வயலின் மேதை திரு. வி.வி.முராரி அவர்களின் இசை மழை
கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள், மினசோட்டா மாநிலம், மெடினா நகரிலுள்ள தேவுலப்பள்ளி இல்லத்தில் வயலின் மேதை திரு. வி.வி. முராரி அவர்களின் வயலின் இசை மழை பொழிந்தது.
கர்நாடக இசை மும்மூர்த்திகளின் ஒருவரான திரு. முத்துஸ்வாமி தீஷிதரின் “சித்தி விநாயகம்” கீர்த்தனையோடு களை கட்டியது கச்சேரி. தனது துரிதமான நடையினாலும் அபரிதமான மேல் கால ஸ்வரங்களுடன் கூடிய ஆலாபனையோடு “ஷண்முகப்ரியா” ராகத்தில் ரசிகர்களைக் குதூகலத்துடன் வரவேற்றார் வித்வான் முராரி,
இதைத் தொடர்ந்து வந்தது நாத ப்ரம்மம் ஸ்ரீ தியாகய்யரின் “ குரு லேக இட்டுவன்டி”. ரம்மியமான “கௌரி மனோஹரி” ராகத்தில் அமைந்திருக்கும் இந்தக் கிருதிக்கு மேலும் நடையை துரிதப்படுத்தி ரசிகர்களையும் உடன் பாட, ஆட அழைத்து உற்சாகமூட்டினார் வித்வான்.
புயலைத் தொடர்ந்து வரும் அமைதியைப் போல அடுத்து வசந்தக் காலத்திற்கேற்ப “வசந்த பைரவி” ராகத்தில் ஒரு மென்மையான கிருதி.
இந்த வேகம் – மென்மை – வேகம் வரிசையில் அடுத்து வந்தது மீண்டும் நாதப்ரம்மம் தியாகய்யரின் “தெலிஸி ராம”. பூர்னசந்திரிகா ராகத்தின் மென்மையான தன்மைக்கு வித்வான் முராரி மெருகூட்டிய வேகமும் நளினமும் ரசிகர்களை வெள்ளங்கள் பெருக்கெடுக்கும் ஒரு இசை நதியில் ஆழ்த்தியது என்றே கூறலாம்.
மொத்தத்தில் அன்று மாலை கூடியிருந்த ரசிகர்களுக்குக் கர்நாடக இசையிலுள்ள சில அபூர்வ ராகங்களினாலான ஒரு இசை தோரணையை வடிவமைத்து சூட்டினார் வித்வான் முராரி என்று கூறினால் அது மிகையாகாது. அன்றைய கச்சேரி நளின வேகத்தில் தொடங்கி நளின வேகத்திலேயே முடிந்த நிலை ரசிகர்கள் அனைவரையும் இந்தக் கச்சேரி இன்னும் சில மணி நேரங்கள் நீடித்திருக்கலாம் என்று ஏங்க வைத்தது.
கச்சேரியின் முடிவில் ரசிகர்கள் அனைவரும் வித்வானின் விரல்களின் மந்திரத்தில் கட்டுண்ட மயக்கத்திலிருந்து விடுபட்டனர் என்றால் அதுவும் மிகையாகாது.
Violin
– Shankar Krishnan
Tags: திரு. வி.வி.முராரி, வயலின் மேதை