உரிமைகள் மசோதா-2
முதல் சட்டத் திருத்தம்
முதல் திருத்த வரைவிலக்கணத்தின் தமிழாக்கம்
அமெரிக்க அரசு, எந்தவொரு மத அமைப்பையும், அவற்றைக் கடைபிடிப்பதையும் ஏற்கவோ, மறுக்கவோ எந்தச் சட்டமும் இயற்றாது. இது பேச்சுச் சுதந்திரம், பதிப்பகச் சுதந்திரம், அமைதியாக இயங்கக் கூடும் இனக்குழுக்களின் சுதந்திரம் மற்றும் தங்களது குறைகளை அரசிடம் முறையிடும் சுதந்திரம் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.
மேலேயுள்ளவற்றில் பேச்சுச் சுதந்திரம் (freedom of speech) என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது கருத்துச் சுதந்திரம் என்ற பொருளிலேயே கையாளப்படுகிறது. சிந்தனை, சைகை, ஓவியம், எழுத்து, நடனம், இசை, நிகழ்த்து கலை என சொற்கள் உச்சரிக்கப்படாமல் கருத்தைத் தெரிவிக்கும் அனைத்து வடிவங்களுக்கும் இச்சுதந்திரம் பொருந்தும்.
பேச்சுச் சுதந்திரம்; மக்களாட்சி நடைபெறும் சுதந்திர நாட்டின் அடிப்படை அங்கமாகக் கருதப்படுகிறது. நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும், அரசின் நடவடிக்கைகளை விமரிசித்துக் கருத்து கூறவும் சமூகத்தினருக்கு விளக்கவும் கருத்துச் சுதந்திரம் அவசியமாகிறது. இவ்வித கருத்துக்கள் பலம் பெறுவதினால் தான் அரசியல் மாற்றம் உட்பட பல சமூக மாற்றங்கள் ஏற்படுகின்றன.
நவீன அறிவியலின் தந்தை என்றறியப்படும் கலீலியோ சூரியனைப் பற்றிச் சொன்ன போது அவரது கருத்துகள் இயற்கையை அவமதிப்பதாக முறையிடப்பட்டு சிறையில் தள்ளியதும்; சாக்ரடிஸின் புரட்சிக் கருத்துகள் இளைஞர்களைக் கெடுப்பதாக அவருக்கு தண்டனை அளித்ததும் அந்நாடுகளில் கருத்துச் சுதந்திரம் இல்லாததினால் ஏற்பட்ட கேடுகள்.
பேச்சு சுதந்திரத்தில் அரசு தலையிடாது என்று இயற்றப்பட்டிருந்தாலும் அதன் வரையறைகளை நிர்ணயிக்க நீதித்துறை திண்டாடி வருகிறது. நீதிபதி வெண்டல் ஹோம்ஸ்; “மக்கள் கூடியிருக்கும் அரங்கில் ‘தீ பிடித்து விட்டது ஓடுங்கள்’ என்று ஒருவர் பொய்யாக கூச்சலிட்டு கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்துவது, பேச்சுச் சுதந்திரமாகாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பல சந்தர்ப்பங்களில் இச்சுதந்திரம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பல வழக்குகள் தொடரப்பட்டு அரசாங்கம் இத்திருத்தத்தின் கிளைத் திருத்தங்களைச் சட்டமாக்கியுள்ளது. சில குழப்பங்களை இவ்வாறு சட்டமாக மாற்றவில்லை எனினும் நீதிமன்றங்களுக்கு அந்தந்தச் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்றவாறு செயல்படக் கூடிய அதிகாரத்தை வழங்கியுள்ளது.
மிக மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது கீழ்க்கண்ட ஏழு வகையான பேச்சுகள் அல்லது கருத்துகள் முதல் திருத்தத்தின் கீழ் வராது எனக் கருதப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை நீதிமன்றத்தில் வழக்காடப்பட்டுள்ளன. இன்று பிரச்சனையாக உருவெடுக்கும் கருத்துகள் இவ்வழக்குகளின் முன்னுதாரணங்களைப் பொறுத்து விதிமீறலா அல்லது சுதந்திரமா என்று நிர்ணயிக்கப்படுகிறது.
- வெறுக்கத்தக்கப் பேச்சுகள்
ஒரு தனிப்பட்ட நபரையோ அமைப்பையோ அவர்கள் சார்ந்திருக்கும் இனம், பால், நாடு, நிறம், மதம், உடற் குறைபாடுகள், பாலியல் வழக்கங்கள் போன்றவற்றைக் குறிப்பிட்டு அவர்கள் மனம் புண்படும்படி அல்லது அச்சப்படும்படி பேசுவது வெறுக்கத்தக்க பேச்சாகக் கருதப்படும். மேலே சொல்லப்பட்ட கருத்துச் சுதந்திர வகைகள் அனைத்துக்கும் இது பொருந்தும். எந்தக் கோட்பாடுகளைக் கொண்டு இவ்வகையான கருத்துகள் வெறுக்கத்தக்கவை அல்லது சுதந்திரம் என பிரிப்பதென்பது இன்னமும் இழுபறியாகவே உள்ளது.
எடுத்துக்காட்டாக; ஹோலோகாஸ்ட் சம்பவத்தில் மாண்டவர்களை நினைவு கூறும் வகையில் நடத்தப்படவிருந்த யூதர்களின் பேரணி ஒன்றில் ஹிட்லரின் நாசிஸ சின்னமாக கருதப்படும் ‘ஸ்வஸ்திகா’ தாங்கிய கொடிகளையும் உடைகளையும் அணிந்து கலந்து கொள்ள விழைவதாக ஒரு அமைப்பு வேண்டுகோள் விடுத்தது. இது யூதர்களின் பேரணியை அவமதிப்பதாகும் என்று யூதர்கள் சங்கத்தினர் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றம் ‘ஸ்வஸ்திகா’ சின்னம் ஹிட்லரை நினைவூட்டுகிறதே தவிர அவரது காரியங்களைச் சரியென்று கோருவதாக கருதப்படாது என்று கூறிவிட, இப்பேரணியில் சிலர் ‘ஸ்வஸ்திகா’ சின்னத்தோடு கலந்து கொண்டனர். அதேநேரம் போலீஸ்காரர் ஒருவரை ‘கொள்ளையன்’ (racketeer) என்று சொல்லியவரது கருத்துகள் சுதந்திரமாகாது என்று கருதப்பட்டு அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. பழங்காலங்களில் ஆபிரிக்க – அமெரிக்கர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட ‘நீக்ரோ’ என்ற சொல்லும் வெறுக்கத்தக்க சொல்லாக கருதப்படுகிறது.
- வன்முறையைத் தூண்டக் கூடிய பேச்சு / கருத்துப் பதிவுகள்
சமூக ஊடகங்களின் வீச்சுப் பெரிதான பின்பு வன்முறையைத் தூண்டுவதாகப் பல வழக்குகள் பதிவாயின. இத்தூண்டுதல்கள் வெளிப்படையாக தெரியாவிடினும், எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துமாயின் அவை முதல் சட்டத் திருத்தத்தின் கீழ் அபயம் பெறாது.
கருச்சிதைவு எதிர்ப்பு அமைப்பொன்று கருச்சிதைவு செய்வோரின் பெயர், தொலைபேசி, முகவரியை இணையதளத்தில் வெளியிட அவர்களுக்கு பல இன்னல்களும் கொலை மிரட்டல்களும் நேர்ந்தன. இவ்வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்ற போது இணையதளத்தில் இம்மருத்துவர்களின் முகவரியை வெளியிட்டது பலரைத் தூண்டிவிட்டதாக முடிவாகி அந்த அமைப்பினருக்குப் பல மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. வன்முறை மட்டுமின்றி உரிய வயதடையாத பதின்மருக்குப் பாலுணர்வைத் தூண்டும் செய்திகளையோ புகைப்படங்களையோ அனுப்புவதும் அதைப் பற்றி பேசுவதும் தண்டனைக்குட்பட்டது.
- தீவிரவாதத்தை ஆதரிக்கும் / வளர்க்கும் கருத்துகள்
தீவிரவாதம், கடத்தல் போன்றவற்றை ஆதரிக்கும் எந்தக் கருத்துக்கும் முதல் திருத்தம் பாதுகாப்பளிக்காது. USA Patriot Act (Uniting and Strengthening America by Providing Appropriate Tools Required to Intercept and Obstruct Terrorism Act) இது போன்ற கருத்துகளைப் பரப்புவோரின் தகவல் பரிமாற்றங்களைக் கண்காணிக்கவும் ஒட்டுக் கேட்கவும் அரசுக்கும் அரசுத் துறைகளுக்கும் உரிமையளிக்கப்பட்டுள்ளது.
- பணியிடம் சார்ந்த ரகசியங்கள், வாடிக்கையாளர் தகவல்கள்
பொதுப்பணியில் ஈடுபட்டுள்ளோர் தங்கள் அலுவலக விடயங்களைப் பேசுவதும் வெளிப்படுத்துவதும் சுதந்திரமாகாது. குறிப்பாக அரசு பாதுகாப்பு, மருத்துவம், காப்பீடு துறைகளில் உள்ளோர் தாங்கள் கையாளும் அலுவலக வியாபார உத்திகளையோ வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களையோ வெளிப்படுத்துவது முதல் திருத்தத்தின் கீழ் வராது. பெரும்பாலான அலுவலகங்கள் தங்களது தொழிற்பிரிவை ஒட்டி கொண்டிருக்கும் விதிமுறைகளும் சட்டங்களும் இவ்விடத்தில் முதன்மை பெறும்.
- பிறரை நிந்திக்கும் ஆதாரமற்ற, அவதூறு மற்றும் அவமதிப்புச் சொற்கள்/ கருத்துகள்
தனிப்பட்ட நபர், இயக்கம், அமைப்பு, பொது வாழ்வில் இருப்பவர் போன்றவர்களைப் பற்றி கருத்து தெரிவிக்கையில்; அவர்களது மனம் புண்படும் வகையில் தெரிந்தே பொய்யான புகார்களை எழுப்புவதும் ஊடகங்களில் எழுதுவதும் பேசுவதும் குற்றமாகும். இது பொதுவான விதிமுறையாக இருந்தாலும் கருத்துச் சொல்பவர், சொல்லப்படும் கருத்து, கருத்தால் பாதிக்கப்படுபவர் ஆகியோரைப் பொறுத்து இந்த விதிமுறைகள் மாறுபடும்.
- ஆபாசக் கருத்துகள்
ஆபாசமான வாசகங்கள், சொற்கள், சைகைகள் மற்றும் படங்களை வெளியிடுவதும் சொல்லுவதும் முதற் திருத்தத்தின் கீழ் சுதந்திரம் எனக் கருதப்படாது. மற்றவர்களைப் பற்றி மட்டுமல்லாது தன்னையே நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வெளியிடுவதும் பேசுவதும் சுதந்திரமாகாது. பொது வெளிகளில் நிர்வாணமாக திரிவதும் சுதந்திரமில்லை. சிறுவர்களுக்கு பாலுணர்வைத் தூண்டும் தகவல்களைத் தெரிவிப்பதும் ஈடுபடுத்துவதும் மிகப் பெரும் குற்றமாகும்.
- பள்ளி செய்திமடல்கள், செய்தித்தாள்கள்
பள்ளிகளில் மாணவர்களே நடத்தும் பத்திரிகையானாலும் பள்ளி வெளியிடும் செய்திமடலானாலும் அதில் வெளியிடப்படும் கருத்துகள் மாணவர்களைத் தூண்டும் வகையில் தவறான பாதையில் செலுத்தும் வகையில் அமைந்தால் அது கருத்துச் சுதந்திரமாகாது.
பள்ளி மாணவர்கள் நடத்திய செய்தித்தாள் ஒன்றில் பதின்ம வயதில் கருத்தரிப்பது பற்றியவொரு கட்டுரை வெளியாவதைத் தடுத்த பள்ளி முதல்வரை எதிர்த்து மாணவர்கள் தொடுத்த வழக்கின் முடிவில், பள்ளி முதல்வரின் வாதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதன் பின்பு பள்ளிகளில் வெளியாகும் செய்தித்தாள்கள், செய்திமடல்கள் போன்றவை பள்ளி முதல்வரின் பார்வைக்கு வைக்கப்படவேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது.
மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் பொதுவான விதிமுறைகள் மட்டுமே. கருத்து தெரிவிக்கப்பட்ட இடம், காலம், காரணம், சூழல் இவற்றைப் பொறுத்து இவ்விதிமுறைகள் இறுகுவதும், தளர்வதும் உண்டு.
– தொடரும் –
– ரவிக்குமார் –