\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அஞ்சலம்மா

Filed in இலக்கியம், கதை by on January 29, 2017 0 Comments

ஞாயிறு காலை ஏழு மணி. எப்பொழுதும் கேட்கும் M.S சுப்ரபாதம் ஒரு புறம், அந்த காலை நேரத்தை உறுதிப் படுத்திக் கொண்டு இருந்தது. இன்னொரு புறம் அம்மாவின் ஃபில்டர் காஃபி மணம். வெந்து கொண்டிருக்கும் இட்லி மணம் சமையல் அறையில் இருந்து வந்து கொண்டு இருந்தது.

  சமையல் அறை வாசலுக்கு முன்பு அமர்ந்து பாட்டி தேங்காய் துருவிக் கொண்டு இருந்தார். அவரால் செய்யக் கூடிய வேலையை எப்பொழுதும் செய்ய நினைக்கும் மனம். மிக மெலிந்த தேகம். 75 வயதில் நடை உடையுடன் இருக்கக் கூடிய அந்தக் கால சரீரம். அம்மா உள்ளே மதிய சமையலுக்கும் வேலை செய்தபடி இன்னொரு ஈடு இட்லி குக்கர் வைக்க ஆரம்பித்திருந்தாள்.

          குறுகி வரும் குடும்பங்களுக்கு மத்தியில் இன்றும் சேர்ந்து இருக்கும் கூட்டுக் குடும்பம் இவர்களது. வாசலில் தாத்தா ஈசி சேரில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். ஹாலில் அப்பா டிவியில் நியூஸ் பார்த்துக் கொண்டு இருந்தார். டைனிங் டேபிளில் ரகு உட்கார்ந்து facebook இல் அதே நியூஸ் பார்த்துக் கொண்டு இருந்தான். மூன்று தலைமுறையாக ஒரே பிள்ளையை வம்சத்தில் கொண்ட குடும்பம். கூடப்  பிறந்த  சகோதரிகள் இல்லாத காரணத்தினால் இன்னும் அதிகமாகவே ஆணாதிக்க சிந்தனை உள்ள மூன்று தலைமுறை. ஒவ்வொரு தலைமுறைக்கும் இடையில் கொஞ்சம் சதவிகிதம் தான் குறைந்திருக்கிறதே தவிர, பிறவி குணங்கள் சில போக வில்லை தான்.

தாத்தா கமறினார். மெதுவாகக் கையில் பிடித்த செய்தித்தாளை மடித்து வைத்தார்.

“மரகதம் ” என்ற குரலில் வயதின் தொய்வும் தெரிந்தது, சிறிய அன்புடனான ஆளுமையும் தெரிந்தது.  65 வயது தாம்பத்தியம். பாட்டிக்கு பத்து வயதிலேயே செய்த திருமணம். தாத்தாவிற்கு 20 வயது. பத்து வயது இடைவெளி இந்தக் கால கட்டங்களில் எவ்வளவு பெரிய விஷயம். அனால் அவர்களுக்குள் இருக்கும் அன்னியோன்யம் பார்த்தால் அது ஒரு பெரிய விஷயமாகத் தெரியாது தான்.

தேங்காய் துருவிய கையோடு எழுந்து முனகியபடி நடந்து வந்து,

“என்ன ” என்று தாத்தா அருகில் சத்தமாகக் குரல் கொடுத்தார்.

“ஏன் கத்தற ? எனக்கு என்ன செவிடா ?”

ரகுவிற்கு எப்பொழுதும் சிரிப்பு வர வழைக்கும் ஒரு உரையாடல் இது. தாத்தாவிற்கு ஒரு பத்து வருடமாகக் காது அவ்வளவாகக் கேட்கவில்லை தான்.  ஆனால் அதை ஒத்துக் கொள்ள மாட்டார். சரி இவருக்குக் கேட்கவில்லையை என்று ஏதாவது இவரைப் பற்றி மெதுவாகத் திட்டினால் அது மட்டும் நன்றாகக் கேட்கும்.

“என்னை திட்டறேன்னு தெரியறது..” என்று சிரித்துக் கொள்வார்.

பாட்டி “என்ன வேணும் ” என்று சிறிய ஜாடையோடு குரல் மெதுவாக்கிக் கேட்டார்.

“ஒரு வாய் காபி கொண்டு வாயேன் “

சரி என்ற சம்மதத்துக்கு அடையாளமாகத் தலையை ஆட்டி விட்டு மெதுவாக நடந்து சமையல் அறையை நோக்கிச் சென்றார்.

இடையில் “அம்மா எனக்கும் ஒரு வாய் சேர்த்துப் போடு ” என்று சம்பந்தம்.

“அப்படியே எனக்கும் ஒரு வாய் காபி ” இது ரகு

பாட்டி உள்ளே வரும் பொழுது,

“என்ன அம்மா  எல்லாரும் காபி கேட்கறாங்களா ?” என்று சிரித்தபடி வினவினார் ரகுவின் அம்மா சுசிலா .

வள்ளுவனுக்கு வாசுகி போல அனைவரின் குறிப்பறிந்து வேலை செய்யும் சுசீலா ஏற்கனவே பாலை அடுப்பில் ஏற்றி இருந்தார்.

சுசீலா, சம்பந்தம் தம்பதியர் 35 ஆண்டுகள் திருமணம் ஆனவர்கள். அன்பு , பொறுமை இவை எல்லாவற்றிற்கும் ஒரு இலக்கணம். தன்னுடைய குடும்பம் என்று மாமியாரை அம்மா என்றே அழைத்தே பழகிக் கொண்டார். ஒரு அரசாங்க அலுவலகத்தில் குமாஸ்த்தா பணி செய்பவர்.

அந்தக் குடும்பத்தின் மூத்த தலைமுறையின் நிதானத்திற்கும், தளர்ச்சிக்கும், இளைய தலைமுறையின் வேகத்திற்கும் பாலமாக இருப்பவர் அவர் தான் . அனைவரையும் புரிந்து சம நிலையில் சமாளிக்கும் திறன் கொண்டவர்.

குடும்பத்தின் வேர் போல இவர் இல்லாமல் வேலை நடக்காது ஆனாலும் இவரிடம் “taken for granted” மாதிரியே அனைவரும் நடந்து கொள்வர். அதை இவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவும் மாட்டார்.

நாலு குவளையில் காபி கலந்தார்.

“யாருக்கு நாலாவது ?”

“அஞ்சலை இன்னிக்குச் சீக்கிரம் வரேன்னு சொன்னா . அவளுக்கும் சேர்த்துத் தான்.”

சொல்லி முடிக்கும் பொழுதே வாசலில் கேட் திறக்கும் சத்தம் “கிரீச்” என்று கேட்டது

ஒரு ஐம்பது வயது மிக்க பெண்மணி வீட்டிற்குள் பின் பக்கமாகச் சுற்றி வந்தாள் . தலை முன் பகுதி மொத்தம் வழுக்கை. பின் பகுதி மட்டும் சிறிய அளவில் இருந்த முடியைச் சீவி குடுமி போட்டு இருந்தார். சுங்குடிப் புடவையை மடிப்புக் கலையாமல் கட்டி இருந்தார். ரகு குழந்தையாக இருந்த பொழுதில் இருந்து இவர்கள் வீட்டில் வேலை செய்பவர்.

சிரித்த முகம்.

“என்ன ரகுத் தம்பி எப்படி இருக்கீங்க” என்று வெள்ளேந்தியாக எப்பொழுதும் கேட்பாள்.

“ஹ்ம்ம் ” என்று ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னான் ரகு .

இவன் மதிக்கவில்லை என்று தெரிந்தாலும் அதையும்  சிரிப்போடு எடுத்துக் கொள்வார்.

அம்மாவும், பாட்டியும் அவருடன் பேசியபடி பாத்திரங்களை எடுத்துத் தேய்க்கப் போட்டுக் கொண்டிருந்தனர்.

ரகு எழுந்து அப்பாவுடன் வந்து ஹாலில் அமர்ந்து கொண்டான்.

சிறிது நேரம் கழித்து அம்மாவின் குரல் “ரகு அந்தக் காபி டம்ளர் எல்லாம் எடுத்துக்கிட்டு இங்க வா “

“எப்பப்பாரு வேலை தானா  .. என்று எரிச்சலோடு எழுந்து ரெண்டு டம்ளர் எடுத்துக் கொண்டு கொல்லைப்புறம் சென்று “நங் ” என்று கீழே வைத்தான்.

ரகுவின் இளமைச் செருக்கும் , குணமும் என்றுமே அஞ்சலையை மதித்தது இல்லை.

“வீட்டில் வேலை செய்பவர் ” என்ற சிந்தனையில் அவரை ரொம்பவே உதாசீனப் படுத்தும் வகையில் நடந்து கொள்வான்.

சுசீலா எவ்வளவோ முறை அவனை இந்த விஷயத்தில் கண்டித்து இருக்கிறாள். ஆனால் அவனுக்கு அது மண்டையில் ஏறாது.

திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் கழித்துப் பிறந்தவன். ஒரே பிள்ளை என்று குடும்பத்தில் மிகச் செல்லம். அதனால் சில பிடிவாத குணங்கள் மாற்ற முடியாமல் போனது.

“என்ன இருந்தாலும் வயதில் மூத்தவர் அதற்கு மரியாதை கொடு ரகு .. ” ஒவ்வொரு முறை “அஞ்சலை ” என்று ரகு பெயர் சொல்லிக் கூப்பிடும் பொழுது கண்டித்தாலும் கண்டு கொள்ள மாட்டான்.

இவர்கள் வீட்டில் இருபத்தி ஐந்து வருடங்களாக வேலை செய்பவர். ரகு பிறந்து ரெண்டு மாதங்களில் வேலைக்கு வந்தவர். கணவனை இழந்த வேலை வேண்டும் என்று வந்து நின்ற இவர் நிலைமை கண்டு மனம் இறங்கி , “நமக்கும் குழந்தையை பார்த்துக்க வீட்டு வேலைக்கு ஆள் வேண்டும்” என சேர்த்துக் கொண்டார் சுசீலா.

எத்தனை அசுர உழைப்பு செய்வார் என்றும், அவர் உழைப்பால் குடும்பச் சூழ் நிலையை எப்படி மாற்றிக் கொண்டார்  என்றும் சுசீலா அறிவாள் . அதனால் ரகு அவர்களை நடத்தும் விதம் இன்னுமே மனதிற்கு வருத்தம் தரும்.

“நான் பார்த்து வளர்ந்த குழந்தைம்மா … தம்பி இப்போ தானே சின்னப் பையன் சரியாய்டும் ” என்று கறை படிந்த பற்கள் தெரியச் சிரித்தார்.

சுசீலா கொடுத்த சூடான காபி குடித்து விட்டு, “பற பற ” வென வேலை செய்யத் தொடங்கினார்.

அம்மா சமையல் அறைக்கு மீண்டும் வந்த பொழுது, ரகு ஹாலில் இருந்து சமையல் அறைக்கு வந்தான். “அங்கு இருந்த சமையலறை அடுக்கில் ஏறி சுவாதீனமாக அமர்ந்து கொண்டான்.

சுசீலா  ஒரு தட்டில் இட்லி, சட்னி , வைத்து அவன் கையில் கொடுத்தாள் .

மெதுவாகச் சாப்பிட்ட படி என்ன பேசப் போகிறான் என்று காத்திருந்தாள்.

ரகுவிற்கு அம்மாவுடன் ஆசையாகப் பேசுவது, நைசாக ஏதாவது கேட்டு வாங்குவது, பெரிய விஷயங்களுக்கு அடித்தளம் போடுவது, என எல்லாமே இந்த சமையல் கட்டில் ஏறித் தொடங்கும் பேச்சுகள் தான்.

“அம்மா”

“ஹ்ம்ம்”.

“என்னோட நண்பர்கள் ஒரு சிலர் சேர்ந்து லண்டன் விசா அப்ளை பண்ணியிருக்கா , நானும் அப்ளை பண்ணி முயற்சி செய்யலாம்னு இருக்கேன். “

“ஹ்ம்ம்”

“இதைப் பத்தி ஒரு மாசம் முன்னாடி பேசினேன். அப்புறம் ரெண்டு வாரம் முன்னாடி பேசினேன். ரெண்டு தடவையும் ஹ்ம்ம் மட்டும் சொன்ன நீ. வேற பதில் தரியா ?”

“சரி . இப்போ நீ எதுக்கு வேற வேலைக்கு முயற்சி பண்ற?. இப்போ செய்யற வேலை ல ஏதாவது கஷ்டமா இருக்கா? பிரச்சனையா?”

“அப்படி இல்லை. கொஞ்சம் வெளி உலகம் பார்க்கலாம். முயற்சி பண்ணலாம்னு யோசிக்கிறேன்.”

“ஹ்ம்ம் “

“திருப்பித் திருப்பி ஒரே பதிலா .. ஒரே வேலையைச் செய்யறதும், சாப்பிடறதும், போயிட்டு வரதும், தூங்கிறதும் குண்டு சட்டியில் குதிரை ஓட்டற மாதிரி இருக்கு. எனக்கு வெளி உலகம் பார்க்கணும். நெறையச் சாதிக்கணும்”.

“ஒரே வேலை போறவங்க சாதிக்கலைன்னும், வெளி நாடு பார்த்தவங்க தான் சாதிச்சிட்டாங்கன்னும் நினைக்கிறியா?”

“அப்படி முழுசாச் சொல்லல. ஆனா ஒரே வேலையை உன்னை மாதிரி பார்த்துட்டு, போயிட்டு வந்துட்டு, எனக்கு சலிப்பா இருக்கு. உலகம் பெருசு. இன்னும் தெரிஞ்சிக்க, பழகிக்க, கத்துக்க நெறைய இருக்கு.”

“உலகம் பெரிசு இல்லைன்னோ , கத்துக்க நிறைய இல்லைன்னோ நான் சொல்ல வரல. ஆனா உங்கள மாதிரி இளைஞர்கள் வெளி உலகம் போனா தான் நல்லது கேட்டது கத்துக்க முடியும், மனசு விரியும், பக்குவம் வரும் நினைக்கறது தப்புன்னு நினைக்கறேன்”

கோபமாக அம்மாவை பார்த்தான்.

சிறிது நேரம் மௌனம் நிலவியது. அவன் பார்வையை நேரடியாகச் சந்தித்து ஒன்று சொன்னார் சுசீலா.

“நீ எனக்கு மரியாதை தருவே தானே?”

“தராமலா உன் சம்மதம் இல்லாம விசா அப்ளை பண்ணாம இருக்கேன்.” கோபமாகப் பதில் வந்தது.

“சரி அப்போ எனக்காக ஒண்ணு பண்ணு . ஒரு சின்ன புரிதல் உனக்கு வேணும். அந்தப் பாடம் உனக்கு வந்த பிறகு நீ விசா அப்ளை பண்ண நான் சம்மதிக்கிறேன் “.

“என்ன பண்ணனும் ?” கடைசியில் சொன்ன சம்மதம் முக்கியம் என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடிவு செய்தான் ரகு .

ஒரு பார்வையைக் கொல்லை புறம் அஞ்சலை மீது செலுத்தினாள் சுசீலா. பாத்திரம் தேய்க்கும் வேலையை முழுசாக முடித்திருந்தாள். எழுந்து புடவையைச் சரி செய்தபடி கிளம்பத் தயாராகிக் கொண்டு இருந்தாள்.

“அஞ்சலம்மா கிளம்பிட்டாங்க. அவங்க வீடு உனக்கு எங்க இருக்குன்னு தெரியுமா?”

“என்ன அவங்கள வண்டில கூட்டிட்டு போய் இறக்கி விடச் சொல்றியா ? இதெல்லாம் too much அம்மா “

“அவசர குடுக்கையா பதில் பேசாதே”. தாயாரின் கண்டிப்புக் குரல் வெளி வந்தது. ரகு பொறுமையுடன் அமைதி காத்தான்.

“அவங்க நடந்து போவாங்க. நீ அவங்க பின்னாடி போய் , அவங்க வீடு வரைக்கும் போய் , அவங்க எப்படி இருக்காங்கன்னு பார்த்துட்டு வா. அப்புறம் நம்ம ரெண்டு பெரும் உன் விசா பத்தி பேசுவோம்”.

“இதென்ன புதிர் என்று புரியவில்லை ரகுவிற்கு. வேலை செய்பவர் வீட்டில் என்ன பார்ப்பது. ஏதாவது குடிசை, இல்லை சின்ன வீட்டில் இருப்பார். அதை நான் பார்த்து என்ன செய்ய ?” ஒரே குழப்பத்துடன் அம்மா முகம் மீண்டும் நோக்கினான்.

அம்மா பதில் உரைப்பதாகத் தெரியவில்லை. நான் தான் உனக்குச் சொல்லி விட்டேனே . அதை முடிப்பது உன் வேலை என்கிற தினுசில் தன் வேலைக்குச் சென்று விட்டாள் .

ரகுவிற்கு என்ன செய்வது என்று புரிய வில்லை.  அஞ்சலம்மா பின்னால் follow பண்ணுவதா ? எதற்கு? இந்த அம்மா சொல்ல வந்ததை நேராகச் சொன்னால் என்ன ? எதற்கு அவர் பின்னால் போக வேண்டும்? ஒரு பெண்ணின் பின்னால் போவதை அவன் கர்வம் ஏற்கவில்லை.

அம்மாவின் முக பாவங்கள் அவள் தீர்மானமாக இருப்பதைக் காட்டியது. இதற்கு மேல் கேள்வி கேட்பதோ, வளர்ப்பதோ அவளுக்குப் பிடிக்காது என்று புரிந்தது. இருந்தாலும் அஞ்சலம்மா பின் தொடர்வதில் என்ன பயன் என்று புரியாததால் இந்த விஷயம் எரிச்சலை உருவாக்கியது.

விசாவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் . என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டு இருந்த பொழுது, வாசலில் மீண்டும் கிரீச் சத்தம் கேட்டது. “அஞ்சலை கிளம்பி விட்டார் ” என்று புரிந்து கொண்டான் ரகு. ஈகோ கால்களைத் தடுக்க, அம்மாவின் மீது இருந்த மரியாதை போகத் தூண்ட, அரைகுறையாக எழுந்து செருப்பை மாட்டிக் கொண்டு அவர் பின்னே செல்லத் தொடங்கினான்.

கிட்டத் தட்ட 100 அடிகள் தாண்டியே பின் தொடர்ந்தான்.  அது கஷ்டமாக இல்லை.  அஞ்சலம்மா வழுக்கையான தலையும் , உயரமும், 100 அடிகள் பின்பும் அவரைக் கண்டு பிடிக்க முடிந்தது.

அம்மாவுடைய இந்த பிளானில் என்ன பொடி இருக்கிறதோ என்று சிந்தனையுடனே  நடந்து கொண்டு இருந்தான்.

இவர்கள் வீட்டிலிருந்து 30 நிமிடங்கள் நடந்து விட்டார்கள். நகரின் மத்திய பகுதிக்கு வந்து கொண்டு இருந்தார்கள். அங்கு இருந்த ஒரு பெரிய வீட்டிற்கு முன் நடந்து உள்ளே நுழைந்தார் அஞ்சலை.

அந்தப் பெரிய வீட்டைப் பல முறை அலுவலகம் செல்லும் பொழுது  பார்த்திருக்கிறான் ரகு. மிகப் பெரிய வீடு. வீட்டில் இருப்பவர்கள் நல்ல வசதி படைத்தவர்கள் போலத் தோன்றும். இங்கு வேலை பார்ப்பார் போல இருக்கிறது.

இங்கு வேலை செய்து விட்டு வெளியில் வரும் வரை காத்திருப்பதா இல்லை என்ன செய்வது என்று புரியாமல் யோசித்த பொழுது, அருகில் ஒரு பெட்டிகடையில் “டீ ” விற்பது கண்டான். ஒரு “டீ” வாங்கிக் கொண்டு, வீ ட்டின் வாசல் தெரியும் படியாக ஒரு ஓரமாக அங்கு இருந்த பெட்டி போடும் கடை அருகில் நின்று கொண்டான்.

வீட்டிற்குள் சென்றவர் ரொம்ப நேரமாக வெளியில் வரவில்லை.

பேசாமல் வீட்டிற்கு செல்லலாம் என்று திரும்பிய பொழுது, “என்ன தம்பி யாருக்காவது வெயிட் பண்றீங்களா?” பெட்டி கொண்டிருப்பவர் இவனைக் கவனித்துக் கொண்டு இருந்தார் போல.

“இல்ல ஒருத்தங்களைப் பார்க்கலாம்னு வந்தேன். அவங்க இன்னும் வரல. அதான். கிளம்பிட்டேன்.”

“ஒரு ரெண்டு நிமிஷம் கடையைப் பார்த்துக்கரீங்களா . நான் எதுத்தாப்ல இருக்கற அஞ்சலம்மா வீட்டிக்குப் போயிட்டு இந்தப் புடவைகளைக் குடுத்துட்டு வரேன்”

“என்னது அஞ்சலம்மா வீடா ?”

“ஆமாம் . அவங்க பொண்ணு வந்திருக்காங்க, இப்போ ஸ்கூல் Annual day டைம். இல்ல. கொஞ்சம் பட்டுப் புடவை எல்லாம் பெட்டி போட்டு தரச் சொல்லி இருந்தாங்க”

“அஞ்சலம்மா பொண்ணு பெரிய வேலை பார்க்கறாங்களா ?

“என்னது பெரிய வேலையா ? அவங்க எல்லோருமே ஸ்கூல்ல தான் பெரிய ஆளுங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஸ்கூல் பார்த்துக்கறாங்க. பொண்ணு, பையன், மருமக , எல்லோரும். ரொம்பப் பெரிய ஸ்கூல் தெரியாத என்ன “

கொஞ்சம் கொஞ்சம் பேச்சுக் கொடுத்த பொழுது அந்த நகரில் பிரபலமான பள்ளியான  “AMHS” அஞ்சலை மெட்ரிக் உயர் நிலைப் பள்ளி எல்லாமே அவர்களுடையது என்று புரிந்தது.

ஒரு விதமான அதிர்ச்சியும், வியப்பும் , மரியாதையும், குழப்பத்துடன் வீடு நோக்கி விறு விறு என்று நடந்தான்.  

இவன் வரவிற்குக் காத்திருந்தது போல அம்மா வாசலிலேயே உட்கார்ந்திருந்தார்.

அப்பா, தாத்தாவை நடைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றிருப்பார் போல. அம்மாவிடம் நிறைய  பதில் எதிர் பார்த்தான்.

“ரகு . நீ அஞ்சலம்மா வீடு பார்த்தியா?”

“ஹ்ம்ம் பார்த்தேன். அவங்க வீட்டு வாசலில் ஒருத்தர் கிட்ட பேசினேன்.”

“என்ன தெரிஞ்சிகிட்ட இது வரைக்கும்.”

“அவங்க வெறும் வேலை செய்யறவங்க இல்லை. அவங்க ஒரு பெரிய பள்ளிக்கூட நிர்வாகத் தலைவின்னு நினைக்கிறேன் “.

அவங்க கணவர் இழந்த பின் 25 வருடங்கள் முன்பு, முதன் முதலாக நம்ம வீட்டிற்குத் தான் அவங்க வந்து வேலை கேட்டாங்க. அவங்க ரெண்டு குழந்தைகளும் அப்போ ரொம்ப சின்னப் பசங்க. இவங்க நம்ம வீட்டில வேலை செஞ்ச மாதிரி நிறைய வீட்ல வேலை செஞ்சு, அவங்க பசங்களைப் படிக்க வெச்சாங்க. கரெஸ்பாண்டென்ஸ்ல படிக்கறதுக்கு நான் தான் பணம் கொடுத்தேன் . என்னோட ஒரு தங்கை மாதிரி படிக்க வெச்சேன். அசுர உழைப்பாளி. படிச்சு முடிச்சுட்டு அவளே ஒரு ஸ்கூல் டீச்சர் வேலை பார்த்துக்கிட்டு, அவ பசங்களையும் நல்லாப் படிக்க வெச்சு, தானும் மேல மேல படிச்சாங்க… ஒரு பத்து வருஷம் முன்னாடி தான் இந்த ஸ்கூல் நிர்வாகம் அவங்க பொறுப்பை முழுக்க இவளை எடுத்துக்கச் சொன்னாங்க . இவை ரெண்டு பசங்களும் டாக்டரேட் படித்தவர்கள். அந்தப் பள்ளியை மூன்று இடங்களில் விரிவாக்கம் செய்து நடத்தி வரது அவங்க குடும்பம் தான்.

“அப்படி இருந்தும் ஏன் “

“நம்ம வீட்டில வேலை செய்ய வராங்கனு கேட்கறியா?.. இது தான் அவங்க வளர்ச்சிக்குத் தொடக்கமான இடம்னும், நம்ம வீடு அவங்க குடும்பம்னும், நான் படிக்க வெச்சதால தான் இதெல்லாம் நடந்ததுன்னும்.. இப்படி நிறையக் காரணம் சொல்லி வரா . நான் பல தடவை வேண்டாம்னு சொல்லியும் கேட்கறது இல்லை”.

ரகுவிற்கு, தான் பல முறை மரியாதை இல்லாமல் அவரிடம் நடந்ததும், அவர் வழுக்கையைக் கேலி செய்ததும், நினைவிற்கு வந்தது. வேதனை பிடுங்கியது.

குற்றவாளி போல உறுத்தியது.

“உன்னைக் கஷ்டப்படுத்தறதுக்காக சொல்லல ரகு . ஆனா நீ சொல்றியே குண்டு சட்டில குதிரை ஓட்ரோம்னு, உலகம் பார்க்கல, சாதிக்கலன்னு, அதெல்லாம் சரியா?”

பதில் சொல்லாமல் பார்த்தான்.

“நீ உலகம் பார்த்து பக்குவம் அடையறதுக்கு முன்னாடி , உன்னோடShallow திங்கிங் மாத்திக்கோ. சாதனைகள், வெற்றிகள் எல்லாமே பெரிய இடங்களிலோ, மேற்கு நாடுகளிலோ தான் நடக்கிறதுன்னு நினைக்காதே . அங்க போனா தான் உலகம் பார்ப்பேன்னு நினைக்காதே. உன்னோட பக்குவமும் , வளர்ச்சியும், உன்னோட சிந்தனைல தான் இருக்கு. எங்க போனாலும் நல்ல விஷயங்களை, சிந்தனைகளை வளர்த்துட்டு, பார்த்துட்டு வா.” அம்மாவின் சம்மதம் ஒரு பெரிய பாடத்தை உணர்த்தியது ரகுவிற்கு.

         லக்‌ஷ்மி சுப்பு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad