சிதம்பரம் – பாகம் 2
(பாகம் 1)
அமலா கண் இமைப்பதைக் கூட மறந்து, நீலவேணி சொல்வதைக் கவனத்துடன் கேட்டுக் கொண்டாள். நீலவேணி சொல்லியதாவது:
“முப்பது வருடங்களுக்கு முன் தனது தந்தை ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார். அதைக் கண்ட மக்கள் சிலர் அவரைத் துரத்தினர். அவரும் சிதம்பரநாதர் சந்நிதியில் ஒளிந்து கொண்டார். மக்கள் தேடிக் களைத்துச் சென்ற பின்னர், இருட்டில் எங்கு செல்கிறோம் என்று கூடத் தெரியாமல் சிதம்பர ரகசியம் என்று போற்றப்படும் குகைக்குள் நுழைந்தார். அங்கு மின்னிக் கொண்டிருந்த ஒரு கயிற்றைப் பார்த்தார். இருட்டில் கருப்புப் பொருட்கள் கண்ணில் படாது, ஆனால் இந்தக் கயிறோ பளபளவென ஜொலித்து அவரை அழைத்தது. அதை எடுத்தவுடன் அவருக்கு மிகத் தைரியமும் பலமும் வருவதாக உணர்ந்தார். அவர் வெளியில் வரும்போது அவரைத் தடுக்க வந்த கோவில் பூசாரி மற்றும் உதவியாளனையும் தன் ஒரு கையால் தொட்டுக் கொன்றுவிட்டார்.
அந்தக் கயிற்றின் சக்தியை அன்று அவர் உணர்ந்தார். அன்றில் இருந்து பல கொலைகள் செய்தார். அவர் அன்று எத்தனை வயதாகி இருந்தாரோ இன்றும் அதே வயதில் தான் இருக்கிறார். ஒரு நாள் கூட வயதா கூடவில்லை. அவருக்கு மூன்று முறை கல்யாணம் ஆகியது. ஆனால், மூன்று மனைவிகளும் அவர் கை பட்டவுடன் இறந்து விட்டனர்.”
இவற்றை விவரித்து, வேறு யாரிடமும் இந்தத் தகவலைச் சொல்லவேண்டாம் என்றும் வேண்டினாள் நீலவேணி.
அமலாவுக்குத் திகில், ஆச்சர்யம், நம்பிக்கையின்மை எனப் பல உணர்வுகள் மாறிமாறி வந்து சென்றன. யாரிடமும் சொல்லவேண்டாம் என்று நீலவேணியின் கோரிக்கையை அமலா காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சத்யாவிடம் தான் கேட்ட அனைத்தையும் சொல்லவேண்டும் என்ற துடிப்பு இருந்தது. சத்யா எப்பொழுது வீட்டுக்கு வருவான் எனக் காத்திருந்தாள். அப்பொழுது அவள் தான் சத்யாவைக் காதலிப்பதாக நீலவேணியிடம் கூறியதும் நினைவுக்கு வந்தது. அந்த நினைவு அவளையும் அறியாமல் அவள் கன்னம் சிவக்கச் செய்தது.
கோவிலில் ஜமீன்தார் இன்னும் த்யானத்தில் இருந்தார். சத்யா அங்கேயே பொறுமையாகக் காத்திருந்தான். அவனுடைய பொறுமைக்குப் பயமும் காரணமாக இருந்தது. சிறிது நேரத்தில் கோவில் வாசல் அருகில் சலசலப்பு கேட்டது. சத்யா திரும்பிப் பார்த்தான். அங்கே காளைமாடு ஒரு வயதான மனிதனை இழுத்துக் கொண்டுவந்து ஜமீன்தார் காலருகே போட்டது. அந்த வயதான மனிதர் முகத்தில் பீதி தெரிந்தது. ஜமீன்தார் தன் கண்களைத் திறந்து ஒரு மந்திரத்தைச் சொல்லித் தன் கையை அந்த மனிதன் மேல் வைத்தார். அந்த வயதான மனிதர் அடுத்தக் கணமே இறந்தார்.
தான் மற்றவர் சொல்லக் காதில் கேட்டது தன் கண்முன்னே நடந்ததைப் பார்த்துப் பயத்தில் அதிர்ந்து போனான் சத்யா. ஜமீன்தார் மெல்ல எழுந்து காரில் ஏறினார். சத்யா காரில் ஜன்னல் ஒட்டி உட்கார்ந்து ஓட்டினான். எங்கே பிரேக் பிடிக்கையில் ஜமீன்தார் கை தன் மேலே பட்டுவிடுமோ என்ற பயம். அத்துடன் தான் கண்டதை அமலாவிடம் பகிரவேண்டும் என்ற துடிப்பும் இருந்தது. அமலா தானாக வந்து இன்று அவனிடம் பேசியதை நினைத்தாலே அவன் மனதில் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வு.
வீடு வந்து சேர்ந்தார்கள். வீட்டுக்கு வந்தவுடன் சத்யா கண்கள் அமலாவைத் தேடின. ஆனால் அமலா கார் வரும் சத்தம் கேட்டவுடனே ஓடி வந்து, அவனைச் சந்திக்க வாசல் அருகே காத்திருந்தாள். இருவரும் ஒரே நேரத்தில் பேசத் துவங்கினர். சிறிது புன்முறுவலுக்குப் பிறகு, அமலா “நீங்களே சொல்லுங்கள்” என்று கூறினாள். சத்யா கோவிலில் நடந்ததை ஒன்று விடாமல் சொல்லி முடித்தான். அமலா அதிர்ந்து வீட்டைவிட்டே ஓடிவிடுவாள் என நினைத்தான். ஆனால் அவளோ பலத்த சிந்தனையில் இருந்தாள். நீலவேணி சொன்ன நிகழ்வு உண்மை எனச் சத்யா சொன்னது நிரூபிப்பதாக உணர்ந்தாள்.
ஜமீன்தார் காலடிச் சத்தம் கேட்டதும் அவள் தன் அறைக்கு ஓடிவிட்டாள். ஜமீன்தார் சத்யாவைப் பார்த்தார், பிறகு சுற்றிப் பார்த்து, “யாரோடு பேசிக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அவனும் என்ன சொல்வதென்று தெரியாமல் “இல்ல, சும்மா பாட்டுப் பாடிக்கிட்டு இருந்தேன்” என்று சொல்லிச் சமாளித்தான்.
இரவு நேரம், மேகத்தினால் நிலவொளி வந்து போய்க் கொண்டிருந்தது. காலடிச் சத்தம் வைத்தே அமலா வருகிறாள் எனச் சத்யா உணர்ந்தான். இருந்தும் திரும்பிப் பார்க்காமல், வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். இடைவெளி விட்டு இரண்டு இருமல் சத்தம் கேட்டது. “என் பேரு சத்யா. பேரு சொல்லியே கூப்பிடலாமே” என்று பதில் அளித்தான்.
அவள் சற்றுத் தயங்கி அருகில் அமர்ந்தாள். “நீங்களும் என்ன அமலா’ன்னே கூப்பிடலாம். நான் இன்றைக்கு அவர் பொண்ணு கிட்டப் பேசினேன்.” என்று துவங்கி நீலவேணி சொன்ன அனைத்தையும் சொல்லி முடித்தாள். அதைக் கேட்டுவிட்டு “ஓ, அப்போது அந்தக் கயிற்றில் தான் சக்தி எல்லாம் இருக்கிறது. அதை அழித்து விட்டால், இந்த ஊரில் இனிமேல் கொலை நடக்காது.” என்று கூறினான். அவளும் சம்மதத்தில் தலை அசைத்தாள்.
சத்யாவிற்கு சட்டென்று நினைவுக்கு வந்தது, “ஆம், அவர் கோவிலில் த்யானத்தில் இருக்கையில் “நடராஜா” மற்றும் “அபஸ்மரா” என்று கூறிக் கொண்டிருந்தார்.” என்றான். அமலா சிறிது நேரம் யோசித்தபின், “நாளைக்கு என்னை நூலகம் அழைத்துச் செல்கிறீர்களா?” என்று கேட்டாள். “ஏன், இனிமேல் தான் குழந்தைகள் பாடம் படிக்க வேண்டுமா” என்று கிண்டலாகச் சத்யா கேட்டான்.
“அபஸ்மரா பற்றி எங்கோ படித்த ஞாபகம். அதைத்தான் தேடிப் படிக்கலாம் என்று தான் கேட்டேன். நீங்கள் நிறையப் படித்தவராமே, உங்களுக்கு அபஸ்மரா பற்றித் தெரியுமா?” என்று ஒரு பொய்க் கோபத்துடன் கேட்டாள். அவனும் “சும்மா தான் சொன்னேன். இதற்குப் போய்க் கோபித்துக் கொள்ளாதே. நாளை பத்து மணிக்குத் தயாராக இரு” என்று சொன்னான்.
சத்யா அக்கம் பக்கம் பார்த்து விட்டு, மெலிதான குரலில் கேட்டான் “ஆமாம், அவர் தொட்டவர் எல்லாம் இறந்து போனால், இந்த இரண்டு குழந்தைகள் எப்படி?”. அமலாவுக்கு இந்தக் கேள்வி சரி எனப்பட்டாலும் தன்னையும் மீறி வந்த நாணத்தினால் சடக்கென்று எழுந்து “நீங்க ரொம்ப மோசம். நாளைக்குப் பார்ப்போம்” என்று சொல்லி உள்ளே ஓடிவிட்டாள்.
மறுநாள் சத்யா சொன்னபடியே அமலாவைக் காரில் நூலகம் அழைத்துச் சென்றான். அங்கு வாசலில் ஒரு சிறிய கோவில் இருந்தது. அமலா கோவிலைக் காட்டி “நான் முதலில் கோவிலுக்குச் சென்று வருகிறேன், நீங்களும் வருகிறீர்களா?” என்று கேட்டாள். அவனும் தலையை ஆட்டி அவள் பின் தொடர்ந்தான்.
அது விக்னேஸ்வரர் ஆலயம். அங்கு உள்ள கோவில் பூசாரி சடாமுடியுடன் பக்திமானாகக் காணப்பட்டார். அவர் இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் ஏதோ யோசனையில் ஆழ்ந்தார். அமலா பூசாரியிடம் “அர்ச்சனை செய்ய வேண்டும்” என்று கேட்டாள். அவரும் பூஜைத் தட்டைக் கொண்டு வந்து, “கோத்திரம், நட்சத்திரம், பேரு சொல்லுங்கோ” என்று கேட்டார்.
“பாரத்வாஜ கோத்திரம், சிம்ம ராசி, பெயர் அமலா” என்றாள். சத்யாவும் இந்தக் குறிப்புக்களை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டான். பூசாரி உடனே “உங்கள் நட்சத்திரப் பெயர் அமலாவா?” என்று கேட்டார். அமலா, “இல்லை, என் நட்சத்திரப் பெயர் சாவித்திரி” என்று சொன்னாள். அவர் கையிலிருந்த அர்ச்சனைத் தட்டுக் கீழே விழுந்தது. அவர் அப்படியே சென்று மரத்தடியில் அமர்ந்தார்.
இருவரும் ஒன்றும் புரியாமல் அவர் அருகில் சென்று அவரை வினாவுடன் பார்த்தனர். அமலா மெதுவாக “எதாவது தவறாகச் சொல்லி விட்டேனா?” என்று கேட்டாள். பூசாரி “இல்லையம்மா, உனக்காகத் தான் இந்த நகரமே காத்திருக்கிறது. உன்னுடன் இருப்பவர் பெயர் சத்தியவான் தானே?” என்று கேட்டார்.
“ஆம், என்னை எல்லோரும் சத்யா என்று கூப்பிடுவார்கள். நாங்கள் இங்கு உள்ள நூலகம் வந்தோம். அப்படியே கோவிலில் பிரார்த்தனை செய்து விட்டுப் போகலாம் என்று வந்தோம்.” என்றான் சத்யா.
பூசாரி சற்று யோசித்துப் பிறகு கேட்டார் “நீங்கள் நூலகத்துக்கு எதற்கு வந்தீர்கள்?” எனக் கேட்டார். அமலா அக்கம்பக்கம் பார்த்து விட்டு, யாரும் தாம் பேசுவதைக் கேட்கவில்லை என உறுதி செய்துகொண்டு “அபஸ்மரா யார், ஜமீன்தார் கயிற்றின் இரகசியம் என்ன, எனக் கண்டறிய வந்தோம்” என இரகசியக் குரலில் சொன்னாள்.
பூசாரி “நீங்கள் சரியான இடத்திற்குத் தான் வந்திருக்கிறீர்கள். விடை நூலகம் உள்ளே இல்லை. நூலகத்திற்கு வெளியே உள்ள கோவிலில் பணி புரியும் என்னிடம் உள்ளது. இந்த இரகசியத்தை உங்களிடம் மட்டும் தான் என்னால் சொல்ல முடியும். இந்த ஊருக்கு வந்த சாபக்கேட்டைத் தீர்க்கவல்ல பிறவிகள் நீங்கள்.” என்றார்.
அமலாவிக்கு ஒரு பக்கம் சந்தோஷம். தான் தேடிய கேள்விக்கு விடை கிடைக்கப் போவதை எண்ணிச் சந்தோஷப்பட்டாள். ஆனால் இதற்குத் தீர்வு தன்னிடம் உள்ளதாகப் பூசாரி சொன்னதைக் கேட்டால், சற்றுப் பயமாக இருந்தது. “சத்யாவின் பெயரை எப்படி இவர் கண்டுபிடித்தார்? என் பெயர் சாவித்திரி, சத்யா பெயர் சத்தியவான் என்றால், நாங்கள் இருவரும் புராணக் கதைகளில் வரும் சத்தியவான் சாவித்திரி மாதிரியா?” இப்படி அவள் மனதில் ஆயிரம் எண்ணங்கள் வந்து சென்றது.
சத்யாவின் மனதிலும் பல கேள்விகள் எழும்பின. சற்றுச் சுதாரித்துக்கொண்டு சத்யா கேட்டான் “அபஸ்மரா யார் சாமி?” சத்யாவும், அமலாவும் பூசாரியின் பதிலுக்காக ஆவலாகக் காத்திருந்தனர்.
பூசாரி “பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்து என்னவென்றால்” என விளக்கத்தைக் கூறத் துவங்கினார்.
(தொடரும்)
-பிரபு