ஆட்டு மூளை வறுவல்
ஊர் கோவில் திருவிழாவிற்கு, படையலுக்கு ஆடு அடித்து உணவு சமைக்கும் போது, ஆட்டின் எந்தப் பாகத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உணவு பதார்த்தம் செய்துவிடுவார்கள். மூளையை உப்பு போட்டு வறுத்துக் குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்குக் கொடுப்பார்கள். சிலர் முட்டை, வெங்காயம் போட்டு பூர்ஜி மாதிரியும் செய்வார்கள்.
உலகமெங்கும் உள்ள நாடுகளில், விதவிதமான வகைகளில், மூளை சமைக்கப்படுகிறது. இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது, நம்மூர் வறுவல் வகை. குழந்தைகளுக்குத் தேவையான DHA, மூளையில் மிகுந்து இருப்பதால், அவ்வப்போது சமைத்துக் கொடுக்கலாம். கடைகளில் கிடைப்பது அரிது தான். கிடைத்தால் இதைச் சமைத்துப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்
ஆட்டு மூளை- 4
வெங்காயம் – 1 பெரியது
கடுகு – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ½ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் – 1 மேஜை கரண்டி
கருவேப்பிலை – கொஞ்சம்
கொத்தமல்லி தழை – கொஞ்சம்
செய்முறை
- மூளையைத் தண்ணீரில் மெதுவாக அலசி எடுத்துக்கொள்ளவும்.
- அதைச் சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் அதனுடன் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, உப்பு போட்டு கலந்து வைக்கவும்.
- ஒரு குக்கரில் ஒரு கப் தண்ணீர் விட்டு, அந்தக் குக்கருக்குள் இந்தப் பாத்திரத்தை வைக்கவும். மூளை மசாலா கலவைக்குள் தண்ணீர் சேர்க்கக் கூடாது. குக்கருக்குள் உருவாகும் ஆவியில், மூளை வேகும்படி, குக்கரை அடுப்பில் வைத்து, 2 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கருவேப்பிலை போட்டு, அது பொறிந்தவுடன், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியபின், அதில் ஆவியில் வேக வைத்த மூளையைப் போட்டு கிளறவும். அடுப்பை அதிகச் சூடு இல்லாமல், மிதமான சூட்டில் வைக்கவும்.
- பிறகு, தேவையான காரத்திற்கு ஏற்ப, மிளகுத்தூள் போட்டுக் கிளறவும்.
- வதங்கிய மூளை எண்ணெய் விட்டு, பொன்னிறமான பிறகு, நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான மூளை வறுவல் ரெடி. மட்டன் குழம்பு, சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.
- சங்கீதா சரவணகுமரன்