சல்லிக்கட்டு – இரு பரிமாணங்கள்
கலங்கிய காளை
கழனியிலும் வேலையில்லை
களத்தினிலும் பணியுமில்லை
கணினிகளைத் தாம் நோக்கி
காளையர்கள் போனதனால்
கண் கலங்கிய காளை!
களத்து மேட்டிலும் வேலையில்லை
கம்மாக் கரையிலும் தண்ணீரில்லை
கரிசல் காட்டை விலைபேசிய
காட்டுமிராண்டிகள்
கண் கலங்கிய காளை!
கட்டித் தழுவுவார் யாருமில்லை
கட்சிக்காரனும் ஆதரிக்கவில்லை
கார்மேகமும் கை கொடுக்கவில்லை
கட்டிளங் காளையருக்குத் தடை போட்ட பீட்டா
கண் கலங்கிய காளை!
திரைகடலெனத் திரண்ட தமிழினம்
திக்கெட்டும் ஒரே இசை !
என் தமிழனின் பறை இசையடா !
மெரினாவும் கண்டதில்லையடா இதுவரை
அலைகடலும் கரை தொடத் தயங்தியதடா !
தன்னலமில்லா எம் தமிழினத்தை
தன்மானத் தமிழனின் வீரத்தைக் கண்டாயோ !
காளைகளோடு வாழ்ந்த தமிழனைக்
களைகளைக் களைந்தறியாக் கோழையென நினைத்தாயோ !
கண்ணியம் காத்திடும் மறத் தமிழனை
கண்ணி வெடியால் கலைத்து விட நினைத்தாயோ !
அரசியல் களமறியாத வீரத் தமிழனை
வஞ்சகத்தால் வீழ்த்த எண்ணினாயோ !
களம் இறங்கி விட்ட காளைகளைத்
தடைப் போட்டு அடக்கிவிட நினைத்தாயோ !
எம்குலப் பெண்களுக்கு அரணான காளைகளைத்
தடியால் ஒடுக்க நினைத்தாயோ !
தமிழனடா !! தன்மானத் தமிழனடா !!
உமையாள்