\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சிதம்பரம் – பாகம் 3

Filed in இலக்கியம், கதை by on March 31, 2017 0 Comments

(பாகம் 2)

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அஞ்ஞானத்தின் வடிவாகத் திகழ்ந்த அரக்கன் அபஸ்மரா. அஞ்ஞானத்தினால் பல தீமைகள் செய்தான். அவனை அழிக்கச் சிவபெருமான் நடராஜராக அவதரித்தார். அவர் அபஸ்மராவை வீழ்த்தி அவன் மேல் நடனம் புரிந்தார். இந்த நடனத்தை ஆனந்ததாண்டவம் என்பார்கள். அறியாமை எனும் திரை அகன்றால் நம்முள் உள்ள ஆனந்தம் தானாகக் காணப்படும். அபஸ்மரா இறக்கும் நேரம் வந்துவிட்டது. எமதர்மராஜன் காளை மேல் அமர்ந்து அங்கே வந்தார். அபஸ்மரா ஆத்மாவைக்  கொண்டு செல்ல தனது பாசக்கயிற்றை வீசினான். எல்லா உயிரினங்களும் இயற்கையாகவோ அல்லது எப்படி இறந்தாலும், பாசக்கயிறில்லாமல் உயிர் பிரியாது.

அபஸ்மராவின்  ஆத்மாவைப்  பாசக்கயிற்றில் எடுக்கும் தருவாயில் ஆனந்ததாண்டவம் ஆடும் நடராஜர் பாதத்தில் பாசக்கயிற்றின் நுனி இழை மாட்டிக்கொண்டது. அது காலம் காலமாக இப்பூமியில் இரகசியமாகக் காக்கப்பட்டு வந்துள்ளது. எமதருமராஜனின் பாசக்கயிற்றிலுள்ள  உயிர் பறிக்கும் சக்தியும் அபஸ்மராவின் அரக்கக் குணமும் அந்த இழையிலுண்டு.

சிதம்பர இரகசியமாக இத்தனை நாள் அது பாதுகாக்கப்பட்டது. ஆனால் அது ஜமீன்தார் கையில் கிடைத்து இந்த ஊருக்கே ஆபத்தாக மாறியது. அதனால் தான் ஜமீன்தார் இப்படி அரக்கத்தனமாக இருக்கிறார். இந்தக் நிகழ்வைப் பூசாரி சொல்லி முடித்தார்.

“எமன் பாசக்கயிறா அது? இந்த ஊரை விட்டு ஓடுவதைத் தவிர வேறு வழி இல்லை” என்று அலறினான் சத்யா.

“அப்பொழுது இதற்கு என்னதான் தீர்வு?” எனக் குழப்பத்தில் இருந்தாள் அமலா.

“இதற்கு ஒரு தீர்வு உண்டு. அதற்குச் சரித்திரம் தெரியவேண்டும். அது..” எனப் பூசாரி சொல்லி முடிப்பதற்குள் சத்யாவின் செல்போன் மணி அடித்தது. அவன் அதைப் பார்த்தான்.

“அய்யோ, அரக்கன்..” என அலறினான்.

அமலா நிதானமாக “நீங்கள் பேசிதான் ஆகவேண்டும். இல்லையேல் அவருக்கு நம் மீது சந்தேகம் வந்துவிடும்.” என்று கூறினாள்.

அவனும் அதை ஆமோதித்து செல்ஃபோனை எடுத்து “ஹலோ, நான் சத்யா பேசுறேன்..” எனத் தழுதழுத்தக் குரலில் கூறினான்.

அந்தப் பக்கத்தில் ஜமீன்தார் பேசியதைக் கேட்ட பொழுது அவன் முகத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அவன் செல்ஃபோனை வைத்துவிட்டுத் தரையில் அமர்ந்தான். அமலாவும் என்ன நடந்தது? அவர் என்ன சொன்னார் என வினவினாள்.

அவன் தனது அதிர்ச்சியைக் கட்டுப்படுத்தி, சற்று அமைதியாக “ஜமீன்தாருக்கு நீ குழந்தைகளிடம் பேசியது தெரிந்துவிட்டது. உன்னைக் கையோடு அழைத்து வரச்சொன்னார்.”

அமலா உடனே “நான் ஊரை விட்டே ஓடிவிடுகிறேன். அடுத்த இரயில் எப்போது? நீங்களும் என்னுடன் வாருங்கள்” என அலறி சத்யாவின் கையைப் பிடித்து இழுத்தாள்.

“அது முடியாது. அரக்கன், தனது காளைகளை எல்லா இடத்திலும் வைத்திருக்கிறான். நீ தப்பிக்க முயன்றால், அவை உன்னைத் துரத்திவரும்.” எனச் சொன்னான்.

மேலும் “நீ ஜமீன்தாரைப் பார்த்து அவரிடம் உயிர்ப் பிச்சை கேட்பது தவிர வேறு வழியே இல்லை.” என முடித்தான். அவளுக்கும் அது சரி எனப் பட்டது. பயத்தில் அவன் கையைப் பிடித்தபடி அவன் மேல் சாய்ந்து அமர்ந்தாள்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பூசாரி, “இந்தக் குங்குமத்தை வாங்கிக்கொண்டு தைரியமாகச் செல்லுங்கள். நானும் கோவிலைப்  பூட்டிவிட்டு சிறிது நேரத்தில் அங்கு வந்துவிடுகிறேன். உங்களுக்கு ஒண்ணும் ஆகாது.” ஏன் கூறி, தட்டை நீட்டினார்.

அமலா சற்றும் அசையவில்லை, சத்யா தன் விரலால் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் இட்டான்.பிறகுத் தன் நெற்றியிலும் வைத்துக் கொண்டான். இருவரும் காரில் ஏறி ஜமீன்தார் வீட்டிற்குக் கிளம்பினர்.

காரில் அவள் மெல்லச் சொன்னாள், “அந்தக் குழந்தைகள் பாவம். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. எனக்காக நீ அவரிடம் சண்டை போடாதே. உன்னையும் கொன்றுவிடுவார்.”

“உன்னைப் பார்த்த நாளில் இருந்து உன்னுடன் பலவருடத் தொடர்பு இருப்பதாகவே எனக்கு ஒரு உணர்வு. அந்த உரிமையில் குங்குமத்தை வைத்தேன். பிடிக்கவில்லை என்றால், அழித்து விடு” என்றான்.

அமலா அதற்கு ஒன்றும் பதில் கூறவில்லை. குங்குமத்தை அழிக்கவும் இல்லை. வீடு வந்தது. அவர்கள் இருவரும் நடைப்பிணமாக உள்ளே சென்றனர்.

வீட்டினுள் ஜமீன்தார் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அறையின் மூலையில் நீலவேணியும் பரமேஸ்வரனும் அழுதுக்கொண்டு நின்றனர். ஜமீன்தார் முகத்தில் அனல் பறந்தது.

“நீ யாரு? என்னைப் பத்தி ஏன் விசாரிச்ச? யாருக்காக வேலை பாக்குற நீ? உண்மையைச் சொல்லு?” என அதட்டலாகக் கேட்டார்.

அமலா கண்ணில் தண்ணீருடன் என்ன சொல்வதென்று தெரியாமல் “நான் யாருக்கும் வேலை பார்க்கவில்லை. உங்களின் அதிசய சக்தியைப் பார்த்து அதைப் பற்றி மேலும் அறிய ஆவல் இருந்தது. அதனால் தான் விசாரிச்சேன். சத்தியமாக இது தான் உண்மை”

ஜமீன்தார் சத்யாவின் அருகில் வந்து, தன் கையை அவன் அருகில் கொண்டு சென்றார். “அப்பொழுது, என்னை அழிக்க உன் மனதில் எண்ணம் வரவில்லை? நான் கொடியவன் என்று நீ நினைக்கவில்லை? உண்மையைச் சொல்லு, அல்லது உன் காதலன் என் கையால் இறப்பான்.”

என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. உண்மையைச் சொன்னால் அவருக்குக் கோவம் அதிகம் ஆகும், என்னைக் கொன்று விடுவார். பொய் சொன்னால், சத்யாவை கொன்றுவிடுவார். தன் உயிர் போனாலும் பரவாயில்லை என முடிவு செய்து “உங்கள் செய்கைகளைக் கேட்ட பிறகு, நீங்கள் நல்லவர் இல்லை எனத் தோண்டிற்று.” எனக் கூறினாள்.

ஜமீன்தார் மிகச் சத்தமாகச் சிரித்து “முட்டாள், இப்பொழுது பார் எனது சக்தியை” எனக் கூறிக்கொண்டே தன் கையைச் சத்யாவின் மேல் வைத்தான். அமலா அலறினாள். தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். அந்த அறையில் நிசப்தம். வெளியில் இருசக்கர வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் பூசாரி உள்ளே நுழைந்தார்.

அமலா கலங்கிய கண்களுடன் சத்யாவைப் பார்த்தாள். சத்யா பயத்துடன் உயிரோடு நின்றுகொண்டிருந்தான். அவன் தலை மேல் ஜமீன்தார் கை. அது எப்படி என்று அந்த அறையில் எல்லோருக்கும் குழப்பம். ஜமீன்தார் தன் கையை மறுபடி மறுபடி அவன் தலை மேல் வைத்தார். ஒன்றும் ஆகவில்லை.

ஜமீன்தார் வேகமாக அமலாவின் தலையில் வைத்தார். அவளுக்கும் ஒன்றும் ஆகவில்லை. அமலா தன் கையால் அவர் கரத்தைத் தன் தலையில் இருந்து எடுத்துத் தள்ளிவிட்டாள்.

அந்த அறையில் அதிசயிக்காமல் இருந்தவர் பூசாரி மட்டுமே. அவர் அமலாவை ஒரு பக்தியுடன் பார்த்து விட்டு “சரித்திரம் தெரிந்து இருந்தால் நீங்கள் குழப்பம் அடைந்திருக்க மாட்டீர்கள். உங்கள் எல்லோருக்கும் ஜமீன்தார் கையில் கட்டியிருக்கும் பாசக்கயிற்றைப் பற்றித் தெரியும். ஆனால் அந்தப் பாசக்கயிறு இருமுறை தோற்றிருக்கிறது. முதல் தடவை மார்க்கண்டேயன். அவர் சிரஞ்சீவி ஆகிவிட்டார். இரண்டாம் முறை..”

“சத்தியவான் சாவித்திரி..” என அலறினாள் அமலா.

“ஆம், நீங்களும் சத்தியாவும் அவர்களின் அம்சங்கள். சத்யா இறைவன் முன்னால் உங்கள் நெற்றியில் குங்குமம் வைத்து அவர் கடமையைச் செய்தார். இனி உங்கள் இருவரின் சக்திக்கு முன்னால் ஜமீன்தார் சக்தி எடுபடாது.” எனப் பூசாரி விளக்கினார்.

அவர் சொன்னதைக் கேட்டவுடன் ஜமீன்தாருக்குக் கோவத்தில் அவர்களைக் கொலை செய்ய ஏதாவது ஆயுதம் கிடைக்குமா எனத் தேடி வெளியில் சென்றார். அவர் வெளியில் கால் வைத்தவுடன் காளை மாடு ஒன்று வேகமாக அவரைத் தாக்கி கொன்றது. ஜமீன்தார் உடல் இரு பாகமாகக் கிடந்தது.அந்தக்  காட்சியைக் கண்ட அனைவரும் அலறினர். பூசாரிக்கும் ஒன்றும் விளங்கவில்லை. பாசக்கயிறுக்குக் கட்டுப்படும் காளை எப்படி அவரைக் கொன்றது? என்ற கேள்வி அவர் மனதில் தோன்றியது.

அமலா மெதுவாகச் சொன்னாள் “அவர் என் தலையில் கை வைக்கும் பொழுது அந்தக் கையிறைக் அவர் கையில் இருந்து அகற்றிவிட்டேன்”. எல்லோருக்கும் அமலாவின் தைரியத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.

சுபம்.

-பிரபு

Tags: , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad