உரிமைகள் மசோதா – 3
அமெரிக்க உரிமைகள் மசோதாவின் முதல் திருத்தத்தில் பேச்சுச் சுதந்திரத்தின் நீட்சியாக மதச் சுதந்திரமும் சேர்ந்துள்ளது.
மதச் சுதந்திரம் – வரைவிலக்கணம்
அமெரிக்கச் சட்ட வரைவுகள் அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு, தங்களது சொந்த மத நம்பிக்கைகளை, அல்லது மத நம்பிக்கையின்மையைப் பின்பற்றும் உரிமையுள்ளது.
அடிப்படையில் இன்றைய ஐக்கிய அமெரிக்க நாடுகள், பல நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு மதப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் தேவாலயங்கள் இயங்க வேண்டும் (Separation of Church and State) என்ற கொள்கையின் அடிப்படையில் “அமெரிக்க அரசு, எந்தவொரு மத அமைப்பையும், அவற்றைக் கடைபிடிப்பதையும் ஏற்கவோ, மறுக்கவோ எந்தச் சட்டமும் இயற்றாது” என்பதை முதல் சட்டத்திருத்தத்தின் ஒரு பகுதியாகச் சேர்த்தனர். இதன் படி அரசாங்கம் எந்த மத அமைப்புகளுக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிதியுதவி அளிக்காது. பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து இயக்கப்படும் எல்லா அமைப்புகளுக்கும், (பொதுப் பள்ளிகள் உட்பட) இச்சட்டம் பொருந்தும்.
கிறித்துவ மதத்தினர் மிகுந்துள்ள (72.5 சதவிகிதம்) அமெரிக்க நாட்டில் ‘அதிகாரப் பூர்வ’ மதம் என்று ஏதுமில்லை. இன்று, உலகில் பெரும்பான்மையான நாடுகளைக் கிழித்தெறிந்து, நிலைகுலையச் செய்திருக்கும் மதக்கருத்து வேறுபாடுகள் அமெரிக்காவில் தலை தூக்காதிருக்க இச்சட்டத்திருத்தம் ஒரு முக்கிய காரணம்.
‘லெமான் சோதனை’ யின்படி அரசியலமைப்புச் சட்டங்கள் கீழ்க்கண்ட மூன்று சோதனைகளுக்கு உட்படுத்தப்படவேண்டும்.
- மதரீதியான குறிக்கோள் அற்றதாக இருக்கவேண்டும்.
- எந்த ஒரு மதத்தினரின் நம்பிக்கைகளையும், நம்பிக்கையின்மையையும் ஆதரிப்பதாக இருக்கக் கூடாது.
- அரசாங்க நடவடிக்கைகளில் மதங்களின், மத அமைப்புகளின் தலையீடு இருக்கக் கூடாது.
எந்த அரசாங்க நியதிகளும், சட்டங்களும் தெளிவாகவும், குறிப்பிட்ட எல்லைகளைக் கொண்டதாகவும் இருந்ததில்லை. சட்டங்கள் இயற்றப்படுவது மீறுவதற்காகத்தான் என்ற நையாண்டிக் கருத்தும் உண்டு. மதச் சுதந்திரம் என்பதிலும் பல்வேறு தெளிவற்ற, குழப்பம் நிறைந்த கருத்துகள் நிலவுகின்றன. பல்வேறு சந்தர்ப்பங்களில் இச்சட்டங்கள் ஒருவருக்குச் சாதகமாகவோ, பாதகமாகவோ மாறக்கூடும். இருப்பினும் பெரும்பான்மையாக, மேலோட்டமாக அறியப்படும் சில கருத்துகள் கீழே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் மதச்சுதந்திரம்
மாநில அரசின் பொதுப் பள்ளிகளில் மதம் சார்ந்த பாடங்கள் நடத்தப்படக்கூடாது. எனினும் வரலாற்றுப் பின்னணியில், இலக்கியங்களில் மதச் செல்வாக்கினைக் குறிப்பிட நேர்ந்தால் அவற்றுக்கு விலக்கு உண்டு. மற்றபடி பாடத்தோடு சேர்ந்து மத நம்பிக்கைகளைப் பலப்படுத்தும் / பலவீனப்படுத்தும் கருத்துகளைப் பகிரவும், பதிவு செய்யவும் கூடாது. அதே சமயம் தன் மதம் குறித்து ஒருவர் தனிப்பட்ட நிலையில் செய்யும் வழிபாடுகளைத் தடுக்கவும் இச்சட்டத்தில் இடமில்லை. (எ. கா. மற்றவர்களுக்குத் தொந்தரவளிக்காத வகையில் மதச் சின்னங்களை அணிவதையும், பள்ளிகளுக்குள் வழிபடுவதையும், பாஸ் ஓவர் , நோன்பு, விரதமிருப்பதையும் தடுக்க முடியாது. எனினும் இது தொடர்பாக மற்றவர்கள் வருத்தம் தெரிவித்தால் அது ஆய்வுக்குட்பட்டதாகிவிடும்). பண்டிகை காலங்களில் மதத்தைக் குறிப்பிடாது வாழ்த்தும் வழக்கம் அறிவுறுத்தப்படுகிறது.
தனியார் பள்ளிகளுக்கும், குறிப்பிட்ட மதப் பிரிவினர் நடத்தும் பள்ளிகளுக்கும் இதில் விலக்கு உண்டு. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதம் சார்ந்த வகுப்புகளிலிருந்து விலகி நிற்கும் உரிமையும் உண்டு.
பணியிடங்களில் மதச்சுதந்திரம்
தனியார் பணியிடங்களில் மத நம்பிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதே சமயம் அவை பணியிடப் பாதுகாப்புக்கு பங்கமேற்படுத்தாத வகையில் இருத்தல் அவசியம். (எ.கா. சில குறிப்பிட்ட மதத்தினர் தலைப்பாகை, உடைகள் அணிதல் போன்றவை சில வரையறைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. முகத்தில், தலையில் முடியை சரைத்தல் / சரைக்காதிருத்தல் போன்றவை ராணுவத்திலும் அனுமதிக்கப்படுகிறது). அது போல விடுமுறையல்லாத சிறுபான்மையினரின் பண்டிகைக் காலங்களில், விடுப்பு எடுத்துக் கொள்ளவும் வழியுண்டு. எனினும் இவை அலுவலகப் பணியைப் பாதிக்காத வகையில் இருத்தல் அவசியம்.
மதத்தின் அடிப்படையில் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதும், நிராகரிக்கப்படுவதும் சட்டப்படி குற்றம். இவ்விஷயத்தில் நேரடியாக மதத் தலையீடு இல்லாவிடினும், மறைமுகமான மத நம்பிக்கைகள் இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளன. எடுத்துக்காட்டாக, திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமான புனித பந்தம். ஓரினப் பந்தம் என்பது திருமணமாகாது, அவர்களுக்குப் பணியிடங்களில் மருத்துவப் பாதுகாப்பு வழங்க சில நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. இது தொடர்பான வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. இந்நம்பிக்கையின் அடிப்படையில் கருச்சிதைவு மேற்கொள்வதும் மருத்துவத் துறையில் பல மாநிலங்களில் விவாதத்துக்குரிய பொருளாகவே இருக்கின்றன.
அண்மையில் தீவிரவாதிகள் என்று ஒரு சில மதத்தவர் அடையாளப்படுத்தப்படும் போக்கு அதிகரித்துள்ளதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. எத்தனை சட்டங்கள் வந்தாலும், பொது இடங்களில் வரைமுறையற்ற மதச் சுதந்திரம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது தொடர்பான சில சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அரசு முயன்று வருவதாகவும் தெரிகிறது.
— தொடரும்.
ரவிக்குமார்.