அன்பின் அகிலம்
அன்றலர்ந்த தாமரையாய் அந்தமுகம் விலகவில்லை…..
அன்பிற்கு நிரூபணமாய் அன்னையன்றி வேறொன்றில்லை !!
அளவில்லாப் பெருவலியும் அவளுக்குப் பொருட்டில்லை
அவதிகளைத் தாங்கியன்றோ அருமையுடன் ஈன்றாள்பிள்ளை !!
அவள்பட்ட துயரமெல்லாம் அன்றோடு நிற்கவில்லை
அக்கறையாய் வளர்த்தெடுக்க அவள்துயர் எல்லையில்லை
அரும்பாகத் தானுதித்து அரசாளும் யோகமில்லை
அதனாலே கிள்ளையதை அவளென்றும் விலக்கவில்லை !
அங்கிங்கு வேலைக்காக அலையாத இடமுமில்லை
அவமானம் பலகடந்தும் அவநம்பிக்கை மனதிலில்லை
அள்ளி இருகையால் அரவணைக்கா நாட்களில்லை
அந்தக்காலம் என்றாலும் அகம்விட்டு நீங்கவில்லை !!
அகிலமெலாம் மழலைசெய்யும் அதேசெயலன்றி வேறெதுவுமில்லை
அற்புதமாய்ப் புகழ்வதற்கு அளவெதுவும் காட்டவில்லை !!
அழகான குயில்களிடை அண்டங்காகம் இல்லாமலில்லை
அதிசயித்துப் போற்றியதை அகங்குளிரச் சொல்லாமலில்லை !!
அரும்பான பிள்ளையதை அணுகாமல் இருந்ததில்லை
அவன்பெரிதாய் வளர்ந்துவிட அகந்தையுறாக் காலமில்லை
அவன்படித்த படிப்புகளும் அவள்மதிக்கு விளங்கவில்லை
அகண்டு விரிந்தவையும் அவளன்றிச் சாத்தியமில்லை !!
அரண்மனையாய் வீடுமனை அவர்க்கின்று பஞ்சமில்லை
அதற்கெல்லாம் காரணமாய் அவனிதனில் மற்றேதுமில்லை
அரசனாய் உயர்ந்தாலும் அவளன்றி அதுவுமில்லை
அகிலத்தில் புகழ்முழுதும் அவள்முறுவலுக்கு ஈடாவதில்லை !
அன்றிலிருந்து இன்றுவரை அன்புக்குக் குறையுமில்லை
அவளடி தொழாதாற்கு அண்டமெலாம் பெருமையில்லை
அன்றாடம் நினைத்திங்கே அழகுசேர்ப்பதில் குற்றமில்லை
அன்னையர் தினத்திலாவது அவள்தியாகம் மறப்பதுமில்லை !!
வெ. மதுசூதனன்.