\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

காற்றில் உலாவும் கீதங்கள் – டாப் சாங்ஸ் (ஃபிப்ரவரி 2017)

இந்த ஆண்டு 2017இல்  இதுவரை வெளியாகிய பாடல்களில், நம் மனம் கவர்ந்த பாடல்களில் சில உங்கள் பார்வைக்கு:

பைரவா – வர்லாம் வர்லாம் வா

சந்தோஷ் நாராயணனுக்கு அமைந்த முதல் கமர்ஷியல் மசாலாப் படம். விஜய் காம்பினேஷன் வேறு. பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி இல்லையென்றாலும், முதலுக்கு மோசமில்லை ரகம். இண்ட்ரோ சாங் ஸ்பெஷலிஸ்ட் ஆகிவிட்டார் அருண்ராஜா காமராஜ். வெறியூட்டும் குரலில் தெறி, கபாலி படங்களைத் தொடர்ந்து இதிலும் முதல் பாட்டு இவருக்குத் தான். மில் சைரன், பைக் ரேஸிங் சத்தம் போன்றவற்றை எல்லாம் இசையாக்க சந்தோஷால் தான் முடியும். ‘வர்லாம் வர்லாம் வா’ தவிர விஜய் பாடிய ‘பாப்பா பாப்பா’ பாடலும், ஆனந்து பாடிய ‘பட்டையைக் கிளப்பு’ ஆகிய விஜய் படத்திற்குத் தேவையான குத்துப் பாடல் தேவையைப் பூர்த்தி செய்தன.

யார்ரா யார்ரா இவன் ஊரக் கேட்டாத் தெரியும்

பார்ரா முன்ன வந்து நின்னு பார்ரா புரியும்.”

கோடிட்ட இடங்களை நிரப்புக – என் ஒருத்தியே

‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தின் ரிசல்ட் கொடுத்த நம்பிக்கையில் பார்த்திபன், தன் குருநாதர் மகன் சாந்தனுவுக்கு ஹீரோ வாய்ப்பளித்து, இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் எதிர்பார்த்த ரிசல்ட்டைக் கொடுக்கவில்லை. அதனால் இசையமைப்பாளர் சத்யாவின் நல்ல சில பாடல்களுக்குப் போதிய மைலேஜ் கிடைக்காமல் போனது. ‘என் ஒருத்தியே’ பாடலாகக் கவர்ந்த அளவுக்கு, படமாக்கத்தில் கவரவில்லை. அதற்கு ஹீரோயின் மட்டும் தான் காரணமா என்று தெரியவில்லை. டி.ராஜேந்தர் பாடிய ‘டமுக்காத்தான்’ பாடல், சாந்தனு உட்கார்ந்து, படுத்து, எழுந்து ஆட உதவியது.

“யாரைக் கேட்டும் பூக்காது காதல் தாவரம்

ஒரு காதல் பார்வை பார்க்காது இல்லை யாவரும்”

சிங்கம் 3 – ஓ சோனே சோனே

சிங்கம் 3க்கு ஹாரிஸிடம் வந்திருக்கிறார் இயக்குனர் ஹரி. சிங்கம் டெம்ப்ளேட்டில் இருந்து தடம் மாற வேண்டாம் என்று சொல்லியிருப்பார் போலும். அதே போல், டிஎஸ்பி ரக இசையையே ஹாரிஸும் தந்திருக்கிறார். பாதிப் பாடல் வரிகளில் ஹரி தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறார். ‘ஹி இஸ் மை ஹீரோ’, ‘சிட்னி மிஷன்’, ‘முதல் முறை’ ஆகிய பாடல்களில் மட்டும் ஹாரிஸ் டச். லேடி காஷ் குரல் உற்சாகமளித்தது என்றால், ஹரிஸ் ராகவேந்தர் குரல் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இதமளித்தது. மற்றவை எல்லாம் தூக்கத்தைக் கலைக்கும் பட்டாசு மெட்டுகள். ‘ஓ! சோனே சோனே’ – அசல் ஆந்திரக் காரக் குத்து.

“டெரா பைட்ல டென்ஷன் வந்தா, டெரராகவே நிப்பேன்டா

நல்லா பாத்துக்கோ, என் முகத்தில் நாலு பக்கம் சிங்கம் டா!!”

அதே கண்கள் – தந்திரா

அதிகம் கண்டு கொள்ளாமல் வெளிவந்து, நல்ல விமர்சனம் பெற்ற படம். கலையரசன், ஜனனி நடிப்பில் வெளிவந்த சிறு பட்ஜெட் படம். கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆகிப் போன கிப்ரான், சிறு இடைவெளிக்குப் பிறகு இசையமைத்த திரைப்படம் இது. படத்தில் வரும் முக்கியமான எதிர்மறைப் பெண் கேரக்டரை விவரிக்கும் பாடலாக அமைந்த “தந்திரா”வில், தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் கிப்ரான் என்று தான் சொல்ல வேண்டும். அந்த விசில் இசையும், பாடகர்கள் ராஜன் செல்லய்யா, ஸ்ரீ கணேஷ் குரல்களும் இப்பாடலின் சிறப்பம்சம். படத்தின் வில்லியான ஷிவதா கேரக்டரின் வெயிட்டைக் கூட்டுவதில் இப்பாடலுக்கும் ஒரு பங்கு உண்டு.

அழகான சதிகாரி அடங்காப் பிடாரி

சிதறாமல் பந்தாடும் சிறு மர்மம் நீ

அழகான சதிகாரி அடங்காப் பிடாரி

பார்பி டால் கெட்டப்பில் பச்சோந்தி நீ”

போகன் – செந்தூரா

தனி ஒருவன் வெற்றிக்குப் பிறகு, அதே அரவிந்த்சாமி – ஜெயம் ரவி காம்பினேஷனில் அமைந்த படம் – போகன். இமான் இசையில் அனிருத் பாடிய “டமாலு டுமிலு” இன்ஸ்டண்ட் ஹிட் என்றால், தாமரையின் வரிகளில் கனடா வாழ் இலங்கைத் தமிழ்ப் பாடகி லஷ்மி பாடிய ‘செந்தூரா’ மனதில் நிற்கும் பாடல். பாடலைப் படமாக்கிய விதமும், இசைக்குப் பொருத்தமாக நியாயம் செய்ததாக இருந்தது. பாடலை இயக்கியவருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். காட்சிகளை இணைத்திருந்த விதம் அருமை.

“அலைந்து நான் கலைத்து போகும் போது அள்ளி

மெலிந்து நான் இழைத்துப் போவதாகச் சொல்லி

வீட்டில் நளபாகம் செய்வாயா?

பொய்யாய் சில நேரம் வைவாயா?

நான் தொலைந்தால் உனைச் சேரும் வழி சொல்வாயா?”

பக்கா புதுசு

இவை தவிர, இம்மாதம் மணிரத்னத்தின் அடுத்த படமான காற்று வெளியிடையில் இரு பாடல்களும், கௌதம் மேனனின் என்னை நோக்கிப் பாயும் தோட்டாவில் ஒரு பாடலும் வெளியிட்டு உள்ளார்கள். மணிரத்னத்தின் படத்திற்கு யார் இசை என்று சொல்லத் தேவையில்லை. ரஹ்மான் தான். கௌதம் மேனன் இன்னமும் ரகசியமாக வைத்திருக்கிறார். யார் இசையமைத்தது என்று தெரியாமலே, பாட்டுக் கேட்பது புது ரகம் தான்!! ரஹ்மானா, தர்புகா சிவாவா, சித் ஸ்ரீராமா, தனுஷா, சிம்புவா அல்லது கௌதமே இசையமைத்து விட்டாரா என்று இசை ரசிகர்கள் குழம்பிப்போய்க் கிடக்கிறார்கள்.

இப்போதைக்குப் பாடல்களைக் கேட்போம். விரிவாகப் பிறகு பேசுவோம்.

காற்று வெளியிடை – அழகியே

எனை நோக்கிப் பாயும் தோட்டா – மறுவார்த்தை

– சரவணகுமரன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad