\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ராஜா – SPB – என்னதான் பிரச்சினை?

இந்தியச் சமூக ஊடகங்களின் இப்போதைய ஹாட் டாபிக் இளையராஜா மற்றும் SPB என்ற இரு மிகப் பெரிய ஆளுமைகள் பற்றிதான். பரபரப்புக்கு காரணம் பதிப்புரிமையும்(Copyright) அதைப் பற்றி எந்த விதமான அடிப்படை புரிதலும் அற்ற வீண் விவாதங்களும் என்று சொன்னாலும் சாலப் பொருந்தும். இந்தப் பதிவின் நோக்கம் இசை படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களின் அறிவுசார் சொத்து (Intellectual Property) குறித்த நடைமுறை என்ன என்பதை அலசுவதே! அதற்கு முன்பு ஒரு சிறிய பிளாஷ்பேக்…!

ரெடி! ஒன், டூ, த்ரீ ! “

மின்சாரம் கட்.

திரும்பவும் மின்சாரம் வந்த பின் பாடலின் முதல் டேக் எடுக்கப்பட்டது. எப்படி வந்துள்ளது என்று போட்டுப் பார்த்தால் பாடல் பதிவாகவில்லை. எப்படி இருக்கும் முதன் முறையாக இசை அமைக்கும் வாய்ப்பைப் பெற்ற கலைஞனுக்கு.

அந்தக் கலைஞன் நம் ராகதேவன் இளையராஜா. படம் அன்னக்கிளி. இந்தி பாடல் மோகம் கொண்டிருந்த நம் தமிழகத்தை ஒரே இரவில் தமிழ்ப் பாடல் பக்கம் திரும்ப வைத்த திறமையாளன். பட்டி தொட்டியெங்கும் பாடல் பட்டையைக் கிளப்ப அடுத்த இருபது ஆண்டுகள் சிம்மாசனம் போட்டு திரையுலகை ஆட்சி செய்த இன்னும் செய்கின்ற இசைஞானி நம் இளையராஜா.

70/80-களில் கொலம்பியா இசை கம்பெனி படத்தின் இசையை தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கி விநியோகம் செய்து கொண்டிருந்தது. இந்த மாதிரி இசை கம்பெனிகளின் அப்போதைய ஒப்பந்தங்கள் ஐந்து ஆண்டுகள் மட்டுமே. ஒவ்வொரு ஐந்து ஆண்டும் ஒப்பந்தத்தைப் பணம் கொடுத்து புதுப்பிக்க வேண்டும். ஆனால் முதலில் கொடுத்த பணத்தோடு பட்டை நாமம்தான். ராயல்ட்டி தொகையைக் கண்ணில் கூட காட்ட மாட்டார்கள்.

ஏன் ராயல்ட்டி கொடுக்க வேண்டும்? பதிப்புரிமை குறித்த இலக்கணம் கொஞ்சம் அறிந்து கொண்டால் இதைப் புரிந்து கொள்வது மிக எளிதாக இருக்கும். இசையுலகில் நிலவுகின்ற பதிப்புரிமைக்கு மூன்று வடிவங்கள் உள்ளன. அந்த வடிவங்களையும் அதன் உரிமையாளர்களையும் யாரென்று பார்ப்போம்.

  1. இசை (மெலடி, ஹார்மனி, ரிதம்) இசை அமைப்பாளர்
  2. பாடல் இலக்கியம் பாடலாசிரியர்
  3. பாடல் மற்றும் இசை பதிவு தயாரிப்பாளர்

இந்த மூன்றுக்கும் சொந்தக்காரர்கள் பின் வருவனவற்றைச்  செய்யலாம்:

  • பாடல் வெளியீடு
  • பொதுவெளி கச்சேரி மூலம் பாடலைக்  காட்சிப்படுத்தல்
  • மின்னணு  ஊடகங்கள் (அதாவது, வானொலி, தொலைக்காட்சி, அல்லது இணையம்) மூலமாகப் பாடலைக் காட்சிப்படுத்தல்
  • பாடல் மொழிபெயர்ப்பு

ஒரு தயாரிப்பாளர் இசை அமைப்பாளரையும் எழுத்தாளரையும் பணி அமர்த்தி படத்திற்கு இசையை வாங்கி இருந்தால் தயாரிப்பாளரே மேற்கண்ட மூன்று வடிவங்களுக்கும் உரிமையாளர். அதற்குண்டான அனைத்து ராயல்ட்டி பலன்கள் அவரையே சேரும்.

இளையராஜாவின் கதையிலோ அவர் ஒரு இண்டிபெண்டன்ட் காண்ட்ராக்டர். அதாவது தயாரிப்பாளர் இளையராஜாவிடம் பொறுப்பை ஒப்படைத்து படத்திற்கு இசையை பெற்று கொண்டிருக்கின்றார். இளையராஜாவே படத்திற்குப் பாடல் எழுதுபவரையும் பாடுபவரையும் தீர்மானித்து தன் இசைக் குழுவோடு சேர்ந்து இசை அமைத்திருக்கிறார். இந்தக் காரணத்தால் அவர்தான் பாடல் பதிவிற்கும் முதன்மையான உரிமையாளர்.

பாடலாசிரியர்களுக்குப் பங்கு இருக்கிறதா என்பது அவர்கள் இசை அமைப்பாளரிடமோ அல்லது தயாரிப்பாளரிடமோ போடும் ஒப்பந்தத்தைப் பொறுத்தது. ஆக, கூட்டி கழித்துப் பார்த்தால் இளையராஜாவின் 90 % படைப்புகளுக்கு உரிமையாளர் அவரும் தயாரிப்பாளரும் மட்டுமே.

படம் முடிந்தபின் இந்த உரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இசை நிறுவனங்களுக்கு விற்று விடுவார்கள். இந்த நிறுவனம் பாடல்களை வெளியீடு செய்தும் சி.டீ.க்கள் விற்றும் டி.வீ.சேனல்களுக்குப் பாட்டுகளை கொடுத்தும் காசு பார்ப்பார்கள். ஒரு குறிப்பிட்ட தொகையை எத்தனை முறை ஒலிபரப்பப்படுகின்றதோ அதற்குண்டான ராயல்டி தொகையை இசை அமைப்பாளரிடமோ அல்லது தயாரிப்பாளரிடமோ கொடுப்பார்கள். இருவரும் அவர்களுக்கு உள்ள ஒப்பந்தப்படி அதைப் பகிர்ந்து கொள்வார்கள்.

இது மட்டுமல்லாமல் இசைக்கு சொந்தக்காரர்கள் அல்லாதவர்கள் பணம் வைத்து ஒரு அரங்கத்திலோ ஸ்டேடியத்திலோ கச்சேரி செய்தார்கள் என்றால் யாரிடம் உரிமை இருக்கின்றதோ அவர்களுக்கு ராயல்டி தொகையைக் கொடுக்க வேண்டும் அல்லது அனுமதியையாவது பெற வேண்டும்.

இந்த ராயல்டியைதான் இசை நிறுவனங்கள் தயாரிப்பாளர்களுக்கும் இசை அமைப்பாளர்களுக்கும் ஒழுங்காக கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்கள். சுருங்கச் சொல்வதானால் தயாரிப்பாளரை நிலத்தின் சொந்தக்காரராகவும் இசை அமைப்பாளரை அதில் விவசாயம் செய்த குத்தகைதாரராகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். இசை நிறுவனம் என்பது விளைச்சலை விற்று கமிஷன் எடுத்து கொண்டு பணத்தை திரும்பக் கொடுக்கும் ஒரு ஏஜென்ட். ஆனால் பணத்தைக் கொடுக்காத காரணத்தால் வெகுண்டார் இளையராஜா.

இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றுதான் 1983 –ல் மூன்றாம் பிறை படத்திலிருந்தே பாடல் உரிமையைத் தன் நண்பரை வைத்து ஆரம்பித்த எக்கோ நிறுவனம் மூலமாக விநியோகம் செய்ய ஆரம்பித்தார். அந்த நண்பரே ராயல்ட்டி கொடுக்காமல் ஏமாற்றியது அதை விட சோகம்.

இப்படி அப்படி என்று பல இசை நிறுவனங்களை மாற்றி பார்த்த இளையராஜா கடைசியாக எல்லா நிறுவனங்களிடமிருந்தும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நீதி மன்றம் மூலம் உரிமைகளைத் தன் கைவசப் படுத்திக்கொண்டார். பிரதீப் என்பவரின் ஆலோசக நிறுவனம் மூலம் எல்லோரும் நேரடியாக டீல் செய்ய வேண்டும் என்று அறிவித்தார். வரம்பு மீறுபவர்களுக்கு பிரதீப்இன் கம்பெனி மூலமாக நோட்டீஸ் பறக்கும். நிரம்ப நாட்களுக்குப் பிறகு ராயல்ட்டி வர ஆரம்பித்தது. தயாரிப்பாளர்களுக்கு உண்டான பங்கும் கருத்தாகப் போய் சேர ஆரம்பித்தது. சமீபத்தில் கூட இளையராஜா தனக்கு வந்த ராயல்ட்டி தொகையில் 28 லட்ச ரூபாய் தயாரிப்பாளர் சங்கத்தில் சேர்க்க அவர்கள் ஒவ்வொரு தயாரிப்பாளர்களுக்கும் பணத்தை பிரித்து கொடுத்த செய்தி அனைவரும் அறிந்ததே!

நிற்க, பிரச்சனைக்கு வருவோம்!

பிரதீப் SPB 50 என்ற நிகழ்ச்சியை அமெரிக்காவில் ஏற்பாடு செய்த நிறுவனத்துக்கு தன் அமெரிக்க ஏஜென்சி மூலம் நோட்டீஸ் அனுப்ப அவர்கள் அந்த நோட்டீசை SPB –க்கு அனுப்ப SPB அதை ஃபேஸ்புக்கில் பதிவிட பற்றிக்கொண்டது பரபரப்பு! மென்மையான அணுகுமுறையால் அனைவருக்கும் சுளுவாக முடிந்து போயிருக்கின்ற மேட்டர்சற்றே ஊடலாகி விட்டது. இந்தப் பிரச்சனையில் இருவரது ரசிகர்களுக்குதான் டவுசர் கிழிந்தது.

பிரதீப் ராஜாவுக்கு தெரிந்து செய்தாரா அல்லது தெரியாமல் செய்தாரா என்பது ராஜாவே பேட்டி கொடுத்தால் தான் தெரியும்.

அதே போல பிரதீப் நோட்டீஸ் அனுப்பியது நிகழ்ச்சியை அமெரிக்காவில் ஏற்பாடு செய்த நிறுவனத்துக்கு. அந்த நிறுவனம் எப்படி அரங்கிற்கும் பாடகர்களுக்கும் இசை வாத்தியம் வாசிப்பவர்களுக்கு முன் கூட்டியே புக் செய்து பணம் செட்டில் செய்கின்றார்களோ அது போல இசையின் உரிமையாளர்களுக்கும் content –க்கு ராயல்ட்டி கொடுத்திருக்க வேண்டும். அமெரிக்காவில் இந்த மாதிரி Show செய்பவர்கள் கண்டிப்பாக அதை உணர்ந்தே இருப்பார்கள். ஏன் செய்யவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி.

SPB ஏன் இந்த விஷயத்தை நான்கு அறைக்குள் பேசி முடிப்பதை விட்டு விட்டு பொது வெளியில் சொல்ல நினைத்தார் என்பதும் புதிரே!

ஆக பிரச்சனையை எப்படி கையாள்வது என்பது தெரியாமல் எல்லோரும் குட்டையை குழப்பி உள்ளது மாத்திரம் திடமாக தெரிகின்றது.

தீமையிலும் ஒரு நன்மை. மக்களுக்கு பதிவுரிமை குறித்தும் ராயல்டி குறித்தும் ஒரு பெரிய புரிதல் உண்டாக ஆரம்பித்துள்ளது என்பதும் அதற்கு மூல காரணம் இளையராஜா செய்கின்ற யுத்தம் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி!

கலைஞன் என்றுமே நல்ல வியாபாரியாக இருந்ததாக சரித்திரம் இல்லை. அப்படி ஒரு வியாபாரியாக இருந்திருந்தால் 1000 படங்களுக்கு ராஜாவின் இசை சாத்தியம் இல்லை. SPB அவர்களும் 40000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்க முடியாது. இருவருக்கும் வித்தை எட்டிப் போயிருக்கும். சரஸ்வதி டாட்டா பைபை காட்டியிருப்பாள்!

ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்!

தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்!”

இதைத்தான் இவ்விருவரிடமும் ரசிகர்களாகிய நாம் எதிர்பார்க்கின்றோம்!

-மதன் குமார் ராஜேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad