அன்பும் அனுதாபமும் இலத்திரனியல் இளையவர்களும்
இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர், கற்றோர் அன்பும், அனுதாபத்தையும் நடைமுறையில் காட்டிப் பயனுற வைப்பது அவசியம். இதைப் பற்றி அறிந்து கொள்ள நாம் வழக்கத்தில் பகிரப்படாத அனுபவத்தைப் பார்க்கலாம். இளமைப் பொழுதில் போதை வஸ்துப் பொருட்களிற்கு அடிமையானால் அதிலிருந்து இளையவர்களை மீட்கத் தவிர்ப்புக் கல்வி முறைகள் வைத்திய சிகிச்சை முறைகள் உண்டு. வாழவிருக்கும் பிள்ளைகளை பெற்றார், உற்றார், ஆகிய நம் சமூகத்தில் இருந்து விலகி இருக்க விரும்ப மாட்டோம்.
ஆயினும் அசல் வாழ்வில் இருந்து விலகி நகல் சூழல் இலத்திரனியல் உலகத்தில் வாழும் இளையவர்களின் அனுதாபமற்ற தன்மையும் வரவிருக்கும் அவர்கள் தனிமைச் சூழலும் மிகவும் கவலைக்குரிய விடயம். இது பற்றி சற்று ஒப்பிட்டு அலசி ஆராய்ந்து விழிப்புணர்வைத் தர முனைகிறது இந்தக் கட்டுரை.
மது போதை, புகைத்தல், போதை வஸ்து ஆகியவற்றிற்குப் பிள்ளைகள் அடிமைப்பட்டால் பெற்ற மனம் புண்ணாகும், பிள்ளை மனம் கசங்கிய காகிதம் ஆகிவிடும். காண்பவர்கள் முன்னிலையில் கூச்சப்படும் குடும்பத்தார் ஒருபுறம் கண்ணீர் வடியும் தாயினர் மறுபுறம். எனினும் மனம் திடம் அடைந்து இளையவர்கட்கு உதவி செய்ய முனைவர் நிலவரம் அறிந்தவர்கள்.
போதைக்கு உள்ளானவரைப் பேசி, திட்டி, கண்டித்துப் பயனில்லை. பாதிக்கப்பட்டவர் மனம் வருந்தி விலக விரும்பினும் உடன் போதை நிலையில் இருந்து விடுபடுவது கடினமான விடயம். பிரதானமாக மூளையில் இரசாயனப் போதைத் தாக்கம் பொதுவாக ஆழமானது. போதை மருந்து தரும் போலி நகல் உணர்வுகள் பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்தளவில் ஏறத்தாழ நிரந்தரமானவை . அதைத் தவிர்க்க முயலுகையில் மன நிலையையும் பாதிக்கும். இதனால் இந்த நோயாளிகள் ஒட்டுமொத்தமாகத் தமது நிலமையை மறுத்தல், வெட்கப்படுதல், விரக்தியடைதல், கோபப்படுதல் போன்றவை தவிர்த்தலின் சில பக்க விளைவுகளாகும்.
இந்த உணர்வுகள் மனத்தாபங்களைப் படிப்படியாக அகற்ற ஒரு சமூகக் குழுவாக, பாதிக்கபட்டோர் அவர்களுக்கு நம்பிக்கையானவர்களுடன் உரையாடுதல், தத்தம் மனச் சூழ்நிலைகளை விவரிப்பது, அனுதாபத்துடன் கேட்டுக் கொள்வது, உளத்திற்கு ஆறுதல் தரும் வகையில் ஒருவருடன் ஒருவர் பக்கத்தில் இருத்தல், தேற்றுதல் ஆகியவை கூடிய பயனைத் தரும் என்று பல்வேறு மூல ஆதாரங்கள் சமூகத்தில் உள்ளன..
முக்கியமாக போதை வஸ்துவிற்கு எவ்வாறு முதலில் இளையவர்கள் அடிமைப்பட வேண்டி வந்தது என்று பார்த்தால் சில அடிப்படை விடயங்கள் தெளிவாகும். அதற்கான சூழ்நிலை, பெரும்பாலும் தகாத தொடர்புகள், பாதகமான நட்புகள், உறவுகளினால் உருவாகின என்று நாம் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளல் ஆகாது.
