\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஏப்ரல் 2017)

கடந்த இரு மாதங்களில் வெளிவந்த பாடல்களில் சில, இங்கு உங்கள் பார்வைக்கு.

எங்களது முந்தைய தொகுப்பைக் காண இங்கு செல்லவும்.

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஃபிப்ரவரி 2017)

டோரா – எங்க போற எங்க போற

“லேடி சூப்பர் ஸ்டார்“ என்று அழைக்கப்படும் (!!) நயன்தாரா இப்போதெல்லாம் தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கிவிட்டார். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். டோராவும் அப்படியே. படம் ரிலீஸ் அன்று நயன்தாராவுக்குகென்று, சென்னையில் ஒரு திரையரங்கில் பிரமாண்ட கட்டவுட் வைத்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். விவேக் – மெர்வின் என்னும் ஒரு புது ஜோடி இசையமைப்பாளர்களின் இசையில் வெளிவந்திருக்கும் இப்படத்தில் “எங்க போற எங்க போற” என்னும் பாடல் ரசிக்கும் வகையில் உள்ளது. பாடியிருப்பது – இசையமைப்பாளர்களில் ஒருவரான மெர்வின்.

என் இதயச் சத்தம் கேட்டு

தூங்கும் உன் அழகைப் பார்த்து

நானும் எழுந்துப் போக மறப்பேன்

அதிகாலையில்

யாக்கை – சொல்லித் தொலையெம்மா

எல்லாத் துறைகளிலும் தற்போது இருப்பது தான். ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வது. யாக்கை படத்தில் வரும் “சொல்லித் தொலையெம்மா” பாடலை எழுதியிருப்பவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் இப்போது ஒரு பிரபல பாடலாசிரியரும் கூட. (நயன்தாராவின் தற்போதைய காதலர் என்றால் அனைவருக்கும் விளங்கும்) பாடலைப் பாடியிருப்பவர், நடிகர் தனுஷ். இவர் இப்ப பிரபலப் பாடகரும், பாடலாசிரியரும், இயக்குனரும், இன்னும் என்னலாமோ செய்கிறார். இந்த மாதிரி சிம்புத்தனப் பாடலை எழுதுறது கூட ஈஸிதான். பாட்டு மாதிரி பாடுறது தான் கஷ்டம். யுவன் ரொம்ப நம்புன படம். ரசிகர்களிடம் தேறவில்லை.

வாரம் ஒண்ணுல, கனவுல வந்த

வாரம் ரெண்டுல, மனசுல வந்த

மூணாம் வாரமே, ரத்தத்திலயும் நீதான்

அட ஏம்மா ஏம்மா

மொட்ட சிவா கெட்ட சிவா – ஆடலுடன் பாடலைக் கேட்டு

இது நேயர் விருப்பம். லிஸ்ட்டில் குத்துப்பாடல் இருப்பதும் அவசியம் தானே!! ஆனால், எம்.எஸ்.வி.யின் பாடலை, இப்படி குத்துப்பாடல் லிஸ்ட்டில் சேர்ப்பதும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய? லாரன்ஸ் இதுவரை ரஜினி ரசிகர்களைக் கவர் செய்துக்கொண்டிருந்தார். இனி, அடுத்தக்கட்டமாக, எம்.ஜி.ஆருக்கு சென்றுவிட்டார். இந்த பாடலில், லாரன்ஸின் வழக்கமான நடனத்தைப் பார்க்க கொஞ்சம் சலிப்பாக இருந்தாலும், நிக்கி கல்ரானி அந்த சலிப்பைப் போக்கி பாடலைக் காப்பாற்றுகிறார். இந்த பாடலைப் பாடியிருப்பது, இசையமைத்திருப்பது, ஆங், அடிச்சதே காப்பி, இதுல இந்த கிரடிட் வேறயா!! போங்கப்பா!!

பவர் பாண்டி – வெண்பனி மலரே

தனுஷ் – அனிருத் கூட்டணி பிரிந்து, முதல்முறையாக தனுஷ் – ஷான் என்று ஒரு புது கூட்டணி உருவாகியுள்ளது. கட்டாயம் எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இளையராஜா பாடல்கள் போல் வேண்டும் என்று இயக்குனர் தனுஷ் கேட்டிருப்பார் போலும். அருமையான மெல்லிசை பாடல்களாகப் போட்டுக் கொடுத்திருக்கிறார் ஷான் ரோல்டன். அதிலும், அவர் குரல், அபாரம். இதே பாடலை ஸ்வேதா பாடியிருப்பதிலும், ஷானின் பின்னணி குரலில் வரும் ஹம்மிங் பின்னி எடுக்கிறது. (தனுஷ் பாடிய வெர்ஷன் வேறு ஒன்று இருக்கிறது. அதைக் கேட்டால், ஷானின் குரல் வளத்தை இன்னமும் ரசிப்போம்)

தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே

தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கிறதே

காற்று வெளியிடை – நல்லை  அல்லை

ஏ.ஆர். ரஹ்மான் தனது திரையுலகப் பயணத்தில் கால் நூற்றாண்டைக் கடந்துவிட்டார். இசையில் புயலடித்து கொண்டிருந்தவர், இப்போது தென்றலாக கேட்போரை வருடிக் கொண்டிருக்கிறார். அதற்கு “நல்லை அல்லை” நல்லதொரு உதாரணம். மீண்டும் வைரமுத்து சங்க இலக்கியத்தில் இருந்து சொற்களை எடுத்து, திரைப்படப் பாடலில் அறிமுகம் செய்திருக்கிறார். ரஹ்மான்+மணிரத்னம்+வைரமுத்து கூட்டணியின் இருபத்தைந்தாம் ஆண்டில் இவர்களிடம் இருந்து இன்னுமோர் இனிமையான பாடல். ஆனால், இப்படிப்பட்ட பாடல்களை எல்லாம், எப்படி மணிரத்னத்தால்  நறுக்கி படத்தில் தக்கினியூண்டு வைக்க முடிகிறதோ!!

ஒலிகளின் தேடல் என்பதெல்லாம் மெளனத்தில் முடிகிறதே

மெளனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகிறதே

போனஸ் பாட்டு – ஏனடி நீ என்ன இப்படி

“அதாகப்பட்டது மகா ஜனங்களே” அப்படின்னு ஒரு படம். தம்பி ராமைய்யாவின் பையன் தான் ஹீரோ. சில வருடங்களுக்கு முன்பே எடுத்து முடித்துவிட்டார்கள். இப்ப, அப்ப என்று வெளியிடத் தயாராக இருக்கிறார்கள். எப்ப வெளியிடுவார்கள் என்று தெரியவில்லை. அதுவரை காத்திருக்க வேண்டியதில்லை. இந்த பாடலைக் கேட்டு விடுங்கள். இமான், யுகபாரதி, கார்த்திக், ஸ்ரேயா கோஷல் என்று கூட்டாக கலக்கியிருக்கிறார்கள்.

சரவணகுமரன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad