தாய்மை
கையில் இருந்த காய் கறி கூடையை மறு கைக்கு மாற்றியபடி வாசல் கதவைத் திறந்தாள் அகல்யா. உள்ளே இருந்து முனகல் சத்தம் கேட்டதும், பதட்டத்துடன் வேகமாக வழி நடையைக் கடந்து வீட்டிற்குள் பிரெவேசித்தாள். காய்கறி கூடையைச் சமையல் அறையின் கதவின் முன் வைத்து விட்டு, வீட்டின் உள் அறையை நோக்கி வேகமாக எட்டெடுத்து வைத்தாள்.
“ஹாசினி பட்டு எழுந்திட்டியா .. அம்மா வந்துட்டேன்.”
அந்த அறையில் உள்ளே ஒரு பெரிய தொட்டி போல வைக்கப்பட்ட அந்தப் படுக்கையில் எழுந்து “உழு உழு உழு ” என ஏதோ குழறினாள் ஹாசினி.
“இப்போ தான் எழுந்தியா?” அவளுடன் பேசியபடியே, அவள் படுக்கை அறையில் இருந்த விரிப்பை எடுத்து அகற்ற தொடங்கினாள். ஈரமான அந்த விரிப்பை அகற்றி, புது விரிப்பை எடுத்து போட்டபடியே, ஹாசினியுடன் உரையாடினாள் அகல்யா.
“உழு ழு “என்ற பதிலும் வாயில் சொட்டிய எச்சிலும், அவளின் கண்களும் அகல்யாவிற்கு மட்டும் புரிந்தது.
வேகமாக அந்த அறையைச் சுத்தம் செய்து, ஜன்னல்களைத் திறந்து வைத்து, துவைக்க வேண்டிய துணிகளை எடுத்து துணி கூடையில் எடுத்துக்கொண்டு, கொல்லைப்புறம் சென்று , மீண்டும் திரும்பி வர, அறை முழுவதும் ஒரு விதமான துர்நாற்றம் நுகரவே, ஹாசினியின் பக்கம் பார்வை செலுத்திய பொழுது , மீண்டும் புதியதாய் மாற்றிய அந்த விரிப்பிலும் அசிங்கம் செய்திருந்தாள் ஹாசினி.
ஒரு சின்ன பெருமூச்சு மட்டுமே வந்தது அகல்யாவிடமிருந்து. ஆனால் எந்தச் சுணக்கமும் இல்லாமல், முகம் சுளிக்காமல், மீண்டும் அவளைச் சுத்தம் செய்து, படுக்கை விரிப்பை மாற்றினாள். பத்து வயது ஹாசினி தட்டி தட்டி சத்தப் படுத்திய படி “ழு ஜு லு…” என்று ஏதோ உழறியபடியே இருந்தாள். அவளுக்கு ஒரு தட்டில் மசித்த இட்லியையும், தயிரையும் சேர்த்து ஊட்டி விட்டாள் . பாதியைக் கீழே துப்பியபடியே , மீதியைச் சாப்பிட்டாள் .
அவளுக்குத் தண்ணீர் கொடுத்துவிட்டு, கையில் அவளுடையப் பழைய புத்தகம் ஒன்றைக் கொடுத்து விட்டு வேகமாகச் சமையல் அறைக்கு ஓடினாள். கடிகாரம் எட்டு என்று காட்டவே, வேகமாகப் பருப்பு வைத்து விட்டு , ரசத்துக்குப் புளி கரைத்தபடி இன்னொரு கையால் தொலை பேசியில் அம்மாவை அழைத்தாள்.
ஒரே வினாடியில் அந்தப் பக்கம் அழைப்பு இணைந்தது. எதிர் பக்கம் பழகிய குரல்
“அம்மா . நீ இன்னிக்கு எப்போ வரே ? என்று கேட்டது. “.
“ஹாய் சுஹாசினி பட்டு. குளிச்சிட்டுக் கிளம்பிட்டியா ? .. பாட்டி என்ன சமையல் பண்ணினாங்க ?”
இவள் கேள்விக்குப் பதில் சொல்லாமல் ஒரே பிடிவாதமாக , “நீ எப்போ ஸ்கூல் வர?”
“இன்னிக்கு எப்போ வரணும்?”
“என்னம்மா .. எத்தனை வாட்டி சொன்னேன் . இன்னிக்கு எங்களுக்கு ஸ்போர்ட்ஸ் டே.. மத்தியானம் 12- 2.. நீ வந்து பாருன்னு. உனக்கு சுத்தமா ஞாபகம் இல்லையா?. என்னோட கிளாஸ் பிரெண்ட்ஸ் அம்மா எல்லாம் வராங்க. எனக்கு மட்டும் நீ எப்பவும் வர மாட்டேங்கற.”
“இல்லை சுஹா. நான் இன்னைக்கு நிச்சயம் வரேன். நேரம் தானே கேட்டேன்.”
அகல்யா சமாளிக்க, சுஹாசினி சமாதானமானாள். அவளுடன் கொஞ்சம் நேரம்
கொஞ்சிப் பேசி விட்டு , “சரி பாட்டி கிட்ட குடு”
எதிர் முனையில் அகல்யா அம்மா வரவும் , ” அம்மா .. நான் சுஹாசினி ஸ்கூல் விஷயம் மறந்துட்டேன். நீ மத்தியானம் கொஞ்சம் ஹாசினியை வந்து பாத்துக்கறியா? நான் போயிட்டு வந்துடறேன்…”
“அம்மாடி அவளுக்கு ரெண்டு நாளா உடம்பு வேற சரியில்லைன்னு சொன்னியே .. என்கிட்டே நல்ல நாளிலையே இருக்க மாட்டா, இன்னிக்கு இருப்பாளா?”.
“வேற வழி இல்லம்மா. அப்புறம் சுஹா ரொம்ப வருத்தப்படுவா.. ஒரு ரெண்டு மணி நேரம் தானே, ப்ளீஸ் மா “
“சரி வரேன்.. ஆனால் நீ அவளுக்கு, சாப்பாடு ஊட்டிட்டு கிளம்பு, இல்ல என்கிட்டே கத்தி ஊரையே கூப்பிடுவா”
“சரி”
அம்மாவுடன் பேசிய பின், மணியைப் பார்த்துக் கொண்டே, ஒரு பக்கம் ஹாசினியைக் கவனித்துக் கொண்டே சமையல் வேலையை முடித்தாள். ஜுர மருந்து சாப்பிட்டதனால் ஹாசினி தூங்கி இருந்தாள்.
வேகமாக ஊற வைத்த துணிகளை துவைக்க ஆரம்பித்தாள்.
மனம் பின்னோக்கி ஓடியது.
*****
அகல்யா ரகு இருவரும் மனமொத்த தம்பதியர். ரகுவிற்கு ரயிலில் வேலை, அதனால் தொடர் பயணங்கள். வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் வீட்டிற்கே வருவான்.
திருமணம் ஆகி ரெண்டு வருடம் கழித்து பிறந்து இரண்டு பொக்கிஷங்கள் ஹாசினி, சுஹாசினி, இரட்டையர்கள் எல்லோருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. பிறந்த ஒரு சில வாரங்களிலேயே ஹாசினியின் கண்களில் ஏதோ வித்தியாசம் போல தெரியவே மருத்துவரிடம் சென்று பார்த்த பொழுது தெரிந்த விவரங்கள் பேரிடி.
ஹாசினிக்கு கடுமையான ஆட்டிசம் இருப்பதும், அவளுடைய வளர்ச்சியின் குறைபாடுகளும் தெரிய வந்தது. பேரிடி போல் இருந்தது. சுஹாசினி நார்மல் என்றும், ஹாசினிக்குத் தான் மனோ நிலைமை என்ற உண்மை உரைத்த பொழுது, அதை எப்படி அணுகுவது, அவர்களை எப்படி வளர்ப்பது என்று புரியவில்லை.
குழந்தைகளுக்கு விவரம் புரியும் வயது வரும் பொழுது, ஹாசினியைக் கவனித்துக்கொள்வது ரொம்பவும் கஷ்டமாகிப் போனது.
அவளுக்கு மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டி இருந்தது. அவளும் இவளைத் தவிர யாரிடமும் ஒட்டிக் கொள்ளாமல் போகவே, அகல்யாவிற்கு வேறு வழி இல்லாமல் ரெண்டு வயது முதல் சுஹாசினியை அம்மா வீட்டில் வளர்க்க அனுப்பி விட்டாள். எப்பொழுது ரகு வீட்டிற்கு வருகிறானோ, அப்பொழுது அவனுடைய கவனிப்பில் ஹாசினியை விட்டு விட்டு , சுஹாசினியை கவனிக்க சென்று வருவாள். சுஹாசினி சாதாரண குழந்தையாக வளர, இது சரியென்று தோன்றவே, இவர்கள் வீட்டில் இருந்து ஒரு 10 கிலோ மீட்டர் தள்ளி இருந்த அகல்யாவின் அம்மா வீட்டிலேயே சுஹாசினி வளர்ந்தாள்.
வயது ஆக ஆக, இப்பொழுதெல்லாம் சுஹாவின் அடமும், பிடிவாதமும் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது எனலாம். சுஹாசினியை வளர்க்கவில்லையை, அவளுடன் நேரம் செலவிட முடியவில்லையே , ஒரு குழந்தைக்காக இன்னொரு குழந்தையைக் கவனிக்கவில்லையே என்று குற்ற உணர்ச்சி எப்பொழுதும் அகல்யாவைத் தின்றது. அதனால் கொஞ்சம் செல்லமாகவே சுஹாசினி வளர்க்கப்பட்டாள்.
“இப்போ என்ன கவனிப்பியா மாட்டியா , எனக்கு ஒண்ணுமே செய்யல.”
“அக்கா மட்டும் தான் ஸ்பெஷல் .. நான் எல்லாம் அப்புறம் தான்.”
இப்படி சொற்களால் காயப்படுத்தும் வயதும் வந்து விட்டது.
ரெண்டு பக்கம் அடி வாங்கும் மத்தளம் போலானாள் அகல்யா. ரகு வீட்டிற்கு வரும் பொழுது எல்லாம் இவள் வருத்தம் கேட்டு சமாதானம் சொன்னாலும், மனதாலும் உடலாலும் நிறையவே சோர்ந்து போய் விட்டாள் அகல்யா .
இரண்டு சிறுமிகளுக்கும் இடையில் மாட்டிய தாய்மை திண்டாட்டம் மிக வலி. ஆனால் ஒரு தாயால் மட்டுமே சமாளிக்க கூடிய வலிமையோடும், பொறுமையோடும் சமாளித்தாள்.
******
துணிகளை உலர்த்தி கொடியில் காயப்போட்டு விட்டு வீட்டிற்குள் வந்து மணி பார்த்த பொழுது மணி 11. எஞ்சிய வேலைகளை முடித்து , சுஹாசினியின் ஸ்கூல் வேலைக்கு ஓடி விட்டு வந்து, மீண்டும் இரவுப் பணி தொடங்கிய பொழுது , ரகு வந்திருந்தான்.
இன்னும் எத்தனை நாளோ, இந்த ஓட்டம், ஹாசினியைப் பார்ப்பதா? சுஹாசினிக்குப் பதில் சொல்வதா என்று புரியாமல் திண்டாடறது கஷ்டமா இருக்கு ரகு.
சுஹாவும் மனசளவில என் கிட்ட ஓட்டலை.. என்னைக் குத்திக் காமிச்சு பேசிட்டே இருக்கா. அம்மாவிற்கும், வயசு ஆகுது” முதன் முதலாக வாய் விட்டு இவள் புலம்பி விட்டாள்.
ரகு பதில் எதுவும் சொல்லாமல் , அவள் வருத்தம் புரிந்தது போல அமைதி காத்தான்.
*****
.
அவளின் வருத்தம் புரிந்தபுரிந்ததாலோ என்னோவோ, அந்தப் பேச்சு முடிந்த ஒரு சில மாதங்களிலேயே ஹாசினி உடல் நலம் அதிகமாக சீர் குலைந்து , அகல்யாவின் கரங்களிலேயே கண் மூடினாள்.
சில வாரங்களில் சுஹாசினியை வீட்டிற்கு அழைத்து வந்தாள் அகல்யா.
சுஹாவும் மீண்டும் பள்ளிக்குச் செல்லும் தினசரி வழக்கத்திற்கு வந்தாள்.
“பரிட்சைக்கு படிச்சிட்டியா சுஹா ? நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா” என்று அகல்யா கேட்க,
“இதென்ன புதுசா? நீ எப்ப எனக்கு பரிட்சைக்கு எல்லாம் ஹெல்ப் பண்ணி இருக்க. உனக்கு அக்கா இல்லேன்னதும், இப்போ நான் தேவையா ?”. சுருக்கென்று துடுக்காக சுஹாசினி கேட்க அதற்கும் ஒரு சின்ன சுணக்கமோ, சுரணையோ இன்றி, அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
பின் குறிப்பு: ஒவ்வொரு வீட்டிலும் தாய்மை செய்யும் தியாகம் , எழுத்தில் விவரிக்க முடியாத உணர்வுகள். தன்னலம் கருதாமல் அன்பு செலுத்தும் அத்துணை தாய்மைக்கும் இந்தக் கதை ஒரு சிறிய சமர்ப்பணம்.