தொழிலாளர் தினம் – கவிதை
இலக்குகளை நோக்கிய பயணத்தில்
அடி சறுக்கி மூச்சு முட்டி வாய் மண்தொட்டு
உதடு சிதறுண்டு செங்குருதி சிந்திடினும்
இலக்கே கொள்கையென்று நேர்வழியில் வீறுகொண்டு
தொழில் முடித்து காத்திருப்போம் தொழிலாளர் நாங்கள்
மழை – வெயில் – மூடு பனி தாண்டி வரிசைகள் நீண்டாலும்
காத்திருத்தல் ஒன்றே நேரிய வழியென்று காத்திருப்போம் கூலிக்காய்
‘செய்யாதே’ என்றால் செய்யாமல் இருப்பதற்கும்
‘செய்’ என்றால் செய்வதற்கும் பழக்கப்படுத்தப்பட்டு
பலமாய் சபிக்கப்பட்ட பூமிப் பந்தில் நாதியற்று நாட்கள் கழிப்போம்
துரதிர்ஷ்டவசமாக எம் வாழ்வை உம்மிடம் ஒப்படைத்து
உமக்கான பயணத்தில் எம்மை நாம் தொலைத்து
வாக்குறுதிகளை நம்பி காத்திருந்து காலம் கடத்துவோம்
நாயென நீவீர் எட்டி உதைப்பினும் வேறுவழி யாமறியோம்
முன் சிரித்து பின் கூறு போடும் துரோகங்கள் நிறைந்த உம்மிடம்
எங்கள் வலி சொல்லத் திரட்டிய சொற்கள் எல்லாம்
சொற்களற்ற சூனியமாய் பொருளிழந்து மாயமாகின உங்கள்முன்
இதோ வருகிறது தொழிலாளர் தினம் வாருங்கள் முதலாளிகளே
வாய் கிழிய அரசியல் பேசுங்கள் – இன்னும்
உங்களிடம் உள்ள வெற்று அறிக்கைகளை அள்ளி வீசுங்கள்
எம் தொழிலாளர் இரத்தம் தோய்ந்த செங்கொடியுடன்
முடிந்தவரை முன்வரிசையை நிரப்புங்கள்
எங்கள் தொழிலாள நண்பர்களே ஒன்றாக வாருங்கள்
புகார்களுக்காய் வேண்டி யாரிடமும் இறைஞ்சாமல்
சிரித்தால் சிரித்திடவும் முறைத்தால் முறைத்திடவும் கற்றிடுங்கள்
வலி மறந்த மகிழ்ச்சி வேண்டித் துன்பக் கடலில் இருந்து பெருநகர் மீண்டு
உங்கள் நினைவின் பெட்டகத்தில் சேர்த்து வைத்த
வியர்வைத் துளிகளுக்கான விலையைக் கேளுங்கள்
– ஊரவன்-