\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

புத்தாண்டு பூத்தது

ப்ரல் மாதம் 14 ஆம் தேதி, 1990 ஆம் வருடம்….. தமிழ் வருடப் பிறப்பு என்பதினால்  பூஜைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது வீடு. .……

ழக்கம் போல அன்று காலையும் வீட்டின் முன் ஹாலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த கணேஷின் முகத்தில் காலைச் சூரியன் தன் கிரணங்களை வீசி, விடிந்துவிட்டது என்பதை நளினமாய் உணர்த்தினான். அடுத்த மாதம் வர இருக்கும் பொறியியற் கல்வியின் நான்காம் செமஸ்டர் தேர்வுகளுக்குத் தயார் செய்வதற்காக, இரவு நெடுநேரம் விழித்திருந்ததால் காலையில் எழுவதற்குத் தாமதமானது. முகத்தில் சுருக்கென சூரியனின் ஒளிக்கிரணங்கள் வந்து விழ, கண்களை இடுக்கிக் கொண்டு இரண்டு மூன்று முறை இப்படி அப்படிப் புரண்டு படுத்தான். எப்படி நகர்ந்தாலும் அந்த வெளிச்சம் கண்களைக் கூசுவது நிற்கவில்லை, தவிர அம்மா அடுப்பறையில் பண்டிகைச் சமையலுக்காகப் பாத்திரங்களைப் போட்டு உருட்டும் சத்தம் காதில் நாராசமாய் ஒலிக்கத் தொடங்கியிருந்தது. இனிமேல் தூங்க முடியாது என்பதை உணர்ந்த கணேஷ், சற்று வெறுப்புடன் எழுந்து, லுங்கியைச் சரி செய்து கட்டிக் கொண்டு, பாயைச் சுருட்டி மூலையில் சாய்த்து வைத்துவிட்டு, கிணத்தடி நோக்கி நடக்கலானான்.

அந்தக் கிராமத்து வீட்டில், கயிற்றில் வாளி கட்டி, கப்பி மூலமாகத் தண்ணீர் இறைத்து உபயோகப்படுத்துவதுதான் வழக்கம். அந்தக் கிணற்றுக்கருகில் இருந்த சுவரின் மாடத்தில் வைக்கப்பட்டிருந்த கோப்பையிலிருக்கும் டூத் ப்ரஷ் எடுத்து, அதில் பற்பசையை நிரப்பி, வாயில் வைத்துத் துலக்கிக் கொண்டு, லுங்கியை முக்காலாக ஏற்றி, மடித்துக் கட்டிக்கொண்டே மெயின் கேட்டை நோக்கி நடந்தான். வெளியில் வந்து, திண்ணையில் அமர்ந்து, பல் தேய்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் எண்ண ஓட்டங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. அவளிடம் நேற்று மாலை, தான் கொடுத்த அந்த லெட்டர்.. நினைத்த மாத்திரத்தில் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது !!

எப்பொழுதுமே இரவில் விழித்திருந்து சிரத்தையோடு படிக்கக் கூடியவன்தான். ஆனால் கடந்த சில மாதங்களாக, விழித்திருப்பது தொடர்ந்தாலும், படிப்பதில் கவனம் இல்லாமல் கண்கள் இரண்டையும் திறந்து வைத்துக் கொண்டே கனவு காண ஆரம்பித்திருந்தான் கணேஷ். பல விதமான கனவுகள். பல விதமான கவிதைகள். கண்களை மூடினால் கன்னியின் காட்சி, கண்கள் திறந்திருப்பினும் கனவுகளே காட்சிகளாகக் கண்டான். இவையனைத்திலும் சிறகடித்துப் பறக்கும் தேவதை, சமீபத்தில் வீடு மாற்றிக் கொண்டு பக்கத்து வீட்டிற்குக் குடி வந்திருந்த சொர்ணா…  நினைத்த மாத்திரத்தில், மன்மதனின் மாயக்கணை மலர் மாலையாய்த் தோளில் விழும். சுற்றி இசைக்குழு எதுவுமில்லாமலேயே, இளையராஜாவின் இன்னிசை காதில் ஒலிக்க ஆரம்பிக்கும். கட்டுப்படுத்த முடியாத காதல் மனதில் கரை புரண்டோட, ப்ரஷ்ஷை வாயில் வைத்துக் கொண்டே, நோட் புக் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு, கவிதை எழுதத் தொடங்கியிருந்தான் கணேஷ்.

காதல்….

காத தூரமும் இல்லாக்

காதலி இல்லத்தைக்

காலம் கடந்து நிற்கும்

காணாத் தாஜ் மஹாலாக்கும்……

திண்ணையில் அமர்ந்து, அடுத்த வீட்டு வாசற்படியைப் பார்த்து அவன் அன்று எழுதிய கவிதை. ஆனால் இதனை எழுதுகையில் ஒரு பெரிய பதற்றம் மனதில் தொற்றிக் கொண்டிருந்தது. நேற்று தான் செய்த செயல் அவளுக்குத் தெரிந்திருக்குமோ? பார்த்திருப்பாளோ? பார்த்திருந்தால் என்ன நினைத்திருப்பாள்? கோபம் கொண்டிருப்பாளா, மகிழ்ச்சி அடைந்திருப்பாளா? அப்பா அம்மாவிடம் சொல்லியிருப்பாளோ? நம் அப்பாவிடம் சொல்லி தோலை உரிக்கப் போகிறார்களோ? வீட்டை விட்டுத் துரத்தி விடுவார்களோ? அவமானப்படுத்துவார்களோ? அதுபோல் செய்திருக்கக் கூடாதோ? காதலுடன் சேர்ந்து, மிகவும் பதற்றமான நிலையில் அமர்ந்திருந்தான். இது ஏன்?

வள் அவனைக் காதலிக்கிறாளா என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது. ஆனால் தன் மனதில் அவளுக்கு ஒரு கோயில் கட்டியதில், இல்லையில்லை, ஒரு அழகான வீடு கட்டியதில் தொடங்கி அந்த வீட்டில் அவளை மகாராணியாக்கி, அவளுடன் வாழ்ந்து குழந்தைகள் பெற்று, குழந்தைகளை வளர்த்துப் பெரியவர்களாக்கி, அவர்கள் வளர்ந்து, பேரன் பேத்தியெடுத்து, தன் மரணப்படுக்கையில் தன்னருகில் கையைப் பிடித்துக் கொண்டு அவள் உட்கார்ந்திருக்கும் சீன் வரை அனைத்தையும் கற்பனையிலேயே வாழ்ந்து முடித்திருந்தான்.

கற்பனையில் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்த சுகமும், தைரியமும் நிஜத்தில் கொஞ்சமும் இல்லாததால். அவளிடம் தனது காதலை நேற்றுவரை அவன் வெளிப்படுத்தியதில்லை. தினமும் ஒருவரையொருவர் வீட்டில் சந்தித்துக் கொண்டு பல முறை பேசிக் கொண்டாலும், இரு வீட்டுப் பெரியவர்களும் இல்லாத இடங்களில் தனிமையில் சந்தித்துப் பேச வேண்டுமென்று பெருமளவு ஆசை அவனுக்கு. அப்படி ஒரு வேளை சந்தர்ப்பம் கிடைத்தால் தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படையாகச் சொல்லிவிடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக நினைத்தான். அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக இடைவிடாது முயற்சி செய்தான்.

சொர்ணா தினம் எத்தனை மணிக்குப் பள்ளிக்குச் செல்வாள் என்பது அவனுக்கு அத்துபடி. அதேபோல் பள்ளி முடிந்து திரும்பி வருவது, பாட்டு கிளாஸ் செல்வது, டென்னிஸ் பயிற்சி, தோழிகளுடன் ஊர் சுற்றுவது என்று அத்தனையும் எத்தனை மணிக்கு நடைபெறும் செயல்கள் என்று அவனறிவான். அவளைத் தனிமையில் சந்திக்க வேண்டும் என்ற முயற்சியில், இதுபோன்ற பல தருணங்களில் தற்செயலாக நிகழ்வதுபோல் அவளைத் தெருவீதியில், அல்லது ஏதோவொரு பொது இடத்தில் சந்திப்பது வழக்கமாகிவிட்டிருந்தது. அவளும் இது எப்படி நிகழ்கிறது என்று ஆச்சரியத்தில் மூழ்கத் துவங்கியிருந்தாள்.

பொதுவாக பள்ளிக்கு கைனடிக் ஹோண்டாவில் செல்பவள் சொர்ணா. கணேஷின் நிலை அந்தப் பழைய சைக்கிளைத் தாண்டியதில்லை. அந்தச் சைக்கிளிலிலும் சில முறை பெடலில் கால் வைக்கும் பகுதி உடைந்திருப்பதால், அதில் இருக்கும் ஓட்டையில் காலின் கட்டை விரலை நுழைத்துக் கொண்டு ஓட்டிச் செல்பவன். இதுபோன்ற வாழ்க்கைத் தரத்தின் வித்தியாசங்களை எல்லாம் பார்க்கத் தோன்றுவதில்லை என்பதினால்தான் “காதலுக்குக் கண் இல்லை” என்றனர் போலும். உடைந்திருக்கும் பெடலை அவள் பார்க்கக் கூடாது என்பதில் கவனமாயிருப்பான், ஆனாலும் அதனுள் கட்டை விரலை விட்டுக்கொண்டு ஓட்டுகையில், வேகமாக ஓட்டிச் சென்று கைனடிக் ஹோண்டாவின் வேகத்தைப் பிடிக்க இயலாதது ஒன்றே அவனுக்குப் பெரிய ஏக்கத்தைத் தந்தது. அதனாலேயே, அவள் புறப்படுவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னர் கிளம்பி, வீட்டிலிருந்து சற்றுத் தொலைவு சென்று அவள் பள்ளிக்குக் கடந்து செல்லவேண்டிய கண்மாய்க் கரையில் நின்று கொண்டிருப்பது அவனது வழக்கமாகிவிட்டிருந்தது. சில சமயங்களில் அவள் புறப்படுவதற்குத் தாமதமானால், கண்மாய்க் கரையில் காத்திருக்க வேண்டிய நேரம் அதிகமாகிவிடும். ”எதற்காக ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிறாய்?” என்று யாரேனும் கேட்டு விடுவார்களா என்ற பயம் வேறு அவனைத் துரத்தும்.

அதேபோன்று, நேற்றுக் காலையில் வழக்கம்போல் அவள் பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் அந்தக் கண்மாய்க் கரைக்கு வந்துவிட்டான். அவள் வரும் நேரம் கடந்து, பத்துப் பதினைந்து நிமிடங்கள் ஆகியும் அவள் வரவில்லை. நீண்ட நேரம் அங்கு நின்றிருந்ததால் பார்ப்பவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலாது என்ற காரணத்தால், கண்மாய்க் கரையின் தொடக்கத்தில் இருந்த “காமராஜ் படிப்பகத்தில்” அமர்ந்துகொண்டு அன்றைய தினமணி செய்தித் தாளைப் படிப்பதுபோல் பாவ்லா செய்து கொண்டிருந்தான் கணேஷ். பாவ்லா செய்யும் நேரத்திலும் அவளைப் பற்றின கவிதை:

தங்கத்தின் பெயரைத்

தன்பெயராய்க் கொண்டவளே

தங்கநகை வேண்டுமென்றே

தன்னலமாய் நினைத்ததில்லை!

தளிர்க்கரம் பற்றித்

தனிவாழ்வு வாழ்ந்திடும்

தருணத்திற்கு மட்டுமே

தயக்கமின்றிக் காத்திருப்பேன்

கிறுக்கி முடித்திருந்தான். இதனை அவளிடம் கொடுக்க வேண்டுமென்ற உந்துதல். இந்தக் கவிதையைப் படித்ததும் என்ன சொல்வாள், எப்படி அவள் அவளின் முகம் மாறும் என்ற கற்பனையிலேயே மூழ்கிப் போனான் கணேஷ். அவளுக்குப் புரிய வேண்டுமென்பதற்காகவே, தனது சொந்த ஸ்டைலை விட்டுவிட்டு, முடிந்தவரை எளிமையாக எழுத வேண்டுமென்ற முயற்சியில் எழுதப்பட்டது இது. இதைப் படித்ததும், கண்களில் கிறக்கம் தோன்றுமா? தன்னை இழப்பாளா? தமிழால் தனக்குப் பரிசளித்தவனுக்குத் தனது இதழால் பதில் பரிசளிப்பாளா? அப்படி ஒருவேளை செய்தால், நாம் ஏற்றுக் கொண்டு இன்பம் அனுபவிக்கலாமா அல்லது இதெல்லாம் திருமணத்திற்குப் பிறகுதான் என்று ஐடியலிஸம் பேசி அவளிடம் இன்னும் பெரிய இமேஜ் பில்ட் பண்ணிக் கொள்ளலாமா.. என்று பல சிந்தனைகளில் மூழ்கியிருந்தான் கணேஷ். “என்னடா, வாத்தியார் மவனே, பேப்பரப் படிக்காம பகக்கனவு கண்டுகிட்டிருக்க?” சைக்கிள் கடை சுப்பையா அண்ணனின் குரலில் நிகழ்காலத்திற்குத் திரும்பி வந்தான் கணேஷ். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் அங்குக் காத்திருந்திருக்கிறோம் என்று உணர்ந்தபொழுதுதான் புரிந்தது அன்று அவள் அந்தப் பக்கம் கைனடிக் ஹோண்டாவில் வரவில்லை என்று.

ஒருவேளை பள்ளி செல்லவில்லையோ? உடல்நிலை சரியில்லையோ? மனதின் குழப்பம் இன்னும் அதிகரித்தது. சைக்கிளை உருட்டிக் கொண்டு நடந்தே வீடு வரத் துவங்கியவனுக்கு, வழியெல்லாம் அவளைப்பற்றிய எண்ணமே. அவள் வலுக்கட்டாயமாக அவனுக்கு இரவலாகக் கொடுத்திருந்த பாரதிதாசனின் ”பெண்கள் விடுதலை” புத்தகம் அவன் சைக்கிள் கேரியரில் கிளிப் போடப்பட்டு அமர்ந்திருந்தது. அவனின் தமிழ் ஆர்வம் கண்டு, தன் அம்மா சமீபத்தில் வாங்கியிருந்த அந்தப் புத்தகத்தைச் சில நாட்களுக்கு முன்னர் இரவலாகக் கொடுத்திருந்தாள் சொர்ணா. அவனும் அந்தப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு அவளைப் பார்ப்பதற்காக அலைந்து கொண்டிருந்தான். அவளே திடீரென எதற்காக என் பின்னால் அலைகிறாய் என்று கேட்டால், இந்தப் புத்தகத்தைத் திருப்பித்தர எனப் பொய் சொல்லிவிடலாமென்ற திட்டத்தில் அந்தப் புத்தகத்துடன் அலைந்து கொண்டிருந்த அவனுக்கு, இப்பொழுது புதிதாக ஒரு யோசனை தோன்ற ஆரம்பித்தது. அப்பொழுதுதான் எழுதிய அந்தக் கவிதையை, அந்தப் புத்தகத்தின் உள்ளே வைத்து, தெரியாததுபோல் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்து விடலாம் என்பதே அந்த யோசனை. உடனே அது நல்ல யோசனை என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு கவிதை எழுதிய தாளைப் புத்தகத்தினுள்ளே வைத்து, சைக்கிளை உருட்டிக் கொண்டே வீடு திரும்பிக் கொண்டிருந்த அவன், தனது வீட்டு வாசற்படியில் நின்று கொண்டிருந்த சொர்ணாவைப் பார்த்ததும் மகிழ்ச்சியும், பயமும் ஒன்று சேர்ந்த மனநிலையுடன் நெருங்கி, ஏதும் தெரியாததுபோல் அந்தப் புத்தகத்தைக் கொடுத்து விட்டான்.

ந்தப் புத்தகத்தை அவள் பிரித்துப் பார்த்திருப்பாளா? பிரித்திருந்தாலும், அதனுள் இருந்த காகிதத்தைப் பார்த்திருப்பாளா? கவிதையைப் படித்திருப்பாளா? படித்திருந்தால் என்ன மனநிலையிலிருப்பாள் இதுவே வீட்டுத்திண்ணையில் அமர்ந்து பல் தேய்த்துக் கொண்டிருந்த கணேஷின் எண்ண ஓட்டம்.

”என்ன, இன்னும் எத்தனை நேரம் பல் தேய்க்கிறதா உத்தேசம்? பாத்து, பல்லே தேஞ்சு போயிரப் போகுது” இவனது வீட்டிற்கு நுழைய எத்தனிக்கும் சொர்ணா வாசற்திண்ணையில் உட்கார்ந்து பகற்கனவு கண்டுகொண்டிருந்த கணேஷிடம் சொல்லிக்கொண்டே நடக்கிறாள். வெள்ளை நிறத் தாவணி, பூக்கள் போட்ட பச்சை நிறப் பாவாடை மற்றும் அதற்குப் பொருந்துவதாய் பச்சை நிறத்தில் இருந்த ரவிக்கை. இன்னும் குளித்திருக்கக் கூட இல்லை, படுக்கையிலிருந்து எழுந்து சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்தக் காலைப் பொழுதினிலும் கணேஷை கிறங்கடிக்க வைக்கும் அவளின் தோற்றம். சாதாரணமாத்தானே பேசுகிறாள், நம் கவிதையைப் படித்திருப்பாளா? எப்படிக் கேட்பது… அவன் திணறல் தொடர்ந்து கொண்டிருந்தது.

கேட்டுக் கொண்டே, அவனைக் கடந்து சென்றுவிட்டாள். “அட, கவிதையைப் படித்திருக்கவில்லை போலும்” என்று அவன் நினைக்க, கடந்து நடந்து சென்ற அவள் மீண்டும் திரும்ப அவனருகில் நடந்து வந்தாள். ”கவிதை பிரமாதம், தளிர்க்கரம் நீட்ட நானும் ரெடி” அவசர அவசரமாய் ஒரே வரியில் சொல்லி விட்டு, திரும்பியும் பார்க்காமல் தன் வீடு நோக்கி ஓடிய சொர்ணாவை முன்புறம் பார்த்திருந்தானானால் அவள் முகம் வெட்கத்தால் சிவந்ததை முழுவதும் அனுபவத்திருப்பான். அவன் காதுகளை அவனாலேயே நம்ப முடியவில்லை.

அளவிடற்கரிய மகிழ்ச்சியினால் துள்ளிக் குதித்த அவனுக்கு, அந்தச் சித்திரை மாதம் ஒன்றாம் தேதிதான் பிரகாசமான புத்தாண்டாய் மலர்ந்தது !!!

வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad