\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சிங்கம் 3

ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் போல நம்மூருக்கு அமைந்து விட்டது, சிங்கம் சீரிஸ் படங்கள். தொடர்ந்து ஹரி – சூர்யா கூட்டணியில் சிங்கம் 3ஆம் பாகமும் பரபரவென அமைந்து மசாலாப் பட ரசிகர்களிடையே வெற்றி பெற்று விட்டது எனலாம். கூடவே, கண் வலி மற்றும் காது வலி அபாயத்தையும் கொண்டுள்ளது என்பதைப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

சிங்கம் 3ம் ஹரியின் வழக்கமான ரோலர் கோஸ்டர் படமே. முதல் பாகத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்று, பின்பு ஆந்திரா நெல்லூரில் படம் முடியும். இரண்டாம் பாகத்தில், தூத்துக்குடியில் இருந்து ஆப்பிரிக்கா சென்று வருவார். இதில், தமிழ்நாட்டில் இருந்து  ஆந்திரா விசாகப்பட்டிணம் சென்று, பிறகு ஆஸ்திரேலியா வரை சென்று வருகிறார். சுமோவில் சுற்றும் வீச்சருவா வில்லன்களில் இருந்து, ஹெலிகாப்டரில் பறக்கும் சிக்ஸ் பேக் வில்லன் வரை விரட்டி விரட்டி அடித்துத் துவம்சம் செய்கிறார் துரைசிங்கம்.

ஒரே மாதிரியான, ஆனால் பெரிதாக சலிப்பை ஏற்படுத்தாத கதைகள் கிடைத்து விடுகிறது, இயக்குனர் ஹரிக்கு.  அதற்குக் காரணம், சரியான விகிதத்தில் மசாலா கலப்பதால் கூட இருக்கலாம். என்ன, சமீப காலமாகக் காரம் கூடுகிறது. நமக்கு ஊட்டி விடுற வேகமும் ஓவராக் கூடுது. படம் பார்க்குற நாமும், ஓடி ஓடி உழைக்கும் துரைசிங்கம் போல் டயர்டாகிறோம்.

ஆந்திராவில் ஒரு கமிஷனர் மர்மமான முறையில் உயிரிழக்க, அதை விசாரணை செய்வதற்கு “உங்களால மட்டும் தான் முடியும்” என்று தமிழ்நாட்டில் இருந்து துரைசிங்கத்தை இறக்குகிறார்கள். தமிழ்நாட்டில் உள்துறை அமைச்சராக ‘எப்போதும்’ இருக்கும் விஜயகுமார் செய்யும் வேலைகளை, இதில் ஆந்திர உள்துறை அமைச்சரான சரத்பாபு செய்கிறார். முதலில், சாமி பொறுக்கி போலீஸ் போல் லோக்கல் வில்லனுக்கு துணையாக இருந்து, துப்பு துலக்கி, பின்பு தனது அதிரடியைக் காட்டுகிறார். ஒரு கட்டத்தில், இதற்கெல்லாம் பின்னால் இருப்பது, மெடிக்கல் கழிவு மற்றும் மின்னணுக் கழிவுகளை இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் விட்டல் என்னும் வில்லன் என்பதை அறிந்து, அவனை எப்படிப் போட்டு தள்ளுகிறார் என்பதே சி. 3 இன் கதை.

ஒரு காட்சியில், துரைசிங்கம் என்று கூகிளில் தேடச்சொல்லி, ஆஸ்திரேலிய போலீஸிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். உண்மையிலேயே, துரைசிங்கம் என்று தேடினால், சூர்யா படம் தான் வருகிறது. கூகிள் மேப்ஸும் செல்போன் டெக்னாலஜியும் ஹரியின் திரைக்கதை டூல்ஸ் ஆகிவிட்டன. இவரது படங்களில் “அவன் அங்கே போயிட்டானா? நீ இப்படி போனா, இத்தனை நிமிஷத்துல அவனைப் பிடிச்சிறலாம்ஃ” என்று யாராவது யாரையாவது விரட்டிக் கொண்டிருப்பார்கள். இது உள்ளூர் சுமோ விரட்டல் என்று இருந்தது, இப்போது வளர்ச்சியடைந்து ஃப்ளைட், ஹெலிகாப்டர் என்று போய்விட்டது. 10 மணி நேரத்திற்குக் காட்சிகளைப் படமாக்கி, அதை ஃபாஸ்ட் ஃபார்வர்டில் இரண்டரை மணி நேரத்திற்கு ஓட்டுவது போல், படம் அவ்ளோ ஃபாஸ்ட். ஒரு வில்லன், ஃப்ளைட்டில் சென்று கொண்டிருக்கும் இன்னொரு வில்லனுக்கு ஃபோன் போட்டால், அதே ஒலி வேகத்தில் ஒளிப்பதிவு பறந்து சென்று, அதைப் படம் பிடிக்கிறது. என்னா வேகம்!! சத்தமும், வேகமும் தான் ஹரியின் ட்ரேட்மார்க் என்று ஆகிவிட்ட பிறகு, இதற்கெல்லாம் தயாராகித் தான் அவர் படத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது.

துரைசிங்கத்தின் பிரத்யேக குணாதிசயங்களுடன் சூர்யா. வில்லன்களிடம் நரம்பு புடைக்க வீராவேச வசனங்கள், குடும்பத்தினருடன் அடக்கம், அனுஷ்காவிடம் அவ்வப்போது காதல், ஸ்ருதியுடன் கண்டிப்புடன் கூடிய அறிவுரை என்று படம் முழுக்க பிசியாக இருக்கிறார். சிங்கம் 2க்கு பிறகு வந்த படங்கள் எதுவும் சரியாகப் போகாமல், அடுத்த ஹிட் சிங்கம் 3 எனும் போது, இந்தத் தொடரை விட்டுவிடப் போவதில்லை. ஓடிச் சென்று காரை நிறுத்துகிறார், காரில் சென்று ஃப்ளைட்டை நிறுத்துகிறார். யப்பா, கொஞ்சம் பாத்துப் பண்ணுங்க!!

அனுஷ்கா, சும்மாவே வாட்டசாட்டமாக இருப்பார். இதில் இரண்டு மடங்காக இருக்கிறார். இதில் திருமணமாகி, துரைசிங்கத்தின் மனைவியாக வருகிறார். ஸ்கோப் கம்மி தான். அவ்வப்போது வந்து போகிறார். கூடிய விரைவில், இவரது கேரக்டரைப் போட்டுத் தள்ளிவிடுவார்கள் என்று நம்பலாம். அனுஷ்கா பல்க்காக இருப்பதால், ஸ்லிம்மாக ஸ்ருதி இன்னொரு நாயகியாக வந்து, ஒருதலைக் காதல் கொண்டு, சில பல டூயட்களுக்கு நடனமாடிவிட்டுச் செல்கிறார்.

காமெடிக்கு சூரியும், ரோபோ சங்கரும் வந்து செல்கிறார்கள். எடுபடாத காமெடி செய்து, கடுப்பைக் கிளப்புகிறார்கள். அது ஹரி படங்களின் வழக்கம் தான். முதல் இரண்டு பாகங்களில் வந்த பெரும்பாலான நடிகர்கள், இதிலும் ஒரிரு காட்சிகளுக்கு வருகிறார்கள். ஒரு லைன் வசனம் பேசியிருந்தால் பெரிது. ஏகப்பட்ட நடிகர் பட்டாளம். அதில் வில்லன்கள் கூட்டம் இன்னும் அதிகம். மெயின் வில்லனாக வரும் பாடி பில்டர் தாகூர் அனுப் சிங், பெரும் பணக்காரனாக இருந்தாலும், அவ்வப்போது தான் கோட் சூட்டுடன் வருகிறார். பெரும்பாலும், வெற்றுடம்புடன் சிக்ஸ் பேக் புஜக்கிரமங்களுடன் சுற்றுகிறார். இவருக்குப் போட்டியாக, சூர்யாவும் சட்டையைக் கழட்டிடுவாரோ என்று பயப்பட வேண்டியிருக்கிறது. நல்லவேளை, சூர்யாவுக்கு அந்த நிலை ஏற்படவில்லை.

நிதின் சத்யா கேரக்டர் மூலம் இயக்குனர் தனது கற்பனையைச் சிறகடித்துப் பறக்கவிட்டிருக்கிறார். லோக்கல் செல்லுலார் டவர் முதற்கொண்டு ஆஸ்திரேலிய பிஸினஸ் சிஸ்டம்ஸ் வரை ஜஸ்ட் லைக் தட் ஹேக் செய்து, விக்கி லீக்ஸ் அசாஞ்சேக்களை எல்லாம் சர்வ சாதாரணமாக திருட்டு முழியுடன் ஓவர் டேக் செய்து போகிறார் நிதின் சத்யா.

ஹாரிஸ் ஜெயராஜ், மசாலா படத்திற்குத் தேவையான இசையைக் கொடுத்திருக்கிறார். மாளவிகாவின் “ஹி இஸ் மை ஹீரோ” பாடலும், லேடி காஷ்யின் பாடலும் இன்டர்நெஷனல் லெவல் என்றால், “சோனே சோனே” ஆந்திரா குத்து. தாமரை வரிகளில் “முதல் முறை” மட்டும் ரிலாக்ஸ் மோட் சாங்.    ஹாரிஸ் என்று பெயர் போடவில்லை என்றால், தேவிஸ்ரீ பிரசாத் என்று தான் நினைத்திருப்போம் என்கிற அளவில் “சிங்கம் சிங்கம் துரைசிங்கம்” பிஜிஎம்மில் என்று DSP முன்மொழிந்ததை, ஹாரிஸ் வழிமொழிந்திருக்கிறார். ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான ப்ரியன், இன்னொரு சிங்கமாகக் காட்சிகளை விரட்டி விரட்டி வேட்டையாடியிருக்கிறார். எடிட்டர்கள் வி.டி.விஜயனும், ஜெய்யும் எக்ஸ்ட்ரா ஷிஃப்ட்டில் வேலை செய்திருப்பார்கள்.

விஜயகாந்த், அர்ஜூன் படங்களில் வருவது போல், தேசபக்தி வசனங்களை ஹரி எழுதியிருக்கிறார். லோக்கல் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துக் கொண்டிருந்த துரைசிங்கம், நேஷனல் பிரச்சினைகளைத் தீர்க்க ஆரம்பித்திருக்கிறார். அடுத்தது, இண்டர்நேஷனல் தான். இதில் கதைக்களமாக உலக நாடுகளால், இந்தியாவில் வந்து கொட்டப்படும் குப்பைகளைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். இது சமீபகாலமாக, நம்மூர்ச் செய்திகளில் அதிகம் அடிபடுவது. ஆனால், பெரும் விவாதமாக என்றும்  ஆனதில்லை. இது போன்ற கமர்ஷியல் படங்களில் பேசப்பட்டு, விழிப்புணர்வு வந்தால் நல்லது தான். வெளிநாட்டுக்காரன் போடற குப்பையைத் தடுக்க முடியுதோ இல்லையோ, நம்மால் நம் சாலைகளில் நாம் போடும் குப்பையை நிறுத்த முடிந்தாலே பெரிய விஷயம்.

– – –

ந்தப் படம் கடந்த ஆண்டு இறுதியிலேயே வெளியீட்டுக்குத் தயாராகி விட்டது. ஆனாலும், கடந்த செப்டம்பரில் இருந்து தமிழ்நாட்டில் சுழற்றி அடிக்கும் தொடர் சூறாவளி நிகழ்வுகளால் பல முறை தள்ளி வைக்கப்பட்டு, இப்போது வெளியாகி உள்ளது. அதில் ஒரு காரணம், ஜல்லிகட்டுப் போராட்டமும், முடிவில் போலீஸ் ஆடிய அதிரடி ஆட்டமும்.

தமிழ்நாட்டு போலீஸ்  மீது பூராப் பயல்களும் கடும் கோபத்தில் இருக்கும் போது, போலீஸ் புகழ் பாடும் படத்தை எப்படி ரிலீஸ் செய்வது? திரும்பத் தள்ளி வை. இப்படியெல்லாமா பிரச்சினை வருவது?

அடுத்தது, தமிழ் ராக்கர்ஸ் உடனான தகராறு. படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு மேடையில், தமிழ் ராக்கர்ஸ் தளத்தை நடத்துபவர்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்ட, அதற்குப் பதிலாக தமிழ் ராக்கர்ஸ் தளத்தினர், முதல் நாளே படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று வெளிப்படையாகச் சவால் விட்டனர்.  சொன்னது போல், ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமும் செய்தனர். இணைய ரசிகர்களும் கூச்சமின்றி கமெண்ட்ஸ் போட்டுக் கொண்டு படம் பார்த்தனர்.

எது சரி, எது தவறு என்பதை யாரும் மதிப்பதில்லை. ஒரு அநியாயத்திற்கு இன்னொரு அநியாயம் தீர்வாகப் பார்க்கப்படுகிறது. டெக்னாலஜியின் அனைத்துச் சாத்தியங்களையும் பயன்படுத்தி வில்லன்களைப் பிடிக்கும் போலீஸ் பற்றிய படத்தை டெக்னாலஜியின் தயவோடு திருடி ஊருடன் பகிரும் போது, ஊருக்கும் அது தவறாகப் படவில்லை. படத்திற்கு வெளியே, போலீஸாலும் திருடனை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால், இம்மாதிரியான போலீஸ் வெற்றிக் கதைகளைப் பிரமாண்டமாகச் சினிமாவில் மட்டுமே காணும் வாய்ப்புள்ளதால், பார்த்துக் கைத்தட்டிவிட்டு வரலாம்.

         சரவணகுமரன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad