பட்டர் பீன்ஸ் மசாலா
இந்தியா போன்ற நாடுகளில், வெளிநாட்டில் இருந்து வந்த காய்கறிகள், இங்கிலிஷ் காய்கறி என்ற பெயரில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும். முன்பு, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகள் கூட அப்படிப்பட்ட அந்தஸ்த்தில் தான் இருந்தன. அவ்வப்போது, ஏதேனும் ஒரு காய்கறி இப்படி அறிமுகமாகிக்கொண்டே இருக்கும். மஷ்ரூம், அமெரிக்க இனிப்புச் சோளம், சிறு சோளம் இவற்றை இவ்வகையில் சொல்லலாம். தற்சமயம், அவகடோ, ப்ரோக்கலி போன்றவை இந்த லிஸ்ட்டில் சேர்ந்துள்ளன. இப்படி வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில், வெளியூர்களில் இருந்து வரும் எதற்குமே, உள்ளூரில் தனி மதிப்பு இருக்கத்தான் செய்கிறது.
பட்டர் பீன்ஸும் இவ்வகை காய்கறி தான். தமிழ்நாட்டில் கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் பயிரிடப்படும் காய்கறி இது. பரவலாகக் கிடைப்பதில்லை. பெங்களூரில் இருந்த சமயம், தமிழ்நாட்டில் இருந்து வாங்கிச் செல்வோம்.
அமெரிக்காவிலும் பரவலாக கிடைப்பதில்லை. மினியாபொலிஸ் உழவர் சந்தையில் அவ்வப்போது கிடைக்கும். மற்றபடி, இங்கிருக்கும் ஆசிய மார்க்கெட்களிலும் சமயங்களில் கிடைக்கும். கிடைத்தால், விடாதீர்கள்!! 🙂
தேவையான பொருட்கள்
பட்டர் பீன்ஸ் – கால் கிலோ உரித்தது
நிலக்கடலை அல்லது முந்திரி – 2 ஸ்பூன்
தேங்காய் – 4 ஸ்பூன்
தக்காளி – 1 சிறியது
பட்டை – 1 துண்டு
எண்ணெய் அல்லது நெய் – 5 ஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி இலை – சிறிது
மிளகாய்த் தூள் – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
- குக்கரில் உரித்த பட்டர் பீன்ஸ், மஞ்சள், உப்பு போட்டு ஒரு விசில் வந்தவுடன் எடுக்கவும். பீன்ஸ் உடையாத பதத்தில் இருக்க வேண்டும்.
- தேங்காய், பட்டை, நிலக்கடலை ஆகியவற்றை நன்றாக மையாக அரைத்துக்கொள்ளவும். நிலக்கடலை ஒவ்வாமை இருந்தால், முந்திரி சேர்த்துக்கொள்ளலாம்.
- வாணலியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- அதில் அரைத்த விழுதைப் போட்டு, பீன்ஸை வேக வைத்த தண்ணீரைச் சிறிது ஊற்றிக் கொதிக்க விடவும்.
- அதில் சிறிதாக நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள் போட்டு, பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும்.
- பிறகு, அவித்த பீன்ஸைப் போட்டு, மேலும் வேக விடவும். பீன்ஸ் உடையாமல் இருப்பது அவசியம்.
- மசாலா சுண்ட வந்தப்பிறகு, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
சாம்பாருடன் சாதத்தில் நெய் ஊற்றி, இதைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால், தேவாமிர்தம்!!