\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

தலைக்கு மேல வேல….

Filed in இலக்கியம், கதை by on April 30, 2017 0 Comments

ஞாயித்துக் கெழம காலங்காத்தால…….

மனைவியின் “எழுந்திருங்கோ….. எட்டு மணி ஆயிடுத்து” குரல் எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல் ஒலித்தது எனக்கு… அதனை இக்னோர் செய்துவிட்டு புரண்டு படுத்தேன். பாத்ரூமிலிருந்து எட்டிப்பார்த்த சகதர்மிணி, “சொல்லிண்டே இருக்கேன்… அப்டி என்ன இன்னும் தூக்கம்? என்னமோ வெட்டி முறிச்சாப்போல…. நேக்கு மாத்திரம் சண்டே சாட்டர்டே எதுவுமில்ல….” என்று விரட்டிக் கொண்டிருந்தாள். எனக்கு ஏதோ வேலை வைத்திருக்கிறாள் என்பதைவிட, தான் எழுந்துவிட்டோம் இன்னும் இவன் மட்டும் தூங்குகிறான் என்ற பொறாமைதான் அதிகமாய்த் தொனித்தது. தொடர்ந்து தூங்கிக்கொண்டிருந்த என்மீது கோபம் அதிகமாகி, குளியலறையிலிருந்து வெளிவந்து, படுக்கையில் படுத்துக்கிடக்கும் கணவனின் பின்புறத்தில் ஓங்கி ஒரு போடு போட்டாள்… உடனே துள்ளி எழுந்த நான், “நான் யாரு? எங்க இருக்கேன்” என்ற ரீதியில் பேந்தப் பேந்த விழி்க்க, “எழுந்துக்கோங்கோ… நாழியாய்டுத்து… ஹேர்கட் பண்ணிக்கப் போரேன்னு சொன்னேளே… தலையைப் பாருங்கோ…. நன்னா கரடியாட்டமா வளந்து தொங்கறது… ஆஃபிஸ்ல ப்ரஃபஷனல்னு பேரு… போங்கோ.. போங்கோ… கிராப் வெட்டிண்டு வந்து அப்புறமா ஸ்னானம் பண்ணலாம்….” கிராதகி, முழுவதுமாய்ப் படுக்கையைவிட்டு எழும்வரை விடமாட்டாள்…

முனகிக் கொண்டே எழுந்து, குளியலறை நோக்கிச் சென்றேன். காலைக் கடன்களை முடிக்கையிலேயே, கைபேசியில் வந்திருந்த மெஸேஜ் அனைத்தையும் படித்து, ரிப்ளை செய்துவிட்டேன்.. அன்றைய செய்திகளையும் அந்தச் சிறு டிஸ்ப்ளேயில் பார்த்துக் கொண்டிருக்க, மனைவி அன்புடன் பாத்ரூம் கதவில் கடம் வாசித்துக் கொண்டிருந்தாள். “ஏன்னா… எத்தன நாழி? போனா அப்டியே ஃபோன்ல ஒக்காந்துட்டேளா? கக்கூஸ்லகூட ஃபோன்தானா? … கர்மம், கர்மம்… சீக்கிரமா வெளில வாங்கோ… நேக்குக் குளிச்சி ரெடியாகணும்…” புலம்பல் தொடர, ரீடிஃப் செய்திகளைப் பாதியிலேயே விட்டுவிட்டு, அவசர அவசரமாய்ப் பல் தேய்த்து முடித்து வெளியில் வந்தேன். கதவைத் திறந்தவுடன் அங்கே பழியாய்க் காத்துக்கொண்டிருந்த மனைவி, பின்புறத்தில் மேலுமொரு முறை பலமாய்த்தட்டி “சோம்பேறி.. சரியான சோம்பேறி…. சீக்கிரம் போய்ட்டு வாங்கோ… உங்களுக்குப் பிடிச்ச பிஸிபேளா பாத் பண்ணி வைக்கிறேன், நன்னா ஒரு வெட்டு வெட்டலாம்…” என்று கண்களின் ரொமான்ஸ் காட்டி, சிரித்துக் கொண்டே சொல்லி உள்ளே சென்றவளைத் தொடர்ந்து செல்ல எத்தனித்தேன். “டைம் ஆய்டுத்து… கொழந்தேள் கீழ டீ.வி. பாத்துண்டுருக்கா.. நமக்குக் கொழந்தேள் இருக்குன்னு ஞாபகம் இருக்கோன்னோ?” கேட்டுக் கொண்டே சட்டென்று கதவை மூடி உள்ளே தாழிட்டுக் கொண்டாள். முகத்தில் வழிந்த அசடையும், ஏமாற்றத்தையும் ஒருசேரத் துடைத்துக்கொண்டு, ஆடைகளை மாற்றித் தயாரானேன். ”அப்பாயிண்ட்மெண்ட் இல்லாம முடிவெட்டப் போனா, அரைமணி நேரத்துக்கு மேல காத்திருக்கணும்” மனசுக்குள் அலுத்துக் கொண்டு, காத்திருக்கும் நேரத்தில் ஏதேனும் கிறுக்கலாம் என்ற எண்ணத்துடன் லேப்டாப் எடுத்துக் கொண்டு வெளியேறினேன்.

