலத்திற்கும் சென்று மீண்டும் தரை மற்றும் கடல் வந்து சேரும் வட்டமுறையைக் குறிக்கும்
நீரானது சூரிய வெப்பத்தினால் நீராவியாக மாறி வாயு மண்டலத்தை அடையும். பின்னர் வாயு மண்டலம் அதன் பூகோளக் காற்றோட்ட அசைவினாலும், குளிரினாலும் மீண்டும் நீராவி சுருங்கி நீராக மாறி நிலத்தை நோக்கி வரும்.
இது வரும் வழியில் பூகோளப் பிரதேசம், வெப்பதட்பக் காற்று மண்டலங்கள் ஆகியவற்றைப் பொறுத்து மழையாகவோ அல்லது பனியாகவோ வந்து எம்மை அடைகிறது.
பனி பற்றிய பல்வேறுபட்ட துணுக்குகள்
நீரானது 212 பாகை ஃபரனைட் (100 பாகை செல்சியஸ்) இல் கொதிக்கும்,
நீரானது 32 பா கைஃபரனைட்(0 பாகை செல்சியஸ்) இல் உறையும்
உலகின் 90 விதமான பனிகள் தெற்கில் அண்டார்ட்டிகாக் கண்டத்தில் உள்ளன. அவ்விடம் 7000 அடி பருமனான பனிப்பாறைகள் உள்ளன,
எமது உலகத்து நீரை 100 வாளிகள் என்று ஒப்பிட்டோமானால், இதில் 70 வாளிகள் அண்டார்ட்டிகாக் கண்டத்தில் உள்ளது. மிகுதி 30 வாளிகளே எஞ்சிய பூகோளத்தில் உள்ளன.
பனி காலம்
எமது தொலைக்காட்சிச் சாதனங்களில் TV, வாகன வானொலிகளில் Car Radio பனிக் காலத்தில் பனி மழை Snow fall, பனிக் காற்று, பனிச் சூறாவளி Snow Storm என்றெல்லாம் அறிவிப்பர். மினசோட்டா மாநிலமும், ஒன்ராரியோ மாகாணமும் வழக்கமாக அதியுச்ச பனி, குளிரைப் பெறினும் சில பனிக் காலங்கள் மற்றைய வருடங்களைப் போன்று இருக்காது காணப்படும். இதன் காரணம் எமது பூகோளச் சமுத்திரங்களையும் Global Ocean Currents துருவக்காற்று ஓட்டங்களையும் Polar Winds பொறுத்து அமையும்.
- தொகுப்பு யோகி