பாதுகாப்பான நீச்சல் முறைகள்
வட அமெரிக்காவில் கோடைகாலம் தொடங்கிவிட்டது. இனிக் குழந்தைகளும் பெரியவர்களும் குதூகலமாகப் பொழுது போக்கும் ஒரிடம் நீச்சல் குளங்கள். குறிப்பாக மினசோட்டா, மிச்சிகன், விஸ்கான்சின் மாநிலங்களிலும், ஒன்ராரியோ மாகாணத்திலும் ஏரிகள் ஆறுகள் பலவுண்டு. இங்கெல்லாம் விரைவில் கூட்டம் நிரம்பி வழியும்.
நீச்சல் சிறந்த பொழுதுபோக்கு மட்டுமல்லாது உடல் நலம் பேணும் சிறந்த பயிற்சியாகவும் அறியப்படுகிறது. எனினும் மற்ற விளையாட்டு, உடற்பயிற்சியை விட நீச்சல் சற்று அபாயகரமானது. எனவே நீச்சலில் பாதுகாப்பாக ஈடுபடுதல் அவசியம்.
குழந்தைகளும், சிறுவர்களும் குளத்து நீரில் கும்மாளம் அடிப்பது இயல்பு. ஆயினும் கழுகுப் பார்வையுடன் பெரியவர் கண்காணிப்பதும் அவசியமே.
கைக்குழந்தைகள், சிறு பாப்பாக்கள் நீரில் இருக்கும் போது அவர்கள் அருகாமையில் தமது கையினால் அள்ளி எடுத்துக் கொள்ளும் தூரத்தில் எப்போதும் ஒருவர் இருந்திடவேண்டும்.
பொதுவாக பிள்ளைகள் ஏரியிலோ, நீச்சல் குளத்திலோ விளையாடும் பொழுது பெரியவர்கள் சமைத்தல், பிள்ளைகளுடன் விளையாடுதல், அயலில் உள்ளவர்களுடன் உரையாடுதல் என பலவித விடயங்களிலும் மனத்தை செலுத்தி விடுவோம். ஆயினும் குழந்தைகள், சிறுவர்கள் நீரிற்கு அண்மையில் உள்ளனாரயின் அவர்களை அவதானித்துக் கொள்ளுதல் தலையாயச் செயல். சிறு குழந்தைகள் ஒரு அங்குல ஆழத்திலேயே முச்சுத்திணறி மரணிக்கலாம். எனவே இதை இலேசான விடயமாக எடுத்துக் கொள்ளலாகாது.
பல பெரியவர்களும் குழந்தைகளும் நீந்தும் தருணத்தில், நீர் அவதானியாக ஒரு நபரை நியமித்துக் கொள்ளுதல் பாதுகாப்பானது. உதாரணத்திற்கு ஒவ்வோரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பெரியவரைக் குழந்தைகளைக் கண்காணிக்க வைத்துக் கொள்ளலாம். இதனால் அவர் பார்த்துக் கொள்வார் என்று மற்றவர் எண்ணிக் கொண்டு வரும் குழப்பத்தையும் தவிர்த்துக் கொள்ளலாம், நீச்சலில் குழந்தைகள் பாதுகாப்பையும் பேணலாம்.
சிறு குழந்தைகளுக்கு நீரை ஆறுதலாக அறிமுகம் செய்யலாம்
பொதுவாகக் கைக்குழந்தைகளுக்கு நீர் என்பது பிடித்த விடயம். தாயின் கருப்பையில் இருக்கும் போதே நீந்தியவர்கள் தானே. ஆயினும் சிறு குழந்தைகள் உயிர் வாயு சுவாசிக்கும் அனுபவமானது ஏறத்தாழ புது அனுபவம். எனவே அவர்களை நீச்சலுக்குக் கொண்டு போக 6 மாதங்கள் வரை காத்திருந்து சென்றால் நலம். சிறுகுழந்தைகளை நீர் உள்ளிடாத Diaper காப்புறைகள் போட்டும், அடிக்கடி மாற்றிக் கொள்வதும் சிறப்பான விடயமாகும்.
உங்கள் பிள்ளைகளுக்கு நீச்சல் பாதுகாப்பு பற்றி கற்பிக்க வேண்டும்.
ஒவ்வோரு பிள்ளையின் சுபாவமும், கற்றுக் கொள்ளல் விதமும் வேறுபட்டது. எனவே பெற்றார், உற்றார் பிள்ளைகள் கற்றலுக்குத் தயார் ஆயின் அவர்களை நீச்சல் முறைகளைப் படிப்படியாக கற்பிக்கலாம். பிள்ளைகளுக்கும் தடாகத்திலோ, ஏரியிலோ எவ்வாறு நீரை அவதானமாக அணுகுதல், மிதக்கத் தெரியுதல், முக்கியமாக கரைக்கு அருகாமையில் நிலை கொள்ளுதல் போன்றவற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்விடத்தில் பிள்ளைகள் சொல்வழி தட்டாமல் கேட்டல் அபாயத்தில் இருந்து அகல வழிவகுக்கும்.
பிள்ளைகளுக்குக் குறிப்பிட்ட இடங்களில் மாத்திரமே நீச்சல் பழக்கவேண்டும். உதாரணமாக ஆழமான நீர்தடாகத்தில் நீந்தப் பயிலும் பிள்ளைகள் முதலில் அவர்கள் கால்கள் எட்டும் ஆழத்திற்கு அப்பால் நீச்சல் ஆசிரியர் இல்லாமல் செல்லக்கூடாது. மேலும் நீர்த்தடாகத்தில் நீந்துவதும், திறந்த நீர் ஏரியில் நீந்துவதும் என்று பிள்ளைகள் அறிந்து கொள்ள வேண்டும். அலைகளினூடு நீந்துவது, சமமில்லாத தரைகள் , மட்டும் சுழிகள் உள்ள ஆறு, கடல்களில் நீச்சலிடிப்பது வித்தியாசமான பயிற்சி. அதை அறியாத பிள்ளை மூழ்கி விடலாம்.
சிறு பிள்ளைகள் பெரியவர்களுடன் நீந்தப் பழகிக் கொள்ளவேண்டும். பெரியவர் இல்லாத சமயங்களில் இவர்கள் நீரில் இறங்கக் கூடாது.
நீச்சல் விளையாட்டு உபகரணங்களை மட்டும் நாடியிருக்கலாகாது..
அபாயம் வரும் போது, எப்போதும் அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க, கனேடிய நீர்ப்பாதுகாப்பு இலக்கா மிதுப்புக்கலங்களை உபயோகித்துக் கொள்ளவேண்டும். வெறும் நீர் விளையாட்டு உபகரணங்களை நம்பி மிதக்க முடிவுசெய்தால் ஆபத்திலேயே முடியும்.
செயற்கைச் சுவாசப் பாதுத்தில் CPR நேரம் எடுத்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் குறுகிய வட அமெரிக்க்க் கோடைகாலத்தில் இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது என்றெண்ணக் கூடும்..
ஆயினும் 12,000 ஏரிகள் மற்றும் பல ஆறுகள் கொண்ட வட அமெரிக்க மாநிலங்களில் நீர் அபாயம் எப்போதும் அருகிலே தான் உள்ளது. எனவே செயற்கைச் சுவாசம், நீரிலிருந்து மக்களைக் காப்பாற்றும் முறைகளை அறிந்து கொள்தல் முக்கியமான விடயம் ஆகும். குறைந்தது மூழ்கியவரை உடன் கரையில் சுவாசிக்க வைக்க முதற்கண் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்தத் திறமையை நீங்களும், உங்கள் பிள்ளைகளும் அண்மை நீச்சல் பாடசாலை, மற்றும் வைத்திய சாலை, தீயணைப்புப் படைத் தற்காப்பு வகுப்புகளில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.
கோடை நீச்சல் வீர்ர், வீராங்கனைகளே நீங்கள் பக்குவமாக நீச்சல் பயின்று உள்ளூர் நீர் நிலைகளில் களிப்புடன் கூடி மகிழுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
தொகுப்பு – யோகி