இனிமையாக இன்பத் துடிப்புடன் வளர வேண்டிய இளையவர்கள் எவ்வாறு மேலும் தவறான உடல் உளச் சேதங்களிற்குத் தள்ளப்பட்டு போதை வஸ்து நோயாளிகளாக மாறினர் என்று புரிந்து கொள்வது அவசியம். போதை வஸ்துக்கள் பாரதூரமானவையோ, இல்லையோ இதை நாடும் இளையவர்கள் அவர்கள் வாழ்க்கைச் சந்தர்ப்ப சூழல்களில் தனிமை,தகுந்த நட்புக்கள், தொடர்புகள் உருவாக்கிக் கொள்ள முடியாமை, மற்றவர் மனப்பாங்கை அறியத் தவறுதல், உணர்வு, கருத்துப் பகிர்வுகளில் பின்தங்கல்கள் போன்றவை காரணிகளாகவுள்ளன என்றும் மனோவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த இடைக்கால வாழ்கை இருளில் இருந்து இளையவர்கள் மீளப் பிரதானமாகத் தேவை அவர்கள் உடன் இருப்போர், உற்றார், சமூகம் ஆகியோர் செலுத்தும் அன்பு, அனுதாபம், பாதிக்கப்பட்டவர்கள் முன்னேற்றத்திற்கான கரிசனை போன்றவையே. இதுவே அவர்கள் மனத்திடத்தைக் கட்டியெழும்பும் வழிமுறை. கால காலத்தில் பாதிக்கப்பட்ட இளையவர்கள் வஸ்து வதைகள் தாண்டி, அவற்றின் பாவனையில்லாமல் மனச்சந்தோசம் பெருவதே இந்த சிகிச்சை முறையின் பெரும் வெற்றி.
பிள்ளைகள் இது போன்ற சூழலில் இருந்து மீண்டு தமது அன்றாடப் படிப்பு, விளையாட்டு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல், உற்றார், நண்பர்கள் போன்ற உறவுகளில் நாட்டம், புத்தகம் வாசித்தல், இசை கேட்டல் போன்ற பொழுது போக்குகளில் நாட்டம், போன்றவை அவர்கள் உடல், உள ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்யும்.
மேலே நாம் விவரித்தது எல்லாம் போதை வஸ்துக்களுக்கு அடிமைப்படிவது குறித்த குறிப்புக்கள். இதற்கும் இலத்திரனியல் இளைஞர்களுக்கும் என்ன தொடர்பு என்று கேள்விக்கான விடையை இப்பொழுது பார்க்கலாம்.
நமது வீடுகளிலும், பாடசாலைகளிலும் தினசரி இலத்திரனியல் கருவிகள் அதிகம் உபயோகிப்பதன் மூலம் மேலே கூறப்பட்ட சமூகத்தைப் புறக்கணிக்கும், தனிமை தரும் செயற்பாடுகள் நமது குழந்தைச் செல்வங்களிடம் ஊடுருவுகிறது.
நகல் சூழல் ஆகிய இலத்திரனியல் மயம் படிப்படியாகப் பாலகர்களையும், பைங்கிளிகளையும், பால்யவயதுச் சிட்டுக்களையும் பாதகமான கணனிக் கைத்தொலைபேசி (Smartphone), மின் பலகை (Tablet) உறவிற்கும் கொண்டு போய் விடுகிறது என்றால் சொன்னால் நம்புவீர்களா?
எம்மில் பலரின் மனதில் உடன் எழும் மாற்றுப் பேச்சு விவாதம் அப்படியெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது என்பதே. இதன் காரணம் நாமே அதிக அளவில் கணனிக் கைத்தொலைபேசியை, மின்னியல் பலகைகளைப் பாவிக்கிறோம் அல்லவா. இது எம்மைக் குத்துவது போன்றும் இருக்கலாம். எனவே நாம் எமது பயனற்ற விதண்டா வாதம் விட்டு எமது பிள்ளைகள் மேம்பாடு பற்றிச் சற்றுச் சிந்திப்போம்..
இன்றைய பள்ளி மாணவர்கள், தமது அன்றாட வாழ்வில் நகல் சூழலில் இருந்து அசல் சூழலிற்கு வர – மீண்டும் சரிசமம் (rebalance) ஆக்குவதற்குத் தினமும் சில மணி நேரம் முற்று முழுதாகத் தம் தொடர்பு கருவிகளில் இருந்து துண்டித்துக் கொள்ள வேண்டும்.
நகல் இலத்திரனியல் உலகம் தனை விட்டு அசல் சூழலை அரவணைத்தால் தான் பாதி கெட்ட சூழல் அகலும். மனிதர்கள் சமூக விலங்கினம். எமது இன நிலைப்பு இவ்வுலகில் ஒருவரோடு ஒருவர் பழகுவதினாலேயே நிலைத்துள்ளது, மேலும் மனிதச் சமுதாய நாகரிகங்கள் தாம் தோன்றிய இடங்களில் இருந்து பரந்தன.
மனிதச் சமுதாயத்தில் அடுத்த தலைமுறைகள் சமூகம் செழிப்புறும் வழிமுறைகளைக் கற்று, விவரம் அறிந்து கடைப்பிடித்து, பரீட்சார்த்தம் அடைவது அவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க உதவியாகும்.
மனித வாழ்வு இலத்திரனியல் நகல் விளையாட்டுக்கள் அல்ல. இது எத்தனை புள்ளிகளைச் சேகரிப்பது என்பதிலோ, எத்தனை நகல் சமூக வலைத் தொடர்புகளை உண்டாக்கியது என்பதோ, அல்லது எத்தனை நகல் விருப்பு, வெறுப்பு எண்ணிக்கைகளைப் போலி வெகுமதியாகப் பெற்றோம் என்பதிலோ இல்லை.
இளையவர்கள் மனப் பூர்வமான, ஆழ் மன நட்புக்கள், உறவுகள் தொடர்புகளை ஒருவரோடு ஒருவர் ஏற்படுத்திக் கொள்ள முடியும். தொடர்புகள் உருவாக்கிக் கொள்ள ஒருவரோடு ஒருவர் நேரம் எடுத்துப் பழகிக் கொள்ளுதல் அவசியம். சமூக வலை எமது இளையவர்களைப் பொறுத்தளவில் அவர்கள் முழுமையான மேம்பாட்டைத் தடைசெய்யும் வகையில் ஒரு இலத்திரனியல் சிலந்தி வலையேதான்.
நேரடி மனிதத் தொடர்புகள் பேச்சு மாத்திரம் அல்ல பல தகவல்களையும்,உணர்வுகளையும் முகத்திற்கு முகம் பரிமாற உதவுகிறது. இதுவே மனித உறவுகளின் மனநிறைவின் பிரதான ஒரு காரணி. இதை மின்னியல் தொடர்புச் சாதன நகல் சூழலில் பெறுவது கடினம். இன்று தொழிநுட்பத்தில் உயர்ந்து இருக்கும் பல நாடுகளிலும் வாலிபர்கள் ஆழமான, நம்பிக்கையான, நீண்டகாலத் தொடர்புகள், உறவுகளை அமைத்துக் கொள்வதில் அவஸ்தைப்படுகிறார்கள் என்பது திறந்திருக்கும் புத்தகம் போன்றதொரு உண்மை.
தொடர்புகள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டவாறேயுள்ளன
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தான், எனவே நாம் தற்போது தொழிநுட்பத்தையே நவீனம் என்றிருக்கும் தமிழ்ப் பெற்றாரைப் போய் உங்கள் பிள்ளை சமூக உறவுகள் எப்படி, பல நண்பர்கள் உண்டா என்று கேட்டால் உடனே ஆம் என்று பட்டியல் போட்டு நிரூபிக்கத் தயாராய் இருக்க வேண்டும். ஆயினும் உள் மனதில் அவர்கள் தமது சமூக நீண்டகாலத் தொடர்புகளையும், நட்புக்களையும் தமது பிள்ளைகள் சமூகவியல் சூழலையும் எடுத்துப் பார்த்தால் இவை எவ்விதத்திலும் ஒன்றானவையல்ல என்பதை விரைவில் உணர்ந்து கொள்வர்.
இதற்குக் காரணம் தனியே விசையான வாழ்க்கை, தொழிநுட்ப முன்னேற்றம் என்ற சாக்குப் போக்கு மாத்திரமல்ல. தொடர்ந்து அதி விரைவில் மாறிவரும் தகவல் பரிமாற்று முறைகளில் இருந்து எவை எமக்கும் எமது இளம் சந்ததிகள் வாழ்விற்கும் உபயோகமானவை, எவை உபயோகமற்றவை, போதை வஸ்துப் போன்று பரிகாரம் ஒன்றும் இல்லாமல் அடிமையாக்கக் கூடியவை என்ற பகுத்து அறியும் ஆற்றல் இல்லாமல் திணர்ந்து தவிக்கும் நிலையுமேயாகும்.
ஆனால் ஏறத்தாழ 30 ஆண்டுகளிற்கு மேலான சமூகவியல் புள்ளி விபரத்தரவுகள் இயல்பான, அசலான சமூகவியல் தொடர்புகளில் இருந்து இளையவர்கள் பின்தங்கியவாறே போய்க் கொண்டு உள்ளனர் என்றே தெரிவிக்கின்றன.
மேலும் இளையவர்கள் சமூகம், மற்றவர்கள் அபிப்பிராயங்கள் என்பதனையும் சேர்த்துச் சிந்தித்துச் செயல்படும் விதங்களிலும் அடிப்படை வித்தியாசம் அவதானிக்கப் பட்டு வருகிறது. 1979 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை எடுக்கப்பட்ட 14,000 பல்கலைக்கழக மாணவர்களில் சில நேர்முகக் கேள்விகளிற்கான பதில்கள் மாறியுள்ளன.
குறிப்பாக இளைஞர் ஒரு காலத்தில் ” நான் ஒரு விடயத்தில் பலதரப்பட்டார் எதிர்ப்புக்கள், ஆதரவுகள் அனைத்தையும் முடிந்த அளவு அறிந்து அதன் பின்னர் எனது முடிவை எடுப்பேன்” என்றும் ” நான் என்னை விட வசதியற்றவர்கள் உணர்வுகளையும் மனதில் எடுத்து முடிவு எடுக்க முனைவேன்” என்றும் ஆராய்ந்தறிந்து எடுக்கப்படும் நிலைப்பாடு மக்களிடையே பெரும்பான்மையாகக் காணப்பட்டது.
ஆயினும் 2011 இல் நடைபெற்ற நேர்முகக் காணல் புள்ளி விபரவியல் ஆய்வுகளில் தற்கால மாணவர்களில் -மற்றவர்களுக்கான அனுதாபம் 40 சதவீதம் குறைந்துள்ளது என அவதானிக்கப்பட்டுள்ளது. தமது உடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதே முக்கியம் என்ற சுயநிலைச் சூழல் காணப்படுகிறது. இந்தத் தரவுகளை விஞ்ஞான ரீதியில் பிரித்து – இந்தக் குறைவிற்கான முதன்மையான காரணி எது என்று கண்டு கொள்ள முடியாவிட்டாலும், தற்கால இலத்திரனியல் நகல் சூழல் நிலைப்பாடுகள் சில துச்ச மனிதவியலிற்கு விரோதமான குணாதிசயங்கள் உக்கிரமாக உயரும் குறிகளைக் காட்டுகின்றன.
மனோதத்துவவியல் பேராசிரியை ஷெரி டர்க்கிள் (Sherry Turkle – Massachussetts Institute of Technology) 2015 ஆம் ஆண்டின் வலையத்தை உபயோகிப்போர், மற்றும் அதனால் அயலவர் அனுதாபத் திறன்களைப் படிப்படியாக இழந்து, இலத்தரினியல் நகல் வாழ்வு ஊடாக ஏற்பட்டுள்ள சென்ற 30 ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியும் என்ற ஆய்வில் சில முடிவுகளைப் பெற்றுள்ளார்,
மேலும் இந்தப் பேராசிரியை – பல மாணவர்கள் தாம் இலகுவாக மின் வலைய நகல் உலகிற்கும், வாழ்வின் அசல் உலகிற்கும் இடையே சந்திப்போம் என்று கூறினும் சில விடயங்களில் தமது திறன் இல்லாமைகளையும் ஒப்புக் கொண்டுள்ளனர்,
மாணவர்கள் அதிகமாக மின் தொடர்புக் கருவிகளை, மென்பொருட்களை உபயோகிப்பதால்
- தமது பெற்றார் உரையாடல்களில் அக்கறை காட்டுவதில்லை
- குழுமி உணவு பகிரும் போது உற்றாருடன் உரையாடல் இல்லை
- வெளியே பூங்கா இல்லை பள்ளிக்கூட நிகழ்ச்சிகள் போல எங்கு போனாலும் போதிய அளவு நோக்கம், நாட்டம் காட்டுவது இல்லை
- கைத்தொலைபேசிச் சாப்பாட்டு மேசையில் உரையாடலைக் குறைக்கும் காரணி. மேலும் நாம் பொதுவாக மேல் சாடையான உரையாடல்களை மாத்திரம் வைத்திருக்கப் பார்க்கிறோம். காரணம் அடுத்தத் தொலைபேசித் தொடர்புக்குத் தெரிந்தோ தெரியாமலோ சலுகை கொடுக்க முனைகிறோம்
- மேலும் தமது வாழ்வில் தமது நண்பர்களுடன் உரையாடுவதையும் குறைந்துள்ளது என்றும் ஏக்கம் தெரிவித்துள்ளனர்.
இது தற்போது உள்ள சூழலை வைத்துப் பார்த்தால் அதிசயமான விடயமில்லை.
மேலே உள்ளவற்றின் பரிவிளைவுகளால் நாம் ஆழ்ந்த சிந்தனைகளைப் பரிமாற முடியாதுள்ளோம், சேர்ந்து ஆலோசித்துக் குழுவாக, முழுமையாக உரையாடி முடிவு எடுக்கும் ஆற்றலில் மென்மேலும் குன்றுகிறோம், மற்றவர்கள் உணர்வுகளை அவதானிக்கும் ஆற்றலில் பின் தங்குகிறோம்.
மற்றவர்கள் உணர்வுகளை அறிய முடியாமையால் பல சமயங்களில் தற்காலத்தில் மௌனங்களே ஆழமான சிந்திப்புக்கு நிர்பந்தமாக அமையும் மனித குணாதிசயங்கள் பல் வகை என்று நாம் ஏற்கனவே தெரிந்திருப்பினும், இலத்திரனியல் நூற்றாண்டில் வெவ்வேறு வாழ்க்கைத் தராதரங்களில் இருப்பவரும் ஒரே மாதிரியான பல்லாயிரம் மக்களிடையே வாழினும் செயற்கையாகத் தனிமைப்படுதலும், மற்றவர் புரிந்துணர்வுக்குத் தவி்க்கும், சூழ்நிலையும் பாடசாலை பல்கலைக்கழக மாணவரிடையே அதிகரித்துக் காணப்படுகிறது. இது ஒருங்கிணைந்த சமுதாய முன்னேற்ற முட்டுக்கட்டையாக மாறியும் வருகிறது.
மின் இணைய உபயோகம் அதிகரிக்க மக்களின் ஆழமான, அனுதாபம் மிக்க உரையாடல்கள் படிப்படியாக அழிந்து வருகிறது. இலத்திரனியல் தகவல் பரிமாறல் ஒரு திரைமறைவில் இருந்து சுலபமாகத் தொடர்பு கொள்ள வசதியளிக்கிறது. நவீன துரித தொடர்பு வசதிகள் இருப்பினும் மனத்தெளிவுடன் தகவல் பரிமாறும் திறன் ஒட்டு மொத்தத்தில் சுருங்கியவாறே உள்ளது எனலாம்.
சில தசாப்பதங்களின் முன்னர் இது நாட்டுப்புற நல்ல மனத் தன்மை, அதிகமக்கள் வாழ் நகர்புறத்தில் அந்நியமான சூழலில் தான் காணப்படுகிறது என்றும் மக்கள் பேசிக்கொண்டனர். இன்று இலத்திரினியல் தொடர்பில் தனிமையானது நாட்டுப் புறம் நகர்ப்புறம் என்று வேறுபாடற்று அனுதாபம் என்பது வரண்ட குளம் குட்டையாகி வருகிறது. இதன் பரிவிளைவு தெளிவு , பதிவு இல்லாமல் சமூகம் என்றில்லாமல் யாவரும் விளக்கம், ஒற்றுமையில்லாத, கருத்துத் தொடர்பில்லாத தனித் தீவுகள் ஆக மாறுவதே. இது சமூக மேம்பாட்டிற்கு முரண் ஆன விடயம்.
மீண்டும் உரையாடல் திறனை மீட்பது எப்படி?
அண்மையில் கென்டக்கி மாநிலப் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் மேற் கொண்டுள்ள குறைபாடுகளைத் தமது உயர் தர நிலைப் பாடசாலை மாணவர்களிடம் இருந்து அவதானித்தார்.
ஒரு நாள் ஆசிரியர் வகுப்பு மாணவர்களை அவரவர் கணினிக் கைத்தொலை பேசிகளைக் (smartphone) கீழே வைக்குமாறு கூறினார்.
அடுத்து, வகுப்பு மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய அத்தியாவசியப் பாடம் என்ன என்று கேட்க, –மாணவர் ஒருவர் போதிய நேரம் எடுத்து நீண்ட உரையாடல்களைச் செய்வது என்றாராம்.
வகுப்புச் சற்று அசந்து விட்டதாம். சில அசெளகரிய மெளனங்கள், மாணவர்கள் ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்ததன் பின்னர் ஒரு மாணவன் பொறுக்க முடியாமல், ஆசிரியரைக் கேட்டானாம் ” இது (உரையாடல்) எப்படி வேலை செய்யும் “ என்று,
இந்த ஆசிரியர் இதன் முன்னர் கொடுத்த பயிற்சி மாணவர்கள் ஒருவரை ஒருவர் நேர்முகம் கண்டுஆழமாகத் தாம் படிக்கும் படத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காக. இதிலும் இந்தப் பள்ளி மாணவர் இயல்பாக உடனுக்கு உடன் உரிய விளக்கம் காணும் பதில்களைப் பெறக்கூடிய சதாரண சம்பாணை கூடச் செய்து கொள்ள முடியாது காணப்பட்டனர்.
நவீனம், முன்னேற்றம் நாமும் நமது வாரிசுகளும் மின்னியல் நூற்றாண்டில் போட்டி போட்டு வெற்றி பெற வேண்டும் என்றெல்லாம் பிரேதமையில் நப்பாசையில் பாடசாலைகளில் – வீட்டுப் பயிற்சியை மின்னஞ்சல் மூலம் அனுப்புவதும், பாடங்களை பயிற்சிகளை புதியது பிரகாசமானது என்று மின் பலகை (tablets), கணனிகளுக்கு (notebooks) என்று:, உங்கள் உபகரணங்களைக் கொண்டு வாருங்கள் என்றும் பல் வேறு வகைகளில் மாணவர்களை ஊக்குவிக்கின்றோம்.
ஆயினும் பள்ளிக்கூடம் என்பது, ஆசிரியர், மாணவர்கள் கூடிக் குழுமியமாக உரையாடி, ஆலோசித்து, விவாதித்துக் கற்பது என்ற நிலைப்பாடு சிறிது சிறிதாக மாற்றப்பட்டு வருகிறது.
இன்றைய பாடசாலைகளில் மாணவர்கள் சிந்தித்து, நேருக்கு நேரே உடன் உரையாடுதல் போதிய தகவல் மற்றையவர் விளங்கிக் கொள்ளுமாறு பரிமாறுதல் என்பது உதறி விடப்பட விடயமாகி வருகிறது. பிள்ளைகள் மீண்டும் தமது உரையாடல்களில் திறன் பெற “கலந்த பாடம்” என்ற வகையில் மாணவர்கள் தமது எண்ணங்களைக் கைத்தொலைபேசிக் கேமரா மூலம் பதிந்து, மீளப் பார்த்துத் தாமே தமது உரையாடலைத் தராதரம் பார்த்துத் திறனை வளர்க்க ஊக்குவித்தார் அந்த ஆசிரியர் .
பெற்றார், உற்றார்,ஆசிரியர்களின் அனுதாபத்தின் முக்கியத்துவம்
இந்த மாணவர் தமது அனுதாப ரீதியான உரையாடல் சிந்தனைகள் ஏற்கனவே கல்வி அறிவியலாளர் ஜூடித் கிளெய்ன்ஃபெல்ட் (Judith Kleinfeld) என்பவர் 1972 ஆம் ஆண்டில் ஆழமாக ஆராய்வுகள் செய்ததில் அறிந்து கொண்டார்.
அதாவது மிகவும் திறமையான பள்ளி ஆசிரியர் கள் தமது அன்றாடக் கற்பித்தலில் ” அதிகக் கருணையும் அதே சமயம் கற்றலில் அடிப்படைகளை மாணவர்களிடம் இருந்து கற்றனர். வகுப்பு அறைகளில் மாணவர்கள் யாவரும் இந்தக் கருணையான கற்றலிற்கான அறக்கட்டளைகளால் பாடுபட்டு உழைத்தனர். மாணவர்கள் தமக்குக் கருணை, அனுதாபம் மதிப்புத் தந்த ஆசிரியர்களை மதித்து செயற்பட்டனர்.
ஆராய்ச்சியாளர் கிளெய்ன்ஃபெல்ட் ஆழ்ந்த ஆய்வில் மாணவர் தேர்ச்சிக்கும் ஆசிரியர் அன்றாட கருணை, அனுதாபத்திற்கும் நேரடித் தொடர்புகள் காணப்பட்டன. மேலும் அதே மாணவர்கள் தமது நடைமுறை வாழ்வில், உரையாடலில் அனுதாபம் உடைய கல்வி கற்போராகவும் காணப்பட்டனர்.
இன்றைய இலத்திரனியல் இளையவர்க்கு வேண்டியது
அனுதாபம் குன்றியவாறு போய்க் கொண்டு இருக்கும் இந்த மின்னியல் நூற்றண்டிலே இளைய தலைமுறையினர் தமக்கென்று உட்பொருள் உள்ள பொறுப்பான உரையாடல்களையும், கருத்துப் பரிமாறல்கள் இல்லாமலும், ஆழமான சகபாடிகள் தொடர்புகளையும், உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்வதற்கும் வழி தெரியாமல் தத்தளிக்கின்றர்.
இதை நிவர்த்தி செய்து வாழ்வில் பயனுள்ள அனுபவங்களை,தொடர்புகளை உருவாக்கி அனுதாபம் உடைய மக்களாக மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களும், பெரியவர்களும் பெரிய வகையில் உதவலாம் .
மின்னியல் மாணவர் முன்னையதை விட அதிகமாகத் தொடர்புக் கருவிகள், சாதனங்கள் தவிர்த்து எமது அசல் வாழ்க்கையில் ஒருவரோடு ஒருவர் உற்சாகமாகத் தொடர்பு கொண்டு மனம் கழிப்புற்று வாழ்ந்து கொள்வதை ஊக்குவிக்க வேண்டும்.
நாம் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால் எம் பிள்ளைகள் நிலைமையும் போதை வஸ்துப் பாவித்து, சந்தோசமற்று அசாதாரண தனிமையில் துன்புறும் நோயாளிகள் நிலையும் ஒன்றாகிவிடும்
ஆக்கம் – யோகி
உச்சாத்துணை:
- Barnwell. P. (2014) my students don’t know to have conversation, The Atlantic.
- Kleinfeld J.(1972) Effective teachers of Indian and Eskimo high school students Fairbanks AK. University of Alaska
- Turkle . S (2015) Stop Googling, Let’s talk. New York Times