\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

எஸ்பிபி 50 – சிகாகோ இசைக் கச்சேரி

“பாடும் நிலா” என்று இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஐம்பது ஆண்டுத் திரையுலகப் பயணத்தைக் கவுரவிக்கும் விதமாக, எஸ்பிபி 50 என்ற பெயரில் உலகமெங்கும் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் அவருடைய புதல்வரான எஸ்.பி.பி.சரண்.

இந்தத் தொடர் இசை கச்சேரிகளின் ஒரு நிகழ்ச்சி, சிகாகோ நகர் ஓடியம் அரங்கில் ஏப்ரல் 15 ஆம் தேதியன்று நடந்தது. இந்த இசை நிகழ்ச்சிக்குத் திரையிசை ரசிகர்கள் குடும்பத்துடன் அக்கம் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் வந்திருந்தனர். தமிழ், தெலுங்கு ரசிகர்களால் அரங்கு நிறைந்து காணப்பட்டது.

இந்த இசை கச்சேரியில் எஸ்.எஸ்.பி.யுடன்

சித்ரா, சைலஜா, ஹரிஸ் ராகவேந்தர் எனப் பிற பிரபல பாடகர்களும் கலந்துக்கொண்டு எஸ்.பி.பி.யின் பாடல்களைப் பாடி, வந்திருந்த ரசிகர்களை இசை வெள்ளத்தில் மூழ்கடித்தனர். நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான எஸ்.பி.பி.சரணும் சில பாடல்களைப் பாடினார்.

இந்நிகழ்ச்சியை 8K மீடியா நிறுவனம், சிகாகோ தமிழ்ச் சங்கம் மற்றும் தெலுங்குச் சங்கம் ஆகியவற்றின் துணையுடன் நடத்தினர். நிகழ்ச்சிக்கு கடந்த அமெரிக்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பிரதிநிதியான ராஜா கிருஷ்ணமூர்த்தி வந்திருந்து எஸ்.பி.பி.யை வாழ்த்தி விட்டு சென்றார்.

நிகழ்ச்சியின் முதல் பாடலை ஹரிஸ் ராகவேந்தர் பாடினார். அது எஸ்.பி.பி. இசையமைத்த சிகரம் படத்தில் வந்த ‘அகரம் இப்ப சிகரம் ஆச்சு’ என்ற பாடல். அதற்குப் பிறகு, சாம்சரண் ஒரு தெலுங்கு பாடலையும், எஸ்.பி.பி. சரண் ‘தங்கத் தாமரை மகளே’ பாடலையும் பாடி கச்சேரியைத் தொடங்கி வைத்தனர். எஸ்.பி.பி.க்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த இந்தப் பாடலை மேடையிலும் அவரே பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அதற்குப் பிறகு, மேடையில் பலத்த கரகோஷத்திற்குப் பிறகு தோன்றிய எஸ்.பி.பி. சித்ராவுடனும், சைலஜாவுடன் இணைந்து பல பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி பாடல்கள் என இந்தியாவின் பன்முகச் சிறப்பைக் காட்டும் கச்சேரியாக இருந்தது. முதலிலேயே, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முத்துப் படத்தில் இருந்து “ஒருவன் ஒருவன் முதலாளி” பாடலைத் தனக்கே உரிய கம்பீரக் குரலில் பாடினார். ரசிகர்களின் கரகோஷத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

SPB Concert

இளையராஜா பாடல் இல்லாத கச்சேரியா என்று யாருக்குமே முதலில் தோன்றினாலும், எஸ்.பி.பி. போன்ற திரையுலகில் ஐம்பதாண்டைக் கடந்த ஒரு ஆளுமைக்கு அது எந்த வித சிரமத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. எம்.எஸ்.வி.யில் இருந்து தற்போது ஜி.வி.பி. வரை பாடிக் கொண்டிருப்பவருக்கு, ஒரு கச்சேரியில் ஒரு இசையமைப்பாளர் இசையமைத்த பாடல்களை மட்டும் பாடாமல் இருப்பது சிரமமேயில்லை. 80,90களில் வந்த நல்ல பாடல்களை எல்லாம் இளையராஜாவின் கணக்கிலேயே சேர்த்து வந்தவர்களுக்கு, “ஓ! இதுவெல்லாம் இளையராஜா இசையமைத்தது இல்லையா” என்று தெரிந்துக் கொள்ளும் நல்வாய்ப்பை மக்களுக்கு எஸ்.பி.பி அளித்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.

ஏ.ஆர்.ரஹ்மானின் வருகைக்குப் பிறகு தான், படங்களில் எஸ்.பி.பி.யின் பாடல் எண்ணிக்கை குறைந்தது. எஸ்.பி.பி. இல்லாத திரைப்பட ஆல்பமா என்ற நிலையில் இருந்து, ஏராளமான பாடகர்கள் அறிமுகமாகி, எல்.பி.பி. இல்லாத ஆல்பம்கள் சாதாரணமாக நிகழ்வாயின. ஆனால், இந்த இசை கச்சேரிகளில் இப்போது ஏராளமான ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களே பாடப்பட்டது. காப்பிரைட் விதிமுறைகளைக் கறாராகக் கடைப்பிடிக்கும் ரஹ்மானுடைய பாடல்கள் எப்படி இசையமைக்கப்பட்டது? ஒன்று, அதற்காக முறையாகக் கட்டணம் செலுத்தி அனுமதி வாங்கப்பட்டிருக்கும். அல்லது, தனிப்பட்ட முறையிலாவது பேசியிருப்பார்கள். இளையராஜா விஷயத்தில் ஏன் இரண்டுமே சாத்தியம் இல்லாமல் போனது என்று தெரியவில்லை. தனிப்பட்ட காரணங்களில்லாமல் வேறெதுமாக இருக்கப் போவதில்லை.

இது எஸ்.பி.பி.யை முன்னிலைப்படுத்தி நடக்கும் நிகழ்ச்சி என்பதால், அவர் பாடிய பாடல்களை மற்ற பாடகர்கள் பாடினார்கள். அவருடன் இணைந்து ஜானகி போன்ற பிற பாடகர்கள் பாடிய பாடல்களை, சித்ரா, சைலஜா போன்றோர் பாடினர். ரஜினி, சிரஞ்சிவி போன்றவர்களின் ஸ்டார் வேல்யூ பாடல்களுடன், எஸ்.பி.பி. மனதிற்கு நெருக்கமான பாடல்கள் சேர்ந்து, ஒன்றன்பின் ஒன்றாகப் பாடப்பட்டது. ரஜினி பாடல்களைப் பாடிய போது, அவரைப் போலவே ஸ்டைல் செய்து காட்டி மேலும் கைத்தட்டல் பெற்றார்.

நிகழ்ச்சியின் நடுவே அவ்வப்போது, அங்கிருந்த திரையில் இந்தக் கச்சேரிக்காக, தெலுங்கு நடிகர் கிருஷ்ணா, இயக்குனர் ராம் கோபால் வர்மா, கமலஹாசன் போன்ற பிரபலங்கள் கூறிய வாழ்த்துகள் ஒளிப்பரப்பப்பட்டன.

சங்கரா (சங்கராபரணம்), சிப்பி இருக்குது முத்தும் இருக்குது (வறுமையின் நிறம் சிகப்பு), கொண்டையில் தாழம்பூ (அண்ணாமலை), அஞ்சலி அஞ்சலி (டூயட்) போன்ற பாடல்களுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. சும்மா பாடிவிட்டுப் போவோம் என்றில்லாமல் பாடல்களைப் பற்றி, பாடலாசிரியர் பற்றி, இசையமைப்பாளர் பற்றியும் பேசினார். எஸ்.எஸ்.பி.யிடம் அனைவருக்கும் பிடிக்கும் குணமே, அவரின் கடிந்திராத மென் பேச்சே. இந்த மேடையிலும் அது தொடர்ந்தது. இது போன்ற குணங்களை ஏன் பெரிதாகச் சொல்ல வேண்டியிருக்கிறதென்றால், அவரைச் சார்ந்தவர்களுக்கே அக்குணம் இருப்பதில்லை. அதையும் இந்த மேடையில் காண முடிந்தது.

இந்த நிகழ்ச்சி நடைபெற்ற ஓடியம் அரங்கம், இது போன்ற இசைக்கச்சேரி நடத்த சிறந்த இடம் என்று சொல்ல முடியாது. முதலில் பாடிய ஹரிஸ், உடனே அரங்கில் எழும்பும் எதிரொலியைக் கவனித்துக் குறிப்பிட்டார். விளையாட்டுப் போட்டிகளும், கண்காட்சிகளும் நடத்தும் இடத்தில் இசைக்கச்சேரிகளுக்கான நேர்த்தியை எதிர்பார்க்க முடியாது. அதே சமயம், பள்ளி அரங்கங்களில், இவ்வளவு கூட்டத்தை அடைக்கவும் முடியாது. சிகாகோவில் இருக்கும் இசைக்கச்சேரிக்களுக்கான பிரத்யேக அரங்கங்களில் இது போன்ற கட்டணத்தில் கச்சேரி நடத்த முடியாது என்று நினைக்கிறேன்.

இது தவிர, இருக்கை அமைப்புகளும் பிரமாதமாக இருக்கவில்லை. சாதாரண வகை இருக்கை என்பதைக் குறையாகச் சொல்லவில்லை. அதை எங்கு வேண்டுமானாலும் போடலாம் என்பதற்காக, ஒரு கட்டுப்பாடே இல்லாமல் கிடைத்த இடங்களில் எல்லாம் போட்டு நிரம்பி விட்டார்கள்.

மற்றபடி, இந்தியத் திரையுலகச் சரித்திரத்தில் மறுக்கவியலா ஒரு இடத்தைக் கொண்டிருக்கும் மக்களுக்கான இசைக் கலைஞனை, மக்களிடம் நேரடியாகத் தொடர்ந்து கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும், அமைப்புகளுக்கும் நன்றிகள். நாம் பல ஆண்டுக்காலமாக ரசித்துக் கொண்டிருக்கும் பாடல்களை, மீண்டும் நம் கண் முன்னே இசைத்து, பாடி காட்டிய எஸ்.பி.பி.யின் குழுவிற்கும், அவர்களது உலக இசைப் பயணம் வெற்றிகரமாகத் தொடர வாழ்த்துகள்.

இது நாள் வரை, ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ நினைவுகள் இந்தப் பாடல்களுடன் பின்னிப் பிணைந்திருக்கும். இனி அந்த நினைவுகளுடன் சேர்ந்து, இந்தச் சிகாகோ நிகழ்வும் இணையும்.

சரவணகுமரன்

Tags: , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad