\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கவண்


ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய எவரும், அவர் பாணியில் படமெடுக்கவில்லை. பாலாஜி சக்திவேல் மட்டும் ஒரு படம் எடுத்தார். ஆனால், அவருடன் ஒரேயொரு படத்தில் பணியாற்றிய கே.வி.ஆனந்த் எடுக்கும் படங்களில்  எல்லாம் ஷங்கர் படத்தின் தாக்கம் இருக்கும். அயன், கோ என்று ஹிட்டடித்தவர், சமீபக் காலமாக எங்கேயோ சொதப்பி விடுகிறார். இப்ப,கவண் எப்படி வந்திருக்கிறது என்று பார்க்கலாம்.

தற்கால ஊடக அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான போராட்டங்கள் கலந்த கதைக்களம். அதனால் நடப்பு நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.

விஜய் சேதுபதி ஜென்ஒன் என்னும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இணைந்து பணிபுரிகிறார். அது என்ன விதமான தொலைகாட்சி நிறுவனம் என்று புரியவில்லை. செய்திகள், அரசியல் கலந்துரையாடல், பாட்டுப் போட்டி, நடனப் போட்டி எல்லாம் நடத்துகிறார்கள். நிறுவனத்தின் முதலாளி எல்லாவற்றையும் கவனிக்கிறார். அதில் டி.ஆர்.பி.யை உயர்த்த பல கோல்மால்கள் செய்கிறார்கள். இந்த நிறுவனத்திற்குள் இருந்தே நல்லது செய்ய நினைக்கிறார் விஜய் சேதுபதி. அது முடியாமல் போக, சோர்ந்து கிடக்கும் டி.ராஜேந்தரின் டிவி நிறுவனத்தில் சேர்ந்து, அதை உயர்த்தி, வில்லனகளின் முகத்திரையைக் கிழிப்பது தான் மிச்சக்கதை. ஷங்கரின் பாதிப் படத்தை விக்ரமன் இயக்கியது போல் இருக்கிறதா?

படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் பல உள்ளன. ஆனால், ஸ்கோப் இருக்கிறது என்பதற்காக லாஜிக் பார்க்காமல் அடித்துவிட்டு இருக்கிறார்கள். இந்தியன் படத்தில் தாத்தா கமல் நீண்ட வசனம் பேசிக் கொலை செய்வதை எல்லாம் தொடர்ச்சியாகத் தொலைக்காட்சி ஒளிபரப்பி விடுவார்கள். அந்தக் காலத்தில் பிலிப்பைன்ஸில் இருந்து ஒளிபரப்புவார்கள். அதிலேயே நம்மை அதிகம் யோசிக்க விடாமல் காட்சியமைத்து இருப்பார்கள். ஆனால், இந்தக் காலத்தில் லைவ் ஒளிபரப்பை கண்ட்ரோல் செய்ய முடியாமல் போவது போல் சீன் வைத்திருப்பது ரொம்ப சினிமாத்தனம்.

விஜய் சேதுபதி அவர் பாணியில் அசால்ட்டாக நடித்திருக்கிறார். சில இடங்களில் தொகுப்பாளராக நடித்திருக்கும் காட்சியில் நடிப்பில் யதார்த்தம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படத்தில் அவரின் ரொமான்டிக் நடிப்பு ஜோர். டி.ஆர்.ராஜேந்தரை அவர் பாணியில் நடிக்கவிட்டிருக்க வேண்டும். மெச்சூர்டாக நடிக்கிறேன் என்று செயற்கைத்தனம் எக்கச்சக்கம். அதுவும் அவரை அடிக்கடி டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் அது ரொம்பவே தெரிகிறது. டி.ஆர்.பி. இல்லாத டிவி என்பதற்காக அவரின் அலுவலகத்தை ஏதோ பழைய பாழடைந்த லாட்ஜ் போல் காட்டியிருப்பது டூ மச். கேவி ஆனந்த் போன் செய்து டிவி சேனலிடம் அவார்ட் கேட்பது, டி.ஆர். ஆபிஸில் ஒரு வீராச்சாமி இருப்பது என்று அவர்களை அவர்களே நக்கல் அடித்துக் கொள்கிறார்கள்.

படத்தின் நாயகி மடோனா செபாஸ்டின், நாயகனின் நண்பனாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ராந்த், வில்லன்கள் ஆகாஷ்தீப், போஸ் வெங்கட் ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள். ஜெகன் கொஞ்சமாகக் காமெடி செய்திருக்கிறார். மிச்ச காமெடிக்கு டி.ராஜேந்தரை நம்பி ஏமாந்திருக்கிறார். விக்ராந்த் பேசும் போராட்ட அரசியல், மத நல்லிணக்க வசனங்கள் நன்றாக வந்துள்ளது.

எழுத்தாளர்கள் சுபா, எழுத்தாளர் – பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து,  இயக்குனர் கே.வி.ஆனந்த் மூவரும் இணைந்து

படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருகிறார்கள். கதை, வசனத்தில் ஜெயித்திருப்பவர்கள் கொஞ்சம் சோடை போனது இறுதி்ப் பகுதியின் திரைக்கதையில் தான்.

ஆண்டனியின் எடிட்டிங்கிற்கு ரொம்ப வேலை. இன்டர்வெல் ப்ளாக்கில் கலக்கியிருக்கிறார். இன்னமும் ஹிப் ஹாப் தமிழாவை இசையமைப்பாளராக ஒத்துக்கொள்ள மனம் வரவில்லை. முதலில் அவர் பெயரை ஒரு பெயராகவே ஒத்துக்கொள்ள முடியவில்லை!! பாடல்களும் ஒரு தினுசாக அமெச்சூர்த்தனமாக இருக்கின்றன. ஆனால், பின்னணி இசை குறை சொல்ல முடியாத அளவில் உள்ளது.

கே.வி.ஆனந்த் கதையின் மேல் நம்பிக்கை உள்ளவர். ரொம்ப இன்ட்ரெஸ்ட்டிங்கான கதைகளாகத் தேடி படமாக்குபவர். ஆனால், அயன், கோ ஆகிய படங்களில் கிடைத்த முழுமையான செய்நேர்த்தி அதன் பின் வந்த மாற்றான், அனேகனில் இல்லை. இதுவும் அப்படியே. இருந்தாலும், அந்தப் படங்களும் தயாரிப்பாளர் கையைக் கடித்திருக்காது. அதனால் தானே, அவரை வைத்துத் தொடர்ச்சியாக மூன்று படங்களை கல்பாத்தி ப்ரதர்ஸ் எடுத்திருக்கிறார்கள். இதுவும், ஒரு முறை பார்க்கும் வகையில் தான் வந்திருக்கிறது.

கவண் – ஆங்காங்கே கவர்கிறான். ஒரு முறை பார்க்கலாம்.

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad