\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மார்கழியும் தையும்

Filed in இலக்கியம், கவிதை by on January 29, 2017 0 Comments

எழுந்தீரோ எம்பாவாய் !

மார்கழியில் மாடத்திலே கண்ணயர்ந்த வெண்மதியே …
ஆயர்குல மகளிர் விரைந்து உனை எழுப்பும்
முன்னே விழித்துக் கொள்ளடி பெண்ணே…

பட்டாடையுடுத்தி பட்டு மெத்தையில் பவளமல்லியாய் படர்ந்தவளே …
பகலவன் வருமுன்னே எழுந்து தெருவினிலே
பாடிவரும் பெண்டிரோடு கலந்து கொள்ளடி பெண்ணே ….

தோழிகளே வியக்கும் வண்ணம் உறங்கியவளே …
உந்தன் அழகில் மயங்கிய நிலையில் கண்சிமிட்டக் கூட மறந்த பெண்களைக் கண்டாயோடி பெண்ணே !

உறக்கத்தில் கூட பலரை மூர்ச்சை ஆக்கியவளே …
ஆயர்குலப் பெண்கள் ஆதிகேசவனை
நல்வாழ்த்துக்கள் கூறி எழுப்புமுன்னே
விழித்துக் கொள்ளடி பெண்ணே …!!!

தை பிறந்தாளே !

மார்கழிக்கே ஓய்வளித்து மங்கலமாய்த் தை பிறந்தாளே
சீர் மிகவே பொங்கல் திருநாளில் மலர்ந்தாளே
ஏர் பிடித்த நல்லுழவர் வாழ்வில் ஏற்றமடைய
எல்லையில்லா ஆனந்தத் தோடு, பொலிவோடு பிறந்தாளே !

முற்றத்தில் கோலமிட்டு முழுமுதற் கணபதியை
முன்னே வந்தனம் செய்து
முத்தான பச்சரிசியில் பொங்கலிட்டு
உழவனைப் போற்றிடவே, கனிவுடனே பிறந்தாளே !

மஞ்சள் குலையுடனே மாவிலைத் தோரணமும்
ஆவாரம் பூவோடு கரும்பும் வைத்தே
பஞ்சுத் திரிபோட்டு பசும் நெய்யில் விளக்கேற்றி
பரிதிக்குப் படையலிட்டே பிறந்தாளே !

பெண்கள் யாவருமே கும்மி கொட்டி
பாடி மகிழ்ந்திடவே
ஆண்கள் யாவருமே பறை அடித்து
பெருமை பேசிடவே
உற்றார் உறவினரெ ல்லாம் மகிழ்ந்திருக்கவே
தை மகளவள் பிறந்தாளே !

உழவினைப் போற்றி மகிழ்ந்திடவே
மாட்டைக் குளிப்பாட்டி மஞ்சளிட்டு
பொட்டிட்டு, தீட்டிய கொம்பினிலே
மாலையிட்டு தமிழரின் பண்பாட்டைத்
தரணியெங்கும் காத்திடவே
தலைமகள் பிறந்தாளே !

தை பிறந்தாளே! தரணியிலே!

உமையாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad