தலைமுறைகள் …?
கருவேலங்காடு
கத்திரிவெயில்
வெள்ளையாடை மூதாட்டி
ஒருவேளை உணவுக்கு மேய்க்கிறாள் வெள்ளாடு.?
உடலெல்லாம் வியர்வை மழை,
கோவணம்கட்டிய குடியானவன் ஏரோட்டுகிறான்
தான் நேசிக்கும் எருதுக்கு உணவளிக்க.!?
காற்றடித்தால் ஓலைபறக்கும்,
மழையடித்தால் கூரைஒழுகும் குடிசையில்
டி.வி மிக்ஸி,கிரைண்டர்!!!
இலவசங்கள் குடியேறியும் வறுமையில் வாழ்க்கைத்தரம்?
உதவித்தொகைவேண்டி வட்டாட்சியரிடம் சென்றே
வாழ்வைக் கழித்த கைத்தடி முதியோர்கள்…
ஒத்தரூபாய்க் காசுக்கு கோவில்வாசலில் கால்கடுக்க தவமிருந்தும்…
கண்திறக்கவில்லை கடவுள்….?!
காத்திருந்து கரிச்சோறு வாங்கி கட்டிலில் கிடக்கும் கிழவனுக்கு ஊட்டிவிட்டு
உறக்கமின்றிக் கிடக்கிறாள் இன்னொரு பாட்டி…
சமூகத்தை வார்த்தெடுத்த ஆயிரமாயிரம் முதுகெலும்புகள்
ஆதரவற்று வளைந்தன மண்ணைநோக்கி.?!?
“தூக்கணாங் குருவிகள் தூரியாடிய மரக்கிளைகளில் _இன்று
தொங்குகின்றன விவசாயிகளின் தூக்குக்கயிறுகள் ???
மூன்றாம் தலைமுறை வாரிசுகள் அதிகாரத்திற்கு வந்தும்
முதல்தலைமுறையின் வாழ்க்கைத் தரமே இன்னும் மாறவில்லை…??!!
வாழ்ந்துசென்ற பல தலைவர்களின் வழித்தடங்களை
வரலாற்றின் பக்கங்கள் பதிந்துகொண்டு
சரித்திரமாய்ப் புகழ்பெற்றன அன்று…
வரலாறு எழுதவே வாழ்கின்றனரோ சில தலைவர்கள் இன்று…?!
மக்கள் மக்களாகவே இருக்கும்வரை
அடுத்த தலைமுறைக்கும் அறிவிக்கப்படலாம்
என் இனிய தமிழ்மக்களே… சிந்தித்து வாக்களிப்பீர்…!!!
– க.பாலசுப்ரமணிகந்தசாமி