காதலர் தினத் திண்டாட்டம்
கல்லூரி தினங்களில் ஃபிப்ரவரி இரண்டாம் வாரம் வந்து விட்டாலே, ஒரு குறுகுறுப்பான பரபரப்பு மாணவர்களிடையே தொற்றிக் கொள்ளும். காதலிக்கிறோமோ, இல்லையோ, காதலிக்கும் ஐடியா இருக்கிறதோ, இல்லையோ, எந்தக் கலர் சட்டை அணிவது என்பதில் கவனம் குவிந்து விடும். அதில் நம்மைப் பற்றி அடுத்தவர் நினைக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கும். அப்படி ஏதும் நினைத்து விடக் கூடாது என்ற பதைபதைப்பும் இருக்கும். ஆனா, லவ்வச் சொல்ல நினைக்கிறவனுக்கும், லவ் பண்றவனுக்கும் எந்நாளும் வேலண்டைன்ஸ் டே தான்.
இப்படி ஒரு சாராருக்கு மகிழ்வைக் கொடுக்கும் காதலர் தினம், இந்தியாவில் இன்னொரு வகைக் கும்பலுக்கு, கடும் கடுப்பைக் கிளப்பும் தினமாக இருந்து வருகிறது. அது பொது இடங்களில், ஜோடியாக ஒரு ஆணையும், பெண்ணையும் பார்த்து விட்டால், கையில் தாலியைக் கொடுத்துக் கட்டச் சொல்லும் கும்பல். இவர்களுக்குப் பயந்து, ஃபிப்ரவரி 14 ஆம் தேதியன்று, அண்ணன் – தங்கையாக இருப்பவர்கள் கூட, ஒன்றாக வெளியே செல்லத் தயக்கம் கொள்வார்கள்.
இப்படி வெறித்தனமாகக் காதலர் தினத்தை எதிர்ப்பவர்கள், குழந்தை குட்டியுடன் அமெரிக்காவுக்குக் குடியேற வேண்டும். அதுதான் அவர்களுக்குப் பெரும் தண்டனையாக இருக்க முடியும். ஆம், பின்ன, ஆரம்ப நிலைப் பள்ளிக் குழந்தைகளே ஜாலியாகத் தங்கள் நண்பர்களுடன் வேலன்டைன்ஸ் டே கொண்டாடிக் கொள்வதைப் பார்த்தால் காண்டாக மாட்டார்கள்? எப்படியோ, காதலர் தினம் கொண்டாட வேண்டியது, காண்டாக வேண்டியதில்லை என்று சிறு குழந்தைகள் சொல்லித் தருவார்கள்.
காதலர் தின வரலாறு அனைவருக்கும் தெரிந்தது தான். அதில் பல வரலாற்றுக் கதைகள் இருந்தாலும், ரொம்பப் பிரபலமானது, அரச கட்டளையை மீறி, திருமணங்கள் பல செய்து வைத்த வேலன்டைன் என்ற கிருஸ்துவப் பாதிரியார் கதை தான். காதலைக் கொண்டாடுவதற்கான காரணத்தை ஆராய வேண்டியதில்லை. காதல் கொண்டாடப்பட வேண்டியது தான். அதில் தவறில்லை. ஆனால், தற்சமயம் அது எப்படிக் கொண்டாடப்படுகிறது என்று பேசலாம். இதில் வியாபார உலகம் செலுத்தும் ஆதிக்கம் குறித்துப் பார்க்கலாம்.
ஆடிக் கழிவு என்றால் எப்படி ஜவுளிக்கடைகள் திருவிழா காணுமோ, அக்ஷய திருதியை என்றால் எப்படி நகைக் கடைகள் திருவிழாக் காணுமோ, அது போல் காதலர் தினத்திற்காகவே காத்திருக்கும் சில நிறுவனங்கள் உலகமெங்கும் உள்ளன. அவர்களது ஆண்டு வருமானத்தில் பெரும் பங்கு, இந்த ஒரு தினத்தில் அவர்களுக்குக் கிடைக்கும். அதனால் யார் மறந்தாலும், இந்த நிறுவனங்கள் காதலர் தினத்தை மறப்பதில்லை. ஜனவரி இறுதி வாரத்தில் இருந்தே, மக்களுக்கு இந்தத் தினத்தை நினைவுப்படுத்தத் தொடங்கி விடுவார்கள்.
அனைத்துப் பல்பொருள் அங்காடிகளிலும், இதற்கென்றே ஒரு பகுதியை ஒதுக்கி, சாக்லேட், வாழ்த்து அட்டைகள், நகைகள், பூக்கள், கரடி பொம்மைகள் போன்றவற்றைக் காதலர் தினப் பிரத்யேக உறைகளில் போட்டு விற்கத் தொடங்கி விடுவார்கள்.
காதலிக்க மனசிருந்தால் போதாதா, இதெல்லாம் எதற்கு என்று கேட்கும் அப்பாவியா நீங்கள்? இதையெல்லாம் நம் தலையில் கட்டுவதற்காகத் தான், இந்தக் காலத்தில் காதலர் தினத்திற்கு இவ்வளவு ஆர்பாட்டமும்!!
சாக்லேட் சாப்பிட்டா, லவ் மூட் வரும்’ன்னு சொன்ன ஆராய்ச்சிக்கு, யாரு காசு அழுதுருப்பான்னு பார்க்கணும். அது சாக்லேட் கம்பெனியா இருந்தாலும், ஆச்சரியப்படுறதுக்கில்லை. காலை உணவுக்குக் கார்ன் ஃப்ளேக்ஸ் நல்லதுன்னும், இதயத்துக்கு ஓட்ஸ் நல்லதுன்னும் சொன்ன அறிவாளிகள் யாருன்னு நமக்குத் தெரியாதா? தேவைப்பட்டால், கடலில் கலந்த எண்ணெயைப் பிரிக்க, பாத்ரூம் வாளிதான் சிறந்தது என்று சொல்லவும் தயங்காத விஞ்ஞானிகள் உள்ள உலகம் இது.
இது போல் தான், மற்ற பொருட்களும். இந்தத் தினத்துடன் எப்படியாவது ஒரு வகையில் சம்பந்தம் கொண்டு வந்து, விற்பனைக்கு வைத்து விடுவார்கள். காதலைச் சொல்ல, பரிமாறிக் கொள்ள வாழ்த்து அட்டைகள், பரிசளிக்க நகைப் பொருட்கள், உணர்த்துவதற்கு மலர்கள் என இறங்கி அடிப்பார்கள். வீடியோ கேசட் சப்ளை செய்தவர்களும், ரியல் எஸ்டேட் தொழில் பார்த்தவர்களும் சம்பந்தமே இல்லாமல், நாட்டை ஆட்சி செய்யத் தொடங்கும் போது, இதில் எல்லாம் சம்பந்தம் பார்த்து என்ன ஆகப் போகிறது?
இது தவிர, ரெஸ்டாரண்ட்களில் விசேஷ டின்னர், திரையரங்குகளில் காதலர் தினச் சிறப்புத் திரைப்படங்கள் என எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் கடை விரிக்கப்படுகிறது. வருடத்தில் சில தினங்கள் மட்டும் புரட்சியாளர்கள் கூடும் பீச்சில், வருடம் முழுக்க வரும் காதலர்களுக்காக, ஸ்பெஷல் சுண்டல் கூடக் கிடைப்பதாகத் தகவல். காதலுக்கும், நைட் சாப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் என்றோ, ரிலீஸ் ஆகுற எல்லாப் படத்துலயும் காதல் இருக்கு, அதென்ன காதலர் தினச் சிறப்புப் படம் என்றோ யாரும் காதல் மயக்கத்தில் கேட்பதில்லை என்பதால், காதல் வியாபாரம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
அமெரிக்கப் பள்ளிகளில் இத்தினத்திற்குத் தேவையான இப்படியான உற்சாக வரவேற்பை, பால்யத்திலேயே கற்றுக் கொடுத்து விடுகிறார்கள். அந்தச் சிறு மொட்டுகளும், தூய அன்புடன் தங்கள் உடன் படிக்கும் நண்பர்களுக்குப் பரிசு வாங்கிக் கொடுக்க, பெற்றோர்களை நச்சரிக்கத் தொடங்கி விடுகிறார்கள். பெற்றோர்களும், வேறு வழியில்லாமல் வால்மார்ட்டிலோ, டார்க்கெட்டிலோ, இந்தக் காலம் போன காலத்தில், பரிசுப் பொருள் தேடி அலைய நேரிடுகிறது. தங்கள் வாலிபக் காலத்தில் கூட, காதலர் தினத்தில் காதல் பரிசுக்காக இவ்வளவு மெனக்கெட்டிருக்க மாட்டார்கள். இந்தத் தினத்தால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பிரச்சினை.
இந்தியாவில் இருக்கும் பிரச்சினைக்குக் காரணம், வேலன்டைன்ஸ் டே’ வைக் காதலர் தினம் என்று மொழிமாற்றம் செய்தது தான். அதற்குப் பதில் நேசத் திருநாள் என்றோ, அல்லது ஏதேனும் நம்மூர்ச் சாமியார் பெயரை வைத்தோ அழைத்திருக்கலாம். நம்மூர்ச் சாமியாரா என்று யோசிக்க வேண்டாம். இப்ப, நம்மூர்ச் சாமியார்கள் தான் ரொமண்டிக்குடன் ஃபுல் மூடுடன் சுற்றி வருகிறார்கள்!!
அமெரிக்கக் கமர்ஷியல் பிரச்சினையைத் தீர்க்க, ஒரு வழிதான் உள்ளது. ட்ரம்ப் கிட்ட போயி, வேலன்டைன் அமெரிக்கர் இல்லை என்று நினைவுபடுத்திவிட்டு வந்து விடலாம். மீதியை எக்ஸியூடிவ் ஆர்டர் மூலம் அவர் பார்த்துக் கொள்வார்.
சரவணகுமரன்