சர்வதேச மகளிர் தினம்
மிகச் சமீபத்தில், சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடிவிட்டோம். கண்ணைக் கவரும் வாழ்த்தட்டைகளைப் பகிர்ந்து கொண்டாயிற்று; நமக்குத் தெரிந்த பெண்களுக்கும், ஊடகப் பொதுவெளிகளிலும் மனதை வருடும் வாசகங்களுடன் ‘மகளிர் தின வாழ்த்துகளை’ப் பதிவு செய்தாகிவிட்டது. நான் பெண்களை மதிப்பவன் என்று சட்டையில் அடையாள வில்லை குத்திக் கொண்டு அடுத்த வருட மார்ச் மாதம் எட்டாம் தேதி வரை மற்ற உலக வழக்குகளில் கவனம் செலுத்தலாம்.
‘நள்ளிரவில் ஒரு பெண் நகைகள் அணிந்து பாதுகாப்பாக சென்று வர முடிகிறது என்றால் அது தான் சுதந்திரம்’ என்று மகாத்மா காந்திஜி சொன்னது நனவாகியதா என்று நினைத்துப் பாருங்கள். நகைகள் ஏதுமின்றி, பட்டப் பகலில், மக்கள் நிரம்பி வழியும் இடங்களுக்குப் பாதுகாப்பாக சென்று வருவது கூட இன்றைய சூழ்நிலையில் கேள்விக் குறியாகவே உள்ளது.
பெண்களை எப்படி வசியப்படுத்துவது, அவர்களது உடை மாற்றும் அறைகளுக்குள் எப்படி எட்டிப் பார்ப்பது போன்ற வக்கிரக் கருத்துக்களைப் பட்டவர்த்தனமாகப் பேசிய ஒருவரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளுமளவுக்கு மனித மனம் பக்குவப்பட்டுவிட்டது.
ஒரு பெண் கருத்தடை செய்து கொள்ளலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கும் உரிமையை, இது போன்ற சின்னஞ்சிறிய பிரச்சனைகளில் தலையிட நேரமின்றி அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு மற்ற முக்கிய வேலைகளைக் கவனிக்கும் அளவுக்கு மக்களின் வேலைப்பளு அதிகரித்துவிட்டது.
பெண்களின் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் பெண்கள் அணியும் உடைகளும், அவர்கள் மேலைநாட்டுக் கலாச்சாரப்படி பார்ட்டிகளுக்குச் செல்வதும் தான் என்று அமைச்சர்கள் பேசுவதைக் கேட்டுவிட்டு ‘அவர் சொல்வதும் உண்மை தானே’ என்று முடிவெடுக்கும் நியாயவாதிகள் அதிகரித்துள்ளனர்.
33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிப் பெண்களைப் போற்றும் நாடுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன .
‘பெண் பொறியாளர்’, ‘மென் பொறியாளர்’ போன்ற அடைமொழிகள் நிறைந்த பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை (மட்டும்) மாதக்கணக்கில் அலசி ஆராய்ந்து சாதிப் பிரச்சனையாலோ, காதல் பிரச்சனையாலோ ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தோடு மூடி வைத்துவிட்டுக் கலாச்சாரம் பண்பாட்டைப் பாதுகாக்கும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர, சமூகம் தயாராகிவிட்டது.
‘அடிடா அவளை, உதைடா அவளை, வெட்றா அவளை’ என்று கதாநாயகியைக் கைபிடிக்க முடியாத வருத்தத்தினால் உணர்வுப்பூர்வமாகப் பாடிவிட்டு, பின்னர் அது சமூகத்தில் நிஜமாகவே நடக்கும்பொழுது ‘நிழலுக்கும் நிஜத்துக்கும்’ உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொள்ளவேண்டும் என்று பாடமெடுக்குமளவுக்கு, என்றென்றும் பெண்களைப் போற்றும் கலைத்துறை வளர்ந்துள்ளது.
ஏழு வயது பெண்ணைச் சீரழித்துக் கொன்ற ஒருவனை, அவன் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளான் என்று ஆராய்ந்தறிந்து, மறுவாழ்வளிக்கும் அளவுக்கு, கருணையுள்ளங்கள் பெருகியுள்ளன.
‘நம் வீட்டில் தங்கமோ, விலையுயர்ந்த பொருளோ இருந்தால் எவ்வாறு பாதுகாக்கிறோமோ அது போன்று வீட்டிலுள்ள பெண்பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டும்’ என்று பெண்களை விலையுயர்ந்த ‘பொருளாக்கி’ அழகு பார்க்கத் துவங்கிவிட்டோம்.
ஒரு பெண்ணின் உடல், குலப்பெருமை, குடிப்பெருமை, கற்பொழுக்கம் ஆகியவற்றைச் சுமக்கும் கட்டமைப்புக் கொண்டது; ஆண்களின் உடலுக்கு இந்தக் கொடுப்பினை இல்லை என்பதால் பெண்களைத் ‘தெய்வாம்சம்’ பொருந்தியவர்களாக உயர்த்தி வைத்து, போற்றும் தன்மை அதிகரித்துள்ளது.
வீடு, வாகனம், தங்க நகைகள் முதல் குப்பை கொட்டும் பைகள் வரை பெண்களைச் சுற்றியே விளம்பரப்படுத்தப்படுத்தப்படுவது அவர்கள் குடும்ப வாழ்வில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உணர்த்தவே. மற்றபடி அவர்கள் உடலழகை காசாக்கும் நோக்கம் இல்லை எனும் கார்ப்பரேட் சத்தியங்கள் நிரூபிக்கின்றன.
பெண்களுக்காக இன்று தயாரிக்கப்படும் ஆயிரக்கணக்கான ஒப்பனைப் பொருட்கள் அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்கத்தானே தவிர, அவர்களைக் காட்சிப் பொருளாக, பொம்மையாக மாற்ற அல்ல எனும் உயர் நோக்க, தன்னலமற்ற வியாபார நிறுவனங்கள் பல தோன்றியுள்ளன.
சிந்தித்துப் பார்த்தால் மார்கரெட் சாங்கரும், ரோசா பார்கசும், ராஜா ராம் மோகன் ராயும், காந்திஜியும், தில்லையாடி வள்ளியம்மையும், பாரதியாரும், பெரியாரும் இன்னும் எண்ணற்ற பல தலைவர்களும் கண்ட கனவுகள் ஓரளவுக்கு இன்றைய பெண்களின் வளர்ச்சிக்கு வித்திட்டவை என்பதை மறுக்க முடியாது. ஆனால் தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசன் சொல்வது போல் “இதெல்லாம் பெருமையா? கடமை” என்பதைச் சமூகம் இன்னமும் உணரவில்லை.
மேற்சொன்ன நனவுகளும் படித்த, அந்தஸ்துள்ள, நகர வாழ்க்கைப் பெண்களுக்கு மட்டும் தான் ஓரளவுக்குச் சாத்தியமானதே தவிர, சமுதாயத்தின் அடித்தட்டுப் பெண்களின் நிலை வருத்தத்துக்குரியது. வரதட்சணை, சீர் போன்ற சீர்கேடுகளில் எந்தவித மாற்றமும் காணாத பிரிவு அது. பெண்ணியம் பேசும் பலரும் இப்பிரிவினரைக் கருத்தில் கொள்வதில்லை.
பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை ஒடுக்காமல், ‘நகைகள் அணிந்து போகாதே; குறைந்த உடை அணியாதே’ எனும் அறிவுரை வழங்கப் பெரும் கூட்டம் காத்துள்ளது.
இன்னமும் சில சமூகங்களில், உடல் ரீதியாகப் பெண்கள் பலவீனப்படும் நாட்களில், தங்கள் குறைகளைச் சொல்லக் கடவுளைக் கூட வணங்கமுடியாத நிலை தான் உள்ளது.
எந்த நாட்களில் உறவுகொண்டால் பெண் குழந்தை பிறப்பைத் தவிர்க்கலாம் என்பது அறிவியலாக மாறி வருகிறது.
ஆண் பெண் விகிதாச்சார வேற்றுமைகள், உலகின் இயற்கைச் சமன்பாட்டு நியதியை நிலைகுலையச் செய்யுமளவுக்கு பயமுறுத்தி வருகிறது.
இவையெல்லாம் தீர்ந்தால் ‘அமெரிக்க வரலாற்றுப் பெண்கள் மாதமும்’, ‘சர்வதேச மகளிர்’ தினமும் தேவையில்லை.
– ரவிக்குமார்
Tags: International Women's Day, Women's day, சர்வதேச மகளிர் தினம், தினம், மகளிர்