உரிமைகள் மசோதா – 1
உரிமைகள் மசோதா
இந்த இதழ் வெளியாகும் பொழுது, டானல்ட் ஜான் ட்ரம்ப், அமெரிக்காவின் 45வது அதிபராக பதவியேற்றிருப்பார். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பின்பு வெள்ளை மாளிகை, மேலவை மற்றும் பிரிதிநிதிகள் சபை ஆகிய மூன்றும் குடியரசுக் கட்சியின் வசமாகியுள்ளது. அரசாங்கத்தின் சக்தி ஒரே இடத்தில் குவிந்து விட்டால் யதேச்சாதிகாரம் தலை தூக்க நேரிடலாம் என்பதால், சரிபார்த்தலுக்காக (checks and balances) வாக்கெடுப்பு முறைப்படி உருவாக்கப்பட்டதே இந்த அவைகள். இவற்றின் உறுப்பினர்கள் சட்டங்கள் மேற்கொள்ளும் பிரிவு (legislative branch) , மற்றும் அதைச் செயலாக்கும் பிரிவு (execution branch) என்ற இரு பெரும்பிரிவுகளின் கீழ் இயங்குவர். இவற்றில் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையால், அதிபரது பணி எளிதாகிவிடும். உதாரணத்துக்கு, ஒபாமாகேர் என்று அறியப்படும் ‘மலிவான உடல்நலக் கவனிப்புச் சட்டம்’ (அஃபோர்டபிள் கேர் ஆக்ட்) மக்களுக்குச் சரியாகப் போய்ச் சேரவில்லை என்று கருதப்பட்டால், அதிகச் சிரமமின்றி விலக்கப்படவோ, திருத்தப்படவோ வாய்ப்பு உள்ளது.
அரசின் எந்தவொரு திட்டமும், செயல்பாடும் மக்கள் நலனின் மேம்பாட்டுக்காகவே இருக்க வேண்டும் என்பதை அமெரிக்க அரசியல் சட்டங்கள் மிகத் தெளிவாக விளக்கியுள்ளன. அவற்றின் ஒரு முக்கிய அங்கம் தான் உரிமைகள் மசோதோ (Bill of Rights).
உரிமைகள் மசோதா – வரலாற்றுக் குறிப்புகள்
1789ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி, அமெரிக்காவின் அரசியல் சட்டங்கள் அதிகார்வபூர்வமாக செயல்படுத்தப்பட்டன. இது சுதந்திர அமெரிக்க நாட்டை ஆளும், மக்களுக்கான அரசின் சட்டங்களாகக் கருதப்பட்டது. அரசின் திட்டங்களைச் செயல்படுத்த, சட்டசபை (Senate) மற்றும் பிரதிநிதிகள் சபை (House of Representatives) அடங்கிய பேரவை (Congress), துணை ஜனாதிபதி, ஜனாதிபதி, உச்ச நீதிமன்றம் என்ற கிளைகள் உருவாக்கப்பட்டு, அவற்றின் எல்லைகள், பொறுப்புகள் ஆகியவை இச்சட்டங்களில் விவரிக்கப்பட்டிருந்தன.
செயல்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே, இச்சட்டங்களுக்குத் திருத்தங்கள் தேவை என உணரப்பட்டது. குறிப்பாக, அதிகாரங்கள் அனைத்தும் ஒரே மையத்தில் குவிந்து விடாமலிருக்க, சீர்தூக்கல்களும், சரிபார்த்தல்களும் அவசியம் என உணரப்பட்டது. பேரவையின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் மூலமே எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படும் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டது. மேலும் அரசு கொண்டு வரும் திட்டங்கள், சொந்த விருப்பு வெறுப்பின்றி, பாகுபாடின்றி இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்த சில திருத்தங்களும் இயற்றப்பட்டன. இவற்றை வடிவமைத்து இயற்றியதில் பெரும்பங்காற்றியவர், பிற்காலத்தில் அமெரிக்காவின் நான்காவது அதிபரான ஜேம்ஸ் மாடிசன்.
இவ்வகையில் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களில் பத்து அங்கங்கள் ஏற்கப்பட்டு, 1791ம் ஆண்டு டிசம்பர் 15ம் நாள் சட்டத் திருத்தங்களாக முறைப்படி சேர்க்கப்பட்டன. (உண்மையில் 12 திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன – அவற்றில் ஒன்று இன்னமும் நிலுவையில் உள்ளது. மற்றது 1992ல் அமலுக்கு வந்தது). இந்த பத்து அங்கங்களும், பொது மக்களின் அடிப்படைச் சுதந்திரத்தில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியதால், இவை ‘உரிமைகள் மசோதா’ அல்லது ‘மக்கள் உரிமைகள் சட்டம்’ என்று அழைக்கப்பட்டன.
இவற்றைத் தெரிந்து கொள்வது, தற்போதைய குடிமக்களுக்கும் வருங்காலக் குடிமக்களுக்கும் அவசியம். குறிப்பாக நம்மில் பெரும்பாலோரின் குழந்தைகள் அமெரிக்கக் குடிமக்கள் தான். அவர்களுக்கு விளக்கவாவது அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
முதல் திருத்தம்
பேச்சுரிமை ; மதவுரிமை ; பத்திரிக்கை சுதந்திரம் ; அரசின் நடவடிக்கைகளை அறிந்து கொண்டு முறைப்படி கேள்வி கேட்கும், எதிர்க்கும் உரிமை ஆகியவற்றை வலியுறுத்துவது முதல் திருத்தம். இந்தத் திருத்தத்தின் மூலம், அமெரிக்காவில் நிலவும் தனி மனித சுதந்திரம் வேறெந்த நாடுகளிலும் இல்லாதவொன்று எனலாம்.
பேச்சுரிமை :
நாகரீகத்துக்கான எல்லையை மீறாமல், ஆபாசமின்றி, மற்றவர்க்கு குந்தகம் இல்லாது, நாட்டின் பாதுகாப்புக்குப் பாதிப்பில்லாத கருத்துகளைப் பகிர்வதற்கு, பரப்புவதற்கு தனி மனிதருக்கு உரிமையுண்டு.
இத்திருத்தம் இயற்றப்பட்டு இருநூறாண்டுகளுக்கு மேலான நிலையில், ஊடகத்துறையின் இமாலய வளர்ச்சியும், உலகெங்கும் மேலோங்கியிருக்கும் தீவிரவாதமும் இந்த உரிமைக்குச் சவாலாகி உள்ளன. அவ்வப்போது சிறிய சிறிய விலக்குகள் சேர்க்கப்பட்டு வந்தாலும், நாட்டின் மிக உயரிய நிலையிலிருக்கும் அதிபரையும், அவரது செயல்பாடுகளையும் அச்சமின்றி விமரிசிக்கும் உரிமை நிலையாகவுள்ளது என்றால் அது மிகையில்லை.
— தொடரும்
ரவிக்குமார்.