சங்கமம் 2017
தை மாதத்தின் பிறப்பை , அறுவடை திருநாளாக , உழவர் உழைப்பின் சிறப்பாக, பொங்கல் திருநாளாக தமிழினம் கொண்டாடி வருகிறது. தமிழ் மொழியை முன்னிறுத்தியே பணிகள் செய்யும் மினசோட்டா தமிழ் சங்கமும் இவ்வாண்டு பொங்கல் தினத்தை சனவரி 15 ஆம் தேதி அன்று “தமிழர் மரபு தினமாக” பெரும் விமரிசையாக கொண்டாடியது.
தமிழ் பாரம்பரிய உணவான கருப்பட்டி பொங்கல், சாம்பார், உருளை வறுவல்,
பலகறிக் கூட்டு, தயிர், வடை என வீட்டு உணவு போலவே சுவையுடன் மதிய
உணவு பரிமாறப் பட்டது. வயிறாற உணவு ருசித்த பின்னர், பறை முழங்க, தமிழர் பாரம்பரிய கலைகளின் அணி வகுப்பாக சிலம்பம், கும்மி, கோலாட்டம் ,
நாட்டுப்புறப்பாட்டு, உறியடி, என கோலாகலமாக தமிழர் மரபு தின நிகழ்ச்சிகள் தொடங்கியது.
தமிழர் அம்சங்களான உழவு மாடு, ஏர், இவை கண் காட்டியாக
வைக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையில் தமிழர் பாரம்பரியமான “ஜல்லிக்கட்டு” நடத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, காகித அச்சீட்டுகள் பிடித்தபடி கோஷம் எழுப்பினர். மரபு அம்சங்களை கண்டு களித்த பின்னர் அங்கிருந்து கலை நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்கத்திற்கு உறுப்பினர்கள் சென்றனர்.
சிறுவர் சிறுமியரின் கர்நாடக சங்கீதம், பாரம்பரிய நடனம், ஆடல் பாடல் நிகழ்ச்சி, நாடகம், என பலவகைப் பட்ட நிகழ்ச்சிகள் கண்டு களித்தனர். சிறுவர்கள் மட்டும் அல்லாது பெரியவர்களும் களத்தில் இறங்கி நடனம் ஆடியது ரசிக்கும் படியாக இருந்தது. கரோக்கி குழுவினரின் இசையும், தமிழ்ப்பள்ளியின் சிலம்பம் பறை நிகழ்ச்சிகளும் அணி சேர்த்தன.
நிகழ்ச்சிகளுக்கு இடையில் பொருளாளர் உரையும், தமிழ் பள்ளி இயக்குனர் உரையும், தமிழ் சங்க தலைவர் உரையும் நடைபெற்றது. சங்கத்தின் புதிய அணியின் நிர்வாக குழு பற்றிய விவரங்களும் அறிவிக்கப்பட்டன. நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக விஜய் பக்கிரி மற்றும் பிரசன்னா கஜவரதன்
இருவரும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக எடுத்து செல்வதில் பெரிய பங்கு வகித்தனர்.
உணவு சமைத்தல், பரிமாறுதல், டிக்கெட் விற்பனை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் என அயராது தொண்டாற்றிய பல நல்ல உள்ளங்களின் துணையுடன் மினசோட்டா தமிழ் சங்கத்தின் சங்கமம் 2017 வெகு விமரிசையாக நடைபெற்றது.