\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பேர்ள் ஹார்பர் – பகுதி 2

Filed in இலக்கியம், கட்டுரை by on January 29, 2017 0 Comments

(பகுதி 1)

1940ம்  ஆண்டு மத்தியில், அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை பேர்ள் ஹார்பரில் நிறுத்தியது ஜப்பானை பதட்டமடையச் செய்தது. பசிஃபிக் பகுதியில் தனது எல்லையை விரிவடையச் செய்ய முயன்ற   ஜப்பானுக்கு, அமெரிக்காவின் இந்தச் செயல் பெரிய முட்டுக்கட்டையாக அமைந்தது. ஜப்பானிய அரசில் ராணுவ அதிகாரிகள் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த காலமது. மிதவாதியான, அப்போதைய ஜப்பானியப் பிரதமர் ஃபியூமரோ  கோனோவுக்கு  அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தை மூலம் பெட்ரோலிய இறக்குமதிக்கான தடையை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்பதே எண்ணம். ஆனால் போர்கள் மூலம் பல வெற்றியைப் பெற்றுக்கொண்டிருந்த ஜப்பானிய ராணுவத் தளபதிகளுக்கு, ஒழுக்கமற்ற, ஒற்றுமையற்ற, பணக்கார நாடான அமெரிக்காவை அடக்கிப் பாடம் புகட்டவேண்டுமென்பது நோக்கமாக இருந்தது. இதற்கு ஹிட்லரின் ஜெர்மானியப் படையும், இத்தாலியப் படையும் தூபம் போட்டன.

ஜப்பானிய மன்னரான ஹிரோஹிட்டோவும்  அமெரிக்காவுடனான போருக்குத் தயக்கம் காட்டினார். ஆகையால், முதலில்  இரு நாடுகளிடையே சமரசப் பேச்சு நடத்துவதென்பது முடிவானது.  1941ம் ஆண்டு மத்தியில்  ஜப்பானியப் பிரதமர் கோனோ, அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட், இருதரப்பு வெளிநாட்டு அமைச்சர்கள், தூதுவர்கள்,  கடற்படை, விமானப்படை அதிகாரிகள் சந்தித்துப் பேசுவது என்றும் முடிவானது.  தேதியும், இடமும் உறுதி செய்யப்பட வேண்டியது மட்டுமே எஞ்சியிருந்தது.

ஆனால் அதற்கு முன்னரே ஜப்பானிய ராணுவம் போர் உத்திகளில் ஈடுபடத் துவங்கிவிட்டிருந்தது. பெட்ரோலியக் கையிருப்புத் தீரும் முன்னர் போரை நடத்திவிட வேண்டும் என்பது அவர்களது அவசரம். இத்தாக்குதலைத் தலைமையேற்று நடத்த அவர்கள் தேர்ந்தெடுத்தது கடற்படைத் தளபதி இசோரோக்கு யாமமோடோ.

யாமமோடோ அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலையில் படித்தவர்;  பின்னர் ஜப்பானிய ராணுவத் தூதராகப் பணியாற்றி, அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். அமெரிக்க அதிகாரிகள் பலரின் அறிமுகம் இருந்தபடியால், அவர்களின் போர்க்கால செயல்பாடுகள் குறித்து அறிந்தவர். மேலும் இந்தோ சீனப் போர் சமயத்தில் மிகவும் துல்லியமான, துரிதமான முடிவுகளை எடுத்துப் புகழ் பெற்றிருந்தார் யாமமோடோ.  

துவக்கத்தில் யாமமோட்டோவுக்கு அமெரிக்காவுடனான போரில் உடன்பாடில்லை. எனினும், போர் தான் பிரச்சனைக்குத் தீர்வு என்றவொரு நிலை உருவான பின்பு முழு மூச்சில் வியூகங்களில் இறங்கினார்.

யாமமோட்டோ, அடிப்படையில் கடற்படைத் தளபதி எனினும், சிறுவயது முதலே அவரை விமானங்கள் ஈர்த்து வந்தன. தொலைவு காரணமாகவும், அமெரிக்கா முன்னெச்சரிக்கையாகப் போர்க்கப்பல்களை பசிஃபிக் பகுதியில் நிறுத்தியிருந்தபடியாலும் கடல் வழித் தாக்குதல் வெற்றி தராது என்று நம்பினார். இதன் காரணமாக ஒருங்கிணைந்த, கடல் மற்றும் வான்வெளித் தாக்குதல் நடத்தி டார்பிடோ  எனும் நீர்மூழ்கிக் குண்டுகள் மூலம் மட்டுமே  அமெரிக்காவை வீழ்த்த முடியும் என்று முழுமையாக நம்பினார் அவர். இதற்கு ஜப்பானிய ராணுவத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. காரணம் அமெரிக்கக் கப்பல்களை நிறுத்தியிருந்த இடம் ஆழமற்ற துறைமுகப் பகுதிகள்.  டார்பிடோ  எனும் நீர்முழ்கி குண்டுகள் கடலுக்கடியில் அதிக ஆழத்தில் மட்டுமே இயங்கக் கூடியவை. (இவ்வகையான டார்பிடோ தாக்குதலைத் தவிர்க்கவே   அமெரிக்கா, ஆழமற்ற பேர்ள் ஹார்பரில் தனது போர்க்கப்பல்களை நிறுத்தியது)  

இதை நன்கறிந்த யாமமோடோ, மிக லேசான எடை கொண்ட டார்பிடோ குண்டுகளை வடிவமைப்பதில் இறங்கினார்.  அமெரிக்கா விழித்துக் கொள்ளும் முன்னர் தாக்குதல் நடந்து முடிந்து விட வேண்டுமென்பது அவரது எண்ணம். அமெரிக்காவுக்கு யோசிக்க நேரமளித்து விட்டால், தாக்குதல் முறியடிக்கப்பட்டு, ஜப்பான் தோல்வியைச் சந்திக்க நேரிடும். விமானம் சுமக்கும் கப்பல்களை நடுக்கடலில் நிறுத்தி அதிலிருந்து அமெரிக்கா சற்றும் எதிர்பாராத வகையில்  விமானங்களை  ஏவி குண்டுமழை பொழிந்து அமெரிக்கக் கப்பல்களை அழிக்க வேண்டுமென்பது அவரது திட்டம்.

இந்தத்  தாக்குதல் நடந்து முடியும் வரை, அதற்கான எந்தத் திட்டமிடலும், செய்தியும் ரேடியோ தகவல்களாகப் பரிமாறப்படக்கூடாது என்று அவர் எடுத்த மிகச் சிறிய அதே சமயம் அதி முக்கியமான முடிவே அமெரிக்காவைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது எனலாம்.

– ரவிக்குமார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad