பைரவா
விஜய்யிடம் இருக்கும் ஒரு பாராட்டுக்குரிய விஷயம், ஜெயிக்கும் கதை என்று தான் நம்புவதை, எக்ஸ்ப்பிரியன்ஸ், சென்டிமெண்ட்ஸ் போன்ற காரணங்களுக்காக விட்டுக் கொடுக்க மாட்டார். இந்த விஷயத்தில் எத்தனை முறை பல்ப் வாங்கினாலும் இதை விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார். தொடர்ந்து செய்து வரணும்.
இந்த நல்ல பழக்கத்தைத் தான், இப்படத்தில் தன்னிடம் இருக்கும் கெட்ட பழக்கமாக பஞ்ச் வசனத்தில் சொல்லி வருகிறார். படத்தின் இயக்குனரான பரதனுக்கு என்ன வாக்குக் கொடுத்தாரோ தெரியவில்லை. விஜய் காப்பாற்றி விட்டார். பரதன் தான் காப்பாற்றியதாகத் தெரியவில்லை.
பரதன், வசனகர்த்தாவாகக் கலக்கியவர். கலக்குபவர். தில், தூள், கில்லி என்று அப்போதிலிருந்து, வீரம் என்று சமீபகாலம் வரை, வசனம் எழுதிய படங்களில் எல்லாம் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்தவர். காலத்திற்கும் நின்று விளையாடும் கமர்ஷியல் வசனங்களை எழுதியவர், விஜய்யை வைத்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை முதலில் இயக்கினார். படம் வெற்றி பெறவில்லை. பிறகு, நீண்ட இடைவேளைக்குப் பிறகு. ஒரு மலையாளப் படத்தை ரீமேக் செய்து ‘அதிதி’ என்ற படத்தை இயக்கினார். அதுவும் சோபிக்கவில்லை. தற்போது, மீண்டும் விஜய் இவர் மீது நம்பிக்கை வைத்து இன்னொரு படத்தைக் கொடுத்திருக்கிறார்.
இதுவே, இப்படத்தைப் பார்க்கும் ஆவலைக் கொடுத்தது. ஜெயித்த இயக்குனர் கதை சொல்லிக் கவர்வதற்கும், அறிமுக இயக்குனர் கதை சொல்லிக் கவர்வதற்கும், தோல்வி கண்ட இயக்குனர் கதை சொல்லிக் கவர்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? அப்படி என்ன கதை சொல்லி இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் என்ற ஆர்வமே, தியேட்டருக்கு நம்மைத் தள்ளிச் சென்றது.
படத்தில் விஜய்க்கு பேங்க்கில் வாராக்கடனை ரிக்கவர் செய்யும் ஏஜெண்ட் வேலை. இவர் ஹீரோ என்பதால், அந்த பேங்கில் பணம் வாங்கித் திருப்பி வாங்காதவர்கள் எல்லாம் கெட்டவர்களாக இருக்கிறார்கள். இந்த வேலைக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கக் கூடாது. வேலை இல்லாமல் இருப்பதற்கு, ஏதாவது வேலை பார்க்கலாம் அல்லவா? அதான், நவீன கந்து வட்டிக்காரனாக, தலையில் தலைப்பாகை இல்லாமல், கையில் தடி இல்லாமல் மாடர்னாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர்.
சென்னைக்குத் திருநெல்வேலியில் இருந்து ஒரு கல்யாணத்திற்கு வரும் கதாநாயகி கீர்த்தி சுரேஷைப் பார்த்தவுடன் காதலிக்கிறார். காதலிக்கவில்லை என்றால் தானே ஆச்சரியப்பட வேண்டும். காதலிக்கு ஒரு பிரச்சினை. அதுவும் அது ஒரு சமூகப் பிரச்சினை. கல்வி நிறுவனக் கொள்ளை மற்றும் அடாவடி. அப்புறமென்ன? பொங்கியெழுகிறார் ஹீரோ. காதலிக்காகவும், போனால் போகிறதென்று சமூகத்திற்காகவும் தீய சக்திகளிடம் சண்டையிட்டு, நமது வாயில் கொட்டாவி வர வைத்து, இறுதியில் வெற்றி பெறுகிறார்.
விஜய்க்கு அவர் கேரியரில் இது முக்கியமான. படம் முழுக்க தலையில் விக் வைத்து வருகிறார். எந்தக் கல்வித் தந்தை மீதிருக்கும் கோபமோ? இப்படத்தைத் தேர்ந்தெடுத்து, அடாவடி கல்வித் தந்தையாக வரும் ஜெகபதி பாபுவைப் புரட்டி எடுக்கிறார். மற்றபடி, டான்ஸ், காமெடி, ஆக்ஷன் என்று அவருக்கு இது வழக்கமான படமே!!
ஜெகபதி பாபு, தாண்டவம், லிங்கா என்று தமிழில் பெரிது பெரிதாக எதிர்பார்க்கப்படும் படங்களில் தான் நடிக்கிறார். ஆனால், எதுவும் இதுவரை சரியாகப் போகவில்லை. வில்லனுக்குப் பஞ்ச் இவரிடம் இல்லை. இன்னொரு வில்லனான டேனியல் பாலாஜிக்கு டிவி சீரியல் மாதிரியான ஒரு கிளைக் கதை. முடியல…
ஜெகபதி பாபு, தெலுங்கு மாதிரியான திருநெல்வேலி பாஷை பேசுகிறார் என்றால், கீர்த்தி சுரேஷ் மலையாளம் மாதிரியான திருநெல்வேலி பாஷை பேசுகிறார். விஜய்யுடன் சேர்ந்து நடித்து பிரமோஷன் வாங்கியிருக்கிறார். இருக்கிற கொஞ்சுண்டு கதையில், இவருக்கென ஒரு நல்ல பங்கு இருந்தாலும், அதிகம் மெனக்கெடாமல் நடித்து விட்டுச் சென்றிருக்கிறார். சதீஷ் காமெடியன் என்று திரிவதால் மட்டுமே, சிரித்து வைக்க வேண்டியிருக்கிறது.
ஒரு பக்கா மசாலாப் படத்திற்கு முதல் முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். வர்லாம் வர்லாம் வா, பட்டைய கிளப்பு, பா பா ஆகிய பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை மோசமில்லை என்று சொல்லும் ரகம். பரதன், போன முறை ATM க்காக ஏ.ஆர்.ரஹ்மானுடன் இசைக் கூட்டணி எதிர்பார்ப்பைக் கிளப்பி புஸ் ஆனது. இம்முறை, சந்தோஷுடன்.
பொங்கல் மாதிரியான தினங்களில், சில படங்களை ஜனத்திரளுடன் பார்க்கும் போது, விசேஷ தினத்தில் இன்னொரு பொங்கல் சாப்பிட்ட திருப்தி இருக்கும். அதே பொங்கலை எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால், சலிப்பு வராது? இந்தப் படம் பார்க்கும் போதும் அதே ஃபீலிங். கிரிக்கெட் ஃபைட், இண்டர்வெல் ப்ளாக் என்று சில இடங்களில் ஸ்கோர் செய்திருந்தாலும், முடிவில் வின்னிங் ஷாட் அடிக்க முடியாமல் போய்விட்டது. மசாலா படமென்றாலும், இன்று சமுதாயத்தில் நாம் சந்திக்கும் ஒரு முக்கிய, மாணவர்களின் கல்வி சார்ந்த பிரச்சினையை மசாலா ஆக்கியிருக்கும் ஒரே காரணத்திற்கு பரதனைப் பாராட்டலாம்.
வர்லாம் வர்லாம் வா வர்லாம் வா பைரவா…
இன்னும் நல்லா வந்திருக்கலாம் பைரவா…
– சரவணகுமரன்