காலிஃப்ளவர் பனீர் கட்லெட்
டிசம்பர் – ஜனவரி மாதக் குளிருக்கு , சாயங்கால வேளையில் மசாலா டீயும், வடையும் கிடைத்தால், குளிர்காலத்தை இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடித்தாலும் சம்மதிப்பார்கள் தமிழர்கள். அப்படி ஒரு வெற்றிக்கூட்டணி இது. ஆனால், வடையில் கார்ப் (Carb), ட்ரான்ஸ் ஃபேட் (Transfat) போன்ற கெட்ட சங்கதிகள் உள்ளன. நீண்ட கால உட்கொள்ளலில், உடல் நலத்திற்குச் கேடு ஏற்படுத்தக்கூடியது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துச் சமைக்கப்படும் ஒரு சிற்றுண்டி, இந்த கட்லட். எந்த மாவும் சேர்க்கப்படாததால், கார்ப் இல்லை. ரிபைண்ட் எண்ணெய்யில் பொறிப்பதில்லை என்பதால், ட்ரான்ஸ்ஃபேட் கிடையாது.
- முதலில் பாதிக் காலிஃப்ளவரைச் சிறிதாக வெட்டி, தண்ணீரில் மிதமாகக் கொதிக்க வைத்து, நன்றாகத் தண்ணீரை வடிகட்டிவிட்டு, பின்பு மிக்ஸியில் பரபரவென அரைத்துக்கொள்ளவும்.
- கொஞ்சம் வெங்காயத்தைச் சிறிதாக அரிந்துக்கொள்ளவும். வெங்காயம் அதிகமானால், தண்ணீர் விடும். அதனால், கொஞ்சமாக எடுக்கவும்.
- பனீரை ஒரு கப் துருவிக்கொள்ளவும்.
- பசலைக்கீரை, குடை மிளகாய் ஆகியவற்றைச் சுவைப் பிடித்தவர்கள் சேர்த்துக்கொள்ளலாம். அவசியம் கிடையாது. இரும்புச்சத்தும், விட்டமின் சத்துகளும் வந்து சேரும்.
- இவற்றுடன் சிறிது அரைத்த இஞ்சிப் பூண்டு, சீரகம், மசாலா பொடி, மல்லி தூள், கரம் மசாலா, சீரகப் பொடி, உப்பு ஆகியவற்றைத் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளவும்.
- பாதாமைப் பொடியாக அரைத்தோ, அல்லது கடைகளில் கிடைக்கும் பாதாம் பவுடரில் சிறிதோ சேர்க்கவும்.
- இத்துடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலையைச் சிறிதாக அரிந்து சேர்த்த பின்பு, அனைத்தையும் ஒன்றாகக் கலந்துப் பிசைந்துக்கொள்ளவும்.
- ஓவனில் 400 டிகிரி வைத்துச் சூடாக்கவும்.
- ஓவன் சூடான பின்பு, கட்லட் கலவையை வட்டமாகத் தட்டி, அலுமினியத் தட்டில் வைத்து, மேலே சூடாக்கியப் பட்டரையோ அல்லது ஆலிவ் ஆயிலையோ தெளித்து, ஓவன் உள்ளே வைக்கவும்.
- ஓவனில் 25 நிமிடங்கள் இருந்த பிறகு, சூடான கட்லட்களைத் திருப்பி வைத்து, மேலும் 10 நிமிடங்கள் வைக்கவும்.
சுவையான, ஆரோக்கியமான கட்லட் ரெடி. பெரியோர்களுக்கு மட்டுமில்லாமல், குழந்தைகளுக்கும் பிடிக்கும் சிற்றுண்டி தயார். புதினா சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
-சங்கீதா சரவணகுமரன்.