டிம் ஹார்ட்டன்ஸ் மினசோட்டாவில்
ஓ கனடா டிம் ஹார்ட்டன்ஸ் மினசோட்டாவுக்கும் வந்தாச்சா?
கனடாவிற்கும், மினசோட்டாவிற்கும் இடையே பயணிக்கும் தமிழ் நெஞ்சங்களே, உங்கள் காஃபி சுவைக்கும் நாக்கிற்கு இன்னும் ஒரு அனுகூலம்.
கனடாவில் பல தமிழர் சுவைத்து மகிழும் காஃபி டபிள் டபிள், மற்றும் டிம் பிட்ஸை (Tim – bits) இனி விமானம் பிடித்துப் போய் வாங்கத் தேவையில்லை. சுடச் சுட மினசோட்டா மாநிலத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்,
நவெம்பர் மாதம் நன்றி நவிலல் நாட்களுடன் நாக்குக்கு நல்சுவை தரும் பிரபல கனடா காஃபி மற்றும் இனிப்பு பேக்கரிப் பண்டங்கள் மினசோட்டாவிற்கும் வந்துள்ளது.
மினசோட்டாவில் டிம் ஹார்ட்டன்ஸ்
மால் –ஆஃப் அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் இரண்டாம் மாடியில் இந்தக் காஃபி, பேக்கரி தனது கதவைத் திறந்துள்ளது. டிம் ஹார்ட்டன்ஸ் 1964 இல் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரில் சுவைமிகு காஃபிக்காக ஆரம்பிக்கப்பட்டு இன்று ஏறத்தாழ 4590 உணவகங்களைக் கொண்டது. இவற்றில் பெரும்பாலானவை கனடாவிலே உள்ளன, எனினும் அமெரிக்கப் பகுதியில் கனடிய எல்லை மாநிலங்களில் ஏறத்தாழ 869 உணவகங்கள் உள்ளன. 2016 ஆம் ஆண்டில் மினசோட்டாவும் இவற்றில் ஒன்றாகுகிறது,
கனடாவில் விற்கப்படும் பத்துக் கோப்பை பால் காஃபிகளில், எட்டு டிம் ஹார்ட்டன்ஸில் தான் வாங்கப்படுகிறது என்றால் பாருங்கள் !
ஏறத்தாழ வருடா வருடம் டிம் ஹார்ட்டன்ஸ் காஃபி சுவைக்கும் மக்கள் இரண்டு பில்லியன் கோப்பைகளை உறிஞ்சித் தள்ளுகிறார்களாம், இந்தக் காஃபியின் சுவை, மணம் போன்றவற்றின் தரத்தைப் பேண இந்த உணவகப் பரிசோதகர்கள் சுமார் 75,000 கப் காஃபி நுகர்ந்து பதம் பார்க்கிறார்களாம்.
கனேடியர்களையும், மினசோட்டா மக்களையும் இணைக்கும் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு ஐஸ் ஹாக்கி. டிம் ஹார்ட்டன்ஸ் ஸ்தாபகர் பிரபல கனேடிய என் எச் எல் (NHL) ஹாக்கி விளையாட்டு வீரராகும்.
மேலும் டிம் ஹார்ட்டன்ஸ் மினியாப்பொலிஸ் நகரில் டவுன் டவுன் (Down-town) மற்றும் பல்கலைக் கழகத்திற்கு அருகேயும் கிளைகள் ஆரம்பித்துள்ளது,
துணுக்கு: கனடாவில் புதிய கிளை ஆரம்பிக்க விரும்பினால், ஏறத்தாழ தசாப்தம் வரை, முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் நிற்பர்களாம்.
தொகுப்பு – யோகி
Tags: Doubledouble, Tim Hortons, Timbits