\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மார்டின் லூதர் கிங் ஜூனியர் (Martin Luther King Jr.)

Filed in இலக்கியம், கட்டுரை by on January 29, 2017 0 Comments

“ எனக்கு ஒரு கனவுண்டு …” (I have a dream…) என்று அமெரிக்கக் கறுப்பின மக்களின் குடியுரிமைக்குக் குரல் கொடுத்த அகிம்சைவாதி தியாகி போதகர் மார்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்கள் குறித்துப் பார்க்கலாம்.

இவரிற்குப் பெற்றார் கொடுத்த பெயர் மைக்கேல் லூதர் கிங் ஜூனியர் (Michael Luther King Jr). இவர் சனவரி மாதம் 15ம் திகதி, 1929ம் ஆண்டு ஜார்ஜியா மாநிலத்திலுள்ள அட்லாண்டா நகரி பிறந்தார். இவர் ஏப்ரல் 4ம் திகதி 1968ம் ஆண்டு மெம்ஃபிஸ் ரெனஸி மாநிலத்தில் இனவாதியின் துப்பாக்கியால் அகால மரணம் அடைந்தார்.

பாப்டிஸ்ட் கிறிஸ்தவ போதகரும், சமூகவாதியும் ஆன இவர் சிறுபான்மை மக்கள், குறிப்பாக அடிமைகளாக அமெரிக்காவிற்குக் கொண்டு வரப்பட்ட ஆப்பிரிக்க மக்களின் சம குடியுரிமைக்காகப் போராடினார். இவர் சிறுபான்மைக் குடியுரிமை மையத்தை 1950களில் இருந்து 1968 இல் உயிர் துறக்கும் வரை தலைமை வகுத்தார்.

அவர் தலைமையானது குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் அடிப்படை உரிமைக்கும், சட்ட ரீதியில் நிறம் தொட்டு விலக்கி வைக்கப்பட்டு அமெரிக்க தென் மாநிலங்களின் இனத்துவேசமான ஆளுமைக்கு எதிராகப் போராடினார்.

கிங் அவர்கள் அமெரிக்கத் தென்புல கிறிஸ்தவ தலைமை ஒன்றியத்தின் பங்கு பெற்றினால் – நாட்டின் மத்திய அரசியலிற்குத் தள்ளப்பட்டார் எனலாம். கிங் அவர்கள் மகாத்மா காந்தியின் அகிம்ஸா வழியில் உரிமைப் போராட்டத்தை நடத்தினார்.

ஆரம்ப காலம்

அமெரிக்க செளகரிய மத்திம வருமானக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். இவர் குடும்பம்  ஆன்மீக வழியில் ஆழமாக அமெரிக்கத் தென்புலக் கறுப்பின கிறிஸ்தவ அமையங்களில் (Southern Black Ministry) ஈடுபாடுள்ளவர்கள்.

இவர் தந்தையாரும் இவர் தாய் வழிப் பாட்டனும் மத போதகர்கள், தாய் தந்தையர் இருவரும் கற்றவர், பல்கலைக் கழகப் பட்டதாரிகள். தந்தையார் அட்லாண்டா நகர பிரபல எபனீஸர் பப்டிஸ்ட் தேவாலயப் (Ebebezer Baptist Church) போதகர் ஆவார்,. இளம் மார்ட்டின் அவர்கள் அன்பும், பண்பும், அறிவும், ஆன்மீகம் கலந்து செழிப்புற்ற குடும்பத்தில், சமூகத்தில் வளர்ந்தார்.

அமெரிக்க வடபுலத்தில் ஆண்டவன் தேவாலயத்தில் எவ்வாறு தோல் நிறம் பாராது யாவரும் வரவேற்கப்பட்டாலும், தென்புலத்தில் இனத்துவேசம் ஆண்டவனை வழிபடும் இடங்களில் கூடக் காணப்பட்டது இளம் மார்டினிற்கு அதிர்ச்சியைத் தந்தது. மேலும் மனிதர்கள் தோல் நிறம் வைத்துக் குடியுரிமைக்கே விலக்கி வைக்கும் விதம், வேதனை ஆழமாக நெஞ்சில் பதிந்து விட்டது,

கிங் அவர்களில் தமது பல்கலைக் கழக வயதில் சட்டம் மற்றும் வைத்தியம் போன்றவற்றைக் கற்க முனைந்தார், எனினும் காலாகாலத்தில் ஆன்மீகப் போதகம் ஆனது இயல்பாக இவரை ஆட்கொண்டது. அன்றாடக் குடிமக்களுடன், சமூகத்துடனான புழங்கல் அவர்கள் நாளாந்த வேதனைகளைப் புரிந்து கொள்ள வைத்தது.

மார்டின் அவர்கள் போதகர் கல்லூரியில் 1948 இல் பட்டம் பெற்றார். இதன் பின்னர் அடுத்த மூன்று வருடங்கள் குரோஸர் ஆன்மீக மடத்தில் செஸ்டர் எனும் ஊரில் பென்சில்வேனியா மாநிலத்தில் தமது வாழ்க்கையை முழுவதுமாக நடத்தினார்.

இவ்விடம் கிங் அவர்கள் மோகனதாஸ் காந்தி அவர்களின் அகிம்ஸா வழித் தத்துவத்தை நன்கு பயின்று 1951 இல் பட்டதாரியானார். இவ்விடம் இவர் தமது பேச்சாற்றலையும் பெரிய வகையில் பெருக்கிக் கொண்டார்.

இதன் பின்னர் தமது ஆன்மீகம், மனித யதார்த்தங்கள் பற்றிப் படிப்பதற்காக மார்டின் அவர்கள் வடபுல மாசேச்சுஸெட்ஸ் மாநில பாஸ்டன் பல்கலைக்கழகம் சென்றார்.

மாண்ட்காமரி பேருந்துப் போராட்டம் (Bus Boycott)

பாஸ்டனில் படிக்கும் போது அவ்விடம் அலபாமா மாநில மங்கை ஆகிய கொரேட்டா ஸ்காட் (Coretta Scott) அவர்களுடன்  சிநேகம் கொண்டார். பின்னர் 1953ல் இவர்கள் மணந்து நான்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். இத்தருணம் கிங் அவர்கள் அலபாமா மாநில டெக்ஸ்டர் வீதி பப்டிஸ்ட் தேவாலயத்தில் மாண்ட்காமரி நகரில் போதகராகப் பணியாற்றினார்.

இதன் பொழுது அலபாமா மாநிலம் இனத் துவேச பல விலக்கு நடவடிக்கைகளையும் அமுலில் வைத்திருந்தது. இதில் ஒன்று தான் பொதுசனப் பேருந்துகளில் கறுப்பு இனத்தவருக்கு பின் வாங்குச் சலுகைகளே தரப்பட்டது. இந்த சரிசமமற்ற செயலை சிறிய குடியுரிமை வேண்டிய குழுவினர் எதிர்த்துப் போராட முனைந்தனர்.

1955ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி ரோசா பார்க்ஸ் (Rosa Parks) எனும் ஆபிரிக்க அடிக்கொடி அமெரிக்க அம்மையார் தனது பேருந்து இருக்கையை வெள்ளையினத்தவருக்கு விட்டுக் கொடுக்காது சாதித்தார். இனத்துவேச சட்டம் கொண்ட அலபாமா மாநிலம் இந்த அம்மையாரைக் கைது செய்து சிறையில் தள்ளியது. இது சமவுரிமைப் போராளிகளைத் தொற்றியது. போதகர் மார்டின் லூதர் கிங் ஜுனியர் அவர்கள் அந்தக் குழுவினருக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

இவரின் தலைமைத்துவம், அகிம்ஸா அணுகுமுறை,உயர்ந்த கல்வி மற்றும் உணர்ச்சி வச மான பேச்சாற்றல் ஆகியவை இன வாதிகளை நேரடியாகவும், மறைமுகமாக எதிரிகள் ஆக்கின.

இவர் தலைமைத்துவம் ஏற்ற போது முதல் பேச்சே குறுகிக், கூனியிருந்த  ஆப்பிரிக்க வழி அமெரிக்கச் சமூகத்தின் இடையே உணர்ச்சி பூர்வமான தட்டியெழுப்பலைத் தந்தது. இது பல தடை, வர்த்தக அடைப்புப் போராட்டங்களை ஏற்படுத்தியது. இது நேரடியாக கிங் அவர்கள் உயிருக்கு ஆபத்தை இனத்துவேச அலபாமா மாநிலத்தில் உருவாக்கியதால் இவர் தமது பிறப்பிடத்திற்குப் புலம் பெயர வேண்டி வந்தது.

கிங் அவர்கள் மீண்டும் அட்லாண்டா திரும்பினார். மீண்டும் இவர் தென்புல மேடைகளிலும், நாட்டின் பல மேடைகளிலும் குடியுரிமைச் சமத்துவம்  பற்றிய விரிவுரைகளை வழங்கினார்.

இந்திய விஜயம்

இவரை 1959 ஆம் ஆண்டு ஃபிஃப்ரவரி மாதம் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் வரவேற்றுக் கெளரவித்தார். இந்தியாவில்  காந்தீயம், சத்தியாக்கிரகம் போன்ற வன்முறையற்ற போராட்ட முறைமைகளைத் தெரிந்து கொண்டார். இந்திய விஜயம் கிங் அவர்களை மென்மேலும் வன்முறை தவிர்த்து, அதே சமயம் குடியுரிமைச் சமத்துவங்களுக்காப் போராடும் சிந்திப்பைக் கொண்டவராக மாற்றியது..

கிங் அவர்கள் இந்தியத் தத்துவங்களையும் அதே சமயம் ஆப்பிரிக்கக் கண்டத்தின் உத்வேகம், அகத்தூண்டல், ஊக்கம் ஆகியவற்றை ஆர்வத்துடன் கவனிக்கலானார். 1960 இல் கிங் அவர்கள் தமது தந்தையுடன் அட்லாண்டா எபினேஸர் பப்டிஸ்ட் தேவாலாய சக போதகராகப் பதவியேற்றார் அவ்விடம் உரிமைப் போராட்டங்களைத் தொடங்க, வேறு பொய்ச்சாட்டுக்கள் கொண்டு மாநில சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார். இவர் சிறைக்குப் போனதும் இவர் உயிருக்கு ஆபத்து என்று நாடு பூராவும்  செய்தி பரவியது

இதனால் அப்போதைய அமெரிக்க சனாதிபதி டுவைன் ஐசன் ஹவர் _ தலையிடாமல் விட்டதால், அடுத்து அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜான் கெனடி அரசின் ஆளுமைக் குறையீனம் எனப் பிரகடனப்படுத்தினார்.

உரிமைப் போராட்டம் சிறை வாசகங்கள்

இலை துளிர் காலம் 1963 இல் மீண்டும் கிங் அவர்கள் உணவு பகிரும் இடங்கள், வேலை வாய்ப்புக்கள் பெறுதல் போன்றவற்றில் சிறுபான்மை இனத்தவர் தள்ளி வைக்கப்படுவதைப் பற்றி முழு நாடும் அறியும் வகையில் போராட்டத்தை அலபாமா மாநிலத்தில் பெர்மிங்ஹாம் எனும் நகரில் தொடங்கினார்.. இதன் போது பல நூறு பள்ளி மாணவர்கள் உட்பட பல ஆதரவாளர்களும் பொலிஸ் நாய்களால் கடிக்கப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டனர்.

சிறையில் இருந்து உரிமை உணர்வு தூண்டும் கடிதங்களை கிங் அவர்கள் மக்களுடன் பரிமாறிக் கொண்டார். ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி 1963 இல் பல்லின சமரசம் காணும் கூட்டத்தை 200,000 மக்கள் மத்தியில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்க்டன் டி.சி,  லிங்கன் ஞாபகார்த்த ஆலயப் படியில் உலகப் பிரசித்தி பெற்ற “எனக்கு ஒரு கனவு உண்டு”,(” I have a dream “) என்ற சொற்பொழிவை நிகழ்த்தினார். இது அமெரிக்க மற்றும் உலகச் சிறுபான்மை மக்கள் யாவராலும் மறக்க முடியாத ஒன்றாகும்.

1964 ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியுரிமைச் சட்டம் சம உரிமையை வேலைத் தலங்களிலும், பொதுவிடங்களிலும் ஆப்பிரிக்க அடிக் கொடி மற்றும் இதர சிறுபான்மையினருக்கும் வழங்க வேண்டும் என்ற பிரகடனப் படுத்தியது. இது கிங் அவர்கள் மற்றும் அவர் சக போராளிகள் ஆகியோரின் உரிமைப் போராட்டங்களினாலேயே பெறப்பட்டது எனலாம். 1964ம் ஆண்டு நோர்வே நாட்டு அரசர் சமாதான நோபல் பரிசை கிங் அவர்களுக்கு வழங்கிக் கெளரவித்தார்,

இறுதிக் காலம்

1968 இல் வாஷிங்டன் ஏழை மக்கள் அணிவகுப்பில் பங்கு பெற்ற இந்த கிங் அவர்கள் இடைநடுவெ மெம்ஃபிஸ் ரெனசி மாநிலத்தில் குப்பை அகற்றும் தொழிலாளர் தடுப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இவ்விடம் தாழ்ந்த மக்களுக்கு உற்சாகம் தரும் வகையில் மெசன் ரெம்பிள் தேவாலயத்தில் ஏப்ரல் 3ம் திகதி உரையாற்றினார். அடுத்த நாள் அவர் லொரெயின் எனப்படும் தங்கு விடுதியில் – வெளி மாடியில் நிற்கும் போது இனத்துவேசி ஒருவன் தூரத்தில் இருந்து குறிபார்த்துச் சுட்டதனால் உயிரிழந்தார். இவரைக் கொன்ற வென்னை இனவாதி ஜேம்ஸ் ஏர்ள் ரே 99 ஆண்டுகள் சிறை வாசத்தை தண்டனையாகப் பெற்றான்.

கிங் அவர்கள் மகத்தான மனிதர். மக்கள் குடியுரிமைச் சமத்துவத்திற்காக அவர் 1968 இல் உயிர் துறக்கும் வரையும் போராடினார். கறுப்பு இனத்தச் சார்ந்த பராக் ஹுசெய்ன் ஒபாமா  44வது அமெரிக்க சனாதிபதியாக ஆனதற்கு அத்திவாரம் போட்டவர் மதிப்புக்குரிய குடியுரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் என்றால் மிகையாகாது.

– தொகுப்பு

யோகி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad