\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மினசோட்டா  பன்னாட்டு பன்சமூகக் கொண்டாட்ட விழா 2017

பன்தேச விழாவானது குதூகலமாக சென்ற 85 வருடங்களாக மினசோட்டா மாநில சர்வதேச நிறுவனத்தினால் (The International Institute of Minnesota) நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் புதிதாகக் குடிபுகுந்த அமெரிக்கரையும் அவர்களின் கலாச்சாரத்தையும் மினசோட்டா மக்களுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது.

இந்தக் கொண்டாட்டம் பனிகாலம் மாறி இளவெனில் காலத்தின் வெய்யில் உந்தலில் உள்ளூர் மக்கள் உற்சாகமாகக்  கலந்து கொள்ளும் வகையில் அழகிய ஆற்றோரக் கரை மண்டபத்தில் வருடந்தோறும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு இவ்விழா மே மாதம் 4இல் இருந்து 7ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது.

2017 இல் 48 நாட்டுச் சந்தைகளும், 29 கலாச்சாரக் கைத்தொழில் புனைவு கண்காட்சிகளையும், 40 நாட்டு,மற்றும் கலாச்சாரத் தகவல்,வரவேற்புச் சாவடிகளையும் (Country/Culture Booths) கொண்டமைந்திருந்தது. மேலும் கலாச்சார இசை, நாட்டிய, நாடக, கதை சொல்லும் அருமையான நிகழ்வுகள், சுமார் 6 மேடைகளில் வருகை தரும் மக்களைக் களிப்புற வைத்தது.

இம்முறை கொண்டாட்டங்களில் பன்னாட்டுக்கதை கூறுபவர் மேடை, மற்றும் தென் ஸ்பானிய நாட்டு பிளாமிங்கோ நாட்டியம் பிரபலமாக மக்கள் பார்த்து மகிழ்ந்தது அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

Festival of Nations

தமிழர் தவில்,பறை, நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்துப் போன்ற கலாச்சார வடிவங்களைப் பல மேடைகளில் மினசோட்டா சமூகத்திற்கு அறிமுகப்படுத்தினர். தமிழர் அரங்கில் தமிழ் கலைகளை எடுத்துக்கூறும் தகவல் பலகைகள் மற்றும் பறை, தவில், நாதஸ்வரம், காவடி, கரகம், பொய்க்கால் குதிரை, பனை விசிறிகள், சொலவு போன்ற பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு, அவை குறித்த விளக்கங்கள் கூறப்பட்டன.

இதே சமயம் மினசோட்டா இந்திய மக்கள் ஒன்றியம் IAM இம்முறை மேடையில் மாத்திரமல்ல, பன்னாட்டுச் சந்தை இடையேயும் கண்ணுக்குளிர்ச்சியான இளம் மங்கையர் பாலிவூட் பாட்டுக்களையும் ஆட்டங்களையும், மேலும் இந்து மத திருமண கலாச்சாரச் சம்பிரதாய முறைகளையும், பந்தல் போட்டு, மினசோட்டா இந்துக் கோவில் அர்ச்சகரை வைத்து முறைப்படி மந்திரம் ஓதித் திருமணத்தை நடத்திக்காட்டினர். இந்த நடைமுறைகளை ஆங்கிலத்திலும் அன்பர் ஒருவர் பார்வையிடும் மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

இங்கு உள்ள கண்காட்சி அரங்குகளில், ஒவ்வொரு நாட்டின் கலாச்சார குழுக்களின் சிறப்பம்சங்களை, வந்திருந்த விருந்தினர்களுக்கு எடுத்துக் கூறினர். குழந்தைகளின் ஆர்வத்தை அதிகரிக்கும் வண்ணம், மாதிரி கடவூச்சீட்டுகள் (Passport) வினியோகிக்கப்பட்டு, ஒவ்வொரு நாட்டின் மாதிரி அச்சுகள் (Stamp) இந்த அரங்குகளில் பதியப்பட்டது. நிறைய அச்சுகள் வாங்கும் ஆர்வத்தில், சிறார்கள் ஒவ்வொரு அரங்காக ஓடி, தகவல்களைக் கேட்டு, கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து அச்சு பெற்றனர்.

அமெரிக்கக் கண்ட ஆப்பிரிக்கர் கடலுணவு, வெண்டைக்காய் சேர்த்த கம்போ கூளையும், காரமான இறைச்சி பொரித்த பார்ரீஸ், சீனிக்கிழங்குப் பணியாரங்கள், அமெரிக்க பூர்வீகவாசிகள் காட்டெருமை பர்கர், பொரித்த உரொட்டி, வறுத்த சோளம் போன்ற உணவு தொடங்கி, டெனிஷ் பலகாரங்கள், கிரேக்க யூரோ எனப்படும் காரமான மூலிகைகளுடன் அரைத்து, சூட்டுத் தட்டிய இறைச்சிகள், பக்கலவா எனும் அல்வா, பாகிஸ்தானிய கறிக்குழம்பு, இந்திய கபாப் வகைகள் என அகர வரிசையில் உள்ள பல கலாச்சாரச் சமையல்களும் படைக்கப்பட்டிருந்தன. வருவோர் நாக்கையும், மூக்கையும், கண்களையும் கவரும் பன்னாட்டு அறுசுவையுணவுகளும் பெரும் மண்டபத்தில் உணவகங்களில் விற்கப்பட்டன.

வருடாவருடம் நிகழ்ந்து வரும் இந்த உலகத் திருவிழா, மினசோட்டாவின் பன்மைத்துவத்தை எடுத்துக்காட்டுவதோடு, உள்ளூர் மக்களின் குழந்தைகளுக்கு உலகக் கலாச்சாரத்தை விளக்கும் பயனுள்ள ஒரு நிகழ்வாகவும் திகழ்ந்து வருகிறது.

இந்த நிகழ்வின் எமது கடந்த வருட அனுபவங்களை, கீழ்க்கண்ட இணைப்புகளில் காணலாம்.

2016 – உள்ளூரில் ஒரு உலகச் சுற்றுப் பயணம்

2015 – ஒற்றைக் கூடாரத்தில் உலகக் கலாச்சாரங்கள் (Festival of Nations)

  • ஊர்குருவி

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad