பீனோ க்ரிஜோ…
விடிந்தும் விடிந்திராதிருந்த அந்தக் காலை நேரத்தில், அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த பார்க்கிங்க் ஸ்பாட்டில் காரை நிறுத்தினான் விஷ்வா.. ஒரு தனியார் அலுவலகத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அவன், ஒரு இருபது வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா வந்து சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணியைத் தொடங்கியவன். பல நிலைகளிலும் பணி புரிந்து, கடைசியாக சி.டி.ஓ. ஆகப் பதவி உயர்வு பெற்றவன். கார்ப்பரேட் வார்ல்ட்க்குத் தேவையான அனைத்து சாமர்த்தியங்களையும், டிப்ளமஸிகளையும் கற்றுக் கொண்டவன். பல வெள்ளைக்கார எக்ஸிக்யூடிவ்ஸ் மத்தியில், சிறப்பும் மரியாதையும் பெற்று வீற்றிருக்கும் ப்ரௌன் ஃபேஸ்…….
விஷ்வா சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது, பக்கத்து வீட்டுக்குக் குடியேறியிருந்த வட இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவள் சோனாக்ஷி….. அவளுடன் பழகத் தொடங்கி, நெருக்கமாகி, காதலித்து, ஊர் முழுக்கச் சேர்ந்து சுற்றி, பின்னர் இரண்டு வீட்டுப் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு, குடும்பமாகினர் இருவரும். திருமணம் நடந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. இருவருக்கும் லட்டு போல இரண்டு பெண் குழந்தைகள். ஒன்பது வயதில் ஒருத்தி, ஏழு வயதில் இன்னொருத்தி.
அழகான குடும்பம், அன்பான பிள்ளைகள், அளவான ஆசைகள் என இன்பமாக ஓடிக் கொண்டிருந்த விஷ்வாவின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வரத் தொடங்கியது. அந்தத் திருப்பத்தின் வடிவம் விஷ்வாவுடன் வேலை செய்யும் வெள்ளைக்காரப் பெண்மணி மெலீஸா… பெயருக்கு ஏற்றது போல் மெலிதான உடலமைப்பும், நேர்த்தியான வளைவுகளும் கொண்ட மெலீஸா முதல் சந்திப்பிலேயே விஷ்வாவின் கவனத்தைக் கவர்ந்து விட்டாள். ஓரிரு சந்திப்புகளுக்குப் பிறகு ஒரு முறை, இருவரும் அலுவலக வேலை குறித்து ஒரு மீட்டிங்க்’கில் பேசிக் கொண்டிருக்கையில், மேசையின் மேல் வைக்கப்பட்டிருந்த விஷ்வாவின் குளிர்பானத்தைத் தவறுதலாக தனது என நினைத்து, ஒரு சிப் குடித்து விட்டாள் மெலீஸா… அதனைக் கவனித்த உடனே சற்று நெளிவுடன், “தட்ஸ் மைன்” என விஷ்வா முணுமுணுக்க, சற்றே ப்ளஷ் ஆனாள் மெலீஸா.. இருந்தாலும் நிலைமையைப் புரிந்தது சமாளிப்பதற்காக, “இஸ் தட் ஒய் இட் டேஸ்டட் மோர் ஸ்வீட்?” எனக் கண் சிமிட்டிச் சொல்லி விட்டுச் சென்றாள். அன்றைய இரவு முழுவதும் விஷ்வா’வால் தூங்க முடியவில்லை. இது நடந்தது சில வருடங்களுக்கு முன்னர், அதன் பின்னர் என்னவெல்லாமோ நடந்து முடிந்து விட்டது.
தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் செப்டம்பர் மாதத்தில் வந்த ஒரு வணிகப் பயணம். பாவங்களின் நகரம் எனப் பெருமையாக அழைக்கப்படும் லாஸ் வேகஸ் நகரில் ஒரு செமினார். அலுவலகத்திலிருந்து பலர் சென்றனர். விஷ்வா அந்த செமினாரில் தனது கம்பெனியின் குழுவிற்குத் தலைமைப் பொறுப்பில் சென்றிருந்தான், மெலீஸாவும் அவள் துறை வேலைகளுக்காகச் சென்றிருந்தாள். மூன்று நாள் செமினார், அதாவது இரண்டு இரவுகள் அந்த நட்சத்திர ஹோட்டலில் அனைவரும் தங்கினர் – வேறு வேறு அறைகளில் தான்….
முதல் நாள் இரவே, மீட்டிங்க் எல்லாம் முடிந்த பின்னர் அனைவரும் ஒன்று கூடி சோஷலைஸேஷன் என்ற பெயரில் அரட்டை அடிப்பது, மது பானங்கள் என்று இறங்கினர்… இரண்டு மூன்று மணி நேரங்களுக்குப் பிறகு ஒவ்வொருவராக அவரவரது ரூமிற்குத் தூங்குவதற்காகச் செல்ல, எஞ்சியிருந்தது மெலீஸாவும் விஷ்வாவும் தான். கடைசியாக பில் செட்டில் செய்ய வேண்டுமென்ற காரணத்திற்காக அவன் காத்திருந்தான், ஆனால் மெலீஸா நிறுத்துவதாக இல்லை… வெள்ளை ஒய்ன் பாட்டில் கணக்கில் காலியாகிக் கொண்டிருந்தது. தனது நிலையைச் சற்று இழக்க ஆரம்பித்திருந்தாள் எனத் தெரிந்தது. எங்கெங்கோ போய்க்கொண்டிருந்த பேச்சு, சற்று பர்சனலான விஷயங்களைத் தொட்டது. மெதுவாகக் குடும்ப விவரங்களைப் பேச ஆரம்பிக்க, மெலீஸா தனக்கும் கணவனுக்கும் சில மாதங்களாக இருந்து வந்த கருத்து பேதங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, உச்சகட்ட நிலையை அடைந்து, மூன்று நான்கு மாதங்களாகப் பிரிந்து வாழ்வதையும், சட்டப்படி விவாகரத்து ஃபைல் செய்திருப்பதையும் சொல்லி முடித்தாள். சொல்ல ஆரம்பித்த போது கோபம் தொனித்த அவளின் குரல், மத்தியில் தழுதழுக்க ஆரம்பித்து, சொல்லி முடிப்பதற்குள் அழுதே விட்டாள். அழ அழ, கண்களின் நீர் வழிந்து மூக்கின் நுனியில் சொட்டாக வடியத் தொடங்கியது…
நாற்பதின் மத்தியிலிருந்தாலும் தினசரி உடற்பயிற்சியில் உடம்பைக் கட்டுக் கோப்பாக வைத்திருந்தாள் மெலீஸா. பிரம்மனும் படைக்கும் தருணத்தில் ரொமாண்டிக் மூடில் இருந்திருக்க வேண்டும், கவர்ச்சியை அளவுக்கதிகமாகவே அள்ளித் தெளித்திருந்தான் அவளிடம். விசால நெற்றியும், கூரிய மூக்கும், அழகாகச் செதுக்கப்பட்ட உதடுகளும், சற்றே எடுப்பான, அகலமான தாடையும், சங்குக் கழுத்தும் இன்னும், சரியான அளவில் செதுக்கப்பட்ட வளைவுகளும்….. “நோ விஷ்வா, நோ, இட்ஸ் ராங்க்” ஏதோ அசரீரியாக உள்மனக் குரல் கேட்கத் தொடங்கியது விஷ்வாவிற்கு. இவ்வளவு அழகான ஒருத்தியை வேண்டாமென்று ஒருவன் ஒதுக்கித் தள்ளுவது எதனால் என்று யோசித்துக் கொண்டிருந்தான் விஷ்வா.
யோசனையிலிருந்த விஷ்வாவைத் தோளைப் பிடித்து உலுக்கிய மெலீஸா, கண்ணோடு கண்களை வைத்து அழுத்தமான பார்வையைப் பதிக்கத் தொடங்கினாள். சாமர்த்தியமாய் பார்வையை விலக்கிக் கொண்ட விஷ்வா, “ஆர் யூ ரெடி டு ஹிட் த பெட்?” எனக் கேட்க, பதிலெதுவும் சொல்லாமல் சற்று அர்த்தப் புஷ்டியுடன் புன்னகை புரிந்த மெலீஸா, வெய்ட்டரைப் பார்த்து “ஒன் மோர் பீனோ க்ரிஜோ” என ஆர்டர் செய்ய, விஷ்வாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை.. அவள் சற்று தன்னை இழப்பதாக உணர்ந்தாலும், ஃபோர்ஸ் செய்து எழுந்து போக இயலவில்லை அவனால். தனது லிமிட்டிற்கு மேலாக இரண்டு லார்ஜ் ஏற்கனவே குடித்தாகி விட்டது என்று மூளை சொன்னாலும், வேறு வழியில்லாமல், “வெய்ட்டர், ரிபீட் மை லெவிட்” என்று ஆர்டர் செய்தான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் பேச்சு முழுமையும் சற்று ரொமாண்டிக் வாசனை அடிப்பதாகவே அமைந்தது. பார் ஸ்டூல்கள் அருகருகே இழுத்துப் போடப்பட்டிருந்தன. பார்வைகள் சந்திப்பதை விலக்கிய விஷ்வா நேருக்கு நேராகப் பார்த்துப் பேசலானான். சற்று மேலாடைகள் தளர்ந்திருப்பதை அவள் கவனித்ததாகத் தெரியவில்லை, ஆனால் அவன் கவனிக்கத் தவறவில்லை. இன்னுமொரு இரண்டு மூன்று ட்ரிங்க்ஸ் இருவரும் ஆர்டர் செய்து முடித்திருந்தனர்.
வெய்ட்டர் “லாஸ்ட் ஆர்டர் ப்ளீஸ்” என எச்சரிக்க, கடையை மூடப் போகிறார்கள் என்று தெரிந்த பின்னர் கடைசியாக ஒரு பீனோ க்ரிஜோவும், லெவிட்டும் ஆர்டர் செய்யப்பட்டுக் குடித்து முடிக்கப்பட்டு, பில் சரிதானா என்று கூடப் பார்க்க இயலாத நிலையில் செட்டில் செய்யப்பட்டு, இருவரும் புறப்பட்டனர். “வாட்ஸ் யுவர் ரூம் நம்பர்?” என்று கேட்ட மெலீஸாவிடம் 2706 என்றான் விஷ்வா. “ட்வெண்டி செவன்த் ஃப்ளோர் இஸ் ஆஃப்டர் மைன், ஐம் ஆன் 2501, வுட் யூ லைக் டு ஸ்டாப் பை? மே பி வி கேன் ஹாவ் ஜஸ்ட் ஒன் மோர் ரவுண்ட் ஃப்ரம் த மினி பார்” என்ற மெலீஸாவிடம் “நோ, நோ…. மெலீஸா, ஐ ஹாவ் அ ப்ரெஸண்டேஷன் ஃபர்ஸ்ட் திங்க் இன் த மார்னிங்க்”…. என்றால் விஷ்வா. “ப்ளீஸ், ப்ளீஸ்…” குனிந்து ஷூவைச் சரி செய்து கொண்டே கேட்ட மெலீஸாவை, குனிந்து இருக்கும் நிலையில் பார்த்த பின்னரும் நோ சொல்ல இயலவில்லை விஷ்வா’வால்.
கிட்டத்தட்ட கைத்தாங்கலாகத் தான் செல்ல வேண்டியிருந்தது.. யாரை யார் கைத்தாங்கலாக அழைத்துச் செல்கிறார்கள் என்பது பார்ப்பவற்குப் புரியாத நிலையிலிருந்தது. எப்படியோ மஸில் மெமரி உதவியுடன் மெலீஸாவின் ரூமை அடைந்த இருவரும், சற்று முயற்சி செய்தபின் கதவைத் திறந்து உள்ளே சென்றனர். விஷ்வா சென்று சோஃபாவில் அமர, மேலே அணிந்திருந்த ஃப்ளீஸை விலக்கி கம்ஃபர்ட்டபிளான ஸ்லீவ்லஸுடன் ஃப்ரிட்ஜ் நோக்கி நடந்தாள் மெலீஸா.. அவளின் நடையழகு, சற்றே கேர்லஸாக அணிந்திருந்த உடைகள் காட்டிய கவர்ச்சி, உள்ளே இறங்கியிருந்த ஆறு லார்ஜோ, ஏழோ என்று நினைவில்லாத ஸ்காட்ச் என எல்லாம் சேர்ந்து விஷ்வாவை ஆட்கொண்டன. தன்னைக் கட்டுப்படுத்த இயலாது, சோஃபாவிவிலிருந்து எழுந்து, ஃபிரிட்ஜைத் திறந்து நின்று ட்ரிங்க்ஸ் எடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் மெலீஸாவைப் பின்புறமிருந்து அணைத்தான் விஷ்வா…. திடுக்கிட்டுத் திரும்பிய மெலீஸா, இதற்காகக் காத்திருந்ததைப் போலக் கண்களை மூடிக்கொண்டு லேசாக முனக ஆரம்பித்தாள்……..
பால் ரூம் மைக் முன்னால் கோட் சூட்டுடன் சரியாக எட்டு மணிக்கு, கூடியிருந்த அனைவரையும் அட்ரஸ் செய்ய ரெடியாகியிருந்தான் விஷ்வா. வசீகரிக்கும் ஆஃபிஸ் ஃபார்மல்ஸில் முதல் வரிசையில் வந்து அமர்ந்த மெலீஸாவைக் கண்டதும் மைக்கில் திணற ஆரம்பித்த விஷ்வா, பிஸினஸ் மீட்டிங்க்ஸில் திணறுவது, உளறுவது அதுவே முதல் முறை.
ஒன் நைட் ஸ்டாண்ட் என்று முடிந்து விடுமென்றுதான் முதலில் இருவரும் நினைத்தனர். ஆனால், அதன் பிறகு பல முறை, சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களிலெல்லாம் ஒன்று கூட ஆரம்பித்திருந்தனர். புதுப்புது விதமான பொய்களைச் சொல்வது எப்படி என்று ஒரு துறையிருந்தால் அதில் விஷ்வாவிற்கு எளிதில் டாக்டர் பட்டம் கிடைத்திருக்கும், அந்த அளவு சோனாக்ஷியிடம் பொய் சொல்லிவிட்டு மெலீஸாவுடன் ஊர்சுற்ற ஆரம்பித்திருந்தான். பல தினங்களில் இருவரும் அரை நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டே மேட்னி ஷோ நடத்தத் தொடங்கியிருந்தனர். சோனாக்ஷியுடன் இரவுக் காட்சிகளும் தொடர்ந்து கொண்டிருந்தது.
எந்தத் தவறுமே முதல் முறை செய்கையில் மட்டுமே மனதை உறுத்தும், இரண்டாவது மூன்றாவது முறை செய்கையில் குற்ற உணர்வு குறைந்து, போகப்போக இதில் தவறு எதுவும் இல்லை எனத் தனக்குத்தானே ஒரு நியாயம் கற்பித்துக் கொள்ளத் தொடங்குகிறது மனித மனம். இதே நிலையிலிருந்த விஷ்வா, நாளடைவில் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல், சோனாக்ஷியுடன் குடும்பம் நடத்திக் கொண்டே, மெலீஸாவுடனான தொடர்பைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.
சோனாக்ஷியின் அலுவலக நண்பன் ஆண்ட்ரூ வீட்டில் ஹாலிடே பார்ட்டி. விஷ்வாவும் சோனாக்ஷியும் கலந்து கொண்டிருந்தனர். பல வெள்ளையர்களும், ஒரு சில ப்ரௌன் ஃபேஸஸும் வந்திருந்தனர். அனைவரும் கணவன் மனைவியாகவோ, காதலர்களாகவோ மட்டுமே வந்திருந்தனர். குழந்தைகளுக்கு அழைப்பில்லை என்பதால், பேபி சிட்டரிடம் விட்டு விட்டுச் சென்றிருந்தனர் விஷ்வாவும், சோனாக்ஷியும். தொடை அளவு மட்டுமே இறங்கிய சிங்கிள் பீஸ் கருப்புக் கவுன், மேட்சிங்க்காக அணியப்பட்ட அனைத்து ஆக்ஸசரீஸ், ஆறு இஞ்ச் உயரமான கறுப்பு ஹைஹீல்ஸ் மற்றும் மிகவும் கவனத்துடன் செய்யப்பட்ட மேக்கப் ஆகியவற்றை அணிந்து கொண்டு சோனாக்ஷி பார்ப்பவர்களின் கவனத்தைத் தூண்டில் போட்டு இழுக்கும் வண்ணம் நின்றிருந்தாள். தாழ்வாய் இறங்கிய உடை முன்னழகினையும், உடலினை இறுகப் பிடித்திருந்ததால் பின்னழகினையும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. பத்து வருடங்களுக்கு முன்னர், காதலிக்கும் தினங்களில் இருந்த கன்சர்வேடிவ் சோனாக்ஷியா இவள் என்று நினைத்த விஷ்வாவிற்கு ஒருபுறம் பொறாமையாகவும், மறுபுறம் பெருமையாகவும் இருந்தது.
நின்றிருக்கும் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டே சுழன்று சுழன்று நளினமாய் ஆடிக் கொண்டிருக்கிறாள் சோனாக்ஷி. பார்த்ததில் பலரையும் ஹக் செய்து, கன்னத்தில் நளினமாக முத்தமிட்டுக் கொண்டே சென்ற சோனாக்ஷி சிறிது நேரத்தில் விஷ்வா இருப்பதையே மறந்தது போலத் தோன்றியது. அங்கங்கே சர்வ் செய்து கொண்டிருந்த ஆல்கஹால் க்ளாஸைக் கையில் எடுத்துக் கொண்டே ஆடிக் கொண்டிருந்த சோனாக்ஷி, சில மணி நேரத்தில் அதிகமான அளவில் குடித்ததாக உணர்ந்தான் விஷ்வா. முழுவதுமாக விஷ்வா இருந்ததை மறந்து விட்ட சோனாக்ஷி, ஆண்களின் மீது தானாய் விழுந்து ஆடுவது போலத் தோன்றியது. சற்று நேர மெலிதான ரொமாண்டிக் மியூஸிக்கில் வளைந்தாடிய பலரும் அவரவர்களின் கணவன் அல்லது காதலனுடன் செட்டில் ஆகிக் கொண்டிருக்க, சோனாக்ஷி மட்டும் கட்டுமஸ்தான ஆண்ட்ரூவுடன் மெலிதாக நழுவி நடக்கத் தொடங்கியிருந்தாள். தனியாக நின்று கொண்டு, ஏதோவொரு ட்ரிங்க் சிப் செய்து கொண்டிருந்த விஷ்வா இதனைக் கவனிக்கத் தவறவில்லை. என்ன நடக்கிறது என்று புரிந்து, ரியாக்ட் செய்வதற்குள் ஆண்ட்ரூவைக் கட்டிப் பிடித்துக் கொண்டே, அவனது பெட்ரூம் உள்ளே நுழைய ஆரம்பித்திருந்தாள் சோனாக்ஷி. அவசர அவசரமாய் அந்த ரூம் நோக்கி, அவர்களைத் தடுத்து விடலாம் என்ற எண்ணத்தில் ஓடிய விஷ்வாவின் முகத்தைத் தூரத்திலிருந்து பார்த்து கண்ணடித்தபடியே கதவை தனக்குப் பின்னே மூடி உள் சென்றாள் சோனாக்ஷி. கடைசியாய்த் தெரிந்தது கதவை மூடும் அவள் கையில் இருந்த “பீனோ க்ரிஜோ”……
படக்கென்று எழுந்த விஷ்வா, தன்னை அரவணைத்துப் படுத்துக் கொண்டிருந்த அன்பு மனைவியைக் கவனித்தான். மிகத் தத்ரூபமாகத் தோன்றிய அந்தக் காட்சிகள் வெறும் கனவு என்பதை உணர்ந்தான். அந்த ஏர் கண்டிஷண்ட் அறையிலும் நெற்றி முழுவதும் வியர்த்திருந்ததைத் துடைத்து விட்டபடி, ஒரு வினாடி கண் மூடி அமர்ந்தான்.
இந்தக் கனவாவது விஷ்வாவை மாற்றுமா?
– காதல் கிறுக்கன்.