யாரடியோ?
கட்டழகுப் பெட்டகமே, கன்னியருள் தாரகையே
கடைவிழிப் பார்வையாலே காளையரை வீழ்த்தினளே!
கானல் நீராய்ப் போனவனைக் கண்ணாரக்காணக்
கதவோரம் நாணிநின்று கசங்கியஆடை முடிந்தவளே !
வெண் தாமரையாள் ஆதவனை எதிர்பார்த்து
மெலிந்த தேகத்தால் ஊர்ப்பழிக்கு ஆளாகி
பொலி விழந்த வெண்ணிலவே வெட்கமென்ன
மெல்ல வந்தே வெளியுலகுக்குச் சொல்லிடடி!
அதிரூப சுந்தரனோ? அழகினில் மன்மதனோ?
அமுதமொழி பேசிநெஞ்சில் அமிழ்தத்தை ஊட்டியவனோ?
அறுபத்துநான்கு கலைகளையும் கற்றுத் தேர்ந்தவனோ?
அஞ்சாதே எனச்சொல்லி உனையள்ளி அணைத்தானோ.?
சந்தனத்தில் பொட்டுவைத்த தங்கமகன் அவன்தானோ?
சடுதியில் வருவதாகச் சொல்லிச்சென்றவனும் அவன்தானோ?
சத்தமின்றி முத்தமிட்ட மாயக்கண்ணனும் அவன்தானோ?
சங்கமிக்க நாள்குறிக்க வேணும்
சட்டுன்னுதான் சொல்லிடடி சம்மதத்தை!
– உமையாள்