தலையங்கம்
அக்னிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டினில் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!!!
-மகாகவி சுப்பிரமணிய பாரதி
அன்றாட வாழ்வில் நாம் கணக்கற்ற அக்னிக் குஞ்சுகளைச் சந்திக்கின்றோம். எழுத்துத் திறமை, பேச்சுத் திறமை, ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், பாட்டுப் பாடுதல், அகழ்வாராய்ச்சி, வரலாற்று உண்மைகளின் தெளிவு, நிகழ்வுகளைத் திறனாய்தல் என ஏதோவொரு துறையை கை வந்த கலையாகக் கொண்ட அக்னிக் குஞ்சுகள் பல நம்மில், நம் நண்பர் குழாத்தில், நம் ஊரில், நமக்குத் தெரிந்தவர்களின் மத்தியில் என பல பிணைப்புகளிலும் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த அனைத்து அக்னிக் குஞ்சுகளையும் சமுதாயமென்ற காட்டிடை ஒளிரச் செய்யும் பொந்தாக அமைவதே இந்த சஞ்சிகை.
நாமனைவரும் நம் நாடு, வீடு, சொந்தம், நண்பர்கள் மற்றும் அனைத்து உறவுகளையும் உடமைகளையும் விட்டு வெளி நாடு சென்று வாழ்வது என்ற முடிவெடுத்தோம். காலங்கள் பல உருண்டோடி, வாழும் நாடே நம் நாடு என்றும் நம்மைச் சுற்றி இருக்கும் பந்தங்களே சொந்தங்களென்றும் வாழப் பழகிக் கொண்டோம். பல மாற்றங்களுக்கு நம்மை ஆட்படுத்திக் கொண்டு, அதனையே சுகமாக அனுபவித்து வாழவும் பழகிக் கொண்டோம். அனைத்தையும் விட்டு இரண்டு பெட்டிகள் மட்டும் எடுத்துக் கொண்டு ஊரை விட்டு வந்தாலும், நம்முள்ளே புகுந்து இரண்டறக் கலந்த மொழியை நம்முடனே வைத்துக் கொண்டு நிழல் போல் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
மொழியென்பது இரு மனிதர்களுக்கிடையே கருத்துப் பறிமாற்றத்திற்கான ஒரு வழி முறை என்பதைக் கடந்து மனித உணர்வுகளை, உறவுகளை பலப்படுத்தும் ஒரு பாலமாகும். பேசுவது மட்டுமின்றி சிந்திப்பதற்கும் ஒரு மொழி தேவை. செய்யும் சிந்தனையும், செதுக்கும் சிலைகளும் ஒரே மொழியில் இருக்கும் பலரின் ஒன்று பட்ட முயற்சியே இந்த சஞ்சிகை.
மனிதன் என்பவன் ஒரு சமுதாய விலங்கு என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. இந்தச் சமுதாயம், நமக்கு நல்ல வாழ்க்கை முறைகளைக் கொடுத்துள்ளது, நல்ல பழக்க வழக்கங்களைக் கற்பித்துள்ளது. இன்ன பிற வாழ்வியல் இன்பங்களை அனுபவிக்கும் மன நிலையையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதற்கு நன்றிக் கடன் செய்யும் வகையில், சமுதாயத்திற்கு நம்மாலான கைம்மாறு செய்வதற்கான வெளிப்பாடு இந்த சஞ்சிகை.
நதி மூலமான நாம் பிறந்த நாடுகளுக்கும், நதி செல்லும் பாதையில் நதியின் பிரவாகத்திற்கும் அழகிற்கும் காரணமான அனைத்துச் சோலைகளுக்கும் நன்றி தெரிவித்து நம் பயணத்தைத் துவங்குவோம். இந்தப் பயணத்திற்கு நம்முன்னே பாதை வகுத்துக் கொடுத்த அனைத்துப் பத்திரிக்கையுலக முன்னோடிகளுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
நன்றி,
ஆசிரியர் குழு.
இன்றொரு சொல்லினைக் கேட்டேன்
ஏது செய்வேன் எனதருமை மக்காள்
கொன்றிடல் போலொரு வார்த்தை
இன்று கூறத்தகாதவன் கூறினான் கண்டீர்
புத்தம் புதிய கலைகள் பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவ தில்லை அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஒங்கும்
என்றந்தப் பேதை யுரைத்தான் – ஆ
இந்த வசைமொழி எனக் கெய்திடலாமோ
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்