\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பேர்ள் ஹார்பர்

ஒரு புறம் போருக்கான ஆயத்தங்கள் ரகசியமாக நடந்து கொண்டிருக்க, மறுபுறம் சமாதானத்திற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளும் நடைபெற்று வந்தன. ஜப்பானியப் பிரதமர் ஃபியூமரோ கோனோ , அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டுக்கு, பேச்சு வார்த்தைக்கான அழைப்பினை விடுத்தார். பேச்சு வார்த்தை கூட்ட நேரங்களை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்த அதிபர் ரூஸ்வெல்ட், பேச்சு வார்த்தைக்கான நிரல்களையும், முடிவுகளையும் ஓரளவுக்கு உறுதி செய்து கொண்ட பின்னர் நேரில் சந்திப்பது உசிதமாக இருக்கும் என்று வலியுறுத்தினார். ஏற்கனவே ராணுவப் பிடியிலிருந்த பிரதமர் கோனோ, ஒப்பந்த முடிவுகளை முன்கூட்டியே வெளியிட்டால் தான் கொல்லப்படலாம் அல்லது ஒப்பந்தங்கள் மீறப்படலாம் என்று பயந்தார். இந்தக் குழப்பங்களினால் கூட்டத் தேதி உறுதி செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. கோனோவின் உடன்பாட்டு முயற்சிகளை அறிந்த ஜப்பானிய ராணுவம் அவரின் அதிகாரத்தைப் பறித்துக்கொண்டது.

இதனிடையே சீனாவை விட்டு வெளியேறுமாறு ஜப்பானை நிர்பந்தித்து வந்தது அமெரிக்கா. போருக்கான ஏற்பாடுகள் தயாராகிவிட்ட நிலையில், நவம்பர் 20ம் தேதி அமெரிக்காவுக்கு ‘அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் சீனாவுக்குப் போர்த் தளவாடங்களை அளித்து உதவாமல் இருந்து, ஜப்பான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை விலக்கிக் கொண்டால் தாங்கள் சீனாவை விட்டு வெளியேறுவதாக’ அதிகார பூர்வச் செய்தியை அனுப்பி வைத்தது ஜப்பான். பதிலுக்கு அமெரிக்கா, ‘ஜப்பான் எந்த நிபந்தனையுமின்றி சீனாவை விட்டு வெளியேற வேண்டும்’ என்ற செய்தியினை நவம்பர் 27ஆம் தேதி அனுப்பி வைத்தது. ஆனால் இதைப் பெறுவதற்கு முந்தைய தினம் அதாவது நவம்பர் 26ம் தேதி ஆறு விமானந்தாங்கிப் போர்க் கப்பல்கள் ஜப்பானிலிருந்து அமெரிக்காவை நோக்கி கிளம்பிவிட்டிருந்தன.

‘யாமமோட்டோ’வின் திட்டப்படி இந்தக் கப்பல்கள் வழக்கமான கப்பல்கள் போகும் பாதையை விடுத்து குறுக்கும் நெடுக்குமாகப் பயணித்துத் தங்களது பாதையை வெளிப்படுத்தாது ஹவாய் தீவை நோக்கிச் சென்றன. கப்பல்களிடையே எந்த ரேடியோ தகவல்களும் இன்றி அமைதியாக ‘ஓவாஹு’ தீவுக்கு 230 மைல்களுக்கு அப்பால் நிலை கொண்டன. அவை மொத்தம் 408 போர் விமானங்களைச் சுமந்து வந்திருந்தன. ‘யாமமோட்டோ’விடமிருந்து பொறுப்புகளைப் பறித்துக்கொண்ட ‘மினோரு கெண்டோ’ மூன்று அலைகளாகத் தாக்குதலை நடத்த தீர்மானித்தார். முதல் அலையில் 230 விமானங்கள் கிளம்பி அமெரிக்க விமானங்களை வீழ்த்துவதாகவும் இரண்டாவது அலையில் மேலும் 150 விமானங்கள் அமெரிக்கப் படகுகளை வீழ்த்துவதாகவும் மூன்றாவது அலையில் எஞ்சிய விமானங்கள் அமெரிக்கப் போர்க் கப்பல்களைத் தகர்ப்பதாகவும் திட்டம். இதனிடையே அமெரிக்காவின் செய்திக்குப் பதிலளிக்கும் விதத்தில் அமெரிக்காவின் தீர்மானங்களில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று அமெரிக்க அரசாங்கத்திற்கு செய்தி அனுப்பப்பட்டது. அதே நேரம் போரைத் தவிர வேறு வழியில்லை எனவும் உடனடியாக வாஷிங்டனை விட்டு வெளியேறுமாறும் தனது தூதரகத்துக்கு 14 பக்கங்கள் கொண்ட தகவலை அனுப்பியது ஜப்பான். இந்தத் தகவலை இடைமறித்த அமெரிக்காவினால் அதனை மறை நீக்கம் செய்ய முடியவில்லை. சிறிது அவகாசம் தரலாம் என்று ‘யாமமோட்டோ’வின் வேண்டுகோளுக்கு  ‘மினோரு’ ஒப்புக் கொள்ளவில்லை. டிசம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் எனத் தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

அதிபர் ‘ரூஸ்வெல்ட்’ மட்டும் நிலை கொள்ளாமல் இருந்தார். ஜப்பானின் போக்கு அவருக்கு ஒரு வித அச்சத்தைக் கொடுத்தது. ஆனால் அப்போதிருந்த லெஃப்டினெண்ட் ஜெனரல், அட்மிரல் போன்றோர் ஜப்பான் தாக்குதல் நடத்த  வாய்ப்பேயில்லை என்று நம்பினர். ஜப்பானின் படை பலம் அமெரிக்காவைத் தாக்குமளவுக்குப் பலமில்லாதது என்று நினைத்தனர்.

டிசம்பர் 7 ஆம் தேதி, காலை ஆறு மணியாகியும் துறைமுகம் பரபரப்பில்லாமல் காணப்பட்டது. முந்தைய இரவு USS அரிசோனா கப்பலில் நடந்த கொண்டாட்டங்கள் நள்ளிரவைத் தாண்டியும் நீண்டதால் கடற்படை வீரர்கள் வழக்கத்தை விடவும் தாமதமாக எழும்பத் தொடங்கியிருந்தனர். அதிகாலை மூன்று மணியளவில் ‘ஒவாஹு’ துறைமுக வாயிலருகே நீர்மூழ்கி கப்பலொன்றின் சமிஞ்சைகள் காணப்பட்டதாகவும் பாதுகாப்பு கருதி அதனைச் சுட்டு வீழ்த்தியதாகவும் USS வார்டு கப்பல் ‘ஹானலூலு’ தீவிற்குத் தகவல் அனுப்பியிருந்தது.

இந்தத் தகவல் முறையாக அனைத்து கப்பல்களுக்கும் பகிரப்படவில்லை. ஒவாஹு தீவை விட்டு சில மைல்கள் தள்ளியிருந்த ராடார் பிரிவினர் வானில் இரண்டு விமானங்கள் ஒவாஹு தீவை நோக்கி வருவதாகத் தெரிவித்தனர். அவை அமெரிக்கக் கண்காணிப்புப் படையின் விமானங்களாகயிருக்கக்கூடும் என்ற கணிப்பில் பெரிதாகக் கவலைப்படவேண்டாம் என்று பதிலளித்துவிட்டது ஹானலூலு  ராணுவத் தலைமை.

பேர்ள் ஹார்பரை நெருங்கி வந்து வட்டமடித்த அந்த இரண்டு விமானிகளும் அமெரிக்கா கடற்படையினர் சற்றும் எதிர்ப்பார்ப்பின்றி இருந்ததைக் கண்டு வியந்தனர். உண்மையில் இவ்விரண்டு விமானிகளும் பெரியதொரு எதிர்ப்பிருக்கும் தாங்கள் சுட்டு வீழ்த்தப்படுவோம் என்ற அச்சத்துடனே வந்திருந்தனர். அவர்களது கணிப்பிற்கு முற்றிலும் மாறாகத் துறைமுகம் எவ்வித ஆர்ப்பாட்டமின்றி இருந்தது. அதற்கும் மேலாக, ஏழு கடற்படை கப்பல்களும் வரிசையாக ஒரே இடத்தில் அரை வட்ட வடிவில் நிருத்தப்படிருந்ததும் அவற்றில் பல போர் விமானங்கள் நின்றிருப்பதையும் கண்டனர். அமெரிக்காவைத் தாக்க இதைவிடச் சிறந்த தருணம் கிடைக்காது என்று எண்ணிய விமானி இயோசுகு பிஜியோடோ ‘டோரா டோரா’ (Tora – totsugeki  raigeki- lightening attack ) என்ற ரேடியோ குறியீட்டுச் செய்தியை இருநூற்று நாற்பது மைல்கள் தள்ளி நின்றிருந்த ஜப்பானிய படைக் கப்பல்களுக்குத் தெரிவித்தார். இச்செய்தியின் பொருள் உடனடித் தாக்குதல் நடத்தலாம் என்பதாகும்.

இதற்காகவே ஆயத்தமாகக் காத்திருந்த ஜப்பானிய தளபதி முதற்கட்ட அலையாக 180 விமானங்களை அனுப்பினார். டோர்பிடோ குண்டுகளையும், கடலுக்கடியில் பாய்ந்து தாக்கும் சக்திமிகுந்த குண்டுகளையும் தாங்கிய விமானங்கள் பேர்ள் ஹார்பரை நோக்கிப் பறக்க; தரை குண்டுகளைத் தாங்கிய சில விமானங்கள் அருகே குட்டித் தீவுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்களைத் தாக்கப் பறந்தன. காலை சுமார் எட்டு மணியைக் கடந்திருந்தபோது பேர்ள் ஹார்பரை அடைந்த விமானங்கள் குண்டு மழை பொழியத் துவங்கின. பயணிக் கப்பல், போர்கப்பல் என எந்தப் பாகுபாடுமின்றி வெறித்தனமாகத் தொடங்கியது தாக்குதல். USS மேற்கு வேர்ஜினியா என்று பெயரிடப்பட்டிருந்த போர்க்கப்பல் முதல் டோர்பிடோவினால் தாக்கப்பட்டு மூழ்கத் துவங்கியது. அடுத்தச் சில நொடிகளில் USS ஒக்கலாஹமா கப்பல் தாக்கப்பட்டுக் கவிழ்ந்தது. ஊடுருவும் ஏவுகணைகளால் தாக்கப்பட்ட போர்த் தடவாளங்களையும் வெடிகுண்டுகளையும் தாங்கியிருந்த USS அரிசோனா போர்க்கப்பல் பெருஞ்சத்தத்துடன் வெடிக்க அதிலிருந்த 1170 வீரர்கள் உயிரிழந்தனர்.

8.10 க்குள் இம்மூன்று கப்பல்களையும் வீழ்த்திய ஜப்பானிய விமானங்கள் மேலும் வெறிகொண்டு அடுத்த சில நிமிடங்களில் எஞ்சியிருந்த நான்கு போர்க்கப்பல்களையும் தாக்கின. இவற்றில் ஒரு பகுதி மட்டும் பாதிக்கப்பட்ட USS நெவேடா கப்பல் சுதாரித்துக் கொண்டு எதிர்ப்பு காட்ட முயன்றது. இந்தச் செய்தி ஜப்பானிய போர்த்தலைமையகத்துக்குத் தெரிவிக்கப்பட,  ஜப்பானிய விமானிகள் அங்கிருந்து அகலுமாறு பணிக்கப்பட்டனர். அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டாவது அலையாக மேலும் 170 விமானங்கள் வந்து சேர அசுர வெறியுடன் வேட்டையாடியது  ஜப்பானிய விமானப்படை. USS நெவேடா கப்பல் துறைமுகத்தின் வாயிலருகே வரும்பொழுது தாக்கி முழ்கடித்தால், மற்ற கப்பல்கள் துறைமுகத்தை விட்டு வெளியேற முடியாது என்ற எண்ணத்தில் அதற்காகப் பெரிதும் முயன்றது ஜப்பானிய விமானப்படை. ஆனால் ussநெவேடா மிகுந்த சேதமடைந்து, தட்டுத் தடுமாறி கரை ஒதுங்கியது. எனினும் மற்ற எந்தக் கப்பலையும் வெளியேற விடாமல் தாக்கி வீழ்த்தியது ஜப்பானிய விமானப் படை. அருகே நிறுத்தப்பட்டிருந்த விமானங்கள் அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டன. பலருக்கும் என்ன நடக்கிறது, எப்படி இந்தத் தாக்குதலை எதிர்ப்பது, சமாளிப்பது என்று யோசிக்கக் கூட அவகாசமின்றித் தாக்குதல் நடந்தது.

ஏறக்குறைய அதே நேரம் ஜப்பான் அனுப்பி வைத்த பதினான்காம் பகுதி செய்திக் குறியீட்டை மறை நீக்கம் செய்து ஜப்பான் போர் தொடங்கியிருப்பதை அறிந்தது அமெரிக்கப் பாதுகாப்புத் துறை. ஆனால் காலம் கடந்து விட்டிருந்தது.

இத்தனை பயங்கரங்களுக்கு இடையேயும் அமெரிக்கப் படையினர் சிலர் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது எதிர்ப்புக் காட்டினர். பல கப்பல்கள் எரிந்த நிலையிலும் அவற்றின் தலைமை அதிகாரிகளும் பைலட்டுகளும் தப்பிக்க முயலவில்லை; தங்கள் கப்பலை அதிகச் சேதமில்லாது பாதுகாக்க முயன்றனர். கப்பலில் நொறுங்கி விழுந்த ஜப்பானிய விமானங்களிலிருந்து வெடிகுண்டுகளையும் இயந்திரத் துப்பாக்கிகளையும் பிடுங்கிப் பதில் தாக்குதல் நடத்தினர் அமெரிக்க வீரர்கள்.

பத்து மணி சுமாருக்குத் தாக்குதல் ஓய்ந்தபோது 21 அமெரிக்கக் கப்பற்படை கப்பல்கள், 190 விமானங்கள் அழிக்கப்பட்டிருந்தன. 159 விமானங்கள் சேதமடைந்திருந்தன. 2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். 1500 மக்கள் காயமடைந்திருந்தனர். ஆங்காங்கே அமெரிக்கப் படை நடத்திய பதில் தாக்குதலால் 29 ஜப்பானிய விமானங்களும் சுமார் 100 வீரர்களும் வீழ்த்தப்பட்டனர். பேர்ள் ஹார்பரும் ஒவாஹு தீவும் மற்றும் சுற்றியிருந்த எண்ணற்ற ஹவாய்த் தீவுகளும் தரை மட்டமாயின. எஞ்சி உயிர் பிழைத்த குடும்பங்களும் மக்களும் வாழ்வாதாரமிழந்து சொல்லொண்ணாத் துயரத்தில் நிர்மூலமாகிப் போயினர். ஒட்டு மொத்த அமெரிக்காவின் பொருளாதாரம், அரசியல் கொள்கைகள் ஆட்டம் கண்டுவிட்டது.

இப்படி ஒரு பெரிய தாக்குதலை ஜப்பான் நடத்தக்கூடும் என்று ஏன் அமெரிக்கா அனுமானிக்கவில்லை? அல்லது ஏன் ஆயத்தமாகயில்லை? இவையெல்லாம் யாருடைய தவறுகள்? இது தொடர்பாக விசாரணை நடத்திய ‘ராபர்ட்ஸ் கமிஷன்’, ஹவாயில் பொறுப்பிலிருந்த ராணுவத் தளபதி வால்டர் ஷாட், கடற்படை தளபதி ஹஸ்பெண்ட் கிம்மெல் ஆகிய இருவரின் கவனக்குறைவே காரணம் என்றது. பின்னர் நடந்த ஆய்வுகள் இவர்கள் இருவருக்கும் போதுமான அளவுக்குத் தகவல் அளிக்காதது வாஷிங்டனில் இருந்த ராணுவத் தலைமையின் தவறு என்றன. ஜப்பான் போரைத் தொடங்கிவிட்டதாக, வாஷிங்டனில்இருந்த தனது தூதரகத்துக்கு அனுப்பிய தகவலைச் சரியான நேரத்தில் இடைமறித்து, குறியீட்டு மறையை நீக்கிப் படிக்க இயலாது போன பாதுகாப்புத் தகவல்  துறையின் தவறு எனப்பட்டது.

அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அதிபர் ‘ரூஸ்வெல்டு’க்கு ஜப்பானின் தாக்குதல் பற்றி முன்பே தெரிந்திருந்தாலும் போருக்குப் பயந்து ஐக்கிய ராஜ்ஜியத்துக்கு, குறிப்பாகப் பிரிட்டன், நெதர்லாந்து  போன்ற நாடுகளுக்கு உதவத் தயங்கிய அமெரிக்க மக்களுக்கும் தலைவர்களுக்கும் பாடம் புகட்டி வெகுண்டெழச் செய்யவே ஜப்பானின் தாக்குதலை அனுமதித்தாரா என்றொரு கேள்வியும் எழுந்தது. இந்தக் கேள்விகளுக்கு இன்று வரை விடை தெரியவில்லை. பல விசாரணைக் குழுக்கள், ஆய்வுகள் நடத்திய பின்னரும், எந்தவொரு குறிப்பிட்ட நபரையும், துறையையும் குற்றஞ்சாட்ட முடியாத நிலைதான் நீடிக்கிறது.

‘பேர்ள் ஹார்பர்’ தாக்குதலில் அதிக விலை கொடுத்து பாடம் கற்று, இழப்புகளைச் சந்தித்த அமெரிக்கா  உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அதைக் கூர்ந்து கவனிப்பதையும், எவ்வளவு சிறிய துப்பாக இருந்தாலும் அதன் மீது விரிவான ஆய்வுகள் நடத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது.

      

                                               – தொடர் முற்றிற்று.

-ரவிக்குமார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad