சிதம்பரம் – பாகம் 1
“சிதம்பரம்” என மஞ்சள் நிறச் சுவரில் எழுத்துக்களுடன் இரயில் நிலையம் வரவேற்றது. அமலா இரயில் வாகனத்தின் வாசற்படியில் இருந்தே வெளியில் எட்டிப் பார்த்தாள். இரயில் நிலையத்தில் யாரும் இல்லை. சற்று தயக்கத்துடன் இறங்கி, தன் கையில் உள்ள காகிதத்தில் எழுதியிருந்த முகவரியைப் பார்த்தாள். அவளிடம் டிக்கெட் இருக்கிறதா எனச் சோதிக்கக் கூட அந்த இரயில் நிலையத்தில் யாரும் இல்லை.
சிதம்பரம் எவ்வளவு பெரிய நகரம். அந்த நகரத்தைப் பற்றிப் பல வதந்திகள் வந்தாலும் அதைச் சற்றும் நம்பாமல் வேலை தேடி வந்தாள் நமது நாயகி அமலா. சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை, இருக்க இடம் மற்றும் உடைகள் எல்லாம் தரப்படும் என அந்த நியமன உத்தரவுத் தாளில் போடப்பட்டிருந்தது. மாதம் எப்படியும் பிடித்தங்கள் போக நாற்பதாயிரம் ரூபாய் கையில் வரும். சென்னையில் இருக்கும் அப்பா அம்மாவுக்கு முப்பதாயிரம் ரூபாய் அனுப்பிவிட்டு, மீதிப் பணத்தில் இங்கே வாழ்க்கை நடத்தலாம் எனத் திட்டமிட்டு வந்தாள்.
இந்த ஊரில் உள்ள ஒரு ஜமீன்தார் குடும்பத்தில் உள்ள இரண்டு குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்றுக் கொடுத்து, பார்த்துக் கொள்ள வேண்டும். அமலா இரயில் நிலைய வாசலில் அங்கும் இங்கும் தேடினாள் ஏதாவது ஷேர் ஆட்டோ அல்லது டாக்ஸி கிடைக்குமா என்று. வாகனங்கள் ஏதும் இல்லை. தனது கைபேசியில் ஊபர் வாகனத்தை அழைத்தாள். தொலைபேசி மணிக்கு யாரும் பதில் அளிக்கவில்லை. வேறு வழியின்றி, ஜமீன்தார் வீட்டுத் தொலை பேசி எண்ணைக் கூப்பிட்டாள்.
ஜமீன்தார் வீட்டு அவுடி கார் அவளை அழைத்துச் சென்றது. வீதிகளில் மனித நடமாட்டம் மிகக் குறைவாக இருந்தது. காளை மாடுகள் மட்டும் தான் அங்கும் இங்குமாகத் திரிந்து கொண்டிருந்தன. பார்த்த நான்கைந்து பேர்களும் துண்டைத் தலையில் போட்டுக்கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு சென்றனர். அமலா தயங்கியபடி டிரைவரை “இன்று ஏதாவது திருவிழாவா? ஏன் யாரையும் காணவில்லை?” எனக் கேட்டாள்.
டிரைவர் தனது இடது கையை உயர்த்தி, “எனக்கு ஒண்ணும் தெரியாது, எதுவாக இருந்தாலும் அவரையே கேட்டுக்கோங்க.” என அவசர அவசரமாகச் சொன்னான். அவன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே வீதியின் மறுபக்கத்தில் இருந்து ஒரு காளை மாடு வேகமாகக் காரை நோக்கி, தனது கூரிய கொம்புகளால் தாக்க வந்து கொண்டிருந்தது.
டிரைவர் பிரேக்கை வேகமாக அழுத்தி வண்டியை நிறுத்த முயற்சித்தான். அமலாவுக்கு என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளச் சில நொடிகள் பிடித்தன. தான் அமர்ந்த இருக்கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். அந்த நேரத்தில் பட்டுப் பாவாடை தாவணி அணிந்த ஒரு சிறுமி உரத்த குரலில் “நில்” என்று கூறியபடி கையிலும் சைகை காட்டினாள்.
என்ன அதிசயம், ஓடி வந்த காளை அப்படியே சிலைபோல நின்றது. பின் திரும்பி, வந்த வழியே போய்விட்டது. டிரைவர் வண்டியை விட்டு வெளியே இறங்கி, காரின் பின்கதவைத் திறந்தான். அந்தப் பெண், உள்ளே ஏறினாள். அமலாவைப் பார்த்து, “நீங்க தான் எங்களைப் பார்த்துக்க வந்த டீச்சரா? உங்க பேரு என்ன?” என்று கேட்டாள்.
“அமலா” என்று பதில் அளித்தாள். பின் தயங்கியபடியே கேட்டாள்: “நீ சொன்னவுடனே அந்தக் காளை நின்னுருச்சி, உங்க வீட்டுக் காளையா?”
“அது அப்படிதான். நாங்க என்ன சொன்னாலும் எல்லாரும் கேப்பாங்க.”
ஜமீன்தார் வீடு வந்தது. அனைவரும் உள்ளே சென்றனர். ஜமீன்தார் மாடியில் இருந்து முழுக்கை கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு இறங்கி வந்தார். அமலாவுக்கு அவரைப் பார்த்தவுடன் ஆச்சர்யம். ஜமீன்தார் என்றால் வயதானவராக இருப்பார் என்று அதுவரை நினைத்திருந்தாள். ஆனால் அவரைப் பார்த்தால் முப்பது வயது கூட எட்டி இருக்காது. அமலாவுக்குக் குழப்பம். இவருக்கா பத்து வயதுப் பையன் மற்றும் எட்டு வயதுச் சிறுமி?
ஜமீன்தார் கனத்த குரலில் “நீ தான் அந்த டீச்சரா? சரி, போய்ப் பசங்களுக்குப் பாடத்தை ஆரம்பி” சொல்லி விட்டு வெளியே சென்றார்.
ஜமீன்தார் குழந்தைகள் நீலவேணி மற்றும் பரமேஸ்வரன் அடுத்த சில நாட்கள் அமலாவிடம் பாடம் கற்றுக் கொண்டனர். அமலா தனது சுற்று வட்டாரத்தில் நடக்கும் எந்த விசித்திரமான நிகழ்வுகளையும் கண்டு கொள்ளாமல் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருந்தாள். இரண்டு மூன்று நாட்கள் கழித்துத் தன்னிடம் பேசாமல் இருந்த டிரைவர் தன்னிடம் பேச இரண்டு மூன்று தடவை முயற்சிப்பதைப் பார்த்தாள்.
அன்று அவள் குழந்தைகளுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கத் தயார் செய்து கொண்டிருந்தாள். குழந்தைகள் வெளியே காளை மாட்டின் மீதேறி அதை அங்கும் இங்குமாக ஓட்டிக் கொண்டிருந்தனர். அமலாவுக்கு இது ஒரு அதிசயமாகப் பட்டது. அவள் குழந்தைகளைப் பாடம் கற்றுக்கொடுக்க உள்ளே அழைத்தாள். அவர்கள் அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த ஜமீன்தார் தனது கைவிரலைக் காளைகளின் பக்கம் நீட்டினார். காளைகள் அப்படியே நின்றது. குழந்தைகளும் கீழே இறங்கி மனம் இல்லாமல் உள்ளே வந்தன. அப்பொழுது தான் அதை அவள் பார்த்தாள். ஜமீன்தார் அணிந்திருக்கும் வழக்கமான கருப்புச் சட்டையின் கீழ், அவரது கையில் பள பள எனக் கறுப்புக் கயிறு ஒன்று கட்டப்பட்டிருந்தது. தங்கம் கறுப்பாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு ஜொலிப்பு.
அமலாவும் பல தாயத்துக் கயிறுகளைப் பார்த்திருக்கிறாள். ஆனால், இது போல் ஜொலிக்கும் கறுப்புக் கயிற்றைப் பார்த்ததில்லை. அந்தக் கயிறு காந்தம் போல் அவளை ஈர்த்தது. இதுபற்றி யாரிடமாவது பேசலாம் என்று நினைத்தால், இங்கு நடக்கும் அதிசயங்களைப் பற்றிப் பேசவும் ஆளில்லை. அப்பொழுது ஒரு யோசனை தோன்றியது.
அன்று பாடம் முடிந்த பிறகு, டிரைவரைப் போய்ப் பார்த்தாள். அவனிடம் மெல்ல ஆரம்பித்தாள். பேச்சுகளின் இடையில் அவன் பெயர் சத்யா என்பதை அறிந்து கொண்டாள். “உங்களை ஒண்ணு கேட்கலாமா? ஜமீன்தாரைக் கண்டா எல்லோரும் ஏன் பயப்படுறாங்க? அவரப் பார்த்தா காளை மாடும் பயப்படுதே?”
டிரைவர் சத்யா அவளைப் பார்த்து, பிறகு அக்கம் பக்கம் பார்த்தான். யாரும் இல்லை என உறுதிப் படுத்திக்கொண்டான்.
“அவர் யாரைத் தொட்டாலும் அவங்க அந்த நொடியிலேயே இறந்துடுவாங்களாம். அவருக்குப் பயந்துதான் இந்த ஊரே காலியா இருக்கு. அவரு கடவுள் அம்சமாம்.”
“மனுஷங்க சரி, மாடு கூடவா பயப்படும்?” கேள்வியைத் தொடர்ந்தாள்.
“அவரு, அவரு வம்சாவளி இருக்கறவங்க எல்லோருக்கும் அந்தக் காளைகள் கட்டுப்படும்.” என விளக்கினான்
“இன்றைக்கு அவர் கையிலே கட்டியிருந்த கயிறப் பார்த்தேன். எனக்கென்னமோ அது தான் அவருக்கு இந்தச் சக்திய கொடுத்திருக்குன்னு தோணுது.” என்றாள்.
“இருக்கலாம். நமக்கேன் வம்பு. நான் போய் அவர நடராஜர் கோவிலேயிருந்து அழைச்சிட்டு வரணும். காலைல கும்பிடப் போனவர்..நீயும் எந்த வம்புக்கும் போகாதே.” என்று ஒரு சொல்லிவிட்டு அவன் கிளம்பினான்.
கோவிலுக்குச் சென்று காரை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றான். அங்கே, நடராஜர் முன்னிலையில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் ஜமீன்தார். அவர் கையில் இருந்த கறுப்புக் கயிறு பளபளவென மின்னிக்கொண்டிருந்தது. அவரைச் சுற்றி முப்பது காக்கைகள் அமைதியாக அமர்த்திருந்தன. அவர் ஒரு ஸ்லோகத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அது சத்யாவிற்குப் புரியவில்லை. அதில் இரண்டு வார்த்தைகள் மட்டும் கேட்டது. “நடராஜா” மற்றும் “அபஸ்மரா”.
பார்த்தால் ஜமீன்தாரா அல்லது எமதர்ம ராஜாவா எனச் சந்தேகம் வரும் அளவுக்கு இருந்தது. இந்தக் காட்சியை வியந்த வண்ணம் சத்யா பார்த்துக்கொண்டு இருந்தான். அதே வேளையில், வீட்டில், அமலா குழந்தைகளை அழைத்து அப்பா பற்றி விசாரிக்கத் துவங்கினாள்.
“நீலவேணி, உங்கள் அப்பாவுக்கு எவ்வளவு வயசு இருக்கும்?”
“டீச்சர், அவருக்கு ஐம்பது வயதுக்கு மேலே இருக்கும். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் அவருக்கு வயது கூடின மாதிரியே தெரியாது.” என்றாள் நீலவேணி.
“என்ன நிகழ்ச்சி?” அமலா மேலும் கேட்டாள்.
இதைக்கேட்டு பரமேஸ்வரன் குறுக்கிட்டான் “நீலவேணி, அந்தச் சிதம்பர ரகசியத்தைப் பற்றிச் சொல்லாதேனு எவ்வளவு தடவை அப்பா சொல்லியிருக்காரு?”
நீலவேணி நகைத்துக்கொண்டே “ஐயே, நான் சொல்லலை, நீ தான் இப்ப அதப் பத்தி சொன்னே. இரு உன்ன அப்பா கிட்ட சொல்றேன்.”
“ஐயய்யோ, நான் ஒண்ணும் சொல்லலப்பா” எனச் சத்தமிட்டபடி அவன் ஓடி விட்டான்.
“சரி சரி, நம்ம பேசினதை யாருகிட்டேயும் சொல்ல வேண்டாம். ஆர்வத்தில் கேட்டேன்.” என்று அமலா முடிக்கப் பார்த்தாள்.
நீலவேணி கேட்டாள் “இப்ப நான் ஒரு கேள்வி உங்ககிட்ட கேக்கலாமா?”
அமலா தயங்கியபடி “என்ன கேள்வி?”
“நீங்க சத்யாவை காதலிக்கிரீங்களா? நீங்க இரண்டு பேரும் பேசறத நான் பார்த்தேன்” என்றாள் நீலவேணி.
அமலாவுக்கு வெட்கமும் கோபமும் கலந்து வந்தது. அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் “இதற்குப் பதில் சொன்னா நான் இன்னும் ஒரு கேள்வி கேட்பேன், ஓகேவா? எனக் கேட்டாள்
நீலவேணி “சத்தியாவை லவ் பண்ணா கேட்கலாம். அவர் பாவம் நிறையப் படிப்பு படித்தும் டிரைவர் வேலை செய்கிறார்.”
என்ன செய்வது என்று அறியாமல், சரி என்று பொய் சொல்லிவிடுவோம் என முடிவு செய்தாள்.
“ஆமாம், ஆனால் அவர் கிட்ட சொல்லிடாதே. இப்ப என் கேள்வி, என்ன நிகழ்ச்சி அது? பரமேஸ்வரன் சிதம்பர ரகசியம்னு சொன்னானே, அது என்ன? “
நீலவேணி அக்கம் பக்கம் பார்த்துவிட்டு யாரும் இல்லை என உறுதி செய்து கொண்ட பிறகு பதில் சொல்லத் துவங்கினாள்.
(தொடரும்)
-பிரபு