காரில் சலூன் நோக்கிப் போய்க்கொண்டிருந்த எனக்கு எப்பொழுதும் போல் ஃப்ளாஷ் பேக் மனத்திரையில் ஓட ஆரம்பித்தது. ஆறு அல்லது ஏழு வயதில் அப்பா கைப்பிடித்து, தன் கிராமத்திலுள்ள சந்தைத் திடலில், அந்த விஸ்தீரணமான அரச மரத்தினடியில் அமர்ந்து முடிதிருத்தும் விளத்தன் அண்ணனிடம் அழைத்துச் சென்றது நினைவுக்கு வருகிறது. பத்துப் பனிரெண்டு வரை தொடர்ந்த கதை இது. அந்த விளத்தனண்ணனிடம் முடி வெட்டிக்கொள்வதற்கு ஒரு பெரிய க்யூவே நிற்கும். அவருக்குப் பக்கத்தில் அதே மரத்தடியில் உட்கார்ந்து வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருக்கும் இன்னொரு நாவிதரான கருப்பையா அண்ணன் ஈயடித்துக் கொண்டிருப்பார். யாரும் போக மாட்டார்கள். பலமுறை, அவரிடம் சென்று வேலையைச் சீக்கிரமாக முடித்துக் கொண்டு விடலாமே என்று அவன் நினைத்ததுண்டு. ஒருமுறை அப்பாவிடம் கேட்க, “இல்லடா, அவன் பீடி புடிப்பான், குழந்தை உனக்கு அந்த வாசனையெல்லாம் படாது… விளத்தன் கோயில் பூஜாரிடா… நல்லவன்.. மத்தவாளுக்கு நல்லது செய்றவன்… தனதாப் பேசுவான்… நல்லவா சகவாசம் எப்பவும் நமக்கு வேணும்.. சத்த நாழி காத்துருக்குறதுல எதுவும் கெட்டுப்போகல…..” சாதாரணமாய் முடிவெட்டச் செல்வதற்கே எத்தனை விஷயங்களைப் பார்த்தார்கள் அக்காலத்தில்.

தன் முறை வந்தவுடன், விளத்தன் அண்ணன் அழுக்கான, பழைய பாயில் அமரச் சொல்வார்… கிண்ணத்தில் வைத்திருந்த பச்சைத்தண்ணியில், முடி ஒட்டிக்கொண்டிருந்த தன் கையை நனைத்து, தலையில் தண்ணீர் தெளிப்பார். தனது இரு கைகளையும் வைத்து, தலைமுடியை மாவு பிசைவதுபோல அவர் பிசைந்தது இன்றும் நினைவில் நிற்கிறது. அவர் பிசையப் பிசைய, தலையில் வழிந்த தண்ணீர் சற்றுக் கீழே ஓடி வந்து புருவத்தின் மேல் நின்று பார்வையை மறைத்ததுகூடத் தெளிவாய் நினைவிலிருக்கிறது. அவரின் அழுக்கான உருவமும், உடையும், மூக்குப்பொடியும் வியர்வையும் கலந்த அந்த வாசனையும்…… “தம்பி, நல்லா படிக்கிறியாப்பா?” அவரின் அந்தக் கரிசனக்குரல் இன்றும் காதில் ஒலிக்க, ஏதோ ஒரு உறவினரை இழந்தது போன்ற நினைப்பு மனதை அழுத்த, கடைசி நேரத்தில் சிக்னல் லைட் மாறுவதை உணர்ந்து சடர்ன் ப்ரேக் அடித்துக் காரை நிறுத்தினேன்.

அப்படி இப்படித் திரும்பிப் பார்த்துக் கொண்டு, ரோடில் நடக்கும் விஷயங்களை அக்கறையில்லாமல் மேய்ந்து கொண்டே சிக்னலுக்காக வெய்ட் செய்து கொண்டிருந்தேன். கார் ரேடியோவில் ஏதேதோ நியூஸ் வந்து கொண்டிருக்க, எதிலும் கவனமில்லாமல் பச்சை விளக்கு வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தவன், அது விழுந்ததும், காரைத் தொடர்ந்து செலுத்தத் தொடங்கினேன். இன்னும் சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு, நினைவலைகள் மீண்டும் சிறகடித்துப் பறக்கத் தொடங்கியிருந்தன.

ந்த முறை, தனது பதின்பருவ நினைவுகள். சந்தையில் முடி வெட்டுவதிலிருந்து சற்றுத் தரம் உயர்ந்திருந்தது. அந்தக் கிராமத்தில் ”நடுத் தெரு” என்ற பெயரில் ஒரு தெரு உண்டு. ஊரின் நடுவில் அமைந்திருப்பதால் அந்தப் பெயர். வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றால் நடுத்தெருவின் மத்தியில் நான்கைந்து கடைகள் இருக்கும். ஸ்டீபன் டெய்லரிங் கடை, அதையடுத்து “ராஜா சலூன்” என்ற பெயருடன் நடிகை ஸ்ரீதேவியின் படம் வரையப்பட்ட போர்டுடன் காட்சியளிக்கும் முடி திருத்தகம். ஸ்ரீதேவிக்கும், ஆண்களின் முடி திருத்தகத்துக்கும் என்ன சம்பந்தம் என்று அவனுக்குப் புரிந்ததில்லை. கண்ணாடிக் கதவுகளுடன் இருந்தாலும், அதனைக் கருப்புக் கலரில் டிண்ட் செய்திருப்பார்கள். முதன்முறையாக அந்தக் கடைக்குள் செல்லும்வரை அதற்கான காரணம் விளங்கியதில்லை. முதன்முறை உள்ளே சென்ற பொழுது, சுவற்றில் மாட்டப்பட்டிருந்த படங்கள் வெளியிலிருப்பவர்களுக்குத் தெரியக்கூடாது என்ற காரணந்தான் என்பது விளங்கியது.

அந்தக் காலத்து ஸ்டாண்டர்ட்ஸ்க்கு மிகவும் ஆபாசம் என்று கருதப்பட்ட படங்கள். பெரும்பாலும், அன்றைய தமிழ்த் திரைப்படங்களில் ஓரிரு பாடல்களுக்கு மட்டும் வந்து நடனமாடிச் செல்லும் நடிகைகள் அரைகுறை ஆடைகளுடன் அங்கிங்கு காட்சியளித்துக் கொண்டிருந்தனர். இதுபோன்ற படங்களெல்லாம் உலகில் கிடைக்கும் என்றும் நான் அறிந்திருந்ததில்லை. ஆண்கள் மட்டுமே முடி வெட்டுக்கொள்ள வருவார்கள் என்பதால், இதுபோன்ற படங்களைத் துணிவுடன் மாட்டி வைத்திருந்தனர். பார்த்த மாத்திரத்தில் பதின்பருவ ஆர்வம், ஆனால் சுற்றி இருப்பவர்கள் தான் பார்ப்பதைப் பார்த்து விடுவார்களோ என்ற பயம். ஓரக்கண்ணாலேயே, ஒவ்வொரு படத்தையும் நூறு முறை பார்த்திருப்பேன். விவரமறிந்த பெரியவர்கள் “விடலப்புள்ள எப்புடிப் பாக்குது பாரு” என்று தனக்குள் பேசிக் கொள்வர். விஷமக்காரர் சிலர் “டேய், வாத்யார் மவனே… பார்வை எங்குண போகுது?… படிக்கிற காலத்துல தேவையாடா?… அப்பாகிட்ட சொல்லிருவேன் பாத்துக்க…” என்று மிரட்டுவர். இப்பொழுது புரிந்தது, அப்பா ஏன் இந்தக் கடைக்குப் போகக்கூடாது என்று சொன்னார் என்று. அவரைமீறி வந்துவிட்டோம், அவருக்குத் தெரிந்தால் அவ்வளவுதான், தொலைந்தோம்… பயம் தொற்றிக் கொண்டது, ஆனாலும் ஆர்வம் விடவில்லை. சுவற்றின் காலண்டர்களைத் திருட்டுத்தனமாகப் பார்த்துக் கொண்டே இருந்தது நினைவுக்கு வருகிறது, இன்று. என்னையறியாமல் ஓடும் காரில் தனியாக நகைத்துக் கொண்டேன்.

ல வருடங்களுக்குப் பிறகு, படிப்பை முடித்து, வேலைக்கு வந்து, அயல் நாட்டில் வேலைக்குச் சென்ற பிறகு வந்த முடி திருத்துவது தொடர்பான அனுபவங்களும் திரும்பிப் பார்த்து ரசிக்கும் விதமான, சுவையான அனுபவங்களே. அமெரிக்கா வந்து சேர்ந்து ஒரு மாதம் முடிந்த பின்னர் தலைமுடி நிறைய வளர்ந்து விட்டது என்பதை உணர்ந்து, டெலிஃபோன் டைரக்டரியில் தேடிப்பிடித்து “பார்பர் ஷாப்” ஒன்றைக் கண்டுபிடித்தேன். பார்பர் ஷாப்பிற்கும், சலூனுக்கும் வித்தியாசம் தெரிந்திராத காலமது. அந்த பார்பர் ஷாப்பின் விலாசத்தை எடுத்துக் கொண்டு, தங்கியிருந்த அபார்ட்மெண்டிலிருந்து நடக்கத் தொடங்கினேன். ஸ்மார்ட் ஃபோன் கையில் வைத்துக் கொண்டு கூகிள் மேப்பெல்லாம் போட்டுக் கொண்டிராத காலமது. ஏற்கனவே சென்று வந்திருந்த நண்பர்கள், நடந்து போகும் தூரம் தான் என்று கூறியிருந்ததால், நடக்கத் தொடங்கியிருந்தேன். அவர்கள் விளக்கிய வழியில் நடக்க ஆரம்பித்து, நடக்க நடக்க பல மணிநேரங்களைக் கடந்ததுபோன்ற உணர்வு. ஒரு வழியாக அந்த இடத்தை அடைந்தேன். கதவைத் திறந்து உள்ளே போனால், அழகுப் பதுமையாய் ஒரு வெள்ளைக்காரி என்ன வேண்டுமென வினவ, ”சலூனுக்கு என்னத்துக்காக வருவாங்க” என்று நம் மனதின் குரல். முதன் முறையாக ஒரு பெண்ணின் கையால் முடி வெட்டிக்கொண்ட அனுபவம், சற்றுக் கூச்சம், சற்று பதைபதைப்பு, சற்று எதிர்பார்ப்பு, சற்றுக் குற்ற உணர்வு என்று போய்க் கொண்டிருந்தது. ஆனால் வாசலில் நம்மை வரவேற்ற பதுமையல்ல நமக்கு முடிவெட்டியது. ஒரு இருநூறு பவுண்ட் எடையுள்ள நடுத்தர வயதைக் கடந்த பெண்மணி ஒருவர் பல கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். தலையின் பின்பக்க முடியை எவ்வளவு வைக்க வேண்டும், மேலிருக்கும் முடியை எவ்வளவு குறைக்க வேண்டும், ஓரங்களெலாம் “ப” வடிவில் வேண்டுமா, “U” வடிவில் வேண்டுமா, கிருதாவைக் குறைக்க வேண்டுமா, புருவத்தைச் செதுக்க வேண்டுமா என்று பல கேள்விகள். வந்த புதிதில், பலவற்றிற்கு எப்படி விடை சொல்வது என்று தெரியாமல் ஏதேதோ சொல்லி, ஈராக்கில் டிப்ளாய் செய்யப்பட்டிருக்கும் சோல்ஜர் போன்ற முடிவெட்டுடன் அபார்ட்மெண்ட் வந்து சேர்ந்தது இப்பொழுதும் நிழலாடுகிறது.

ஃப்ளாஷ்பேக் முடிவதற்கும் சலூனுக்கு முன் காரைக் கொண்டுவந்து நிறுத்துவதற்கும் சரியாக இருந்தது. இறங்கி காரைப் பூட்டிவிட்டு, உள்ளே நுழைய, பளிங்குச் சிலை போல ஒரு பதுமை ரிசப்ஷனில் நின்று கொண்டு “டு யூ ஹாவ் ஏன் அப்பாய்ண்ட்மெண்ட்?” என்று புன்னகைத்துக் கொண்டே கேட்டாள். “நோ, பட் ஐ கேன் வெய்ட்” என்று அளவுக்கதிகமாக வழிந்து கொண்டே, என் பெயரின் அத்தனை எழுத்துக்களையும் ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்தேன். அரை மணி நேர வெய்ட்டிற்குப் பிறகு, “ஐ கேன் டேக் யூ பாக் தெர்..” என்று சொல்லிக் கொண்டே, சற்று நடக்க முடியாமல் நடந்து வந்த மலைபோன்ற அந்த ஸ்டைலிஸ்ட்டுக்கு ஒரு ஐம்பது வயதாவது இருக்கும்.

   வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad