\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அமெரிக்கா சீனா வர்த்தக விவாதமும் வரக்கூடிய பக்க விளைவுகளும்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 26, 2017 0 Comments

2017 இல் வந்திருக்கும் அமெரிக்கத் தலைமைத்துவ மாற்றம் சனவரி 20 ஆம் திகதியிலிருந்து பல்வேறு வகை மாற்றங்களையும் செய்ய ஆரம்பித்துள்ளது. புதிய அமெரிக்க சனாதிபதி தமது வாக்காளர்களுக்குக் கூறியதை உடன் அமுல்படுத்த ஆரம்பித்துள்ளார். இவற்றில் பல அமெரிக்க நுகர்வோர் மற்றும் அவர் அன்றாட வாழ்க்கை போன்றவற்றில் அசௌகரியங்களைத் தர வாய்ப்புக்கள் உண்டு. புதிய அமெரிக்கத் தலைமைத்துவம் பொதுவான வர்த்தக உலக மயமாக்குதல் அமெரிக்கரின் வயிற்றுப் பிழைப்பிற்குச் சாதகமானதல்ல என்றும் இதனால் பல குடிமக்கள் சென்ற பல தசாப்தங்களாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்றும் பிரச்சாரம் செய்து பதவிக்கு வந்துள்ளது.

எனவே தமது குறிப்புக்களில், சீனாவில் உற்பத்தியாக்கப்பட்டு அமெரிக்கச் சந்தையில் கொட்டப்படும்   பண்டங்கள் யாவற்றிற்கும் 45% சதவீத வரி வசூலிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளமை மினசோட்டா சார்ந்த பாரிய உலகளாவிய வர்த்தக தாபனங்களுக்கு அதிர்ச்சியான தகவலாகும். மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களான டார்கெட் (Target – 341,000 ஊழியர்கள்) பெஸ்ட் பை (Best Buy -125,000 ஊழியர்கள்) போன்ற தாபனங்களுக்கும் நூற்றுக்கணக்கான சில்லறை வியாபாரிகளுக்கும் இந்த அறிவிப்பு தலை இடிகளைக் கொண்டு வரக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு.  மினசோட்டா வர்த்தக சஞ்சிகை ஒன்று, இந்த மாநிலத்தின் ரிச் ஃபீல்ட் நகரைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் பெஸ்ட் பை நிறுவனத்தின் தற்போதைய 1 பில்லியன் டாலர் லாபம், இந்த வரி உயர்வின் காரணமாக, 2 பில்லியன் டாலர் நஷ்டமாக மாறும் அபாயம் உள்ளது என்று விளக்குகிறது.  இந்த விளக்கம் மாநில, மத்திய அரசுகளுக்கும் விளக்கப்பட்டுள்ளதாம்.

இது , வால்மார்ட், சாம்ஸ் க்ளப், சியர்ஸ் ( Walmart, Sam’s Club. Sears) போன்ற  தாபனங்களையும் பாதிக்கலாம். குறிப்பாக உள்ளுர்ப் பக்க விளைவு மினசோட்டா பாரிய வர்த்தக தாபனங்களில் தொழில் புரியும் எமது தமிழ்ச் சகோதரர்களுக்கும் அவர் கணனி மற்றும் வர்த்தக ஆலோசனைத் தொழில் வாய்ப்புக்களிலும் இது மறைமுகமான பாதிப்பை  ஏற்படுத்தலாம். எனவே நாம் இது பற்றி சற்றுக் கவனிப்போம்.

அமெரிக்க சனாதிபதி அமெரிக்காவே முக்கியம்  என்ற கொள்கையையே கடைபிடிக்கப் போவதாகத் தமது பதவியுரிமைப் பேச்சிலும் மற்றைய தருணங்களிலும் பிரகடனப்படுத்தியுள்ளார். குறிப்பாக அவர் சீன உற்பத்திகள் மேலதிகமாக அமெரிக்கச் சந்தையில் புகுந்து உள்ளுர் உற்பத்திகளை மாய்த்துவிட்டன என்று சாடியுள்ளார். மேலும் இதற்கு உடன் பரிகாரம் தேடுவேன் என்றும் தம் வாக்காளருக்கு உறுதி கூறியுள்ளார்.

இதற்குச் சீனச் சனாதிபதி வர்த்தகப் போரில் ஒருவரும் வெற்றியுடன் வெளி வரமாட்டார் என இராஜதந்திரமாக டாவோஸ் சுவிஸ்லாந்தில் பதிலளித்துள்ளார். அவர் கருத்து சிலேடையாக அமைந்திருப்பினும் ஒவ்வொரு மனிதரால் தோற்றுவிக்கப்படும் பிரளயத்திலும் சிலர் தப்புவர், பலர் பாதிக்கப்படுவர் என்பது யாவரும் அறிந்த விடயம்.

சுங்க இறக்குமதித் தடை வரிகள் அமெரிக்க நுகர்வோரிற்கு நடுக்கம். ஆடை, அணிகலன்கள், கணனி, கைத்தொலைபேசி, தொலைக் காட்சிப் பெட்டி, சமையலறை  மற்றும் குளியல் அறைக் கருவிகள் என யாவற்றிலும் செலவு அதிகமாகத் தெரியும்.  வழக்கமாக அமெரிக்க நுகர்வோர் எதிர்பார்க்கப்படும் சில்லறை, பல்வகைத் தள்ளுபடிகள் கணப்படாதும் போகும்,

இது பெரிய செய்தியாக அமையினும் பொதுமக்கள் கைப் பாக்கெட்டில் பாரிய பாதிப்பை உண்மையில் உண்டு பண்ணுமா என்று பார்த்தால் அது அவ்வளவாகத் தெரியவில்லை. இதன் காரணம் சீன உற்பத்திக் கொள்வனவுகள் அமெரிக்க நுகர்வோர் செலவில் 3% சதவீதம் என்று 2010 ஆண்டு செலவுக் கண்காணிப்பு அறிக்கைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆயினும் ஏழை அமெரிக்கர் தாம் இதனால் அதிகம் பாதிக்கப்படுவர். காரணம் அவர்கள் அன்றாட வாழ்வில் உழைக்கும் வருமானத்தில் பெரும்பான்மையான செலவு வாங்கி விற்றுப் பரிவர்த்தனை அல்லது பரிமாறப்படக் கூடிய குறைந்த விலைப் பொருட்கள் ஆகியவற்றில் கழிகிறது.

அமெரிக்க ஏழைமக்கள் பரிவர்த்தனைக் கொள்வனவு (Transactional Purchases)

மக்கள் பொருள் மற்றும் பண்டங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் உலகம் பூராவும் ஒன்றாக இருப்பதில்லை. குறிப்பாக அமெரிக்க நுகர்வோரிடையே வசதியுள்ளவர்கள் மற்றும் வசதியற்றவர் ஆகியோரின் வாழ்க்கையில் வெவ்வேறு விதமானவை முக்கியத்துவம்  பெறுகின்றன.

உயர் வருமான மக்கள் சேமிப்பில்  பெரும்பாலான வருமானத்தையும் தரமான பொருட்களிலும் பண்டங்களிலும் சிறிய அளவு வருமானத்தையும்  செலவழிக்கின்றனர். இருப்பினும், அமெரிக்க ஏழைகள் பொருளாதாரச் சூழல் சற்று வித்தியாசமானது. பிரதானமாக நுகரும் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் அமெரிக்க ஏழை மக்கள் பெரும்பாலும் தரத்தைக் காட்டிலும் தள்ளுபடியே பெரிய விடயம் என்று கருதுகிறார்கள் என்று விளம்பர ஆய்வாளர் குறிப்பிடுகி்ன்றனர். இதனால் அவர்கள் குறைந்த விலையில் கூடிய பொருட்களைத் தேவையோ இல்லையோ திரட்டுவது, திருப்பி விற்பது போன்ற நிரந்தரமற்ற வர்த்தக நிர்ப்பந்தங்களுக்கு உட்படுகின்றனர் என்று வங்கியறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் இப்பேர்ப்பட்ட சுங்க, சில்லறை வியாபார வரிகள் பல அமெரிக்க இறக்குமதியாளர்கள் எதிர்நோக்கலாம். குறிப்பாக மினசோட்டா மாநிலத் தாபனங்களாகிய டார்கெட் மற்றும் பெஸ்ட் பை, இலத்திரனியல் உபகரணங்கள்  இலத்திரனியல் பொருட்கள் போன்றவற்றின் மொத்த இறக்குமதிகளிலும், உயர் ரக உபகரணங்கள் விற்பனை செய்வதிலும் சிக்கல்களை எதிர்நோக்கலாம்.

அதே சமயம்  இறக்குமதி செய்வோரோடு போட்டி போடும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு  இது ஆதரவாக அமையும். இதற்கு உதாரணமாக தொலைக்காட்சிப் பெட்டிகளை எடுத்தால் யப்பானிய சோனி, கொரிய எல்.ஜி.,  அமெரிக்க விசியோ  ஆகியவை சிறுகாலம் வர்த்தக வெற்றிதனை எதிர் நோக்கலாம்.

வர்த்தகப் போர் சில காலம் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் நடைபெறுவது சற்று அவஸ்தைகளைத் தரினும்,  இது சீன நாட்டுப் பொருளாதாரத்தை ஒட்டு மொத்தமாகக் குடை சாய வைக்கும் என்றெல்லாம் இல்லை. இதற்குக் காரணம் சீனாவில் ஏற்கனவே ஏற்றுமதி உற்பத்தியை நம்பி வளர்ந்த பொருளாதாரம்  படிப்படியாக இதை விட்டு நகர ஆரம்பித்துள்ளது,

மோர்கன் ஸ்டான்லி (Morgan Stanley) போன்ற நிறுவனங்கள், 45% சதவீத வரியை அமெரிக்கா கொண்டு வருவது,   இந்த நாடுகளுக்கு இடையேயான கொள்வனவுகளை 13 சதவீதம் வரை தான் குறைக்கும் என்கின்றனர். இது சீனாவின் வருடாந்த உற்பத்தியில் சொற்பமான ஓரிரு விழுக்காடு வித்தியாசங்களையே உண்டு பண்ணலாம்.

சீனாவின் பங்குச் சந்தையில் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் பாரிய சீனக் கம்பெனிகள் பெரிதாகக் காணப்படுவதில்லை. இதன் காரணம் வெளியே தனியார் தாபனங்கள் போன்று காணப்பட்டாலும் சீனக் கம்பெனிகளில்  பல சீன அரசு மூலதனம் உள்ளவையாகும், எனவே இந்தக் கம்பெனிகளின் வருமானம் இனம் பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் நேரடியாகப் பங்கு பெறுவதில்லை.

வர்த்தக வருமானத் தரவுகளை எடுத்துப் பார்த்தால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தல் ஒட்டு மொத்தச் சீன நாட்டு வருமானத்தில் 10 சதவீதம், ஆயினும் இதில் பங்கு பெரும் சீன வர்த்தக தாபனங்களோ சீன நாட்டு கம்பெனிகளில் 2 சதவீதம் ஆனவையே. இந்தக் கம்பெனிகளின் பிரதான தலையிடி வெளிநாட்டு மூலதனக்காரர்கள் – வர்த்தகப் போர் கண்டு வேறு சலனம் குறைந்த இடங்களில் தமது பணத்தை முதலிட முனைவதாகும்.

இந்த அமெரிக்க – சீன வர்த்தகப் பிரச்சனை  குறுகிய காலத்தில் பாரிய உற்பத்திகளுக்கும் , பண்டப் போக்குவரத்திற்கும் தடையாகலாம். இது மறைமுகமாக சீனாவை மட்டுமல்லாமல் கிழக்காசிய நாடுகள் ஆகிய தென் கொரியா, தாய்வான் போன்ற நாடுகளையும் வெகுவாகப் பாதிக்கலாம்.

ஆயினும் 10 சதவீத அமெரிக்க இறக்குமதிக் குறைவு நிலையை மற்ற வளர்முக நாடுகள் நிரப்பலாம். இது உலகச் சந்தையில் அமெரிக்கா குறையினும், அயல் நாடு மெக்ஸிகோ தமது ஏற்றுமதியை 3 சதவீதத்திற்கு மேல் உயர்த்திக் கொள்ளவும், கிழக்காசிய வர்த்தகச் சந்தையில் வியட்னாம் போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சிகளையும் துருதப்படுத்தலாம் என்கிறது ஜெர்மன் வங்கி,

எனவே மனிதரால் உருவாக்கப்படும் வர்த்தகப் போர் இறுதியில் உலகப் பொருளதாரத்தை வலுப்படுத்தாவிடினும், உலக நாடுகளில் சிலர் உயர மற்றவர் தாழ வழிவகை செய்யும் என நம்பலாம்.  அமெரிக்க நுகர்வோருக்கு அசெளகரியங்களை விளைவிக்கலாம்.  மினசோட்டா மாநிலத்தில் பெரும் வர்த்தகதாபனங்களில் தொழில் புரியும் எமது தமிழச் சகோதரர்களுக்கு இந்தப் பொருளாதார மாற்றங்கள் தொந்தரவு தராமல், அவர்கள் தொடர்ந்து வெற்றிகரமாகத் தொழில் புரிய எமது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்,

– தொகுப்பு ஊர்க் குருவி

உச்சாந்துணைகள்

  1. US International Trade Commission’s report 2010
  2. China Trade War Can Sink China Stocks By 29%: Morgan Stanley, Barron’s Asia, Jan 19,2017
  3. Deutsche Bank Capital Markets Outlook 2017: All Eyes on the USA
  4.  The High Cost, for the Poor, of Using a Bank, Lisa J. Servon, New Yorker, October 9, 2013
  5. Getting by: Earning, spending, saving, and borrowing among the poor, J. Michael Collins et. al, June 2014, Institute for Research On Poverty. University of Wisconsin-Madison

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad