காளான் குழம்பு
காளான் சைவமா அல்லது அசைவமா என்று ஒரு குழப்பம் பெரும்பாலோர்க்கு உண்டு. அது என்னவாக இருந்தாலும், சாப்பிட்டவர்கள் அதன் சுவையில் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டார்கள். நம் உடலுக்கு தேவையான இரும்பு, விட்டமின் பி & டி, செலினியம் போன்றவற்றை அளிப்பதால், நம் தினசரி உணவில் காளானைச் சேர்க்க, எந்த தயக்கமும் கொள்ள தேவையில்லை. காளான் வைத்து பெரும்பாலும் மஷ்ரூம் மசாலா, மஞ்சுரியன், பிரியாணி போன்றவற்றைச் செய்வார்கள். நம்மூர் குழம்பு வகையிலும், காளான் அருமையான சுவையை அளிக்கும்.
இதுவரை செய்திராதவர்களுக்காக, இதோ காளான் குழம்பு செய்முறை விளக்கம். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சின்ன வெங்காயம், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தினால், சுவை அமோகமாக இருக்கும். அதற்கு பதிலாக, பெரிய வெங்காயம், வேறு எண்ணெய் வகைகளையும் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
- காளான் – 250 கிராம்
- சின்ன வெங்காயம் – 15
- தக்காளி – 1
- தேங்காய் – துருவியது அல்லது சிறிதாக வெட்டியது – ஒரு கப்
- சீரகம் – ஒன்றரை ஸ்பூன்
- சாம்பார் பொடி – ஒன்றரை ஸ்பூன்
- மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
- மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
- கடுகு – கால் டீஸ்பூன்
- கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
- தேங்காய் எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
- காளானைச் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால், சிறிதாக அரிந்துக் கொள்ளவும்.
- தேங்காய் துருவி கொள்ளவும் அல்லது சிறிதாக வெட்டி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சிறிது விட்டு, அது சூடானதும், வெட்டி வைத்துள்ள காளானைப் போட்டு வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- மீண்டும் அந்த பாத்திரத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதில் சீரகம், சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், தேங்காய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- பின்பு, அதில் தக்காளி வெட்டி போட்டு வதக்கவும்.
- இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி ஆகியவற்றைச் சேர்த்து சிறிது வதக்கவும்.
- பின்பு, வதக்கிய இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- இந்த அரைத்த மசாலாவை, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- கொதி வந்ததும், இதனுடன் வதக்கி வைத்த காளான் துண்டுகளைச் சேர்க்கவும்.
- ஒரு சிறு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- பிறகு தாளித்தவற்றை, கொதித்த குழம்பில் சேர்த்து, பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கவும்.
- சுவையான காளான் குழம்பு ரெடி.
இது சாதத்துடனோ அல்லது இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற சிற்றுண்டிகளுடனோ சாப்பிட ஏற்றது. செய்துப் பார்த்து, உங்கள் கருத்துகளைப் பகிரவும்.
– சங்கீதா சரவணகுமரன்.