மினசோட்டா வசந்தகாலம்
மினசோட்டா மாநிலத்தில வசந்தகாலத்தின் ஆரம்பத்தை செவ்வோக் (Red Oak) மரமானது கடந்த வருட வளரும் பருவகாலத்திலிருந்து இவ்வளவு காலமும் தக்க வைத்திருந்த காய்ந்த மண்ணிற இலைகளை ஒவ்வொன்றாக வெண்பனித்தரையில் உதிர்ப்பது மூலம் அவதானிக்கலாம்.
அதே சமயம் பண்டைய எரிமலை உருக்கி உறைந்த செங்கரும் பாறைகளானவை வசந்த கால ஆரம்ப வெட்பதட்ப உறைபனி உருகலினால் மெதுவாகப் பாறைகளில் இருக்கும் பாசிகளும், லைக்கன்களும் விழித்து எழும்.
இதே சமயம் பீவர் (Beaver) உயிரினமானது உறைபனியின் உள்ளே தமது உலர்ந்த மரம், இலை, புற்களினால் ஆன குட்டிக் கூடாரங்களில் (Beaver Lodge) கடந்த பருவமத்தில் சேர்த்து வைத்த தாவரப் பாகங்களை சாப்பிட்டவாறு இருக்கும். இந்த இயற்கையின் பொறியியலாளர் போன்ற விலங்குகள் குளங்களும், ஏரிகளும் குளிரினால் உறைபனியாக மாறுமுன்னரே தமது கூடாரங்களிற்கு அடிவாரத்தில் பனிக்காலத்திற்கான உணவுகளாக இலைதளைகளைச் சேகரித்து வைக்கும்.
வசந்த கால ஆரம்பத்திலும் பீவர்கள் கூடாரத்தை விட்டு வெளியே வந்து மெதுவாக நடுத்தரப் பருமன் உள்ள மர அடிவாரங்களில் கொறிப்பதைக் காணலாம். மேலும் வசந்த காலத்தை வரவேற்குமாறு ஐரோப்பிய ஸ்டார்லிங் (European Starling) என்னும் பறவையானது தனது பனிக்காலக் கறுப்புப்போர்வைச் சிறகுகளிலிருந்து அழகிய மஞ்சள் தோகையாக மாசிமாதம் கூடுகட்டத் தயாராகும்.
– யோகி