தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம் !
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துக்களையும், ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறோம்.
2016 ஆம் ஆண்டு விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது. இந்த ஆண்டில் பல விஷயங்கள் நடந்து முடிந்துள்ளன. அவற்றுள் சில நன்மை பயக்கும் விஷயங்களாகவும், சில தீமை பயக்கும் விஷயங்களாகவும் நடந்து முடிந்துள்ளன. இந்த ஆண்டின் பெரிய நிகழ்வாக, அமெரிக்க அதிபர் தேர்தலைச் சொல்லலாம். தேர்தல் முடிந்து, வெற்றி பெற்றவரை அறிவித்து அரசாங்கத்தின் அங்கங்களெல்லாம் முடிவு செய்யப்பட்டு வருகின்றன. புதிய அரசாங்கம் பதவி ஏற்பதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் என்ன செய்யும் என்பதை உலகம் முழுவதுமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது எனலாம். பிறக்கும் புத்தாண்டு அமெரிக்கர்களுக்கும், உலகத்திற்கு நல்வழியைக் காட்டுமென நம்புவோம்.
இந்தியாவை எடுத்துக் கொண்டால் சமீபத்தில் இரண்டு மூன்று பெரிய விஷயங்கள் நடந்து முடிந்து விட்டன எனலாம். இந்திய அரசு எடுத்த தடாலடி நடவடிக்கையான கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை முக்கியமானதாகச் சொல்லலாம். இந்த நடவடிக்கையின் நோக்கம் உயர்ந்தது என்றாலும், இதனை அமுலுக்குக் கொண்டு வரும் முயற்சியில், தினந்தோறும் தவிக்கும் மத்திய தர மனிதர்களின் துயர் இன்னும் தொடர்ந்து கொண்டு இருப்பதாகத் தோன்றுகிறது. மத்திய அரசு இதனை நன்கு ஆராய்ந்து சாதாரண மக்களின் துயர் துடைக்கச் செய்ய வேண்டிய முயற்சிகளனைத்தையும் உடனடியாகச் செய்து முடிக்க வேண்டும். கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட இந்த நிலையில், இனிமேலும் நீண்ட நாள் நன்மை கருதி பொறுமை காட்ட வேண்டுமென மத்திய தர மக்களுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டு காலம் கழிக்க இயலாது என்பதை மோடியும் அவரின் அரசும் உணர வேண்டும்.
மூன்றாவதாக, தமிழக முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களின் மறைவைக் கூறலாம். அவரை இழந்து தவிக்கும் அவரின் கட்சித் தொண்டர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். புதிதாக வந்திருக்கும் முதல்வர், இதுவரை தான் இருந்த நிலையை மறந்து, தனக்கு இப்பொழுது தரப்பட்டிருக்கும் பதவியின் உயர்வையும், மாட்சிமையையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொண்டு, தன் மதிப்பையும், தமிழகத்தின் எதிர்காலத்தையும் காப்பார் என நம்புவோம்.
அடுத்ததான நிகழ்வு சென்னையைச் சமீபத்தில் தாக்கிய “வார்தா” புயலாகும். மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக் காற்று பாதித்த விஷயங்கள் கொஞ்ச நொஞ்சமன்று. இருபத்தி நான்கு மணி நேரமாகக் கொட்டித் தீர்த்த மழையைத் தொடர்ந்து இந்தக் காற்று பிடுங்கிப் போட்ட ஆயிரக்கணக்கான மரங்கள். இந்த மரங்களை எல்லாம் எடுத்து நீக்கி, தெருவைச் சரி செய்து, பழையபடி சென்னையைச் சென்னையாக்குவது மிகப் பெரிய செயலென்பது அனைவரும் அறிந்ததே. அரசாங்கம் தான் செய்ய வேண்டியவற்றைத் துரித நிலையில் செய்ய வேண்டும்; எதிர்க் கட்சிகளும், பத்திரிக்கைகளும், பொது மக்களும் தாங்கள் கொடுக்க வேண்டிய முழு ஒத்துழைப்பைக் கொடுப்பதும் அவசியம்.
”நாளென ஒன்றுபோல் காட்டி – உயிரீறும்
வாளது உணர்வார்ப் பெறின்”
என்ற பொய்யாமொழிக் கூற்றுக்கொப்ப, 2016 ஆம் ஆண்டு இப்பொழுதுதான் தொடங்கியது போல இருந்து, முடிவுக்கே வந்துவிட்டது. இந்த ஆண்டில் கோடிக்கணக்கில் புது சிசுக்கள் உலகில் பிறந்தன, கோடிக்கணக்கில் மனிதர்கள் இறந்துபட்டனர். இவையெதையும் பொருட்படுத்தாது, காலச்சக்கரத்தின் சுழற்சியானது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் 2017 உதிக்க இருக்கின்றது, அந்த வருடமும் கண் மூடி, கண் திறப்பதற்குள் முடிந்து விடும்; நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி, நரை திரை, மூப்பெய்தி, காலன் வரும் காலம் பார்த்துக் காத்திருக்கத் தொடங்குவோம். அனைத்து மனிதர்களின் வாழ்வும் இதுவே !!
இதுபோன்ற அனித்திய வாழ்வு முடிவடைதற்குள் நம்மால் முடிந்ததைச் சாதித்து, இனிவரும் சந்ததியினருக்கு ஏதேனும் ஒரு ஆக்கத்தை விட்டுச் செல்வோம் என்று உறுதி பூண்டு செயல்படுவதே மனித வாழ்க்கையின் நோக்கமாக இருக்க இயலும். அதுபோன்ற உயர்ந்த நிலையை அனைவரும் அடைய வேண்டிப் பிரார்த்திக்கும்
பனிப்பூக்கள் ஆசிரியர்.