முட்டை மீன் பொரியல்
பொதுவாக, மீனைக் குழம்பு வைத்தோ, பொறித்தோ சாப்பிடுவார்கள். மற்ற வகைச் சமையல்களில் பயன்படுத்துவது குறைவு தான். ஆனால், மீன் பல வகைச் சுவையை அளிக்கக் கூடியது. இதுவரை மீன் பொரியல் செய்திராதவர்கள், இதைச் செய்து பாருங்கள். மீன் சுவை ரசிகர்களுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும். சாதம் – மீன் குழம்புக்குக் கூட்டாகவும் சாப்பிடலாம், சப்பாத்தி உள்ளே வைத்து ரோல் (Roll) செய்தும் சாப்பிடலாம். அப்படியே சாப்பிட்டால், இன்னமும் ஆரோக்கியம்.
தேவையான பொருட்கள்
முள் அதிகம் இல்லாத உங்களுக்குப் பிடித்த மீன் ஏதேனும் (Tilapia அல்லது Salmon fillet) – 2
முட்டை – 2
வெங்காயம் சிறியது -1
மிளகாய் – 1
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – சிறிதளவு
கடுகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் – இரண்டு சிட்டிகை
மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகுத் தூள் – இரண்டு சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய்
செய்முறை
- மீனை வெந்நீரில் வேக வைத்து, தோல், முள் போன்றவை இருந்தால், அவற்றை நீக்கி, மீன் துண்டுகளை உதிர்த்துக் கொள்ளவும்.
- பிறகு, தேங்காய் எண்ணெய்யை வாணலியில் வைத்துச் சூடாக்கவும்.
- அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
- வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, மிளகாய் கீறிப் போடவும்.
- மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் போட்டு, ஒரு நிமிடம் வதக்கவும்.
- உதிர்த்து வைத்த மீனைச் சேர்த்துக் கிளறவும்.
- அதன் பிறகு, இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றிக் கிண்டவும்.
- முட்டை வெந்த பின்பு, அதில் சிறிதளவு உப்பு, மிளகு சேர்த்துக் கிளறவும்.
- மேலே தேங்காய்த் துருவல் தூவவும்.
- கடைசியில், கொத்து மல்லி இலை சேர்த்துப் பரிமாறவும்.
சுவையான முட்டை மீன் பொரியல் தயார்.
- சங்கீதா சரவணகுமரன்