\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மேரி டைலர் மோர் (Mary Tyler Moore)

Filed in இலக்கியம், கட்டுரை by on February 12, 2017 0 Comments

அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் முன்னோடிப் புதுமைப் பெண்ணாக 1970 களில் இருந்து பிரபல்யமானவர்தான் அண்மையில் மறைந்த நடிகை மேரி டைலர் மோர் அம்மையார் அவர்கள். இவர் எமி (Emmy) டோனி (Tony) அமெரிக்கத் திரை விருதுகளைத் திரைப்பட நடிப்பு, தொலைக்காட்சி நடிப்பு மற்றும் படத் தயாரிப்புக்களுக்காகப் பெற்றவர்.  அமெரிக்கக் குடும்பங்களைக் கவர்ந்த சிறந்த நகைச்சுவை நடிகை.

இவர் பிரபல்ய தொலைக்காட்சி முற்போக்கு மனைவியார் லாரா பெற்றி (Laura Petrie) எனும் கதாபாத்திரத்தை The Dick Van Dyke Show எனும் நகைச்சுவை நாடகத்தில் நடித்தார். பின்னர் Mary Tyler Moor Show எனும் நகைச்சுவை நாடகத்தில் 30 வருடங்கள் ஆண்கள் வயமான வேலைத் தலத்தில் தனி ஒரு பெண்மணியாக வெற்றிகரமாக வலம் வந்தவர். அன்றாட நிகழ்வுகளை சக பிரபல்ய நடிகர்களுடன் சேர்ந்து, திரையில் நகைச்சுவையாகக் சித்தரித்தார்.

எண்பது வயது பிரபல்ய மேரி டைலர் மோர் சென்ற சனவரி 25ம் திகதி நீண்ட கால நோயின் பின்னர் இயற்கை எய்தினார்.

ஆரம்ப காலம்

மேரி டைலர் மோர் டிசம்பர் 29ம் திகதி 1936 இல் நியூயார்க் மாநிலத்தில் உள்ள புரூக்ளின் நகரில் பிறந்தார். இவர் தந்தையார் ஜோர்ஜ் டைலர் மோர் எழுத்தர் ஆகவும் தாயார் மார்ஜரி ஹக்கெட் மோர் இல்லத்தரசியாக ஆகவும் இருந்தனர். தாயார் வீட்டில் தனது மூன்று பிள்ளைகளைப் பராமரித்து வந்தார். மேரி கத்தோலிக்கக் குடும்பத்தின் மூத்த மகள். மேரியின் குடும்பம் இவருக்கு எட்டு வயதாக இருக்கும் போது கிழக்குக் கரையில் இருந்து மேற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு குடி பெயர்ந்தனர். மேரி பள்ளி படிக்கும் பருவத்திலேயே  நடிப்பில் ஆர்வம் காட்டினார்.

மேரி டைலர் மோரும் மினியாப்போலிஸ் மா நகரக்கும்  தொடர்பு அதிகம். அது எப்படி என்று பார்ப்போம். இவர் வர்த்தக விளம்பரங்களில் நாட்டிய வித்தகையாகத் தனது கலைத்துறைத் தொழிலை ஆரம்பித்தார்.

கோரஸ் நாட்டியத்தில் ஆரம்பித்து 1959 இல் அமெரிக்கத் தொலைக்காட்சி நாடகங்களாகிய ரிச்சார்ட் டயமண்ட், பிரைவேட் டிரெக்டிவ் போன்ற தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தார். இதன் பின்னர் .இன்னும் ஏழு வெள்ளத்திரைகளில் சிறிய பாத்திரங்களில் பங்கேற்று நடித்தார்.

இவர் அமெரிக்க வீடுகளின் தொலைக்காட்சிப் பெட்டிகளில் நிரந்தர இடம் பிடித்தது The Dick Van Dyke Show மற்றும் The Mary Tyler Moore Show ஆகிய இரண்டு நகைச்சுவை நாடக சீரியல்களுமே ஆகும்.

டிக் வான் டைக் நகைச்சுவையில் சராசரி மக்களிடையே வீட்டில் பேசப்படும் பெயர்களில் ஒன்றானது,  லாரா பெற்றி எனும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தினால் அனைவரையும் ரசிக்க வைத்து, 1964 மற்றும் 1966 ஆகிய இரண்டு வருடங்களிலும் எமி விருதுகளைப் பெற்றார்.

அடுத்து திரைப்பட இசை நாட்டியங்கள் மூலம், தமது திரைப்பட நடிப்புத் திறனை வெளிக்காட்டினார். 1970 இல் மேரி, பிரபலப்  பாடகர் எல்விஸ் பிரஸ்லியுடன் Change Habit எனும் திரைப்படத்தில் நடித்தார். இதில் அழகிய வைத்தியன் எல் விஸ் இற்கு மனதைக் காதலில் பறிகொடுத்த பாதிரிப் பெண்ணாக நடித்தார்.

அடுத்து 1970 களில் புதுமைப் பெண்ணாக தமது பெயரிலேயே The Mary Tyler Moore show எனும் தொலைக்காட்சி நகைச் சுவை நிகழ்ச்சியைத் தமது இரண்டாவது கணவர் Grant Tinker  க்குச் சொந்தமான தனித்துவ தாபனம் ஏம் டீ எம் இண்டஸ்ட்ரீஸ் மூலம் தயாரித்து வெளியிட்டார்

மேரி டைலர் மோர் பிரபல்ய நகைச்சுவை நடிகை மாத்திரம் அல்லர். இவர் ஆற்றல் மிகுந்த தொழிலதிபரும்  ஆவார்.

தொடர் நகைச்சுவை நிகழ்ச்சி நாடகம் ஆகிய The Mary Tyler Show ஆனது அதன் கதையில் WJM-TV எனப்படும் கற்பனை மினியாப்போலிஸ் தொலைக்காட்சித் தாபனத்தின் தயாரிப்பாளர் Mary Richards ஆக நடித்தார். 1970 களில் அமெரிக்கச் சமுதாயம் தனிப்பட்ட வேலைத் தலத்தில் வெற்றி பெறும் பெண்மணி என்ற சிந்தனையே புதுமையாக அமைந்தது.

மேரி அவர்கள் கதாபாத்திரம் 1970 களில் பிற்போக்கு ஆண் ஆதிக்கத்தின் மத்தியில் இலேசாக, ஒருவரையும் பெரிதாக வெறுப்புக் கொள்ளாத வகையில் பெண்ணியத்தை நகைச்சுவைுடன் புகுத்தியது எனலாம்.

மினசோட்டா மாநிலத்தில் மேரி டைலர் மோர் அவர்களின் பிரபல்யமான மேரி ரிச்சர்ட்ஸ் கதாபாத்திரத்தைக் கெளரவிக்கும் முகமாக – மினியாப்போலிஸ் மாநகரில் – அவர் நிகழ்வின் ஆரம்பத்தில் தம் தொப்பியைக் காற்றில் எறிவது போன்ற வடிவில் ஞாபகார்த்தச் சிலையொன்று 2002ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

தொடர்ந்து இவரது திறன் வாய்ந்த நடிப்புகளினால் 1973, 1974 மற்றும் 1976 களில் Mary Richards நகைச்சுவைக் கதாபாத்திரத்திற்கு எமி விருதுகளைப் பெற்றார்.. இந்த தொடர் நாடகம் 1977ம் ஆண்டு முடிவுற்றது.

மேரி அவர்களின் MTM கலைத்தாபனம் ஆனது மேன்மேலும் பல வெற்றிகரமான தொலைக்காட்சி நாடகங்களைப் படைத்து வெளியிட்டது.

அவையாவன:

  • Bob Newhart show (1972-78)
  • Taxi (1978-82)
  • Hill Street Blues (1981-87)
  • Remington Steele (1982-87)
  • Cheers (1982-1993)
  • Rhoda (1974-78)
  • Phyllis (1975-77)
  • The Lou Grant Show (1977-82)

பிற்கால மேடையேறல்கள்

ஆண்டுகள் மெல்ல நகர, தொலைக்காட்சிகள் மற்றும் திரைப்படங்களை ரசிக்கும் மக்களின் ஆர்வங்களும் இயல்பாக மாற்றத்துக்கு உள்ளாகின. மேரி அவர்கள் 1980 களிலும், பின்னர் 1990 களிலும் மீண்டும் வெள்ளித்திரைகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஈடுபட முனைந்தார். ஆயினும் அக்கால முயற்சிகள்  ஒப்பீட்டளவில் முற்று முழுதாகப் பயன் தரவில்லை எனலாம்.

எனினும் மேரி அவர்களின் Broadway – Whose Life Is It Anyway? என்ற மேடை ஏற்றம் 1980 ஆண்டில் Tony விருதினைப் பெற்றுத் தந்தது. அதே வருடம் மேரியவர்கள்

பிரபல்ய தயாரிப்பாளர் ராபர்ட் ரெட்ஃபோர்டின் Ordinary People எனும் திரைப்படத்தில்  மனோதத்துவ நோயாளித் தாயார் கதாபாத்திரத்தில் நடித்து  அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்ற  புகழையும் பெற்றார்.

குடும்ப வாழ்வு

கலைஞர்கள் வாழ்க்கை மேடையிலும், திரையிலும், தனிப்பட்ட வகையிலும் சலனம், சபலம், உணர்வுகளின் போர்க்களம் என மாறுவது நாம் ஏற்கனவே அறிந்த விடயம். இதில் மேரியின் வாழ்க்கையும் விதிவிலக்கல்ல.

இவர் மூன்று தடவை மணம் புரிந்தவர். ரிச்சர்ட் மீக்கர் என்பவரை 1955 இல் மணங் கொண்டு ஒரு மகனைப் பெற்றார்.

அடுத்து 1962 இல் கிராண்ட் ரிங்கர் எனும் தொலைக்காட்சித் தயாரிப்பாளரை மணந்தார். இதன் போது அவர் ஒரே மகன் 1980 இல் அகால-மரணம் அடைந்தார்.

1983 இல் ராபர்ட் லெவீன் எனும் வைத்தியரை மணந்தார். மேரி பல ஹாலிவுட் கலைஞர்கள் போல வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களினால் மதுவிற்குத் தஞ்சம் அடைந்தார். இது இவரை ஒரு காலத்தில் சிகிச்சைக்குப் போக வேண்டிய சூழலுக்குத் தள்ளி விட்டது

மேரியவர்கள் அவரது 30 வயதுகளில் பாலக –சலரோக நீரளிவு நோய்க்குள்ளானார் என்று தெரிய வந்தது. இதன் பிரகாரமாகத் தாம் வைத்தியம் பெறும் போதும் வசதியற்றவர்களுக்காக, தொண்டு அமைப்பை உருவாக்கி – அதன் முன்னணிப் பேச்சாளாராகவும் பொதுத் தொண்டு தளர்வு விடாது புரிந்தார்.

ஆயினும் பிற்காலத்தில் அவர் சலரோகம், சிறுநீரகக் கோளாறு மற்றும் இருதயப் பிரச்சனைகள் எனப் பல்வேறு அவஸ்த்தைகளுக்கும் உள்ளானார். 2011இல் அவர் மூளையில் இருந்து புற்று நோய்க் கலன்கள் (Tumor cells) அகற்றப்பட்டன.

இவையனைத்துக்கும்  மத்தியில் 2012 இல் அமெரிக்கத் திரைப்பட நடிகர் ஒன்றியம்  அவருக்கு ஆயுட்சாதனை  விருதினை அளித்து அவர் கலைதனைக் கெளரவித்தனர். மேலும் மேரி அவர்கள் தமது இறுதி காலத்திலும் வாய் பேசா உயிரினங்களிற்காகவும் அவற்றின் உயிர்தமைக் காத்திடவும்  பல அமையங்களுடன் ஒன்றிணைந்து கடைசி மூச்சு வரை தொழிற்பட்டார்.

தொலைக்காட்சி என்று வரை இருக்குமோ அன்று வரை நகைச்சுவை முன்னணி நடிகை, கலைத்துவ தொழிலதிபர், பொதுத்தொண்டர் புதுமைப் பெண் மேரி டைலர் மோர்  அவர்களும், அவர் கலைப் படைப்புக்களும் நம் நெஞ்சை விட்டு அகலாது. இவரும் அமெரிக்கப் பொங்குத் திரை மங்காத நட்சத்திரம்.

ஆக்கம் – யோகி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad